இறைவனிடம் இல்லாதது எது? கதம்ப சோறு! பகுதி 18

கதம்ப சோறு பகுதி 18


வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி- டி5 ராக்கெட்!

        உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சினைக் கொண்டு தயாரிக்கப்பட ஜி.எஸ்.எல்.வி டி5. ராக்கெட் 5ம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுவிட்டது. இது 20 ஆண்டுகால கனவு என்று விஞ்ஞானிகள் மகிழ்வுடன் தெரிவித்தனர். இந்த ராக்கெட் திட திரவ கிரையோஜெனிக் என்ற மூன்று அடுக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டது. 414.75 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் புவி வட்டப்பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் இந்த சாதனை மூலம் உலக அளவில் இந்தியாவின் கிரையோஜெனிக் இஞ்ஞின் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் துறையில் நமது முன்னேற்றம் உறுதியாகியுள்ளது.

ஆம் ஆத்மியின் அடுத்த கட்டம்!

     கட்சி ஆரம்பித்து ஒருவருடத்திற்குள் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அடுத்த இலக்காக லோக்சபா தேர்தலில் 300 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. குறிப்பாக டெல்லி ஹரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில இடங்களிலும் போட்டியிட உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த கட்சியில் இப்போதே கோஷ்டி பூசல் உருவாகி மூன்று அமைப்புக்களாக செயல்படுகிறது! ஒரு வேளை காங்கிரஸுடன் சேர்ந்த சகவாச தோஷமாக இருக்குமோ என்னமோ? லோக்சபாவிலும் சில இடங்களை பெற்று டெல்லி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்தால் இந்த கட்சி கண்டிப்பாக ஒரு மாற்று அரசியலை ஏற்படுத்தும்.

தீட்சிதர்களுக்கு கிடைத்த வெற்றி!

     சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் உரிமை தீட்சிதர்களுக்கே உரியது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆட்சியாளர்கள் எவறானாலும் இந்து சமயத்திலும் இந்து கோயில்களிலும் அவர்கள் இஷ்டப்படி மாற்றங்களை கொண்டு வருவது தமிழகத்தில் வழக்கம். கடந்த இரண்டாயிரத்து ஆறில் திமுக ஆட்சியில் இந்த கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் இருந்து அறநிலையத்துறைக்கு மாறியது. கடந்த 1951ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உறுதி செய்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பினால் தீட்சிதர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிக முக்கியமாக இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களில் மாநில அரசு கோவிலில் நடக்கும் வழிபாடு விசயங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு இடமில்லை என்று அறிவித்துள்ளது முக்கியமான ஒன்றாகும்.

அழகிரி வெக்கேட்!

    திமுகவில் இருந்து அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். மதுரை மாவட்ட திமுகவும் கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்ட அழகிரியையும் கலைஞர் அடக்கிவைத்துள்ளார். திமுக காங்கிரஸை விட்டு விலகி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேமுதிக மீது சாய துவங்கியுள்ளது. இது கலைஞரின் ராஜ தந்திரம் பழம் இருக்கும் வரை ஒரு மரம். காலியானதும் மற்றொரு மரம் என மாறும் அவர் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க அடுத்த மூவை துவங்கி விட்டதின் அறிகுறியே இந்த அழகிரி வெக்கெட்!

தேமுதிக பொதுக்குழு!

      பொன்னேரியில் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் உருப்படியாக போட்ட ஒரே தீர்மானம் டாஸ்மாக்கிற்கு எதிரான தீர்மானம் ஒன்றுதான்.இத்தனை கூட்டங்களில் அவர் பேசியதிற்கும் இங்கு பேசியதிற்கும் கொஞ்சம் மாற்றம் இருந்தது. தடுமாறி எங்கேங்கோ செல்லும் பேச்சு இங்கு கொஞ்சம் சரியாகத்தான் இருந்தது. தேமுதிக இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றெண்ணிய இளைஞர்கள் சமீபத்திய அதன் போக்கால் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். கலைஞரும் அதன் மீது பாசம் வைக்கும் வேளையில் தேமுதிக என்ன செய்ய போகிறது? என்பதுதான் ஹைலைட். இதில் சரியான முடிவு எடுத்தால் கேப்டனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழகத்தில் உண்டு.

இங்கிலாந்தை சாம்பலாக்கிய ஆஸி ஆஷஸ் வென்றது!

    இந்தியா- பாக் கிரிக்கெட் தொடர் போன்றது ஆஸி- இங்கிலாந்து இடையிலேயான ஆஷஸ் தொடர். இதில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் ஒன்றில் கூட விட்டுக்கொடுக்காமல் ஐந்து போட்டிகளிலும் வென்று 5-0 என இங்கிலாந்தை சாம்பலாக்கிவிட்டது ஆஸி இதனால் டெஸ்ட் ரேங்கில் நீண்ட நாளுக்கு பின் மூன்றாம் இடத்தினை எட்டியது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இங்கிலாந்தின் போராடும் குணம் வெளிப்பட வில்லை! அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொதப்ப பவுலர்களும் விழிபிதுங்க ஆஸி ஒட்டுமொத்தமாக கலக்கியது. ஆஸி வீரர்களின் வாய் சண்டையும் தொடர்ந்தது. தொடரில்  மொத்தமாக 37 விக்கெட் எடுத்த மிட்செல் ஜான்சன்  தொடர்நாயகன் ஆனார். சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின் இந்த தொடரில் மிட்செல் ஜான்சன் முக்கியபங்கு வகிப்பார் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலவச மருத்துவ ஆலோசனைக்கு 104


 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த சேவையை முதல்வர் சென்னையில் துவக்கிவைத்தார். முதலுதவி குறித்த தகவல்கள், தாய் சேய்நலம், ரத்ததானம், கண் தானம் பற்றியதகவல்கள், தொற்று, தொற்றா நோய் தகவல்கள், ஊட்டச்சத்து தொடர்பான தகவல்கள் முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டு திட்ட தகவல்கள் மருத்துவமனை, மற்றும் சுகாதாரநிலையங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பல சந்தேகங்களை இந்த 104 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். இதை கொட நாட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

36 பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் சாதனை!

     சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 36 பந்துகளில் சதம் அடித்து நியுசிலாந்தின் கோரி ஆண்டர்சன் புதிய சாதனை படைத்தார். 17 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானின் அப்ரிடி இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்த சாதனையை இவர் முறியடித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்த சாதனையை படைத்த இவர் புத்தாண்டு தினத்தன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஆட்டத்தில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் மொத்தம் 22 சிக்ஸர்கள் விளாசினர். இது ஒருசாதனை. ஒரே இன்னிங்க்ஸில் இரு வீரர்கள் 50 பந்துகளுக்கு குறைவாக சதம் அடித்தது ஒரு சாதனை ஜெசி ரைடர் 46 பந்துகளில் சதம் அடித்தார். இந்த அணி 20 ஓவர் முடிவில் 275 ரன்கள் குவித்தது. இதுவும் ஒரு சாதனை. ஒரு போட்டியில் முதல் இருபது ஓவர்களுக்குள் இரண்டு பேட்ஸ்மேன்கள் சதமடித்ததும் ஒருசாதனையாக அமைந்தது.

டிப்ஸ்! டிப்ஸ்!



விக்கலை நிறுத்த ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் போதுமானது. விக்கலுக்கு மருந்து சாப்பிடக்கூடாது. விக்கலால் கெடுதல் இல்லை!

வெள்ளைத்துணிகளுக்கு நீலம் போட வாஷிங் மெசினை பயன்படுத்தாதீர்கள். நீலத்தில் உள்ள கெமிக்கல்கள் மிசினை பழுதடையச் செய்துவிடும்.

வெப்பெண்ணை அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி அகல் தீபம் ஏற்றினால் கொசு வராது. நமது சுவாசத்திற்கும் கேடு வராது.

கேஸ் அடுப்பு  ஸ்டவ் போன்றவற்றை அணைத்த பின் சூடாக இருக்கும்போதே ஈரத்துணியால் துடைத்தால் பளிச் சென்று இருக்கும்.

இறைவனிடம் இல்லாதது எது?


கம்பர் ஒருநாள் தான் வழிபடும் நாராயணருக்கு காணிக்கைத்தர வேண்டும் என்று விரும்பினார். ஒருவருக்கு ஒரு பொருளை தரவெண்டும் என்றால் இல்லாத ஒன்றை தந்தால்தான் பெற்றுக்கொள்ளுபவர் பிரியமாக ஏற்றுக்கொள்ளுவார். 25 பஞ்சாலை வைத்துள்ள ஆலை அதிபருக்கு விளக்குத்திரிக்காக ஒரு நூல் கண்டு தந்தால் அவர் அதை விரும்புவாரா? மாட்டார்.

  பெரிய நிலக்கிழாரிடம் இரண்டு செண்ட் நிலம் தந்தால் மகிழ்ச்சி வருமா? வராது. எம்பெருமானுக்கு என்ன தரலாம் இது கம்பருடைய சிந்தனை! பத்து பவுன் தரலாமா? திருமகளின் புருஷனுக்கு தங்கம் பெரியதா? மகிழ மாட்டார். பத்து ஏக்கர் நிலம் தரலாமா? நிலமகளின் தலைவரான அவருக்கே நிலமா? மகிழ மாட்டார். பத்துபடி பால் வாங்கி தரலாமா? உஹூம்! அவர்தான் பாற்கடலிலேயே பள்ளிகொண்டிருப்பவர் ஆயிற்றே? பட்டு பீதாம்பரம் தரலாம் என்றாலோ அவர் பீதாம்பரதாரி! எல்லாமே அவர் உடைமை! அவருக்கு எதைத்தருவது? அவரிடம் எது இல்லை? கம்பர் சிந்தித்தார்.
    ஒரு குதி குதித்தார்! அவர் கண்டுபிடித்துவிட்டார் இறைவனிடம் எது இல்லையென்று! நாராயணனிடம் இல்லாத இதை ஐயனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று எண்ணி உவந்தார். அது எது?
  என்பால் உள்ள அறியாமையே ஆகும்! இறைவன் ஞான மயமானவர்! அவரிடம் அஞ்ஞானம் அணுவளவும் கிடையாது. என்னிடமோ அது வண்டி வண்டியாக மண்டிக் கிடக்கிறது! அப்பனிடம் இல்லாத அறியாமையையே அவனுக்கு சிறந்த நிவேதனப்பொருளாகும். ஐயனுக்கு என் அறியாமையே படைத்து ஆராதனை செய்வேன் என்று களிநடம் புரிந்தார் கம்பர்.
                    ( கிருபானந்த வாரியாரின் நூலில் இருந்து)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. கதம்பம் சுவையோ சுவை!!

    ReplyDelete
  2. சுவையான கதம்பம்..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!