டி.ஜி.பி வீட்டில் முருங்கை காய் திருடலாமா? கதம்ப சோறு பகுதி 12

கதம்ப சோறு பகுதி 12

வெற்றிகரமாக ஏவப்பட்டது மங்கள்யான்!

     இஸ்ரோவின் கனவுத் திட்டமான மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுவிட்டது. சுமார் 450கோடி செலவில் உருவான இத்திட்டம் தேவையா? என்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும் அதையெல்லாம் கடந்து மங்கள்யான் விண்ணில் சீறிப் பாய்ந்தது. மங்கள்யான் செயற்கை கோள் 30 கோடி கிலோமீட்டர்களை கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி அடையுமாம். புவிவட்டப்பாதையில் சுற்றிவரும் செயற்கைகோள் டிசம்பர் 1ம் தேதி இரவு செவ்வாய்கிரகத்திற்கான பயணத்தை துவக்கும் என்று சொல்லப்படுகிறது.செவ்வாய்கிரகத்தில் தண்ணீர், கனிமவளம், பருவநிலை, வாயுக்கள், மற்றும் மேற்பரப்பு குறித்து இந்த கோள் ஆராயும். தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் ஆசிய அளவில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்க செவ்வாய் கிரகத்திற்கு கோள் அவசியமா என சீன ஊடகங்கள் கேள்வி கேட்டுள்ளன. 2011ல் சீனா  செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் அனுப்பும் முயற்சியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

முருங்கைகாய் திருடினால் குற்றமா?
       கொலைக்குற்றம் செய்தவர்கள் கூட தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் பாவம் சமையலுக்கு முருங்கைக்காய் பறித்த இருவர் இரண்டாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடிய கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்ம வீட்டில் நகையே தொலைந்து போனாலும் அலட்சியம் காட்டும் போலீஸ், முன்னாள் டி.ஜி.பி வீட்டில் நடந்த முருங்கைகாய் திருட்டுக்காக இருவரையும் தனிப்படை அமைத்து விசாரித்து இப்போது பதினைந்து நாள் ரிமாண்டில் வைத்துள்ளனர். சாதாரணமாக இதுபோன்ற திருட்டுக்களுக்கு எச்சரித்து விட்டுவிடுவார்கள். தோட்டத்தில் மாங்காய் பறித்தல் தேங்காய் பறித்தால் கூட தோட்ட உரிமையாளர்களிடம் பிடிபட்டால் நாலு சாத்து சாத்தி எச்சரித்து அனுப்பிவிடுவார்கள். இவரது மருமகன் சட்டம் ஒழுங்கு பிரிவு தென்சென்னை இணை ஆணையர். இவரது வீடு என்பதால் போலீஸார் மிக அதிகமாக கடமையாற்றியுள்ளனர். உங்க வீட்டு முருங்கைக்காய் திருடு போனா போலீஸ்ல சொல்லி என்ன நடவடிக்கை எடுப்பாங்கன்னு பாருங்களேன்!

நாட்டின் பெரிய கோடீஸ்வரர் யாரு தெரியுமா?

     நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. நூறு பேர் அடங்கிய பட்டியலில் இந்தியாவின் பெரிய கோடீஸ்வரராக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 1லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 98 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சன்பார்மா மருந்து குழுமத்தலைவர் திலிப் சாங்க்வி 85 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளர். அசிம்பிரேம்ஜி நான்காவது இடத்தில் உள்ளார்.

உலகின் முதல் ‘பிட்காயின்’ டிஜிட்டல் பணம் வழங்கும் நிலையம்!

    கனடா வான்கூவரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக( டிஜிட்டல்கரன்சி எண்ம நாணயம்) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3000 மதிப்புள்ள (அமெரிக்கடாலர்) பிட் காயின்களை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளரின் உள்ளங்கையை ஸ்கேன் செய்து கொள்வதன் மூலம் பண பரிவர்த்தனை நடைபெறும்.
   பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும். இதை உருவாக்கியவர் சடோஷி நமோட்டா. மற்ற நாணயங்களை அல்லது நாணய முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும். இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசிய குறியீட்டு முறையினை பயன்படுத்துவதின் மூலம் இதில்பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பிட்காயினை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் இதில் மோசடி செய்ய முடியாது. பிட்காயின்களை தனிப்பட்ட முறையில் கணிணிகளிலோ வலைதளங்களிலோ சேமிக்க முடியும். இதற்கென தனிக்கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அனுப்பவும் முடியும்.எந்த நாடோ அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது.

பட்டாசு வெடிக்காத கிராமம்.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் உள்ள அரச மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த வவ்வால்களை பொக்கிஷமாக பாதுகாத்துவரும் மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். தலை தீபாவளிக்கு மாமியார் வீடுவரும் மாப்பிள்ளைகளுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவதால் அவர்களும் ஒத்துழைக்கிறார்கள். குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை பூர்த்தி செய்கிறார்களாம். இறப்பு போன்ற துக்க சம்பவங்களின் போதும் பட்டாசு வெடிப்பது இல்லையாம். போற்றி பாதுகாத்து வருவதால் வவ்வால்களும் அந்த ஊரில் விரும்பி வசித்து வருகின்றன.

புது ஹீரோ ரோகித் சர்மா!

    சச்சினின் 200வது டெஸ்ட் கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி 209 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஒருகாலத்தில் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவிப்பது பெரும் கனவாக இருந்தது. நீண்ட காலத்திற்கு பின் 200 ரன் அடித்து முதல் ஆளாய் சச்சின் கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் சேவாக் அந்த வரிசையில் இணைந்தார். அப்போது கூட ரோகித் இந்த வரிசையில் சேர்க்க யாரும் தயாராக இல்லை! அணியில் போவதும் வருவதுமாக இருந்த ரோகித்தை மிடில் ஆர்டரில் இருந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக மாற்றி இறக்கினார் தோனி. இது யாரும் எதிர்பாராத ஒன்று. ஓபனிங்க் பேட்ஸ்மேனாக மாறியபின் ரோகித்தின் ஆட்டத்தில் கொஞ்சம் மெருகு கூடி இன்று இரட்டை சதம் அடித்து ஆட்டநாயகன் தொடர்நாயகன் விருது வாங்கி பெய்லியால் அடுத்த சச்சின் என்று அழைக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். ஆனால் கிரிக்கெட்டின் புதிய விதிகளால் பவுலர்கள் பாவம் ரொம்பவே நொந்து போய் விட்டார்கள்.

ஸ்வேதா மேனனின் பாலியல் குற்றச்சாட்டு!

    வர வர நடிகைகளின் மேல் வரம்புக்கு மீறி பாலியல் பிரயோகம் செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்பதற்காக நடிகையை மோசமாக நடத்தக் கூடாது. மீண்டும் ஒரு கேரள எம்பி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். கொல்லத்தில் நடைபெற்ற படகு போட்டியில் காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் ஸ்வேதா மேனனிடம் கேவலமாக நடந்து கொண்டது எல்லா வீடியோக்களிலும் தெள்ளத்தெளிவாகவே தெரிந்தது. ஸ்வேதா மேனனும் அவர்மீது குற்றம் சாட்ட அவர்மீது வழக்கு பதிந்தனர். என்ன நடந்ததோ தெரியவில்லை! ஸ்வேதா இப்போது இந்த விசயத்தை இத்தோடு விட்டுவிடுவோம் என்று கூறி வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த மாதிரி கேவலமான அரசியல் வியாதிகளின் உறுப்பை அறுத்தெரிந்தால் என்ன?

டிப்ஸ்! டிப்ஸ்!

படிகாரத்தை பொடித்து தண்ணீரில் கலக்கி கண்களில் படாமல் தலையில் தேய்த்து குளித்தால் ஈரும் பேனும் மறைந்துவிடும்.

இட்லி மாவு அரைத்த கையோடு வார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கை பொறுக்கும் சூடுள்ள வெந்நீரில் பாத்திரத்துடன் மாவை வைத்துவிடுங்கள் அரைமணிக்குள் புளித்து பொங்கிவிடும். உடனே வார்க்கலாம்.

குக்கரில் துவரம்பருப்பு வேக வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை ஊற்றி வேகவிடவும். பருப்பு பூத்தாற் போல வேகும். வாயுத்தொல்லையும் இருக்காது.

உடல் பருமனை குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் போட்டு காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் குடித்தால் ஒல்லிக்குச்சி  உடம்புக்காரியாக மாறிவிடலாம்.

ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கி குடித்தால் வயிற்று வலி மாயமாக மறைந்துவிடும்.

பாம்பு மசாஜ் வேண்டுமா?

    இந்தோனேசியாவில் ஒரு பாம்பு மசாஜ் நிலையம் உள்ளது. பல்வேறுவகையான மசாஜ் சேவை இங்கு தரப்படுகிறது. சமீபத்தில் பாம்பு மசாஜ் சேவை துவக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மூன்று பாம்புகளை கொண்டு மசாஜ் செய்யப்படுகிறது. இதற்கென வாய் கட்டப்பட்ட மூன்று  மலைப்பாம்புகள் உள்ளன. ஒன்றரை மணி நேரத்திற்கு 2500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜப்பான் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பாம்பு மசாஜை அதிகம் விரும்புகின்றனராம். வழக்கம் போல பிராணிகள் வதை தடுப்பு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வெகு ஜோராக இயங்கி வருகிறதாம் இந்த மசாஜ் நிலையம்.

சாதுர்யமான பதில்!


  அக்பரும் பீர்பாலும் ஒன்றாக உணவருந்துவது வழக்கம். ஒரு நாள் சாப்பாட்டின்போது கத்தரிக்காய் பொரியல் பறிமாறப்பட்டது. அன்று கத்தரிக்காயின் சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. ஆ! என்ன சுவை! கத்தரிக்காய் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லதுதானே! என்றார் அக்பர்.
   உடனே பீர்பாலும், ஆம் அரசே! கத்தரிக்காயை போல சிறந்த காய் வேறெதுவும் இல்லை! இதை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான்! என்றார்.
  சிலநாள்கள் தொடர்ந்து கத்தரிக்காய் சமைக்குமாறு அக்பர் உத்தரவிட தொடர்ந்து கத்தரிக்காய் பறிமாறப்பட்டது. அக்பருக்கு கத்தரிக்காய் தின்று வெறுத்துப்போய்விட்டது. ஒரு நாள் கோபமாக! சே! என்ன கத்தரிக்காயோ! இதெல்லாம் ஒரு உணவா! இது உடலுக்கு கெடுதலை தரும்! என்றார். பீர்பாலும் பணிவாக, ஆம் அரசே! கத்தரிக்காயைப் போல மோசமான காய் வேறெதுவும் இல்லை! என்றார்.
  அக்பர் உடனே கோபமாக, அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சா? அன்று கத்தரிக்காயை புகழ்ந்தாயே? என்றார்.
  பீர்பால் சொன்னார், எனக்கு ராஜா நீங்கள்தான்! கத்தரிக்காய் அல்லவே?
 அவரின் சாதுர்யமான பதிலை கேட்டு அக்பர் புன்னகை புரிந்தார்.

டிஸ்கி} இன்று மதியத்தில் இருந்து 5 மணி வரை மின்வெட்டு அறிவிப்பில்லாமல் தொடர்ந்தமையால் வழக்கம்போல பதிவிட இயலவில்லை! தாமதமான கதம்ப சோறுக்கு வருத்தங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. வணக்கம் சகோதரரே..
    கதம்பச் சோறு சுவையாக உள்ளது. ஒரு படி மேலே போய் கதம்ப பூக்களாக மாறி மணமும் வீசி செல்கிறது. பயனுள்ள தகவல்கள். குறிப்பாக வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கழுபெரும்பாக்கம் கிராமத்தினருக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரரே..

    ReplyDelete
  2. உங்கள் கதம்ப சோறின் தீவிர விசிறி நான்.
    ஆஹா , எத்தனை எத்தனை தகவல்கள் ..
    அத்தனையும் சுவைத்து மகிழ்ந்தேன்.
    பகிர்விற்கு மிக்க நன்றி தளிர் !

    ReplyDelete
  3. All are good, thanks................

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!