மூக்குத்தி தர்மம்! பாப்பா மலர்!

மூக்குத்தி தர்மம்!    பாப்பா மலர்!



அது சுதந்திர போராட்ட காலம்! சுமார் நூறுவருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். அது ஒரு வட இந்திய கிராமம். அந்த கிராமத்தில் தான் அந்த சுதந்திரப்போராட்டவீரர் வசித்து வந்தார். அவர் அந்த சமயம் வேலையாக எங்கோ சென்று இருந்தார்.
       வீட்டில் அவரது மனைவி மட்டுமே இருந்தார். நல்ல நடுப்பகல் வேளை! வெயில் உச்சியை சுட்டது. வீட்டின் வாசலில் நிழலாடியது.
     ஐயா! தர்மம் பண்ணுங்க சாமி!
   பிச்சைக்காரன் ஒருவனின் குரல் ஒலித்தது. ஒல்லியாக ஒடிந்துவிழுபவன் போல இருந்த அவனது குரல் மட்டும் நன்கு ஓங்கி ஒலித்தது.
அந்த தலைவரின் மனைவி பதில் குரல் கொடுத்தாள். கொஞ்சம் இருப்பா! வரேன்! பின்னர் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு  சமையலறைக்கு சென்று அரிசிப்பானையிலிருந்து ஓர் ஆழாக்கு அரிசியை துழாவி எடுத்து வந்தார் அந்த பெண்மணி.
       ஆழாக்கில் எடுத்து வந்ததை பிச்சைக்காரனின் கலயத்தில் போடும்போதுதான் கவனித்தாள் அதை. அவளது மூக்குத்தி ஒன்றும் அரிசியோடு கலந்து பிச்சைக்காரனின் கலயத்தில் விழுந்தது. மூக்குத்தியை பார்த்ததும் ஐயையோ! இதையும் சேர்த்து போட்டுவிட்டேனே! என்று அதை எடுக்க முனைந்தாள் அந்த பெண்மணி.

  இப்பொழுது போல அப்பொழுதெல்லாம் பீரோக்கள் நிறைய கிடையாது. பெண்கள் தங்கள் சேமிப்பு, நகைகளை அரிசிப்பானையில் வைத்திருப்பர்.அவசரத்தேவைக்கு எடுத்துக் கொள்வர்.திருடர்களிடம் இருந்து தப்பிக்கவும் இப்படி அரிசிப்பானை பருப்பு பானைகளில் பொருட்கள், பணம் போட்டுவைப்பது உண்டு. அப்படித்தான் அந்த பெண் அரிசிப்பானையில் மூக்குத்தியை போட்டு வைத்திருக்கின்றாள். அரிசியை எடுக்கும்போது மூக்குத்தியும் சேர்ந்ததை அவள் கவனிக்கவில்லை!
     பிச்சைக்காரனின் கலயத்தில் விழுந்த மூக்குத்தியை எடுக்கும் சமயம் அவரது கணவரான சுதந்திர போராட்ட வீரர் வந்துவிட்டார். என்ன எடுக்கிறாய்? அவர் குரல் கம்பீரமாய் விழுந்தது.
      இ.. இல்லை! என்னுடைய மூக்குத்தியை சேர்த்து போட்டுவிட்டேன்! அதை எடுத்துக் கொள்..
   மனைவி முடிக்கும் முன் தலைவர் கேட்டார் நீ போட்டாயே ஒருபிடி அரிசி! அதை திரும்ப எடுத்துக் கொள்வாயா?
    மனைவி சொன்னார், அது நான் செய்த தருமம்! அதை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?
   அதே போல்தான் மூக்குத்தியும்! தெரிந்தோ தெரியாமலோ அது பிச்சைக்காரனின் கலயத்தில் விழுந்து விட்டது. நீ தர்மமாகதந்துவிட்டாய்! பொன் என்பதால் அதை திரும்ப கேட்கலாமா? இது என்ன நியாயம்? என்றார்.
   அவரது மனைவியால் பேச முடியவில்லை!
அந்த தலைவர் பிச்சைக்காரனிடம் சொன்னார். அந்த மூக்குத்தி இனி உன்னுடையதுதான்! மகிழ்வோடு எடுத்துச் செல்! தர்மம் தந்த எதையும் திரும்ப பெறும் பழக்கம் நமக்கில்லை! என்றவர் மனைவியிடம் என்ன அப்படித்தானே! என்றார்.
   மறு பேச்சு பேச முடியாமல் தலையசைத்தார் மனைவி!

இந்த தலைவர் யார் என்று தெரியுமா? பாலகங்காதர திலகர்தான்!


இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நாடு பாரத நாடு! அதை போற்றுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அறிய தகவல் தந்தமைக்கு நன்றி...!

    ReplyDelete
  2. தெரியாத தகவல்.... பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இதுவரையிலும் அறியாத தகவல் இது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!