Friday, January 31, 2014

ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை!

ஆனந்தவல்லிக்கு அன்னப்பாவாடை! சென்னை செங்குன்றத்தில் இருந்து கல்கத்தா செல்லும்  ஜி.என்.டி சாலையில் பதினைந்து கி.மீ சென்றால் பஞ்ஜேஷ்டி என்ற ஊரை அடையலாம். அகத்திய மாமுனிவர் ஐந்து யாகங்கள் செய்த தலம் பஞ்ஜேஷ்டி. இஷ்டி என்றால் யாகம் பஞ்சம் என்றால் ஐந்து. பஞ்ச இஷ்டி பஞ்ஜேஷ்டி எனப்பெயர் பெற்றது. இந்த ஊரில் இருந்து மேற்கே பிரியும் மண் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய வயல்கள் நிறைந்த நத்தம் கிராமம். இந்த கிராமத்தில்  தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம்.
     நத்தம் என்று இப்போது வழங்கப்படும் இந்த கிராமத்தின் பழைய பெயர் எகணப்பாக்கம். இது இந்த ஊர் போரியம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.இராஜராஜ சோழ பெருவளத்தான் காலத்திய கல்வெட்டு அது. இதன் மூலம் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்டது என்று அறிய முடிகிறது.
      எகணன் என்றால் பிரம்மா. பாக்கம் என்பது கடற்கரை அருகே உள்ள கிராமங்களை குறிக்கும். கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கம் இதற்கு உதாரணம் ஆகும். இந்த ஊரில் இருந்து 20 கி.மீ தொலைவில் பழவேற்காடு கடற்கரை உள்ளது.


  இந்த ஆலயத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள் அன்னை ஆனந்தவல்லி. தெற்கு வாயில் உள்ள தலங்கள் பரிகாரத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தென் திசை எமனுக்கு உரியது. எமனுடைய திசையில் அம்பிகை வீற்றிருக்கிறாள். எமன் வாயில் நுழைந்தவனை காப்பாற்றி அபயம் தருகிறாள் என்பது ஐதீகம்.
      ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பாள் இங்கு முக்கண்களுடன் காலில் சதங்கை அணிந்து நாட்டிய கோலத்தில் காட்சி தருகின்றாள். பிரம்மனுக்கு இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிய கோலத்தில் காட்சி தந்தமையால் ஆனந்தவல்லி என்ற நாமத்துடன் நாட்டியநாயகியாக விளங்குகின்றாள். இந்த அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட கலைத்துறையில் சிறக்கலாம் என்பது சிறப்பு.
     தன்னுடைய பக்தன் ஒருவனை ராகு சர்ப்ப வடிவில் சென்று தாக்க முற்பட அவன் அம்மனை சரணடைகிறான். அம்பாள் ராகுவை தடுக்க ராகுவான சர்ப்பம் அம்பாளை தீண்டிவிடுகிறது. அம்பாள் மூர்ச்சை அடைகிறாள். சக்தியின்றி உலகம் ஸ்தம்பிக்கையில் ஈசன் நெல்லிவனம் சென்று அங்கு உறையும் தம்மை வழிபடச் சொல்கிறார். அம்பிகை நெல்லிவனம் வந்து ஈசனைவழிபட ஈசன் அம்பாளின் உடலில் இருந்த விஷத்தன்மையை நீக்கி அருள் பாலிக்கிறார். நஞ்சுண்ட சிவனது லிங்கத்திருமேனி கருமை நிறமானது. இதனால் இங்குள்ள சிவலிங்கம் எண்ணெய் காப்பு இல்லாத போது கருமையாக காட்சியளிக்கும் பால் அபிஷேகத்தின் போது பால் கருநீலமாக வழியும். ராகு- கேது- சர்ப்ப தோஷங்கள் இந்த இறைவனையும்- இறைவியையும் பால் அபிஷேகம் செய்து வழிபட விலகும்.

     இத்தகு சிறப்புவாய்ந்த இந்த ஆலயம் கவனிப்பாரற்று இருந்தது. கடந்த 2012ல் கிராமமக்கள் முயற்சி செய்து கும்பாபிஷேகம் செய்தனர். அதனுடைய இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருகின்ற 4-1-2014 அன்று ஆலயத்தின் வருஷாபிஷேக தினத்தில் காலை 8.30 மணி முதல் விசேஷ ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு அபிஷேகங்கள் கலசாபிஷேகம் முதலியவை மதியம் 1.மணிவரை நடைபெற உள்ளது.

   மாலை 6.மணிக்கு ஆனந்த வல்லி அம்பிகைக்கு விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு அன்னப்பாவாடை என்னும் படையல் நிவேதனம் செய்யப்படும்.
   அன்னப்பாவாடை என்பது அன்னத்தால் படையல் செய்வது. இதில் சாதம், சர்க்கரைபொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம், பருப்பு, பழவகைகள், இளநீர் ஆகியவற்றை படையல் செய்வது ஆகும்.
இதில் சர்க்கரை பொங்கலின் மீது குளம் மாதிரி செய்து அதில் நல்ல சுத்தமான நெய்யை காய்ச்சி ஊற்றி நெய்க்குளம் செய்வார்கள். இதில் அம்மனது திருவுருவம் காட்சியளிக்கும்.
   இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த பலனை தரும். அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும் என்பது பழமொழி. சுத்தமான அன்னம் என்பது என்ன? பாலீஷ் செய்யப்பட்ட அரிசி அல்ல! சுத்தமான முறையில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சாதம் ஆகும்.உடை வெள்ளையாக இருப்பதால் பயனில்லை! உள்ளம் வெள்ளையாக இருக்கவேண்டும். அரிசி என்பதில் அரியும் சிவனும் இருப்பதாக கூறுவார்கள். அரிசியின் வடிவமும் லிங்க ஸ்வரூபம் தான். மற்றொருவகையில் சாளக்கிரம வடிவமாகவும் நோக்கினால் விஷ்ணு அரிசியில் உறைகிறார். அரிசியை இறைக்கக் கூடாது என்பார்கள். அன்னம் பரப்ரம்ம சொரூபம் என்பார்கள். ஐப்பசி பவுர்ணமியில் ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உலகத்து உயிர்கள் அனைத்திற்கும்  அன்னம் என்பது உணவு. இந்த உணவை தரும் அன்னபூரணி வடிவினள் அன்னை. அத்தகைய அன்னைக்கு நன்றிக்கடனாக அன்னப்பாவாடை என்னும் படையல் செய்து வழிபடுவது நம் மரபு. ஜீவராசிகளுக்கு படியளக்கும் பரப்பிரம்ம சொரூபிணியான அன்னைக்கு ஆண்டில் ஒரு நாள் இப்படி அன்னப்பாவாடை என்னும் படையல் வழிபாடு செய்து போற்றுதல் தொன்று தொட்டுவரும் நம் நன்றியுணர்ச்சியினை வெளிப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.

    இந்த அருமையான படையல் நிவேதனம் தென்னகத்தில் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். வடதமிழகத்தில் இந்த ஆலயத்தை தவிர்த்து எனக்குத்தெரிந்து எங்கும் நடப்பதாக தெரியவில்லை.
    இந்த அன்னப்பாவாடை நிகழ்ச்சி ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகைக்கு மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டு 4-2-2014 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
     பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அம்மனின் அருள் பெற்றுய்யுவோமாக!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, January 30, 2014

சசிக்குமாரை “மாமா”ன்னு கூப்பிடும் நடிகை! கதம்பசோறு! பகுதி 20

கதம்ப சோறு பகுதி 20
  
கெஜ்ரிவால் கூத்துக்கள்!
      அர்விந்த் கெஜ்ரிவால்! அன்னா-ஹசாரே போராட்டங்களில் உறுதுணையாக இருந்து பின்னர் கட்சி துவக்கி ஒருவழியாக டெல்லி முதலமைச்சராகவும் மாறிவிட்டார். ஷங்கரின் முதல்வன் பட ஹீரோ போல காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார் இவர். இவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல! தினமும் மக்களை சந்தித்து மனுக்களை வாங்குவேன் என்றார். முதல்நாளே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு பாதுகாப்பு குளறுபடி என்று குழப்பங்கள். இனி இப்படி பட்ட நிகழ்ச்சி கிடையாது என்று பல்டி அடித்தார். அடுத்து டெல்லி போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வில்லை என்று ஒரு முற்றுகைப் போராட்டம் அறிவித்து அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒருமாதம் அவகாசம் கேட்டார் டெல்லியை சீர்த்திருத்த. இதோ முடிந்துவிட்டது. டெல்லி ஒன்றும் மாறியதாக தெரியவில்லை! கெஜ்ரிவால்தான் தேர்ந்தெடுத்த அரசியல்வாதியாக மாறிவிட்டார். அரசியல் அவ்வளவு பலம் வாய்ந்தது! என்ன செய்ய?

கலைஞர்-அழகிரி கலாட்டா!
   இதைப்பற்றி நேற்றே ஒரு பதிவிட்டேன். இன்றும் கொஞ்சம் கொசுறு. திருவிளையாடல் காலத்தில் இருந்தே பிள்ளைகளுக்குள் தகறாரு இருந்துதான் வருகிறது. அழகிரியின் விசுவாசிகளின் பீஸை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கி இப்போது அவரையும் பிடுங்கி வைத்துள்ளார் கலைஞர்.வளர்த்துவிட்டவரும் அவரே! இப்போது வெட்டிவிட்டவரும் அவரே! தேமுதிக காங்கிரஸ் பக்கமோ பி.ஜே.பி பக்கமோ சாய்ந்திடாமல் இருக்க இப்படி ஒரு செக் வைத்தார் கருணா. ஆனால் அண்ணியார் பிரேமலதாவின் கணக்கு வேறுமாதிரி இருக்கு. கருணாநிதியின் இந்த கபட நாடகத்திற்கெல்லாம் ஏமாறமாட்டோம் என்று சொல்லுகிறார் அவர். ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக கொஞ்சம் நாவடக்கம் தேவை! அழகிரியிடம் அது இல்லை! அவர் வெட்டிக்கொண்ட குழிதான் ரவுடியிசம்! அதில் வீழ்ந்துவிட்டு இப்போது குய்யோ முறையோ என்று முறையிடுகிறார் பாவம்.

பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளவேண்டுமா?

    2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அறிவித்து உள்ளது ரிசர்வ்வங்கி. கருப்பு பணத்தை வெளிக்கொணரவரும் முயற்சி இது என்று இது சொல்லப்பட்டாலும் பிரபல பொருளாதார நிபுணர்கள் இதனால் எல்லாம் கருப்பு பணம் கட்டுக்குள் வராது என்று சொல்லுகிறார்கள். முதலில் இது குறித்து மக்கள் பீதி அடையத் தேவை இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கி இது குறித்து அறிவித்த பின்னர் தங்கத்தில் முதலீடு அதிகம் செய்கின்றனராம். தங்கத்தின் தேவையும் விலையும் வேறு அதிகரித்துப் போகிறது. இன்று பஸ்சில் போகும் போது எப்.எம்.மில் ஒரு விசயம் சொன்னார்கள். இனி குறைந்த பட்சம் 10 ஐநூறு ரூபாய் தாள்களோ, அல்லது 10 ஆயிரம் ரூபாய் தாள்களோ வங்கியில் செலுத்தினாலோ எடுத்தாலோ ஏதோ சான்று தரவேண்டுமாம். அந்த சமயம் பார்த்து ஹார்ன் அடித்து தொலைத்ததால் காதில் விழவில்லை! இனி எந்த சாமான்யனும் இது போன்ற நிபந்தனைகள் விதித்தால் வங்கி பக்கம் செல்லமாட்டான். இதுபோன்ற நிபந்தனைகள் கருப்புப்பணத்தை அதிகரிக்கத்தான் செய்யும் என்பது என் கருத்து.

அந்தமான் படகுவிபத்து!

    விபத்துக்கள் ஆண்டுதோறும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் விழிப்புணர்வுதான் இல்லை. ஹெல்மெட் போடாததால் மரணம்! என்ற செய்திகள் நாள்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்! ஆனால் யாரும்கேட்பது இல்லை. அலட்சியம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்! ம்! பார்த்துக்கொள்ளலாம்! சமாளித்துக்கொள்ளலாம்! என்ற போக்கு விபத்துக்களுக்கு காரணம் ஆகிறது. கண்கூடாக இதை பார்த்தாலும் யாரும் திருந்துவதாக இல்லை! அந்தமானில் நடந்த படகு விபத்தும் அலட்சியத்தால் நிகழ்ந்தது என முதற்கட்ட தகவல் கூறுகிறது. சுற்றுலா சென்றவர்கள் 32 பேர் தங்கள் கனவுகளுடன் கடலில் மூழ்கிவிட்டார்கள். காஞ்சிபுரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இதெல்லாம்! அப்புறம் எல்லாம் மறந்துவிடும். மீண்டும் ஒரு படகு விபத்து நடக்கும்போது எங்கெல்லாம் எப்போதெல்லாம் இது நடந்தது என்று ஊடகங்கள் புள்ளிவிபரங்கள் சொல்லும். பட்டும் திருந்தவில்லை என்றால் அப்புறம் அவன் எப்படி அறிவுள்ள மனிதன்?

90 வயதில் 60வயது பாட்டியை மணந்த தாத்தா!

   ஏ. எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப்போராட்டவீரர். 90 வயதுக்காரர். அவரது மனைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. மணப்பெண் ராதாவிற்கு வயது 60 அவரது தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. பெற்றோர் இறந்துவிட தனிமரமாக வசித்துவந்தார் ராதா. அங்கன் வாடி உதவியாளராக பணிசெய்துவந்தார் ராதா. ராதாகிருஷ்ணனுக்கு மாநில மத்திய அரசு ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப்பின் அந்த ஊதியம் ஏழைப்பெண் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்று கருதி ஆதரவில்லாத இந்த பெண்ணை மணந்துகொண்டுள்ளார். சட்டரீதியாக  சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த திருமணம் நடைபெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்கு பிறந்த வாரிசுகள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லையாம். வித்தியாசமான மனிதர்தான் இல்லையா?
தோற்றுப்போன தோனியின் படை!
     தென் ஆப்ரிக்காவில் அடிவாங்கி வந்த கையோடு நியுசிலாந்து சென்று அங்கும் பலத்த அடியோடு திரும்ப காத்திருக்கிறது தோனியின் படை! ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகார்தவான், ரோகித் சர்மா துவக்க ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை! மாற்றி யோசிக்க தயங்கும் தோனியின் தலைமைப் பண்பும் உதவிக்குவரவில்லை! நான்கு போட்டிகளில் ஒன்றை கஷ்டப்பட்டு டை செய்துவிட்டு மற்றதில் மண்ணைக் கவ்வி விட்டார்கள். கடைசி போட்டியிலாவது வென்றால் ஆறுதல் கிடைக்கலாம். தொடர்ந்து சொதப்பிவரும் இஷாந்த்சர்மா, ரெய்னா போன்றோருக்கு தொடர் வாய்ப்புக்கள் வழங்கி வீணடித்து வருகிறார். யுவராஜ், சச்சின்,டிராவிட், ஜாகிர் போன்றோர் இல்லாதது வெளிநாட்டு பிட்சுகளில் ஆடும்போது நன்கு தெரிந்தது. கவுதம் கம்பீர் இல்லாத குறை தொடக்க ஆட்டத்தில் தடுமாறும் தவான் –சர்மா ஜோடியால் நன்கு புலப்பட்டது. தனது முதலிடத்தையும் இழந்துவிட்டது. விளையாட்டில் இது சகஜம் என்றாலும் இன்னும் இந்திய கிரிக்கெட் மேம்பட வேண்டியது அவசியம்.

வாவ்ரிங்கா!
     ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாவ்ரிங்கா நடாலை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார். தனது 31 வது க்ராண்ட்ஸ்லாம் போட்டியில் இதை வென்று சாதித்துள்ளார் வாவ்ரிங்கா! சென்னை ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று சாதித்தவர் இவர். இதன் மூலம் இவரது நீண்டகால கனவு நிறைவேறியது. கடின முயற்சியும் உழைப்பும் ஒருநாள் பலனை கொடுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வாவ்ரிங்கா.

சசிக்குமாரை  “மாமா”ன்னு கூப்பிடும் அனன்யா!
     சசிகுமாரின் நாடோடிகள் படம் மூலம் தமிழில் அடையாளம் காணப்பட்டவர் அனன்யா. கேரளத்து நாயகியான இவர் தமிழில் இது வரை நான்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தில் அருமையாக நடித்திருப்பார். இன்னும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவில்லையாம். நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல கேரக்டர்கள் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் இவருக்கு ஆசையாம். படத்தில் நடிக்க இவர் ஹோம் ஒர்க் எதுவும் செய்வதில்லையாம். இயக்குனர் சொல்லிக் கொடுப்பதை திரும்ப செய்வாராம். அதனால்தான் என் நடிப்பு இயல்பாக இருக்கிறது என்கிறார்.  நாடோடிகள் படத்தில் சசிக்குமாரை மாமா என்று கூப்பிடுவேன். அதனால் இப்பவும் அவரை மாமா என்றே கூப்பிடுகிறேன். நல்ல நட்போடு இருப்பவர் சசி. மலையாலத்தில் இசை ஆல்பம் பாடி இருக்கிறேன், படத்திலும் பாடி இருக்கிறேன். தமிழிலும் வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன் என்கிறார்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வெந்தயக்கீரை, கொத்துமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக்கொண்டு குளித்தால் தலைமுடி பட்டுப்போல மின்னும்.

பாகற்காயை நறுக்கி காயவைத்து தூளாக்கிக் கொண்டு ஒரு டீஸ்பூன் தூளுடன் ஒரு டம்ளர் வெந்நீர் கலந்து குடித்துவர அல்சர் விரைவில் குணமாகும்.

கையில் புண்ணோ, காயமோ இருக்கும் சமயம் நாய், பூனை, கிளி போன்ற செல்ல பிராணிகளை தூர வைக்கவும். அதை தூக்கி கொஞ்சுவதை தவிர்க்கவும். பிராணிகள் கீறினாலோ நக்கினாலோ நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.

தினைமாவு என்பது உடலுக்கு வலுசேர்க்கும் ஐயிட்டம்.  தினையை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வறுத்து மாவாக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தேன், சிறிதளவு ஏலக்காய்ப்பொடி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உடலுக்கு வலுசேர்க்கும் அற்புத ஸ்வீட் இது. வெல்லம் சர்க்கரையை தவிர்த்து வெறும் தேன் மட்டும் கலந்தும் செய்யலாம்.


6 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு முறைக்கு அரைமாத்திரைகளாக நான்குமுறை பாரசிடமால் மாத்திரைகள் பயன்படுத்தலாம். இதுவே 9 முதல் 15 வயதுவரை உள்ளவர்கள் எனில் ஒரு மாத்திரையாக பயன்படுத்தவேண்டும்.

தேனில் நெல்லிக்காய் பொடி கலந்து சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் இல்லவே இல்லை!

இந்தியன்டா!

   ஒருநாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய்சிங் மஹாராஜா அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் வலம் வந்தார். அங்கே ரோல்ஸ்ராய் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார்.
   அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி வெளியே போகச் சொல்லிவிட்டார். மனமுடைந்த மகாராஜா தன் விடுதி அறைக்கு வந்தார். தன் வேலையாட்களை அழைத்து காட்சியகத்திற்கு சென்று ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை விருப்பம் தெரிவித்தார் என்று கூறிவரச்செய்தார். சிறிது நேரம் கழித்து தன் ராஜ உடையில் கம்பீரமாக காட்சியகத்திற்கு சென்றார். அங்கு இவருக்கு சிவப்பு கம்பளவரவேற்பும் மரியாதையும் கிடைத்தது.  அங்குள்ள ஆறு கார்களையும் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக் கொண்டார்.
   மன்னர் இந்தியா வந்ததும் அந்த ஆறு கார்களையும் மாநகராட்சித் துறைக்கு அனுப்பி, அவற்றை ஊரை சுத்தப்படுத்தவும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு சரிய ஆரம்பித்தது. ஐரோப்பா, அமெரிக்காவில் இந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்த்தனர் பிறர். இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரைத்தான் நீ வைத்திருக்கிறாயா? என்று கேலி செய்தனர்.
  உடனே அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியும் தவறை உணர்ந்ததாகவும் குப்பை அள்ளுவதை நிறுத்தும்படியும் மன்னருக்கு தந்தி அனுப்பியது. அதோடு மன்னருக்கு பரிசாக ஆறு கார்களை பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பியது.
 சரியான பாடம் புகட்டிய மகராஜா குப்பை அள்ளுவதை நிறுத்தி அந்த கார்களை வேறு விசயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டார்.

(படித்ததில் பிடித்தது)தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அழகுடன் சேர்ந்து ஆபத்தும் எப்படி வரும்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


 1. என்ன டாக்டர் இது உங்க கன்ஸல்டிங்க் பீஸை நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்துறீங்க?
    என்ன பண்றது! பணத்தோட மதிப்பு குறைஞ்சிகிட்டே வருதே?
                        அம்பை தேவா.

 1. என்ன இது சொத்து மதிப்பை குறைச்சு காட்டியிருக்கீங்க?
    ரூபாயோட மதிப்பு குறைஞ்சிருச்சு! அதுக்கு நான் என்ன பண்றது?
                      கோபாலன்.

 1. எனக்கு ஆபரேசன் கேஸ் மட்டும் மாசத்துக்கு ஐம்பதுக்கு மேல குவியது!
பார்த்துங்க டாக்டர்! சொத்துக்குவிப்பு வழக்குல உள்ளே தள்ளிட போறாங்க!
                    கே. தண்டபாணி.
 1. தலைவர் எதுக்கு தீடிர்னு ஜோசியர் கிட்ட போயிருக்கார்!
    கட்சி தாவலுக்கு நல்ல நேரம் குறிச்சு வாங்கத்தான்!
                       பெ. பாண்டியன்.

 1. அவரு போலி டாக்டருன்னு எதை வச்சி சொல்றீங்க?
    மெமரி லாஸ் அதிகமா இருக்குதுன்னு போன எனக்கு  4 ஜி.பி மெமரிகார்ட்  எழுதி கொடுத்திருக்கார்னா  பாரேன்!
                      யுவகிருஷ்ணா.

 1. தலைவரே! நேத்து மீட்டிங்ல அந்த கட்சி தலைவரை உப்புமாத் தலையான்னு திட்டினீங்களா?
ஆமா! அதுக்கென்ன இப்போ?
 உங்க மேல  “ரவ”தூறு  வழக்கு போட்டிருக்காங்க!
                        பர்வீன் யூனூஸ்


 1. அழகுடன் சேர்த்து ஆபத்தும் வரும் என்பது தங்கள் விஷயத்தில் உறுதியாகிவிட்டது மன்னா!
எப்படி?
எதிரியின் போர் ஓலையை அழகான இளம்பெண் கொண்டுவந்திருக்கிறாளே!
                      சரவணன்.

 1. ஆச்சர்யமா இருக்கே? தலைவர் மீட்டிங்க்லே இவ்வளவு  பெண்கள் கூட்டம்?
    வெங்காயம் இல்லாத சாம்பாரை அறிமுகப்படுத்தறதா சொல்லியிருக்காரே!

                        அம்பை தேவா.

 1. திடீர்னு எதுக்கு வெளிநாட்டுக்கு போய் திருடி பணம் அணுப்பறே கபாலி!
    ரூபாய் மதிப்பு இழக்கறதை தடுக்கத்தான் எஜமான்!
                         பெ. பாண்டியன்.

 1. ஆனாலும் தலைவரை ஜாமின்ல விடறப்போ இவ்வளவு கடுமையான நிபந்தனை விதிச்சிருக்க கூடாது!
    ஏன் என்னாச்சு?
    தினமும் தொகுதிக்கு போய் அவரோட பொண்டாட்டி எதிருல கையெழுத்து போடனுமாம்!
  

 1. பலவழக்குகளில் சிக்கி நம்ம தலைவர் குழம்பி போய் இருக்காருன்னு எப்படி சொல்றே?
    மனைவி காபி கொண்டுவந்து கொடுத்தாக் கூட இது பழிவாங்கும் நடவடிக்கைன்னு கத்தறாரே!

 1. தலைவர் ஏகப்பட்ட பேங்குகள்ல கடன் வாங்கிட்டு கட்டாம டபாய்க்க பார்க்கிறார்னு எப்படி சொல்றே?
பேங்குகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்போறதா சொல்றாரே!
                       எஸ்.ராமன்.


 1. அவரு பெட்ல படுத்துகிட்டு தலையை சொறிஞ்சிகிட்டு இருக்காரே! ஏன்?
அதுவா? அவருக்கு தூக்கத்துல தீபாவளி இனாம் கேட்கிற வியாதியாம்!
                   பர்வீன் யூனுஸ்

 1. தலைவர் மேல போடப்பட்டுள்ள வழக்கு அபாண்டமானதுன்னு எப்படி சொல்றே?
பின்னே லைசென்ஸ் வாங்காம தீபாவளி துப்பாக்கி வைச்சிருந்தார்ன்னு கேஸ் போட்டிருக்காங்களே!
                        பர்வீன் யூனுஸ்

 1. மன்னா! போரில் துரத்திய எதிரிகள் மீது மகாராணி செய்த தீபாவளி லட்டுகளை வீச வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீர்களா?
    ஏன்? என்னவாயிற்று?
  நீங்கள் போரில் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
                       வீ. விஷ்ணுகுமார்

 1. என்ன டாக்டர் இது! எனக்கு நீங்க ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பட்டாசு வெடிக்கிறாங்களே?
கம்முன்னு படுய்யா! இன்னிக்கு தீபாவளி!

 1. அந்த கவர்ச்சி நடிகை ஏன் கோபமா இருக்காங்க?
தீபாவளி அன்னிக்கு அவங்க புடவை எடுத்ததை டீவியில ப்ளாஷ் நியுஸா போடறாங்களாம்!
                       ராம் ஆதிநாராயணன்.

 1. தலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கமா அலையறாரே ஏன்?
நீதிபதி கேட்கும் கேள்விகள் அவுட் ஆகுமான்னு பார்க்கிறார்!
                        அம்பை தேவா.


 1. தலைவருக்கு என்ன குழப்பம்?
கூடியிருந்த கூட்டத்தைவிட செருப்பு அதிகம் எப்படி வந்து விழுதுன்னு யோசிக்கிறார்.
                    நா.கி.பிரசாத்.

 1. காசிக்கு போற தலைவர் ஏன் சரக்கு ரயில்ல ஏறி போறார்?
ஏகப்பட்ட பாவமூட்டைகளை கொண்டு போறாரே!
                       சரவணன்.
21 ஆச்சர்யமாக இருக்கிறதே அமைச்சரே! இன்று அரண்மணையில் இத்தனை புலவர்கள் வரிசையாக நிற்கிறார்களே!
   தங்களை இகழ்ந்து பாடவேண்டும் என்று தவறுதலாக அறிவிப்பு செய்துவிட்டோம் மன்னா!
                     அ.ரியாஸ்.

நன்றி: குங்குமம் வார இதழ்.


 மேலும் சிரிக்க:


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


                  

Wednesday, January 29, 2014

அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!

அழகிரிக்கு கருணாநிதி கொடுத்த வடகறி!


ஊடகங்கள் எந்த பரபரப்பு செய்தியும் கிடைக்காமல் மந்தமாக இயங்கிக் கொண்டிருந்த செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் வழக்கமாக தானே கேள்வி தானே பதில் என்னும் அறிக்கை விடும் தாத்தா கலைஞர் அவர்கள் தன் திருவாயை மலர்ந்து அழகிரி குறித்து விடுத்த தகவல்கள் பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கும் போது சொல்லாத புதிய காரணம் நேற்று சொன்னார் தமிழினத்தலைவர். இதன் மூலம் அவர் வீட்டுக்குள் நடக்கும் குடும்பச்சண்டையை வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டார். ஒரு மூத்த அரசியல் ராஜ தந்திரி என்று வர்ணிக்கப்படும் கலைஞர் தேமுதிக கூட்டணிக்காக இந்த அளவுக்கு இறங்கிவருவார் என்று நினைத்தும் பார்க்கவில்லை நான்.
     அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது தமிழறிவு, எழுத்தாற்றலை வியப்பவன் நான். நேற்று அவர் அளித்த பேட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் எழுதிய நாடகமாய் தோன்றியது.
      ஒரு குடும்பத்தில் அண்ணன் –தம்பிகள் இருந்தால் எப்படியும் தகறாரு ஏற்பட செய்யும்தான். வார்த்தை வேகத்தில் சில வார்த்தைகளை கொட்டிவிடக்கூடும்தான். அப்படி அழகிரி உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தாலும் அதையெல்லாம் மீடியாக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? நீக்குவது சேர்ப்பதும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு புதிது அல்லவே! கண்கள் பணித்து இதயம் புளித்து என்று எல்லோரும் சொல்வதைப்போல தேர்தல் முடிந்ததும் மீண்டும் அழகிரியாரை அரவணைத்துக் கொள்ளலாம்தானே!
      அவர் நல்லவரா? கெட்டவரா என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு அழகிரியின் பக்கம் இருந்து யோசித்து பாருங்கள்! அவருக்கு தேமுதிகவோடு கூட்டணி சேருவதில் விருப்பம் இல்லை! தென்மண்டல அமைப்பு செயலர் என்ற முறையில் அதைக் கூறியுள்ளார். பத்திரிக்கைகளில் பேட்டி அளித்துள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு கட்சியில் இருப்பதாலேயே தலைமைக்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடாது என்றால் அப்போது என்ன உட்கட்சி ஜனநாயகம் வாழுகிறது. இதற்காக அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கியதற்கு கட்சித்தலைவரிடம் நியாயம் கேட்க வந்திருக்கிறார்.
    அதிகாலையிலா கட்சித்தலைவரிடம் நியாயம் கேட்பது? என்கிறார் கலைஞர்.
     கட்சியின் தலைவர் தந்தை என்ற உரிமையில் அவர் கேட்டிருக்கலாம். அப்போது கலைஞர் சொன்னது போல சூடாக ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டிருக்கலாம். தவறுதான். ஆனால் அதை அன்றே சொல்லி கட்சியை விட்டு நீக்கியிருக்கலாமே? இன்று புதிதாக சொல்லவேண்டிய அவசியம் என்ன?
   அழகிரிக்கு கருணாநிதி தந்த வடகறிதான் இது! சொல்லாமல் சொல்லிவிட்டார் கட்சியின் வாரிசு ஸ்டாலின் தான் என்று. அன்று அரச பரம்பரைக்குள் அடுத்த வாரிசு யார்? என்று அடித்துக் கொள்வார்கள். இன்று அதே காட்சியை காண்கிறோம்.
   தமிழகத்தின் ஏதோ ஓர் மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி தன்னுடைய திறமையினாலும் உழைப்பினாலும் முயற்சியினாலும் இன்னும் பிறவற்றினாலும் தமிழகத்தின் முதல்வரானார். 5முறை முதல்வராகி சாதனையும் படைத்தார். இன்று இந்திய பணக்காரர்கள் வரிசையில் அவரது குடும்பமும் இருக்கிறது. இந்த நிலையில்தான் தலைமையை கைப்பற்ற அவர்கள் குடும்பத்தில் போட்டி!
    அண்ணா தோற்றுவித்த கழகம்! குடும்ப கழகமாகி அதனுள் இன்று வாரிசு உரிமை போர் தோன்றிவிட்டது. இத்தனைவயதாகியும் தலைவர் பதவியை விட முடியாத நிலைக்கும் கருணாநிதியை தள்ளிவிட்டது.
  பிறந்த நாள் பரிசாக அல்வாவிற்குள்  இந்த வடகறியை தந்திருக்கிறார் கருணாநிதி. இதன் சுவை அழகிரிக்கு பிடிக்காதுதான்!  என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்! ஒரு கண்ணில் வெண்ணெய்! மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு! என்ற மனோபாவம் அவருக்கு எப்போதுமே உண்டு. அது இன்று தன் பிள்ளைக்கே வெளிப்பட்டிருக்கிறது.  ஜோசியம் மூடநம்பிக்கை என்று சொல்லும் அவர் அழகிரியின் இந்த ஆரூடத்திற்கு பயந்தது ஏன்? அதிகாலையில் இப்படி ஒரு கெட்ட வார்த்தை சொன்னால் பலித்துவிடும் என்று பயந்தது ஏன்? அவரே ரவுடி என்று சொல்லாமல் சொல்லிவிட்ட அழகிரிக்கு கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் என்ற பதவியை முன்பு கொடுத்தது ஏன்? இப்படி பல ஏன்கள் எழுகிறது.
   இதற்கெல்லாம் ஒரு பதில்! ஆட்சி அதிகாரம் ஒன்றுதான்! என்பதும் புரிகிறது. அதற்கு எதையும் செய்யலாம்! அன்று வைகோவிற்கு நடந்தது! எம்.ஜி.ஆருக்கு நடந்தது. இன்று அவர் மூத்த பிள்ளைக்கே நடந்துள்ளது. மொத்தத்தில் ஒரு நாடகம் நேற்று  அரங்கேறியுள்ளது.

டிஸ்கி} ரஹிம் கஸாலி அளவுக்கு அரசியல் தெரியாது. ஆனாலும் கலைஞர் சொன்ன இந்த புகார் பற்றி எனக்கு தோன்றியதை பகிர்ந்து கொண்டுள்ளேன்! எந்த கட்சி சார்ந்தவனும் அல்ல நான்.

டிஸ்கி 2} வழக்கமான பகுதி கதம்ப சோறு நாளை பதிவாகும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Tuesday, January 28, 2014

விருந்தோம்பல்!

விருந்தோம்பல்!

அந்த அதிகாலை வேளையில் சென்னை விரைவு போக்குவரத்துக்கழக பேரூந்து கரூர் பேருந்து நிலையத்தில் எங்களை உதிர்த்துவிட்டு புகையை கக்கியபடி கிளம்பியது. அப்போது மணி அதிகாலை 3.30 என அந்த பேருந்து நிலையத்தில் இருந்த மணிகூண்டு காட்டியது.
    அதிகாலை நேரம் என்றாலும் பேருந்து நிறுத்தத்தில் நாலாபுறமும் இயங்கிக் கொண்டிருந்த கடைகளில் நடமாட்டம் இருந்துகொண்டுதான் இருந்தது. மார்கழிப்பனிக் காற்று “ஜில்”லென்று காதைத்துளைத்தது. இடுப்பில் மூன்று வயது குழந்தை கையில் ஒரு டிராவல் பேக் கோடு நிதானமாக நடந்தேன். ஆறுமாத கைக்குழந்தையோடு பின் தொடர்ந்தாள் மனைவி.
      அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடம் நோக்கி தன்னிச்சையாக கால்கள் நடந்தன. ஏறக்குறைய பத்துமணி நேர பயணம் எங்கள் அடிவயிற்றை முட்டிக் கொண்டு இருந்தது. முதலில் மனைவி சென்று வர குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு நான் கழிப்பிடத்தினுள் நுழைந்தேன். அந்த அதிகாலை வேளையிலும் அனைத்தும் நிரம்பியிருந்தது. உள்ளே இருந்து ஒரே புகை மண்டலம். அவற்றுடன் மூத்திர நாற்றமும் கலந்து ஒரு மாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. கட்டணம் வாங்குகிறார்களே தவிர பராமரிப்பு என்பதும் சுகாதாரம் என்பதும் மருந்துக்கு கூட கிடையாது. ஏற்கனவே பலமுறை வந்து அனுபவப்பட்டவன் என்பதால் சிறிது நேரம் வாயில் அருகே காத்திருந்து ஒருவன் வந்ததும் உள்ளே நுழைந்தேன்.  ஆயிற்று ஒரு ஐந்து நிமிடம். நிம்மதியுடன் வெளியே வந்து கைகளை சுத்தம் செய்துகொண்டு  மனைவியின் அருகில் வந்தேன்.
     என்னங்க! நம்ம ஊருக்கு பஸ் நாலரைக்குத்தான்! இன்னும் ஒரு மணி நேரம் இங்கதான் இருந்தாகனும் என்றாள். அப்படியா? அப்போ முகம் கழுவிக் கொண்டு ஒரு டீ சாப்பிட்டு உக்காந்திருக்கலாம். குளிர் தாங்க முடியலை என்றேன்.
    மீண்டும் கழிப்பிடத்தினுள் சென்று பல்விளக்கி முகம் கழுவிவிட்டு வந்தேன். அவளும் சென்று வந்த பிறகு காசு கொடுத்துவிட்டு அங்கிருந்த டீக்கடை பக்கமாக சென்றோம்.
 இதற்குள் பெரியவள் முழித்துக் கொண்டாள்.அவளை கீழே இறங்கி நடக்க செய்து எங்கள் இருவருக்கும் டீ சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு பால் ஆர்டர் செய்தேன்.
   அப்போதுதான் கவனித்தேன். அங்கே நிறைய கூலித்தொழிலாளர்கள் அந்த கடையோரமாக ப்ளாட்பாரத்தில் கோணி விரித்து படுத்து இருந்தனர். நாங்கள் டீ வாங்கிய இடத்திலும் அப்படி சிலர் படுத்து இருந்தனர். டீ ஒன்றும் அவ்வளவு சுகமில்லை. டீக்கடையில் எம்.ஜி ஆரோடு யாரோ ஒருவர் இருக்கும் படம் மாட்டிவைக்கப்பட்டு இருந்தது. இந்த பக்கம் பெரும்பாலும் இப்படி படம் மாட்டிவைக்கப்பட்டு இருக்கிறது. டீ வியாபாரத்தை விட  கிங்க்ஸும் கோல்ட் ப்ளேக்கும் அதிகம் விற்றன. நான் ஒரு டீ சாப்பிடுவதற்குள் ஏறக்குறைய பத்து பேர் புகை பிடித்து அங்கே பரவவிட்டார்கள். பொது இடத்தில் பிடிக்க தடை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்புதான் போல.
    புகை நமக்கு பகை! கூடவே குழந்தைகளும் இருந்ததால் அங்கே புகைவிட்ட ஒருவரை முறைத்தேன். அவர் என்ன? என்பது போல பார்த்தார். கொஞ்சம் தூரமா போய் புகையுங்கள்! குழந்தைகள் இருக்கிறார்கள் என்றேன். ஏதோ முணுமுணுத்தபடி அகன்றார்.
      இதற்குள் வாங்கிய பாலை ஆற்றி பாட்டிலில் விட்டு குழந்தைக்கு கொடுப்பதற்காக அங்கே ப்ளாட்பாரத்தில் அமர்ந்தாள்மனைவி. அப்போது தாயி! வெறுந்தரையிலே உக்காராதே! பனி சில்லுன்னு இருக்கும்! இந்தா என்று தான் படுத்திருந்த கோனி ஒன்றை கொடுத்தார் அருகிலிருந்த பெண்மணி. சுமார் நாற்பது வயதிருக்கும். அழுக்கேறிய தலை! அந்த அதிகாலை வேளையிலும் வெத்தலை புகையிலை போட்டுக்கொண்டிருந்தார். பெரிய பெண்ணை பார்த்து தாயி! பேரு என்ன? என்றார் சிரித்தபடி!  சொல்ல மாட்டேன் போ! என்று தூக்க கலக்கத்திலும் முறைத்தாள் என் பெண். தாயி! ஏன் கோச்சுக்குது!  எங்கிருந்து வாரீங்க! எங்கிட்டு போவனும்? என்று அடுத்த விசாரிப்பை துவங்கினாள்.
     என் மனைவி அவளுடன் சகஜமாக பேச துவங்கினாள். சற்று நேரத்தில் என் பெண்ணும் அவளுடன் ஒட்டிக் கொண்டது. குளிர் அதிகமா இருக்குது. ஸ்வெட்டரோட குல்லாவை நல்லா போட்டுக்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவள் கொடுத்த கோணியில் மனைவியும் குழந்தைகளும் வசதியாக அமர்ந்து கொண்டிருக்க அவள் வெறும் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
     கொஞ்ச நேரம் அவள் காணாமல் போய் திரும்பி வந்தாள். ஏம்மா! டீ சாப்பிடலையா என்று கேட்டான்  டீ கடைக்காரன்.
 அந்த கடையில குடிச்சிட்டேன்! என்றாள் பக்கத்துக் கடையை காட்டி அவள்.
   ஏன்! நம்ம கிட்ட குடிக்க வேண்டியதுதானே! படுத்துக்க மட்டும் நம்ம கடை வாசல்! ஏதோ அவன் சொத்தை எழுதி வைத்துவிட்டது போல குறைபட்டுக்கொண்டான் கடைக்காரன். உன் கடை டீயை  தெரிஞ்சவன் குடிப்பானா? என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.
      கோச்சுக்காதேப்பா! தெரிஞ்சவங்க வாங்கி கொடுத்தாங்க! நான் காசு போட்டு வாங்கலை! என்றாள் காவியேறிய பற்கள் தெரிய சிரித்தபடி!
    என் பெண் சும்மா இல்லாமல் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தாள். பக்கத்து கடை ஷட்டரை எட்டி உதைத்தாள். அய்யே! ஏன் இப்படி பண்றே? என்று அலுத்துக் கொண்டாள். அன்னியோன்யமாய் பழக ஆரம்பித்துவிட்டாள் மனைவியுடன்.
   இதற்குள் ஒரு மணிநேரம் கடந்து எங்கள் ஊருக்கான பேருந்து வந்து நின்றது. என்னங்க பஸ் வந்திருத்து!
   மடமடவென்று பைகளை எடுத்துக் கொண்டு குழந்தையையும் தூக்கிக் கொண்டு பஸ்ஸினுள் ஏறி அமர்ந்தேன். மனைவியும் பின்னாலேயே வந்து ஏறி அமர்ந்தாள். ஐந்து நிமிடத்தில் பஸ் புறப்பட தயாரானது.
    வெளியே எட்டி பார்த்தேன். அந்த காவி நிற பல்லை உடையவளை காணவில்லை! அவள் யாரோ எவளோ தெரியாது. அவளுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை! வலிய வந்து பேசி உதவினாள். ஏழை கூலித் தொழிலாளி அவளிடம் இருக்கும் விருந்தோம்பல் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!
    கிளம்பும் போது ஒரு டீ வாங்கி தந்தாவது இருக்கலாம்! போய் வரோம்! என்று ஒரு நன்றி சொல்லாவது சொல்லி இருக்கலாம்!  எதுவுமே சொல்லாமல் பஸ் வந்ததும் அடித்து பிடித்து ஏறிவிட்டோமே!  அடச்சே! என்று நினைத்தது மனது.
   என்னங்க! என்னமோ யோசிக்கிறீங்க?

இல்லே! உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்துச்சே அந்த பொம்பளை! அதுங்கிட்ட சொல்லாமயே வந்துட்டேமே! அவ்ளோ பாசமா பேசிச்சே! ஒரு டீயாவது வாங்கி தந்திருக்கலாம்! இல்லை என்றேன்.
     ஆமாங்க! எனக்கும் அது தோணலை! என்றாள்

பஸ் கிளம்பியது! அந்த பெண்மணி இப்போது வேறு யாரோ குடும்பத்தினருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். எந்த எதிர்பார்ப்பும் அவளிடம் இல்லை! வெள்ளந்தியான விருந்தோம்பல் அவளுடையது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Monday, January 27, 2014

புகைப்பட ஹைக்கூ 66

புகைப்பட ஹைக்கூ 66


சோறூட்ட
பூட்டப்பட்டது
ஏர்!

ஓடை திறந்ததும்
கூட்டப்பட்டது
சேடை!

உழவுக்கு
உழைத்தன
காளைகள்!

சேற்றுவயல்
ஊட்டுகிறது
ஊற்றுப்பசி!

பண்பட்டதும்
பரிசு தந்தது
நிலம்!

கழி பேசியதும்
களைப்பை மறந்தன
காளைகள்!

புதைபட்ட வாழ்வு
மீட்டெடுத்தது
உழவு!

தடம் மாறிய உழவை
நேர் செய்தன
ஏர்மாடுகள்!

கூட்ட கூட்ட
குறைந்தது பாரம்!
ஏர்!

உழவு செய்கையில்
உவப்பு கொள்கிறது
நிலம்!

விளைநிலமாக
விதைக்கப்படுகிறது
உழவு!

தேரோடும் வீதிகளை
தேர்வுசெய்ய புறப்பட்டது
ஏர்!

சேறும் ஏரும்
ஜோராய் தந்தது
சோறு!

ஏர்பிடிக்கையில்
வேர்பிடித்தது
உழவு!

விலைநிலங்களுக்கு
மத்தியில் ஒரு
விளைநிலம்!

களம் புகுந்த கலப்பை!
களிப்படைந்தது
நிலம்!


 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Sunday, January 26, 2014

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40.

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 40.


அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்! இந்த வலைப்பூவில் நான் எழுதிவரும் பகுதிகளில் இந்த பகுதி எனக்கு பிடித்த ஒன்று. ஆத்மார்த்தமாகவும் இதை எழுதிவருகிறேன். தமிழாசிரியர்கள் சிலரும் இந்த பகுதியை படித்து சிறப்பாக இருப்பதாக சொன்னார்கள். அதே போல் நண்பர்களும் சிறந்த பகுதி என்று சொல்லிவருகிறார்கள். இது போன்ற கருத்துக்கள் இந்தத் தொடரினை மேலும் சிறப்பாக எழுத வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. அதனால் தேனி போல நல்ல இலக்கண நூல்களை நாடி கற்று வருகிறேன். இந்த பகுதியை தொடங்கும் போது இலக்கணம் குறித்து எழுதுவதாக இல்லை. தமிழ் நூல்கள் குறித்தும் அதை எழுதியவர்கள் குறித்துமான ஒரு வினாவிடை போன்று ஆரம்பித்தேன். பின்னர் இலக்கணத்தில் நுழைந்து அத்துடன் இலக்கியமும் சேர்ந்து இப்போது வளர்ந்து நிற்கிறது. அதனால் இலக்கணம் முதலில் இருந்து இல்லாமல் அவ்வப்போது சிலவற்றை தந்துவருகிறேன். இன்று நாம் கற்க இருப்பது தொழில் பெயர் பற்றி.

பெயர்ச்சொல் ஆறுவகைப்படும். அதை பிறகு பார்க்கலாம். பெயரை குறிப்பது பெயர்ச்சொல் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே போல் வினையை அதாவது செயலை குறித்துவருவது  வினைச்சொல்.

ஆறுவகை பெயர்சொற்களில் தொழில் பெயரும் ஒன்று.

மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான். இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

இதில் மாதவி என்பதும் கோவலன் என்பதும் பெயர்சொற்கள்.
கண்டு, மகிழ்ந்தான், இவை இரண்டும் வினைச்சொற்கள்.
ஆடல் – இது தொழில் பெயராகும்.

தொழிலைக் குறிக்கும் பெயர் தொழில்பெயராகும். ஆடல் என்பது ஆடுதல் என்ற தொழிலை குறிப்பதனால் அது தொழில் பெயராயிற்று. சரி ஒரு சொல் தொழில் பெயர் என்று எப்படி கண்டுபிடிப்பது.

மாணவர்களுக்கு இலக்கணக் குறிப்பு எழுத இது மிகவும் உதவும். உங்கள் பிள்ளைகளுக்கும் பயன்படும். கவனமாக படியுங்கள் இனி வருவதை.
 ஒரு வாக்கியம் அமைய முக்கியமானது பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி போன்ற பகுபத உறுப்புக்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அதில் விகுதி என்பது வாக்கியத்தின் கடைசிபகுதி.
  தொழிற்பெயர்கள் கீழ்கண்ட விகுதியினை கடைசியாக பெற்றுவரும்.  தல், அல், அம், ஐ, வை, கை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து.

வினைப்பகுதியோடு மேற்கண்ட விகுதிகள் சேர்ந்துவந்தால் அவை தொழிற்பெயராகும். உதாரணமாக

பெறுதல் = பெறு+தல், கோடல் = கோடு+அல்
ஆட்டம்+   ஆடு+ அம், வாழ்க்கை+ வாழ்+ கை
பறவை = பற+ வை , புளிப்பு  =புளி+ பு
போக்கு= போ+ கு  , வரவு  = வர+உ

தொழில் பெயர்கள் இரண்டுவகைப்படும்.

1.      முதனிலைத்தொழிற்பெயர்.
2.      முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்.
தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலைஉணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும். 
எ.கா) கபிலனுக்கு அடி விழுந்தது.

தொழில்பெயரின் முதனிலையான பகுதி திரிந்து வருவது முதனிலைத் திரிந்த தொழில்பெயராகும்.

அறிவறிந்த மக்கட்பேறு
அவனுக்கு என்ன கேடு? 
இந்த வாக்கியங்களில் பெறு, கெடு, என்னும் முதனிலைகள் பேறு, கேடு எனத்திரிந்து பெறுதல், கெடுதல் என்ற பொருளை உணர்த்துகின்றன. இவை முதனிலை திரிந்த தொழில்பெயர்களாகும்.

ஓரளவுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு முறைக்கு இருமுறை படியுங்கள் புரியும். அடுத்த வாரம் இன்னுமொரு முக்கியமான இலக்கணம் கற்கலாம்.

இனிக்கும் இலக்கியம்.


புற நானூற்றில் வாள் மங்கலம் என்பது ஒரு துறை. அரசனின் வாள் சிறப்பை புகழ்ந்து பாடுதல் வாள் மங்கலம்.  ஒளவையார் தொண்டை மான் என்பவனிடம் தூது போனார். அவனுக்கும் அதியமானுக்கும் நிகழ இருந்த போரை தவிர்ப்பது அவர் எண்ணம். அப்போது அவருக்கு தன் படைக்கல கொட்டிலை காட்டினான் தொண்டைமான். ஔவையார் அவனை புகழ்வது போல இகழ்ந்தும் அதியமானை இகழ்வது போல புகழ்ந்து ஒரு பாடலை பாடினார். அதை காண்போம்.

    இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்திக்  கோடுநுதி சிதைந்து
    கொல்துறைக் குற்றில மாதோ – என்றும்
    உண்டாயின் பதம்கொடுத்து
    இல்லாயின் உடன் உண்ணும்
    இல்லோர் ஒக்கல் தலைவன்
    அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.


விளக்கம்:  இங்குள்ள படைக்கலங்கள் மயில் பீலி சூட்டப்பட்டு மாலை அணியப்பட்டு திரண்ட வலிய காம்புடன் அழகு செய்யப்பட்டு நெய்பூசப்பட்டு  அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
   ஆனால், எந்த நாளும் பொருள் இருக்குமானால் உணவை வருபவருக்கு தந்தும், இல்லாது போனால் இருப்பதை பிறருடன் பகிர்ந்து உண்ணக்கூடிய சுற்றத்தவர்களின் தலைவனான அதியமானின் கூர்மையான முனையையுடைய வேல்களான படைக்கலங்கள் பகைவரை குத்துவதால் அவற்றின் முனை மழுங்கி கொல்லனின் பட்டறையில் கூறேற்ற குறுகிய இடத்தில் அடைந்துள்ளன.

தொண்டைமானின் படைக்கலங்கள் கொட்டிலில் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. என்கிற ஔவையார் புகழ்வது போல பழிக்கிறார். அதாவது அவனது படைக்கலங்கள் போரைக் காணாதவை! போரிட்டு அறியாதவை! அதனால் தொண்டைமானும் போர்த்திறன் இல்லாதவன் என்கிறார்.
   அதியமானின் படைக்கலங்களோ கங்கும் நுனியும் முறிந்து கொல்லனின் உலைக்களத்தில் உள்ளன. என்பது பழிப்பது போல புகழ்வது ஆகும். அதாவது எப்போதும் போர் செய்வதால் அதியமானின் படைக்கலங்களை அழகுற அடுக்கிவைக்க நேரமில்லை. அவை உரு சிதைந்து கிடப்பதால் கொல்லனின் உலைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. என்று அதியமானின் போர்த்திறனை தொண்டை மானுக்கு புலப்படுத்துகிறார்.

எவ்வளவு அழகாக போரை தவிர்க்க வஞ்சப்புகழ்ச்சி அணியை பயன்படுத்தி உள்ளார் பாருங்கள்.

மீண்டும் அடுத்த பகுதியில் இன்னுமோர் சுவையான பாடலுடன் சந்திப்போம்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!Related Posts Plugin for WordPress, Blogger...