உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 45

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 45


வணக்கம் நண்பர்களே சென்ற இரண்டு வாரங்களாக பகுபதம், பகாபதம், பகுபத உறுப்புக்களைப் பார்த்தோம். அவற்றை நினைவுகூற இங்கு செல்லவும். உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 43
இந்த தொடர் இலக்கணத்தை வரிசையாக சொல்வது இல்லை! இலக்கணத்தில் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான சிலவற்றை மட்டுமே தருவது என்று எழுதி வருவதால் வரிசைக்கிரமமாக எதிர்பார்க்காதீர்கள். எழுத்திலக்கணத்தில் இன்று நாம் பார்க்க போவது போலி.
   போலி என்ற சொல் நம்மிடையே இன்று பிரபலம். ஒரு பிரபல பிராண்டிற்கு நிறைய போலிகள் இருக்கிறது. நடிகர்கள் கஷ்டமான சண்டைக்காட்சிகளில் போலிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வளவு ஏன்? நமது வாழ்க்கையே ஒரு போலிதான் இல்லையா?
   போலி என்ற சொல் போல இருத்தல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் டூப்( Dupe) என்று சொல்லுவர். ஒருவருக்கு பதில் ஒருவர் சினிமாவில் வாயசைத்து பாடுவதில்லையா அதுபோல எழுத்தில் ஓர் எழுத்திற்கு பதில் வேறு எழுத்து வருவது எழுத்துப்போலி என்று சொல்லப்படுகிறது.
    போலி என்ற சுவையான பலகாரமும் உண்டு. அதே போல இந்த எழுத்துப் போலியும் சுவாரஸ்யமானதுதான். எழுத்துப் போலியில் முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என்று மூன்று வகை உண்டு.


முதற்போலி: சொல்லின் முதலில் இருக்கவேண்டிய எழுத்திற்கு மாற்றாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருளைத் தருவது முதற்போலி எனப்படும்.
முதற்போலிக்கு எடுத்துக்காட்டுகள் சில
   மஞ்சு – மைஞ்சு
   மயன்  - மையன்
மயல் – மையல்
நயம்- ஞயம்.

இடைப்போலி: சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்கு மாற்றாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருமானால் அது இடைப்போலி.
எடுத்துக்காட்டு 
  அரசியல் – அரைசியல்
  அமச்சு-    அமைச்சு
  அரயர்-     அரையர்
ஐந்நூறு   - ஐஞ்ஞூறு.

கடைப்போலி:  சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்கு மாற்றாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருமாயின் அது கடைப்போலி எனப்படும். இது இறுதிப்போலி என்றும் வழங்கப்படும்.

  பந்தல்- பந்தர்
  நிலம் – நிலன்
  குடல்- குடர்
  சாம்பல்- சாம்பர்

இவையில்லாமல் ஒரே சொல்லில் இரண்டு மூன்று போலிகளும் சேர்ந்து வரும்.  எடுத்துக்காட்டாக, நைந்து- நைஞ்சு இடை, கடைப்போலிகள்.
ஐந்து –அஞ்சு- முதல் இடை, கடைப் போலிகள்.

இந்த இலக்கணம் கொஞ்சம் சுலபம்தானே! இனி இலக்கிய சுவைக்கு செல்வோமா?


காளமேகப் புலவரின் பாடல்கள் எல்லாம் அழகுதான்! அத்தை மகள் சமைத்த லட்சணத்தை ஒரு பாட்டாக படித்துள்ளார் அதை பார்ப்போம்.


  கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத் தீய்த்தாள்
  பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் – உருக்கமுள்ள
  அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
  உப்புக்காண் சீச்சி யுமி.

  கரிக்காய் பொரித்தாள்- அத்திக்காயை பொரித்து வைத்தாள்;
  கன்னிக்காயைத் தீய்த்தாள் – வாழைக்காயை வதக்கிவைத்தாள்:
  பரிக்காயை பச்சடியாப் பண்ணாள்- மாங்காயை பச்சடியாக செய்து வைத்தாள்: உருக்கமுள்ள அப்பைக்காயை நெய் துவட்டலாக்கினாள் – அனைவருக்கும் விருப்பமான கத்தரிக்காயை நெய் துவட்டலாக செய்து வைத்தாள்: அத்தை மகள்- அத்தையினுடைய மகள். உப்புக்காண் சீச்சி யுமி – ஆனால் எல்லாவற்றிலும் உப்பு அதிகம் அதனால் சீச்சி என்று துப்பி உமிழும்படி ஆயிற்று.

  அத்தைமகளானவள் அத்திகாயை பொரித்து, வாழைக்காயை வதக்கி மாங்காயை பச்சடி செய்து கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்து வைத்தாள். ஆசையுடன் அவள் செய்து வைத்தாளே என்று உண்டால் அனைத்திலும் உப்பு அதிகம். சீச்சி என்று சொல்லி துப்பத்தான் வேண்டும்.

அத்தைமகளின் சமையலில் உப்பிருந்தாலும் அதை பாடிய காளமேகத்தின் பாடல் இனிக்கிறது அல்லவா? அடுத்த வாரம் மீண்டும் ஒரு புதிய பாடலுடன் சந்திப்போம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.









Comments

  1. போலியின் விளக்கம் எளிதென்றால் காளமேகப் புலவரின் பாடல்கள் அதை விட...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    சரியான விளக்கம் தொடருங்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  3. போளியை தப்பு தப்பு ..போலியை சுவைத்தேன் !

    ReplyDelete
  4. சகோ..
    சிறப்பான பதிவு..

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
  6. போலி பற்றிய எளிய பதிவு...

    காலமேகப் புலவரின் பாடல் சுவை...

    ReplyDelete
  7. போலி பற்றிய விளக்கம் அருமை.
    இன்றைக்கு தான் ஒரு பாட்டை என்னால் கொஞ்சம் மொழிப்பெயர்க்க முடிந்தது.

    ReplyDelete
  8. முதல், இடை,கடைப் போலிகளை சேர்த்து முற்றுப்போலி என அழைப்பர் நண்பரே

    ReplyDelete
  9. போலியும், பாடலும் சிறப்போ சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!