ராஜாவை ஜெயிச்ச குருவி! பாப்பா மலர்

ராஜாவை ஜெயிச்ச குருவி!


வணங்காபுரின்னு ஒரு ராஜ்யம்! அந்த ராஜ்யத்தை கேசரி வர்மன்னு ஒரு ராஜா ஆட்சி செய்துட்டு வந்தாரு. பேருதான் கேசரிவர்மன். நிஜத்துல பூனையை கண்டாக்கூட பயப்படுவாரு. சுத்த முட்டாளான ராஜா அவரு. நம்ம இருபத்து மூணாம் புலிகேசி மாதிரியான ராஜா அவரு.
    ராஜாவாச்சே சும்மா இருக்க முடியுமா? படை பரிவாரங்களை கிளப்பிக்கிட்டு வேட்டைக்கு காட்டுக்கு கிளம்பிட்டாரு ஒரு நாளு. ராஜா வேட்டையாட மாட்டாரு ஆனாலும் அவர் கூட வர்ற பரிவாரங்கள் சும்மா இருக்குமா? அதுங்க காட்டுல இருக்கற மிருகம், பறவைங்க எல்லாத்தையும் வேட்டையாடி சுவையா சமைச்சி ராஜாவுக்கு கொடுப்பாங்க. ராஜாவும் அதை மூக்கை பிடிக்கத் தின்னுட்டு ஜாலியா கூடாரத்துல குறட்டை விட்டுத் தூங்குவாரு.
     இப்படி ஒரு நாள் வேட்டையாடின விலங்குகளை சமைச்சு கொடுத்ததும் சாப்பிட்டு சும்மா அப்படி ஒரு நடை நடந்தாரு ராஜா. அங்க ஒரு மாமரம் கண்ணுல பட்டுது. காத்து சிலுசிலுன்னு வீசுச்சு. அப்படியே நடந்து வந்து மரத்தடியிலே நின்னாரு. அப்படியே தூக்கம் கண்ணை சொக்குச்சு ராஜாவுக்கு. காத்தும் இதமா இருக்கவும் கீரிடத்தை கழட்டி ஓரமா வெச்சுட்டு அப்படியே மாமரத்து வேர்மேல தலையை வச்சி சாஞ்சிக்கிட்டாரு. ஒரு நொடிதான் இருக்கும்! அவர் வாயில இருந்து குறட்டை சத்தம் இடிபோல வந்தது.
     அந்த மரத்துமேல உப்பளாங்குருவிக் கூட்டம் ஒண்ணு வசிச்சி வந்தது. ராஜாவோட ரைஸ்மில் குறட்டை சத்தம் அந்த குருவிங்களுக்கு புலி உறுமுற மாதிரி கேட்டுச்சு! அதுங்க பயந்து அப்படியே பறந்து ‘கீச் கீச்’னு கத்திக்கிட்டு கிடந்துச்சு! ஆனா இது எதுவும் ராஜா காதுல விழல! அவர்தான் சுகமா தூங்கிட்டு இருந்தாரே!
     அப்பத்தான் அந்த கூட்டத்துல ஒரு குருவி பயத்துல ராஜா தலையில  ‘கக்கா’ போட்டுருச்சு! இத்தனை சத்தத்துக்கும் அசராத ராஜா தலையில  ‘சொத்து’ன்னு ஏதோ விழவும் அலறியடிச்சு எழுந்து தலையில கையை வச்சார். அவர் கையில  ‘கக்கா’ ஒட்டிக்கிச்சு. அவர் முகம் அஷ்டகோணலா போயிருச்சு! அடச்சே! என்று மேல பார்த்தாரு. அப்ப இன்னும் ஒரு   ‘கக்கா’ அவர் மூக்கு மேல விழுந்துச்சு!
      எரிச்சலான ராஜா! ஏ! முட்டாள் குருவியே! யாரு மேல   ‘கக்கா’ போடறே! நான் யாரு தெரியுமா?ன்னு கோபமா கேட்டாரு!
    குருவிக்கு தன்னை முட்டாளுன்னு சொன்ன ராஜா மேல கோவம் கோவமா வந்துச்சு! இது அதனோடு வீடு! அங்கேயே வந்து அதை அவமானப்படுத்துனா சும்மா இருக்குமா?

     ஏய்! தூங்குமூஞ்சி மனுசா! உன் முகத்திலென்னா பெயரா எழுதி ஒட்டிருக்கு! நீ யாருன்னு தெரிஞ்சிக்க?ன்னு கேட்டுச்சு குருவி!
   தன்னை தூங்குமூஞ்சின்னு சொன்னதும் ராஜாவுக்கு பயங்கரமா கோபம் வந்துருச்சு! ஏய் தவிட்டுக்குருவியே! உனக்கு என்ன திமிரு! ராஜா கிட்டேயே எதிர்த்து பேசறியா?ன்னு கேட்டாரு!
   ராஜாவா இருந்தா என்ன? எனக்கென்ன பயம்? இது என் வீடு! இங்க வந்து என்னை திட்ட யாருக்கும் உரிமையில்லைன்னு சொல்லிச்சு குருவி.
   ஓகோ! நீ பெரிய வாயாடிக் குருவியா இருக்கே! சரி என்ன தைரியம் இருந்தா என் மேல  ‘கக்கா’ போடுவே?ன்னு கேட்டாரு ராஜா.
   அதென்ன வில்லா? அம்பா? பார்த்து போட! என் அவசரம்! இயற்கை! நீங்கதான் பார்த்து உக்காரனும்! மரத்துக்கு கீழே படுக்கும்போது நீங்கதான் பார்த்து படுக்கணும்னு சொல்லுச்சு குருவி!
     அட நீ செஞ்ச தப்ப ஒத்துக்காம என்னையே தப்பு சொல்றியா? உன்னை என்ன செய்யறேன் பார்! என்று பக்கத்தில் இருந்த வில்லை எடுத்து ஓர் அம்பை குருவி மேல எய்தார் ராஜா!
   ஆனா ஐயோ பாவம்! அவரு முன்ன பின்ன வில்லை தொட்டிருந்தா தானே ஒழுங்கா அம்பு எய்ய முடியும்! அது எங்கோ போய் விழுந்தது!
   இதைப்பார்த்து குருவி கைக் கொட்டி சிரிச்சது! முட்டாள் ராஜா தோத்துட்டாரு! முட்டாள் ராஜா தோத்துட்டாருன்னு பாடவும் செஞ்சது.
    அடடா! ஒரு குருவி நம்மை எளக்காரம் பண்ணுதேன்னு ராஜாவுக்கு அவமானமா போயிருச்சு! உடனே தன் படை பரிவாரங்களை கூப்பிட்டு ஊரில இருக்கற உப்பளாங்குருவி ஒண்ணு விடாம பிடியுங்க!ன்னு கட்டளை போட்டுட்டாரு. படை வீரர்கள் நாலா பக்கமும் வலை வீசி எல்லா குருவியும் பிடிச்சிட்டாங்க!
      எல்லா குருவியும் ராஜா கிட்ட சண்டை போட்ட குருவியை திட்டின. உன்னாலதான் நாங்களும் இப்ப சிக்கிகிட்டோம்! இப்ப என்ன செய்யறதுன்னு கேட்டுதுங்க!
    இந்த ராஜா ஒரு முட்டாளு! இவன் கிட்ட தப்பிக்கறது ரொம்ப சுலபம்னு சொல்லுச்சு மாட்டிக்கிட்ட குருவி. எப்படி தப்பிக்கிறதுன்னு கேட்டுச்சு மத்த குருவிங்க. நான் சொல்றபடி செய்யுங்கன்னு சொல்லிட்டு குருவிங்க காதுல என்னமோ சொல்லுச்சு தவிட்டு குருவி.
      ராஜா தன் மீசை தடவிக்கிட்டே அங்க வந்தாரு! ஏ குருவி! உன் வாய்க் கொழுப்பால இன்னிக்கு இத்தனை குருவிங்களை பிடிச்சு இருக்கேன் இவங்களுக்கு விடுதலையே கிடையாது! அப்படின்னு எகத்தாளமா சொன்னாரு ராஜா.
     இந்த எல்லா குருவிங்களையும் அரண்மனைக்கு எடுத்துட்டு போங்க! என்றார் ராஜா.  அப்ப குருவிங்க எல்லாம் ராஜா! ராஜா நாங்க என்ன தப்பு பண்ணோம்! அந்த குருவிமட்டும்தானே உங்களை நையாண்டி பண்ணிச்சு!  அதை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம்.தயவு செஞ்சு எங்களை விட்டுருங்கன்னு கேட்டுச்சுங்க!
     அதுவும் சரிதான்! அந்த ஒரு குருவியை பிடிச்சுட்டு மத்ததை விட்டுடலாம்னு சொல்லிட்டாரு ராஜா. வலையை அவிழ்த்ததும் எல்லா குருவிகளும் பறந்து போக ராஜா மேல கக்கா போன குருவி மட்டும் ராஜா கையில இருந்துச்சு.

    என்னா குருவி! இன்னிக்கு உன்னை மசாலா போட்டுரலாமா? என்றார் ராஜா.
    தாராளமா போட்டுக்கோங்க மன்னா! ஆனா எனக்கு தெரிஞ்ச வித்தையை உங்களுக்கு தெரியாம போயிருமேன்னுதான் கவலையா இருக்குன்னு சொல்லுச்சு  குருவி.
   ராஜாவுக்கு அந்த வித்தை என்னன்னு தெரிஞ்சிக்க ஓர் ஆவல்! அது என்ன வித்தைன்னு கேட்டாரு.
   அது ரகசியம் சொல்ல மாட்டேன்னு சொல்லுச்சு குருவி!
  அந்த ரகசியத்தை நீ சொல்லிட்டா உன்னை விட்டுடறேன்னு சொன்னார் ராஜா.
    கண்டிப்பா விட்டுடுவீங்களான்னு கேட்டுச்சு குருவி.
இதோ விட்டுடறேன் அந்த ரகசியத்தை சொல்லுன்னு பிடியைத் தளர்த்தினார் ராஜா.
  அவ்வளவுதான் குருவி அவர் கையில் இருந்து பறந்து மரத்தில் போய் அமர்ந்து கொண்டது.
    அதென்ன வித்தை! அப்படின்னு ராஜா கேட்க
யாருகிட்டேயாவது மாட்டிக்கிட்டா எப்படி சாமர்த்தியமா தப்பிக்கணுங்கிற வித்தைதான்! என்று சொல்லுச்சு குருவி!
   எங்கே! எங்கே சொல்லு சொல்லு! என்றார் ராஜா!
முட்டாள் ராஜாவே இன்னுமா புரியலை! உன்கிட்ட மாட்டின நான் எப்படி தப்பிச்சேன்! அதான் வித்தை!   முட்டாள் ராஜா! ஏமாந்துட்டாரு! முட்டாள் ராஜா ஏமாந்துட்டாருன்னு பறந்து போயிருச்சு குருவி.
   ராஜா ஏமாற்றத்துடன் தலை குனிந்து கொண்டார்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. kutti pasangalukku kadhai solla udhavum.. note panikkiren!!

    ReplyDelete
  2. ஆஹா, அருமையான வித்தையை சொல்லிக்கொடுத்திருக்கிங்க சுரேஷ். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. எப்படி தான் இத்தனை பதிவு தரம் குறையாமல் எழுத முடிகிறதோ என வியப்பாக இருக்கிறது சார்.

    கதிர்முருகன்

    ReplyDelete
  4. நல்ல கதை. ரசித்தேன்.

    பகிர்ந்து கொண்டதறகு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!