பிரதோஷமும் நந்தி தேவரும்!

பிரதோஷமும் நந்தி தேவரும்!

பாற்கடலை மந்தாரமலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்த போது வாசுகி கக்கிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொண்டார். முன்னதாக பாற்கடலை கடையும் போது மஹாலஷ்மி, ஐராவதம், கற்பகவிருட்சம் போன்றவை தோன்றின.
    மஹாலஷ்மியை விஷ்ணுவும், ஐராவதத்தையும் கற்பகவிருட்சத்தையும் இந்திரனும் ஏற்றுக் கொண்டனர். இதுமட்டும் இல்லாமல் காமதேனு போன்றியவையும் தோன்றியதாக கூறுவர்.
   வாசுகி கக்கிய விஷத்தின் வெம்மை தாளாமல் தேவர்கள் அனைவரும் இப்படியும் அப்படியுமாக சிதறி ஓடினர். சிவன் அவர்களுக்கு அபயம் தந்து விஷத்தை எடுத்து விழுங்கிவிட்டார். உடனிருந்த உமை அதை நெஞ்சோடு நிறுத்திவிட்டார். ஈசனும் திருநீலகண்டன் என்னும் நாமத்தை பெற்றார்.

  அப்படி விஷத்தை ஏற்றுக் கொண்ட சிவனும் விஷத்தின் வெம்மை குறைய நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடினார். இதுவே பிரதோஷம் எனப்படுகிறது. இந்த நிகழ்வு நடைபெற்றது திரயோதசி மாலைவேளையில்   எனவே திரயோதசி அன்று பிரதோஷம் நடைபெறுகிறது.

 பிரதோஷம் நிகழும்போது அதாவது சிவன் விஷத்தை உண்டபோது தேவர்கள் மற்றும் மஹாவிஷ்ணு, பிரம்மா, சிவகணங்கள், பூதகணங்கள் அனைவரும் உடனிருந்தனர். எனவே பிரதோஷ வேளையில் மற்ற ஆலயங்களில் பூஜை கிடையாது. தரிசனமும் கிடையாது. பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவாலயத்தில் கூடுவதாக ஐதீகம். எனவே பிரதோஷ விரதம் இருந்து சிவாலயம் சென்று வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

  பிரதோஷ வேளையில் நந்திக்கு முதல் அபிஷேகம் செய்யப்படும். நந்தியின் கொம்புகளுக்கு  இடையே சிவன் இருப்பதால் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். நந்தி ரிஷபம் எனும் எருது வாகனம் அம்சம் உடையது. எனவே அருகம்புல் மாலை சாத்துவது விசேஷம். பச்சரிசிவெல்லமும் படைக்கப்படுகிறது. நந்தி   என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் இன்பம் உடையவன் என்று பொருள். இச்சொல் சிவனையும் குறிக்கும். அதனால் சிவனுக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்படுகிறது.

நந்திதேவர், தரும தேவதை அம்சமாகவும், மஹாவிஷ்ணு அம்சமாகவும் கருதப்படுகிறது. திரிபுரம் எரிக்க சிவன் புறப்பட்ட போது மஹாவிஷ்ணு  நந்தி வாகனமாக அமைய அதன் மீது சிவன் காட்சி தந்த திருக்கோலம் ரிஷபாரூட மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.

பொதுவாக சிவலிங்கம் வீற்றிருக்கும் திசையை நோக்கி நந்தி காணப்படும். பெரும்பாலான சிவாலயங்களில் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்க அவரை எதிர்நோக்கி மேற்கு பார்த்து நந்தி வீற்றிருப்பார். ஆனால் சிவன் மேற்கு நோக்க அவரை நோக்கி கிழக்கு பார்த்து இருக்கும் தல அமைப்பு சிறப்பானது. இந்த அமைப்பு திருவான்மீயூரில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி நந்தி தேவரை வணங்குவது மிகவும் சிறப்பானது.

 நிலைமாறி வீற்றிருக்கும் நந்தி தேவர் தலங்கள்  வடதிருமுல்லைவாயில், திருவூறல்(தக்கோலம்) திருவல்லம் என்னும் திருவலம், திருப்புன்கூர், திருவெண்காடு.

தமிழகத்தில் மிகப்பெரிய நந்தி கோவை மாவட்டம் நவகரையில்  மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவிலில் உள்ளது. உயரம் 31 அடி நீளம் 41 அடி, அகலம் 21 அடி.
அதற்கடுத்து தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பெரிய நந்தி உயரம்12 அடி நீளம் 20 அடி  அகலம் 8 அடி.

 இன்று சுக்கிர பிரதோஷம்! சிவாலயங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  சிவாலயம் சென்று நந்தியெம்பெருமானை வணங்கி அருள் பெறுவோமாக!

Comments

  1. விளக்கம் மிகவும் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை...

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே.. நந்தியெம்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அழகாக, மிக நேர்த்தியாக பதிவைப் பகிர்ந்த விதம் அருமை. விவரங்களும் தகவல்களும் பயனுள்ளதாக அமைந்த்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பிரதோஷ செய்திகள் அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  5. பக்தி மணம் கமழ்கிறது நண்பா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!