Saturday, November 30, 2013

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

முதல் பகுதியை படிக்க: விக்கிரமாதித்தனை பிடித்த சனி!

மதுராபுரி மன்னன் மதுரேந்திரன் தான் வைத்த சோதனையில் விக்கிரமாதித்தன் வென்றுவிட்டதை நினைத்து வருத்தம் கொண்டான். விக்கிரமாதித்தனை கொல்ல வேறு உபாயம் கூறுமாறு மந்திரியிடம் கேட்டான்.
   மதுரேந்திரனின் மதியூக மந்திரி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, இன்னும் ஒரு உபாயம் உள்ளது. ஏழுகடல்களுக்கு அப்பால் நாகலோகம் எனும் தீவு உள்ளது. அந்தத் தீவில் நாகபுரம் என்ற பட்டினத்தை அரசாளும் நாகேந்திரனின் குமாரியான நாக கன்னிகை சிரித்தால் நாகரத்தினம் உதிரும். அந்த ரத்தின மணியை கொண்டுவருமாறு ஆதித்தனை அனுப்புவோம். ஏழுகடல்களை அவனால் தாண்ட முடியாது. அப்படியே தாண்டிச்சென்றாலும் நாகபுரத்தில் உள்ள விஷம் அவனை கொன்றுவிடும் என்றான்.
   மந்திரியின் யோசனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மதுரேந்திரன் அரசவைக்கு ஆதித்தனை அழைத்து, ஆதித்தா! முத்தைக்காட்டிலும் சத்துள்ள பொருள் ஒன்று வேண்டும். மகரகண்டிகை செய்ய வேண்டியிருப்பதால் அதன் நடுவில் வைக்க நாகபுரத்தில் உள்ள நாகரத்தினத்தைக் கொண்டுவா! அது அங்குள்ள நாக கன்னிகை சிரித்தால்தான் உதிரும்! என்றான்.
   ஆதித்தனும் அறுபது நாட்கள் அவகாசமும் அறுபதினாயிரம் பொன் சம்பளமும் இரத்தினத்தின் விலை இரண்டுலட்சம் பொன்னும் கேட்டு பெற்றுக்கொண்டு தன் மாளிகை வந்து சேர்ந்தான். அங்கு அனந்தன், சலந்திரன், இரத்தினமாலை, முத்துநகை, அனைவரையும் அழைத்து, அரசன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான்! என்று அரசன் சொன்ன கட்டளையைக் கூறினான்.அப்புறம் நான் எப்படி ஏழு கடலை கடப்பேன்? என்றும் வினவினான்.
    அதைக்கேட்ட சலந்திரன் என்னும் தவளை நானிருக்க பயம் ஏன்?நீங்கள் கடலோரம் சென்று என்னை நினைத்தால் நான் வந்து பெரும் வடிவம் எடுத்து உங்களை சுமந்துசென்று நாகபுரத்தில் விடுவேன்.பின்னர் அனந்தனை நினைத்தால் அவன் அங்குவந்து தேவையான உதவிகளைச் செய்வான். என்றான்.
     இரத்தினமாலை! நான் வரும் வரையில் முத்துநகையை எப்படி பாதுகாப்பது என்று வினவினான் ஆதித்தன். உடனே இரத்தினமாலை செம்பில் தண்ணீர் எடுத்து முத்துநகை மீது தெளிக்க முத்துநகை மரப்பாச்சி பாவையானாள். அதை எடுத்து மூலையில் சார்த்திவைத்தாள் இரத்தினமாலை. மகிழ்ந்த விக்கிரமாதித்தன், பெண்ணே! இன்றிலிருந்து அறுபதாவது நாளில் திரும்பி வருவேன்! அன்று முத்துநகையை பெண்ணாக மாற்றிவைத்திரு! என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

     சலந்திரன் என்னும் தவளையின் முதுகில் ஏறி ஏழு கடல்களை கடந்து நாகத்தீவின் எல்லையில் உள்ள அச்சுதநகரி என்னும் இடத்திற்கு வந்தான் விக்கிரமாதித்தன். அவ்வூரில் அவன் நடமாடிக்கொண்டு இருக்கையில் ஒரு வீட்டில் முதியவள் ஒருவள் அழுது கொண்டிருந்தாள். விக்கிரமாதித்தன் அவள் வீட்டிற்கு சென்று என்ன விஷயம்? எதற்கு அழுகிறீர்கள் என்று விசாரித்தான். அந்த முதியவள், இந்த நகரை அரசாளும் அச்சுதவேந்தனுக்கு நான்கு புத்திரிகள் அவர்களில் மூத்தவளான அச்சுதமடந்தைக்கு தினமும் திருமணம் நடப்பதும் அன்றிரவே அந்த மாப்பிள்ளை இறப்பதுமாக இருந்துவருகிறது. அதற்காக நகரில் உள்ள ஆண் மகனையெல்லாம் தினம் ஒருவராக திருமணம் செய்து வைக்கிறான் அரசன். இன்று என் மகனின் முறை! ஒரே மகனை இழக்கப்போகிறோமே என்று அழுகிறேன்! என்றாள்.
        தாயே! என்னை உன் மகனாக பாவித்து என்னையே சேவகர்களுடன் அனுப்பிவிடு! உன் மகனை அனுப்பவேண்டாம் என்றான் விக்கிரமாதித்தன். அந்த முதியவளோ, உன்னைக் கொன்ற பாவம் எனக்கு வந்து சேருமே? என்றாள். நானாக வலிய வந்துதானே செல்கிறேன்! நீ ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை அல்லவா? இதனால் பாபம் ஒன்றும் வராது என்று பலவாறு அவளை சமாதானப்படுத்தி எனக்கு சாப்பாடு மட்டும் போடு! பசிக்கிறது! உன் மகனுக்கு பதில் நான் மணமகனாகச் செல்கிறேன்! அவனைப்போல் என்னை அலங்கரித்துவிடு! என்றான் விக்கிரமாதித்தன்.
        அந்த முதியவளும் அதற்கு ஒத்துக்கொண்டு, அவனுக்கு உணவிட்டு அலங்கரித்து சேவகர்களுடன் அனுப்பிவிட்டாள். விக்கிரமாதித்தனும் சேவகர்களுடன் சென்று மணவறையை அடைந்து அச்சுதமடந்தையை மணந்துகொண்டான். அன்றிரவு அச்சுத மடந்தையுடன் சிறிது நேரம் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கும் போது அவள் தனக்கு தூக்கம் வருகிறது என்று தூங்கிவிட்டாள். உடனே விக்கிரமாதித்தன் வேதாளத்தை அழைத்து இந்த பெண் இவ்வளவு சீக்கிரம் உறங்க காரணம் என்ன? என்று கேட்டான். 
   அரசே! நாம் நாடிச் செல்லும் நாக புரத்து நாகேந்திரனின் குமாரன் ஆதிசேடன் என்பவன் தினம் தோறும் இந்த பள்ளியறைக்குவந்து இந்த பெண்ணுக்கு மயக்கம் உண்டாக்கி பாம்பு உருவம் எடுத்து மாப்பிள்ளையை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறான். இந்த நகரத்து பிள்ளையார் கோவிலில் இருந்து நிலவறை வழியாக அவன் இங்கு வருகிறான். அவன் நிலவறைக் கதவை தள்ளிவிட்டு வரும்போதே இவள் மயக்கம் ஆகிவிடுவாள். பின் அவன் மாப்பிள்ளையை கொன்றுவிடுவான். இப்போது நான் அச்சுத மடந்தை அருகில் படுத்துக்கொள்கிறேன்.அவன் என்னைக்கடித்தாலும் விஷம் என்னை ஒன்றும் செய்யாது நீங்கள் அச்சமயம் மறைந்திருந்து மந்திரவாளால் அவன் வாலின் நுனியை மட்டும் வெட்டிவிடுங்கள். நம் விஷயம் தெரிந்துவிட்டது என்று அவன் ஓடிவிடுவான். அவனை கொல்லவேண்டாம், நாம் தேடிச்செல்லும் நாககன்னிகை அவனுடைய தங்கை! என்றது வேதாளம்.

      விக்கிரமாதித்தன் அவ்வாறே ஒளிந்திருந்து ஆதிசேடனின் வாலை வெட்டிவிட அவன் ஓடிவிட்டான். பின்னர் மறுநாள் விக்கிரமாதித்தன் உயிருடன் வரவும் அச்சுதராஜன் மகிழ்ந்து விக்கிரமாதித்தன் தான் தன் மாப்பிள்ளை என்றதும் மிகவும் பெருமை அடைந்தான். சில நாள் அங்கு தங்கிய விக்கிரமன் பின்னர் அனந்தனை அழைத்தான். அனந்தா! நாகலோகத்திற்கு எப்படி செல்வது? வழி முழுவதும் விஷம் இருக்கிறதாமே? என்று வினவினான்.
   அனந்தனும் மனித உருவில் யாரும் நாக லோகம் போகமுடியாது! நான் முதலில் சென்று நாக கன்னிகையை தங்களுக்கு பெண் கேட்கிறேன்! நீங்கள் அங்கு வர வழிசெய்கிறேன்! என்று நாகலோகம் புறப்பட்டான்.
   அனந்தன் சென்று நாகேந்திரனை சந்தித்து அங்கு விக்கிரமாதித்தனின் வீர பிரதாபங்களை தெரிவித்து நாக கன்னிகையை அவருக்கு பெண் தரவேண்டும். விக்கிரமாதித்தன் இங்கு வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டினான்.
      நாகேந்திரனும் விக்கிரமாதித்தனுக்கு பெண் கொடுக்க சம்மதித்து நாகங்களை அனுப்பி விஷங்களை உறிஞ்சி எடுத்துவிட விக்கிரமாதித்தன் நாகலோகம் வந்தடைந்தான். நாக கன்னிகையை சந்தித்து அவளை மணந்து கொண்டான். விக்கிரமனை மணந்து கொண்ட மகிழ்ச்சியில் நாக கன்னிகை ஒரு நாள் சிரிக்க அவளது வாயில் இருந்து நாகரத்தினங்கள் விழுந்தன. விக்கிரமன் அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். சிறிது நாளில் நாக கன்னிகையை அழைத்துக் கொண்டு அச்சுதபுரிக்கு வந்து அச்சுதமடந்தையையும  அழைத்துக்கொண்டு மீண்டும் சலந்திரன் உதவியோடு மதுராபுரி வந்து சேர்ந்தான்.

      மாளிகையில் இரத்தினமாலையும் முத்துநகையும் இவர்களை வரவேற்றார்கள். மறுநாள் அரசவைக்கு சென்று நாகரத்தினங்களை  அரசனிடம் கொடுத்தான். விக்கிரமாதித்தன் திரும்ப மாட்டான். இரத்தினமாலையை அடையலாம் என்று நினைத்த மதுராபுரி மன்னனின் ஆசையில் மண் விழுந்தது. இவனை எப்படி அழிப்பது? அதற்கு வழி என்ன என்று மீண்டும் மந்திரியிடம் கேட்டான் மதுரேந்திரன்.
                                       தொடரும்.
மேலும் தொடர்புடைய பதிவுகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, November 29, 2013

இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!

இரண்டுலட்சம் பக்க பார்வைகள் கடந்தது தளிர்!


கடந்த 4-1-11 அன்று பொங்கல் வாழ்த்தோடு ஆரம்பித்தது தளிர் வலைப்பூ. வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாமல் உருவானதுதான் தளிர். முதலில் யாருமே வரவில்லை! அப்படியே வளர்ந்து திரட்டிகளில் ப்ளாக்கர் நண்பன் பதிவுகளை படித்து இணைத்தேன். அப்புறம் சிலர் வருகை தர பார்வைகள் எண்ணிக்கை கூடியது. ஒரு கட்டத்தில் தமிழ் மணம் திரட்டியில் இணைந்தபோது நிறைய பார்வையாளர்கள் கூடினர். இந்த சமயத்தில்தான் வலைச்சரத்தில் என் ராஜபாட்டை ராஜா அவர்கள் என்னை அறிமுகப்படுத்த இன்னும் சிலர் பாலோவர் ஆனார்கள். அப்படியே வளரும்போதுதான் தளிரில் களைகள் ஆரம்பம் ஆயின.
     வலைப்பூவில் சிலர் கதைகளை மட்டுமே எழுத சிலர் கவிதைகளை எழுத, சிலர் நகைச்சுவைகளை எழுத, சிலர் சினிமாவிமர்சனம் மட்டும் எழுத என தனித்தனியாக எதோ ஒன்றை மட்டும் எழுதி வந்தனர். எனக்கு அப்படி எழுத தோன்றவில்லை! ஒரு பல்சுவை வார இதழாய் இருக்க வேண்டும் நமது வலைப்பூ என்ற எண்ணத்தில் கதை, கவிதை, ஜோக்ஸ் என கலந்து கட்டி எழுதினேன். பிற தளங்களில் இருந்து பகிர்ந்தேன். அப்படி செய்யும்போது நிறைய பேர் வருகிறார்கள் என்று சினிமா தகவல்களை நிறைய போட ஆரம்பித்துவிட்டேன்! இதைப்போட்டால் நிறையபேர் வருவார்கள் என்று நான் எழுதுவதை நிறுத்தி காப்பிபேஸ்ட் செய்ய ஆரம்பித்தேன்! நிறைய பேர் வந்தார்கள்! ஆனால் தொடரவில்லை! கமெண்ட்கள் வரவில்லை!
      அப்போதுதான் பிற தளங்களுக்கு சென்று கமெண்ட் செய்து அவர்களை என் தளத்திற்கு அழைத்தேன்! அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இன்று என் தளத்திற்கு தொடர்ந்து வரும் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்த சமயத்தில்தான் கொன்றைவானத்தம்பிரானுடன் சிறு சர்ச்சை! அவர் சொல்வது முதலில் எரிச்சலாக இருந்தாலும் பின்னர் உண்மை புரிந்தது. அதன்படி காப்பிபேஸ்ட்டை குறைத்தேன்! சொந்தமாக எழுத முயற்சித்தேன்! ஆனால் பல்சுவைகளில் ஜோக் எழுத முடிவதில்லை! அதை பிற புத்தகங்களில் இருந்து பகிர்கிறேன். கதைகள் எழுத பொறுமையில்லை! அதனால் ஹைக்கூ மற்றும் கதம்பச்செய்திகளை தொகுத்து தந்து கொண்டிருக்கிறேன்! சிறுவர்பகுதியும், தமிழ் இலக்கண சம்பந்தமான ஒரு பகுதியும் தொடர்ந்து வருகிறேன்.
    கடந்த ஜூலை மாதம் முதல் தளிரில் சினிமா செய்திகள் குறைந்துவிட்டன. அவ்வப்போது ஒன்றிரண்டு மட்டுமே! அது மட்டும் இல்லாமல் காப்பிபேஸ்ட் செய்த தரமில்லாத ஹிட்ஸ்க்கு மட்டும் உதவிய பல பதிவுகளை நீக்கிவிட்டேன். இதனால் எனது தளத்திற்கு பார்வைகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து தரமான செய்திகளை மட்டும் தர முடிவு செய்து அப்படியே செயல்பட்டுவருகிறேன்.  இன்னும் சிறப்பாக தளிரை கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
      காப்பி பேஸ்ட் செய்ய ஆரம்பித்த பின் என்னை தமிழ்மணம் நீக்கிவிட்டதால் அதில் பதிவுகளை இணைக்க முடிவதில்லை. மற்ற திரட்டிகளின் உதவியோடு இன்று இரண்டு லட்சம் பார்வைகள் கடந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் 1350க்கும் அதிகமான பதிவுகளை கொடுத்து 3500க்கும் அதிகமான பின்னூட்டங்களை பெற்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
  2011ல் ஒரு முறை மட்டுமே வலைச்சரத்தில் அறிமுகமான நான் 2012 ஜூலைக்கு பின் நான்கு முறை அறிமுகம் செய்யப்பட்டேன். 2013லும் இதுவரை நான்கு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன். வலைச்சர அறிமுகம் என்னை மேலும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்துள்ளது.
   பல நல்ல நண்பர்களை இந்த வலைப்பூ பெற்றுத் தந்துள்ளது. இன்னும் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். இரண்டுலட்சம் பார்வைகளை தாண்டுவது என்பது சில நாளாய் நான் கொண்ட ஒரு லட்சியம். அதை கடந்துவிட்டேன். இன்னும் சில லட்சியங்கள் உண்டு அதுவும் விரைவில் ஈடேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
     கூடன்குளம் சம்பந்தமாக பதிவுகள் தினமலரில் இருந்து வெளியிட்டபோது பார்வைகள் அதிகரித்தது. அதனால் சில விவாதங்கள் சண்டைகள் ஏற்பட்டது. அதன் பின் கொண்றைவானத் தம்பிரானுடன் சில சர்ச்சைகள், அதைத்தவிர வேறெந்த சர்ச்சையிலும் தளிர் ஈடுபடாமல் பீடு நடை போட்டுவருகிறது உங்களின் பேராதரவுடன். இதுவரை தளிருக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! இதுவரை கமெண்ட் செய்தவர்களின் பெயர்களை கீழே தந்துள்ளேன். அவர்கள் மட்டுமின்றி சைலண்ட் ரீடர்களுக்கும், பெயரிலியாய் கருத்திட்டவர்களுக்கும், தினம் தோறும் தவறாமல் கருத்திடும் நண்பர் தனபாலனுக்கும் விசேசமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
    தளிர் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆலோசனைகளை கமெண்டில் சொல்லுங்கள்! தவறுகளை திருத்திக்கொள்கிறேன். நன்றி!


இதுவரை கமெண்ட் செய்து தளிரை உரமிட்டு வளர்த்த உள்ளங்கள் இவர்கள் அனைவருக்கும் நன்றி!

 முதல் கமெண்ட் ஸ்ரீ அனுராதா,  தளிர் அண்ணா கவிதைகள் 10-1-11
 முதல் கமெண்ட் நானே என் மனைவி பெயரில் போட்டுக்கொண்டேன்! ஹிஹி!

கூடல்பாலா, பிலாசபி பிரபாகர், அபுசானா, ஏ.ஆர் ராஜகோபாலன் mahan thamesh தமிழ்வாசிபிரகாஷ், பிரகாஷ் சோனா,  இ.பு.ஞானபிரகாசம், கவிதைவீதி சவுந்தர், மதுரை சரவணன், கே.எஸ்.எஸ்.ராஜ், மதுரன், உங்கள் நண்பன்,இருதயம், சூர்யஜீவா, நிவாஸ்,கும்மாச்சி, சின்னதூறல்,கோகுல், வைரை சதீஷ், ஜெய்சங்கர் ஜெகன்னாதன் ,saravanan flim,தமிழ்தோட்டம்,எல்,கே,rajvel,sanmugakumar,vanjur,அரசன்,stalin,
அம்பாளடியாள், அஸ்மா, mohamed faaique, ஐடியாமணி, முனைவர்,குணசீலன்,சி.பி.செந்தில்குமார்,சித்ரவேல்சித்ரன்,
புலவர்.சா.இராமானுசம்,anishj, siva007,lakshmi, dr, palanikandhasami,saro, ஆமினா, சூப்பர், ஆளுங்க,suriyajeeva,rajkumar, www.podakkdutntj.com,pc,karupaiah, pudukai selva, sivamjothi28,thiyagarajan,ashik, balu, vp.murugan, விக்கியுலகம்,உலகசினிமாரசிகன், நம்பிக்கைபாண்டியன்,ஷஹி, கோவைநேரம், என்ராஜபாட்டை ராஜா,தமிழ்ச்செல்வன்,கார்த்திகேயனி, திண்டுக்கல் தனபாலன், சதீஷ் செல்லதுரை, இராஜராஜேஸ்வரி,தமிழ்மகன், சிசு,வலைஞன், கோபிநாத்,நிலாமதி,மாசிலா,ஹிஷாலி,ராம்கோபி, ரியாஸ்,செந்தில்குமார், கலை,செந்தில், சுஜி, ம.தி.சுதா, அட்சயா,cpadenews, தோழன் மா.பா.தமிழன்வீதி,bsnl,advacate p.r.jayarajan, more entertainment,sunfun, online workersfor all, hotlinknsinதிரட்டி, கூகிள்சிறிகொம்,வல்லத்தான், தனிமரம், வரலாற்றுசுவடுகள், ரமணி, ப்ரேம்.எஸ், சிவகுமார், மனசாட்சி, ஹாரிபாட்டர், டி.என் ,முரளிதரன், ஃபுட்நெல்லை,ரெவெரி, கலாகுமரன், திரட்டு.கொம்,அவர்கள் உண்மைகள், எழில், சீனு, சங்கவி,இரா.மாடசாமி,இரவின்புன்னகை, மேகா, தமிழ்நுட்பம், krishnamoorthi,அன்பைத்தேடி அன்பு, சிட்டுக்குருவி, சசிகலா, ரமேஷ்வெங்கடபதி,eazyeditorial calander, rishvan, கவி காயத்ரி, நாஞ்சில்மனோ, மோகன்குமார், அகரத்தான்,கோவி, புதுகைத்தென்றல்,ஹேமா, ஞானம்சேகர்,பாலகணேஷ்,கிருஷ்ணாரவி,செழியன், சி.பிரேம்குமார்,கதிர்ராத், வவ்வால்,நண்டு@நொரண்டு, கவிஅழகன், கவிசெங்குட்டுவன், போக்கிரி,சஃபி, பழனிகந்தசாமி, சென்னைப்பித்தன், ஸ்ரீராம்,கோமதிஅரசு,ஆயிஷாபருக்,கல்விக்கூடல், ஜெயதேவ்தாஸ்,அதிசயா, மதுமதி,இட்ஸ்டிபரண்ட்,sury,rasan,tamilcomics sounder, வே.சுப்ரமண்யன்,ஆட்டோமொபைல்,சாமூண்டீஸ்வரிபார்த்தசாரதி, ரத்னவேல்நடராஜன், ஆர்.வி சரவணன்,வேடந்தாங்கல் கருண், கரந்தைஜெயக்குமார், கொன்றைவானத்தம்பிரான், விச்சு,குமரன்விவேகா, தங்கம்பழனி,சேதுராமன் ராமலிங்கம், பட்டுராஜ், கோவை.மு.சரளா,விருச்சிகன், சே.குமார்,பாலமுருகன்,சேஷாத்ரி இ.எஸ்.,சீனி, அப்பாத்துரை, கவிதைவீதி சவுந்தர்,மட்டைஊறுகாய், எஸ்தர்சபி,உமா, நிலவைத்தேடி, தேவதாஸ் எஸ்.என்.ஆர், தமிழின்ஃபொவே,தமிழ்காமெடிஉலகம், குட்டன், கீதமஞ்சரி,அகல்,ஸ்ரவாணி, சுடர்விழி, தமிழ்களஞ்சியம்,அரசன் சே,தொழிற்களம்குழு, எஸ்.ஆர்.எச்.தினபதிவு, சீனி,மோகன்பாலு, சிவஹரி,கலை, செங்கோவி,முத்தரசு, அருணாசெல்வம், ஹாரி.ஆர்,anvicter,ramamoorthi, உஷா அன்பரசு, மாற்றுப்பார்வை, ஸ்கூல்பையன், ஆதிரா, கவிஞர் கி.பாரதிதாசன், தமிழ்கிங்,ஆத்மா, பரிதிமுத்துராசன், அமர்க்களம்கருத்துக்களம்,குமரன், தவக்குமரன்,செம்மலைஆகாஷ், குமரன்சங்கர்,ஜெயந்திரமணி,ஆண்ட்ராய்ட்கீக்,ஹாரி ருசாந்த்,ரவிஉதயன், நிஜாமுதின்,செல்வராணிகுமரன்,பூந்தளிர், எஸ்.பிரகாஷ்,கவியாழிகண்ணதாசன், கோவைஆவி,ரிவர்லைவ்ஜாப்ஸ்,ஜகத்,பராரி, ரஞ்சனிநாராயணன்,கமலக்கண்ணன், முரளி,ராயதுரை, தமிழ்செல்வி, டினேஷ்சாந்த்,ஜீவன்சுப்பு, மகேந்திரன், முகமதலிஜின்னா,  (14) எஸ்.சதீஷ்,அபிஶ்ரீ,பெருவுடையான், வடிவேலு, கணபதி டபிள்யூ, பரணிதரன் கே, நாடிநாரயணன் மணி, குற்றாலலிங்கம் முருகன், ரவிக்குமார் கே, ரூபக்ராம், மதிசுதனா தக்சின், வலைச்சரம் சீனா ஐயா,தமிழன் பொதுமன்றம், வினோத்குமார், ராஜா,ரியாஸ் அகமத்,ஆசை, கார்த்திக், தணிகை, கருவாச்சி அர்விந்த், கார்த்திக் சேகர், இளமதி, பட்டிக்காட்டன் ஜெய், மதன் புதிய உலகம், இராஜமுகுந்தன் வவ்வையூரான்,சாய்ராம், அருள், ப.பிரகாஷ்,வருண்வருணா, கோவிந்த்ராஜ்,அ.பாண்டியன், அலேக்ஸ்1019, எம்,எஃப் நிரோஷன்,கோகுல்,ராஜி, பரிதி,தர்மதீனா, சாரி, பகவான் ஜி, ராஜலஷ்மிபரமசிவம்,மணிமாறன், வெற்றிவேல்,மேரிஜோஸ்,ப்ளே ராஜ்,தஸ் கார்த்தி,வியபதி, சத்யாநம்மாழ்வார்,ஜோதிஜி,ஶ்ரீனிவாசன்,கமல் எம்.கெ.யூ.சி, பி.எஸ்.டிபிரசாத்.        
  உங்க எல்லோருக்கும் இதோ ட்ரீட்! ஸ்விட் எடுங்க! கொண்டாடுங்க!

 தினம் தோறும் தவறாது வந்து உற்சாகப்படுத்தும் பின்னூட்டப்புயலை கவுரப்படுத்த  பெயரை பெரிது படுத்தி ஹைலைட் செய்துள்ளேன்! மேலும் என்னை வலைச்சரத்தில் முதலில் அறிமுகம் செய்த ராஜபாட்டை ராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் தளிர் என்று ஒரு வலைப்பூ இருக்கிறது என்று மீண்டும் நினைவுபடுத்திய சிவஹரி இருவருக்கும் என் நன்றியை தெரியப்படுத்தி ஹைலைட் செய்துள்ளேன்!
    இன்னும் நிறைய சொல்லலாம்! ஆனால் தொடர்கதை போல நீண்டுவிடும்! எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்!

   இது மட்டுமில்லாமல் நிறைய ஆலோசனைகள் வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும், தொடர்ந்து வரும் நண்பர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!
     


புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!

புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன்!


அகிலம் எங்கும் அருளாட்சி செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னை எத்தனையோ வடிவங்களில் காட்சி தருவாள். கருணைவடிவாகவும், காளி சொருபமாகவும், இரண்டே கரங்களுடனும் பதினாறு கரங்களுடனும் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் பலவிதங்களில் காட்சிதரும் அம்மன்களை தரிசித்து இருக்கலாம்.
    தஞ்சாவூர் மாவட்டம் புன்னை நல்லூரில் புற்றுவடிவில் எழுந்தருளி வித்தியாசமாக அருள்பாலிக்கிறாள் அன்னை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவளை திரையில் வரைந்து வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.

   சோழ மன்னர்கள் போரில் வெற்றிபெற காளி வழிபாடு செய்து வந்தனர். தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல்தெய்வங்களாக அமைத்தனர். கிழக்குப்பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன். ‘சோழசம்பு’ என்ற நூல் இதை தெரிவிக்கிறது.
    1680ல் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகராஜா திருத்தல யாத்திரை செய்யும்போது சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு அம்பிகை அரசரின் கனவில் தோன்றி ஒரு புன்னைக் காட்டில் புற்றுவடிவில் தான் இருப்பதாகவும் தன்னை வழிபடும்படியும் கூறிவிட்டு மறைந்தாள். அரசரும் அவள் குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து புற்று இருந்த இடத்தில் மேற்கூறை அமைத்து புன்னை நல்லூர் எனப் பெயரிட்டு இந்த கிராமத்தை கோயிலுக்குத் தானமாக வழங்கினார்.

  தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கோயிலுக்கு மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம்,மதில்சுவர்கள் கட்டி திருப்பணி செய்துள்ளார்.
  சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவம் கொடுத்து ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
  மூலவர் புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. அதற்கு பதிலாக தைலக்காப்பு அணிவிக்கப்படுகிறது. மூலவர் அருகில் உள்ள விஷ்ணு துர்கை மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் உண்டு. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை  தைலக்காப்பு செய்யப்படும். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து அதில் ஆவாஹனம் செய்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும். தைலக்காப்பில் இருப்பதால் இளநீர், தயிர் நைவேத்தியம் செய்தல் விசேஷம். 2014 ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தைலக்காப்பு செலுத்தப்பட உள்ளது.

      திருமணம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வழிபட பிரார்த்தனை ஈடேறும். கட்டி, பரு உள்ளவர்கள் இங்குள்ள குளத்தில் வெல்லம் வாங்கி கரைத்தால் அதுபோல நோயும் கரைந்து போகும் என்று நம்புகிறார்கள்.
   தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது புன்னை நல்லூர். காலை ஐந்துமணி முதல் இரவு ஒன்பதுமணி வரை ஆலயம் திறந்திருக்கும்.


   புற்றுவடிவில் அருள் பாலிக்கும் இந்த அதிசய மாரியம்மனை தரிசித்து ஆனந்தம் அடைவோமாக!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, November 28, 2013

ஆஃப்டே பர்மிசன் கேட்டா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்

ஜோக்ஸ்


  1. மன்னா எதிரி அரண்மனையை நெருங்கிவிட்டான்!
அப்புறம்?
மகாராணியின் முகத்தை பார்த்ததும் நொறுங்கிவிட்டான்!
                        பர்வீன்யூனுஸ்

2.எதற்காக நமது மன்னர் அரசவை புலவரை விளாசித்தள்ளுகிறார்?
பதுங்கு குழிக்குள் பாயும் புலியேன்னு வஞ்சப்புகழ்ச்சியா வர்ணிச்சிட்டாராம்!
                    அருண்பிரகாஷ்

3.நில அபகரிப்பு கேஸ்ல உள்ள போய் வந்தும் தலைவர் திருந்தலய்யா!
   ஏன் என்ன சொல்றாரு?
ஜெயிலுக்கு பக்கத்துல  ஏகப்பட்ட  காலி இடம் இருப்பது தெரியாம போச்சேங்கிறாரு!
                      அ.அரவப்பா

4. வாழ்த்த வயதில்லைன்னு தலைவர்கிட்டே சொன்னா…
   ஏன் என்ன சொன்னார்?
  ரெண்டு ரெண்டுபேரா சேர்ந்து வாழ்த்துங்களேன்றார்!
                         பர்வீன் யுனுஸ்

5.தலைவரை கைது பண்ணப்ப ஏதோ தெனாவட்டா சொன்னாராமே?
   எப்படியும் ஃபைலை தொலைக்கப்போறீங்க! அப்புறம் எதுக்கு பில்டப்புன்னு கேட்டிருக்காரு!
                        எஸ்.சடையப்பன்.

6.எங்க தலைவர் எல்லாத்துக்கும் முன்மாதிரியா இருப்பாரு!
  எங்க தலைவர் எப்பவும் ஒரு மாதிரியா இருப்பாரு!
                 பா. ஜெயக்குமார்

7.தலைவர் டீவி பார்த்து ரொம்ப கெட்டுப்போயிட்டாரு?
  எதைவச்சு அப்படி சொல்றே?
  நேத்து கோர்ட்டுல, ‘ஜட்ஜ் அய்யா எனக்கொரு டவுட்டு?ன்னு கத்தியிருக்காரு!
                      வி. சகிதா முருகன்.

8.முன்பெல்லாம் எங்கள் தலைவரை மருந்துக்கடை, நகைக்கடை, புடவைக்கடை திறக்க அழைத்தவர்கள் இன்று அவர் ஆட்சியில் இல்லாத ஒரே காரணத்துக்கா கட்டணக்கழிப்பிடம் திறக்க அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்!
                     பர்வீன் யூனுஸ்

9.ஜட்ஜ்: கடைசியாக எதையாவது சொல்ல விரும்புகிறாயா?
குற்றவாளி: அப்பப்ப டீவி ஷோக்களுக்கு ஜட்ஜா போய் கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க எஜமான்!
                  இரா.வசந்தராசன்.

10 கேள்வி கேட்டதுக்கு தலைவர் கோச்சுகிட்டாராமே ஏன்?
  பின்னே தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நீதிமன்றங்கள் இருக்குன்னு கேட்டா?
                         சிக்ஸ்முகம்

11. அப்பழுக்கு இல்லாத எங்கள் தலைவரின் ஆடை மீது   வீசிய செப்பலுக்குநீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
                      வீ. விஷ்ணுகுமார்

12. 2016ல் நாம ஆட்சி பீடத்துல ஏறலைன்னா என்னய்யா ஆகும்?
  போலீஸ் வேன்லயும் குற்றவாளி கூண்டுலயும் ஏறவேண்டியிருக்கும் தலைவரே!
                      பர்வீன் யூனுஸ்

13. சாப்பிட்டு மூணு நாளாச்சு! பால்குடிச்சு…
   புலவரே என்ன இது?
   பஞ்சப்பாட்டு மன்னா!
                லெ.நா.சிவக்குமார்

14. உங்களது குற்றப்பத்திரிக்கை மீது ஏதாவது ஆட்சேபனை உண்டா?
  பத்திரிக்கை சுதந்திரத்தில் நான் என்றுமே தலையிட்டதில்லை யுவர் ஆனர்.
             கோவை.நா.கி பிரசாத்.


15. மன்னா! மன்னா!
  சுற்றிவளைக்காமல் விஷயத்தை நேரடியாக சொல்!
   எதிரிப்படைகள் நம்மை நாலாபக்கமும் சுற்றி வளைத்துவிட்டனர் மன்னா!
                    வி.சுபஸ்ரீ
16. சட்டத்தில் இடமில்லைன்னு தெரிஞ்சுமா தலைவரை ஜெயில்ல போட்டுட்டாங்க!
  ஜெயில்ல இடம் இருக்காமே!
                  கிணத்துக்கடவு ரவி

17. தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படி சொல்றே?
   தன்னோட பழைய காரை வித்துட்டாரே!
                    பி.நந்தகுமார்.

18.உண்ணாவிரத பந்தல்ல தலைவர் ஏன் கடுகடுன்னு இருக்கார்?
  யாரோ பந்தலுக்கு முன்னாடி பிரியாணி பட போஸ்டரை ஒட்டியிருக்காங்களாம்!
                       வி. சகிதா முருகன்.

19. தலைவர் ஏன் அவசர அவசரமா டிவிட்டர் பேஸ்புக்ல அக்கவுண்ட ஆரம்பிக்கணும்கிறார்?
  சமூகத்துல தனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் வேணும்னு நினைக்கிறார்!
                   அம்பை தேவா.

20.யூ டியுப்ல ஹிட் அடிச்சிட்டீங்க தலைவரே!
  என்னய்யா சொல்றே?
  உண்ணாவிரத பந்தலுக்கு பின்னாடி நீங்க பிரியாணி தின்னது யூ டியுப் ல வந்திருச்சு தலைவரே!
                   அம்பை தேவா.

21 மன்னா! ஒரு நற்செய்தி!
   என்ன?
உங்களின் பதுங்கு குழிக்கு ஐ.எஸ் ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது!
                    வீ.விஷ்ணுகுமார்.

22. சார்… ஆஃப்டே பெர்மிஷன் வேணும்!
   எதுக்கு?
  நான் கேட்டதுலேயே பதில் இருக்கு கண்டுபிடியுங்க!
                              அ.ரியாஸ்.

நன்றி: ஆனந்தவிகடன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


                    

Wednesday, November 27, 2013

ஆருஷி வழக்கும் தமிழ்திரையில் சன்னிலியோனும்! கதம்பசோறு! பகுதி15

கதம்ப சோறு பகுதி 15

ஆருஷி வழக்கும்! அறிவாளன் வழக்கும்!


நொய்டாவில் பல்மருத்துவரான ராஜேஷ் தல்வார், மற்றும் அவரது மனைவி நுபுர் தல்வார், தாங்களே தங்கள் மகளை கொன்றதாக  நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. வேலைக்காரனுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் குடும்ப கவுரவம் காக்க மகளையும் வேலைக்காரனையும் திட்டமிட்டு கொன்றுள்ளனர் அந்த தம்பதியினர். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பும் அதிகபட்சமாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பும் வாதிட்டது. இறுதியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளனர் அந்த தம்பதியினர். சொந்த மகளை கொன்றவருக்கே ஆயுள் தண்டணைதான்.
ஆனால் ராஜீவ் கொலையில் நேரடி சம்பந்தம் இல்லாத பேறறிவாளனுக்கு தூக்குத்தண்டனை என்பது என்ன விதமான நீதி என்பது விளங்கவில்லை! பேட்டரி வாங்கிக்கொடுத்ததற்காக ஒருவனுக்கு தூக்கு என்பது வேடிக்கையாக இருக்கிறது. தண்டணைகள் என்பது திருந்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையவேண்டும். கொலைக்குக் கொலை பழிக்குப் பழி என்று போனால் அது மிருகத்திற்கு சமானமாகி போகும். சமீபத்தில் பேரறிவாளன் சம்பந்தப்பட்ட உயிர்வலி என்ற ஆவணப்படம் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அவருக்கு வழி பிறக்குமா என்று தெரியவில்லை!

வெற்றிப்பெற்ற கெயிலும் விலகிக்கொண்ட கெய்லும்!

  தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியாக குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த கெயில் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. இந்த குழாய்களை விளை நிலங்களில் பதித்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசும் விவசாயிகளை வரவழைத்து கருத்துக்கேட்டது. விளைநிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறியது. இதை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடங்கிய வழக்கில் தற்போது அந்த நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அலட்சியமான போக்கால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மையில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களா? இந்த திட்டத்தால் என்ன நன்மை! விவசாயிகளை எப்படி அணுகி இந்த திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைக்கலாம் என்று ஆலோசிக்காமல் தடாலடியாக இறங்கியதால் நீதிமன்றத்தில் குட்டுப்பட்டிருக்கிறது அரசு. விவசாயிகளிடமும் கெட்டபெயர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இந்திய சுற்றுப்பயணத்திட்டத்தில் இருந்து இடையில் விலகும்படி நேர்ந்துவிட்டது,முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடும்போது காலில் அடிபட்டமையால் ஆறுவாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே பலமுறை அணிக்கு வெளியே இருந்துள்ள அவர் தற்போது அணியில் இடம் கிடைத்தும் விளையாட முடியாமல் போனது வருத்தமான விஷயம்.

ரிப்பன் மாளிகைக்கு வயது நூறு!

   சென்னையின் அடையாளச்சின்னங்களில் ஒன்றான ரிப்பன் மாளிகைக்கு நூறு வயது பூர்த்தியாகிவிட்டது. சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான இந்த கட்டிடம் 1909ல் கட்டத்துவங்கி 1913ல் முடிக்கப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட மாளிகையின் மொத்தப்பரப்பளவு 25ஆயிரம் சதுர அடி. இந்திய ரோமானிய கட்டடக்கலை வடிவமைப்பு கொண்ட இந்த மாளிகை சென்னை வெப்பத்தை தாக்குப்பிடிக்க வெப்பத்தை உள்வாங்காத மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது. செங்கல் சுண்ணாம்பு, மணல், கடுக்காய்தண்ணீர்,வெல்லம் கலந்த கலவையில் இதன் கட்டுமானம் அமைந்துள்ளது.  இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி ஹாரிஸ். கட்டியவர் சென்னையை சேர்ந்த லோகநாதமுதலியார். அப்போது கட்டிமுடிக்க ஏழரைலட்சம் ரூபாய் செலவானது. அப்போதைய வைஸ்ராய் சார்லஸ் பரோன் ஹார்டிஞ் இதை திறந்துவைத்தார். உள்ளாட்சி முறையை உருவாக்கிய ரிப்பன் பிரபுவின் பெயர் மாளிகைக்கு சூட்டப்பட்டது. இதன் நூறுவயது பூர்த்தியை முன்னிட்டு நான்கு ஆண்டுகளாக சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நூறு ஆண்டுகள் கடந்தும் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படவில்லை! சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் விழாக்கோலம் பூன முடியாமல் உள்ளது மாளிகை. பழைய பொலிவை மாளிகை பெற இன்னும் ஆறுமாதம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் கவனிக்க அரசுக்கு ஏது நேரம்? அவங்க பாட்டுக்கு சினிமாநூற்றாண்டை கொண்டாட போயிருவாங்க!

தமிழ் சினிமாவில் சன்னிலியோன்!


    கனடா நாட்டை சேர்ந்த விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜிஸ்ஷும்2 என்ற இந்திப்படத்தில் அதீத கவர்ச்சியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து இந்திபடங்களில் நடித்தும்வருகிறார். இவர் ஜெய் நடிக்க தயாராகி வரும் வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். சரவணராஜன் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தினை இயக்குகிறார். இசை யுவன்சங்கர்ராஜா. தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இந்த படத்தில் சன்னிலியோன் நடனமாட இருக்கிறார் என்று டிவிட்டரில் தயாநிதி அழகிரி தெரிவித்ததும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால் சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும் தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அவரை தமிழ் சினிமாவில் நடிக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  சன்னி லியோன் நடித்தாலும் நடிக்காவிடினும்சிலர் எதிர்க்க சிலர் ஆதரவு தெரிவிக்க வடகறி படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.

ஆந்திராவில் அவசர கதியில் அமைகிறது ராக்கெட் ஏவுதளம்!
      இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் அது சம்பந்தமான விவாதங்கள் நடைபெற்று வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரகதியில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் 363.5 கோடி மதிப்பில் அமைப்பதற்கான பணிகளை ஆந்திர அதிகாரிகள் அவசரகோலத்தில்  மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கலைஞர் கருணாநிதியும் குற்றம் சாட்டி உள்ளார். நாட்டில் இருக்கும் அனைத்து ஏவுதளங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விஞ்ஞானிகள் மத்திய அரசிடம் தெரிவித்து குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் ஆந்திர அரசு இப்போது ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் இணைப்பு தொழிற்கூடம் துவங்கி மூன்றாவது ஏவுதளம் தன் மாநிலத்திலேயே கிடைக்கும் வண்ணம் தமிழகத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

ஆக்சிஜன் செலுத்தும் புதியகருவி கண்டுபிடிப்பு!
  அறுவை சிகிச்சையின் போது எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும் வகையில் சீராகவும் எளிதில் கையாளக்கூடியதுமான புதிய ஆக்சிஜன் செலுத்தும் கருவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம் பெரியசாமியால் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது குறைந்த விலையில்  விற்பனைக்கும் வந்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் வயதுக்கேற்ப இந்த ஆக்சிஜன் ஏற்றும் கருவியை உபயோகிக்க வேண்டி இருந்தது. இதனால் குழந்தைக்கு,சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு தகுந்தார்போல பிராணவாயு வெளிப்படுத்தும் திறனை கூட்டிக் குறைக்க வேண்டியிருந்தது. இதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கருவியின் விலை ஆயிரம் ரூபாய் இருந்தது.
  பலமுறை ஆராய்ச்சி செய்து தோல்விகளுக்கு பின் 2010 ஆண்டு முதல் இந்த கருவி விற்பனைக்கு வந்துள்ளது. பெரியசாமி என்னும் பெயரின் தொடக்கமாக பெரிஸ் என்ற பெயரில் இந்த கருவி விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ 600 தான். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன்படுத்தலாம். 2013 ஜூலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார் பெரியசாமி! அவரை வாழ்த்துவோம்.

செஸ் சாம்பியன் கார்லஸ்! ஆஷஸை வெற்றியுடன் துவக்கிய ஆஸ்திரேலியா!

  சென்னையில் நடைபெற்ற உலக செஸ்சாம்பியன்ஷிப் போட்டியில் வி.ஆனந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து மிக இளையவயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துக் காட்டிவிட்டார் கார்ல்சன். இதுவரை நடந்த போட்டிகளில் ஒருமுறையாவது சுற்று போட்டிக்களில் வென்ற ஆனந்த் கார்ல்சனுடன் ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை! சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் தங்க கோப்பையை கார்ல்சன்னுக்கு வழங்கினார். இதுவரை வெள்ளிகோப்பைதான் வழங்கப்படும். ஆனால் முதல்வர் ஆலோசனையின் படி இந்த ஆண்டு முதல்முறையாக தங்கக்கோப்பை வழங்கப்பட்டது. கார்ல்சனுக்கு 9.9 கோடி பரிசும் ஆனந்திற்கு 6.3 கோடி பரிசும் கிடைத்தது. உலகிலேயே அதிகம் பேர் பார்த்த போட்டி என்ற சிறப்பினையும் பெற்றது இந்த போட்டி.
    ஆஷஸ் தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது ஆஸ்திரேலியா. சொந்த மண்ணில் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வச் செய்துவிட்டது ஆஸ்திரேலியா. இந்த ஆண்டில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்காத அணி என்ற பெருமையுடன் களமிறங்கிய இங்கிலாந்து பத்து டெஸ்ட்களாக வெற்றியையே ருசிக்காத ஆஸ்திரேலியாவிடம் வெற்றிக்கனியை வழங்கியது. இதில் இன்னொரு அதிர்ச்சியாக அந்த அணியின் ஜோனாதன் ட்ராட் மன அழுத்தம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பி விட்டார். முதல் டெஸ்டில் மொத்தமாக 19 ரன்களையே அவர் எடுத்தார்.


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விசாக பட்டினத்தில் நடந்த போட்டியில் தோல்வி கண்டாலும் இந்திய அணியின் கேப்டன் தோனி 150 போட்டிகளுக்கு தலைமை வகித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை படைத்தார். இந்த போட்டியில் 50வது அரைசதம் கண்ட தோனி ஐ.சி.சி நடத்தும் உலககோப்பை மினி உலக கோப்பை, டி20 உலககோப்பை மூன்றும் வென்ற ஒரே கேப்டனும் ஆவார். இன்னும் 25 போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்ந்தால் அசாரூதினின் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த இந்தியர் என்ற சாதனையும் முறியடிப்பார். வெல்டன் தோனி.

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

ஒரு கையில் மட்டும் கிளவுஸ் அணிந்து வேலை செய்பவரா நீங்கள்? வலது கை கிளவுஸ் கிழிந்துவிட்டால் இடது கை கிளவுஸீனை திருப்பிப்போட்டு வலது கையில் அணிந்து பயன்படுத்தலாம்.

ஃபிரிட்ஜின் மீது ஏதேனும் சாமான்களை வைத்தால் பிரிட்ஜிலிருந்து வரும் சப்தம் அதிகரிக்கும். அதனால் ஸ்டெபிளைசர் தவிர வேறு ஏதும் ப்ரிட்ஜ் மீது வைக்கவேண்டாம்

மழைக்காலங்களில் உப்பு ஜாடிகளில் ஈரம் கசியும், இதை தவிர்க்க இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை அதில் போட்டுவைத்தால் ஈரம் கசியாது.

இரத்தகாயம் பட்டுவிட்டால் கொய்யா இலைச்சாறு எடுத்து காயத்தின் மீது வைத்து கட்டினால் இரத்தம் வெளியேறுவது உடனே நிற்கும்.

குளியலறையில் குளித்துவிட்டு வரும்போது தினமும் ஒருவாளி நீரை பரவலாக ஊற்றினால் சோப்பு நீர் தங்கி வழுக்காமல் இருப்பதுடன் டைல்ஸ் நிறம் மாறாமல் இருக்கும்.

கடவுளுக்கு கடிதம்.

  தபால் ஆபிசுக்கு ஒரு கடிதம்… கடவுள், சொர்கம் என்று விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படி கொண்டுபோய் சேர்ப்பது. அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது?  கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள் உள்ளே முகவரியும் இருந்தது. அத்துடன் கடவுளுக்கு ஓர் உருக்கமான கடிதம் இருந்தது. தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தன்னுடைய கஷ்டத்தை தீர்க்குமாறும் உடனடியாக தனக்கு 75 ரூபாய் பணம் அனுப்பி உதவுமாறும் கடவுளிடம் கேட்டிருந்தார் அக்கடிதத்தை எழுதியவர். தபால் ஊழியர்கள் மனம் நெகிழ்ந்து போயினர். ஒருவனுக்கு இப்படியெல்லாம் கஷ்டம் வருமா? என்று வருந்தி அவனுக்கு உதவ முடிவு செய்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அவருக்கு 60 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாளில் அவரிடமிருந்து மற்றொரு கடிதம் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வந்தது. அதில் கடவுளே.. தாங்கள் அனுப்பிய பணத்தில் 15 ரூபாயை தபால் ஊழியர்கள் திருடிக் கொண்டுவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார் அவர்! இது எப்படி இருக்கு!
 இந்த வார வாரமலரில் படித்த துணுக்கு இது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Tuesday, November 26, 2013

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

இரவு நேரம். வேலைகளை முடித்துக்கொண்டு களைப்பாக திரும்பிய தன்னுடைய மகன்களுக்கு சாதம் பறிமாறிக்கொண்டிருந்தாள் அம்மா. அன்று அவள் செய்த உணவு புளியோதரை! மிகவும் ருசியாக இருந்தது. வேர்க்கடலைகளை வேறு தூவி வைத்து இருந்ததால் சுவைக்கு பஞ்சம் இல்லை!. உணவின் சுவையில் மயங்கிய மகன்கள் அம்மா! புளியோதரை கெட்டுப்போகாது அல்லவா? நாளைக்கும் வைத்துவை! நான் சாப்பிடுகிறேன்! என்றான்.
    அதைக்கேட்ட தாய் சிரித்தாள்.
நான் என்னம்மா தவறாக சொல்லிவிட்டேன்! ஏன் சிரிக்கிறாய் அம்மா! என்றான் மகன். மகனே நீ சொன்னது போல சொல்லக்கூடாது. பிச்சைக்காரனுக்கு வைத்து வை என்றுதான் சொல்ல வேண்டும். என்றாள் அம்மா.
  பிச்சைக்காரனுக்கு வைத்துவிட்டால் அப்புறம் நான் எப்படி சாப்பிடுவதாம்? எனக்கு மிஞ்சியதுதான் பிச்சைக்காரனுக்கு! இதைத்தானே பெரியவர்களும் தனக்கு மிஞ்சியது தானம் என்று சொல்கிறார்கள். இப்போது தாய் மேலும் சிரித்தாள்.
   என்னம்மா! எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொள்கிறாய்? என்று சலித்துக் கொண்டான் மகன்.
   மகனே! உன் புளியோதரை ஆசையை நினைத்து முதலில் சிரித்தேன்! இப்போது நீ பழமொழியை தவறாக புரிந்துகொண்டதை நினைத்து சிரித்தேன்! என்றாள் தாய்.
  பழமொழி தவறா அம்மா?
பழமொழி தவறில்லை! நீ புரிந்துகொண்டதுதான் தவறு. தனக்கு மிஞ்சியது தானம் என்றால் நாம் சாப்பிட்டு மிச்சம் இருப்பது இல்லை! தன்னிடம் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது பொருள். மிஞ்சியது என்பதை மிகுதியானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தன்னுடைய தேவைக்கு அதிகமானது என்று பொருள். என்றாள்.
   சரி அம்மா! புரிந்தது. ஆனால் பிச்சைக்காரனுக்கு ஏன் எடுத்து வைக்க வேண்டும்?

  அது ஒரு கதை!
 சொல்லேன் அம்மா!
  ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை தினமும் மோர்க்குழம்பு வைக்கச்சொல்லி சாப்பிடுவான். ஒவ்வொரு நாள் அவன் சாப்பிடும்போதும் நாளைக்கும் இதே போல மோர்க்குழம்பு செய்து வை என்பான். இப்படியே பல நாட்கள் சென்றன.
  இப்படி  ஒருநாள் அவன் மனைவியிடம் சொன்னபோது எங்கிருந்தோ கலகலவென சிரிப்பொலி கேட்டது. அவன் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். யாரும் தென்படவில்லை. எங்கிருந்து சிரிப்பொலி வருகிறது என்று தெரியாமல் திகைத்தனர். ஆனால் ஆள் அகப்படவே இல்லை! அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்து போனான். எல்லோரும் பாம்பை பிடித்து அடிக்க போனார்கள். அப்போது அந்த பாம்பு மனிதனாக மாறியது. நான் எமதூதன்! இவன் உயிரை கொண்டு செல்ல வந்தேன்!. ஆனால் இவனோ நாளைக்கு நான் சாப்பிட மோர்க்குழம்பு செய்து வை! என்றான். இன்றிரவே இறக்கப்போகும் இவன் நாளைக்கு சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறானே என்று நினைத்து சிரித்தேன்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.
  இதைக்கேட்டு அனைவரும் வியந்து நின்றார்கள். நாளை என்பது நிச்சயம் அல்ல! தூங்குகிறோம் எழுந்திருப்போம் என்பது உறுதியல்ல!  எமன் நாளை வரை நமக்கு உயிர்தந்தால் நாம் சாப்பிடலாம்! அந்த பொருளில் தான் பிச்சைக்காரனுக்கு எடுத்து வை என்கிறார்கள் என்றாள்.
  நல்ல கதைதான் அம்மா! ஆனால் புளியோதரையின் சுவை என்னை கட்டிப்போட்டுவிட்டது! பிச்சைக்காரனுக்கு எடுத்துவையுங்கள்! அவன் பிச்சை போட்டால் நான் சாப்பிடுகிறேன் என்றான் மகன்.

(எங்கோ எப்போ படித்ததை தழுவி எழுதினேன்)


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, November 25, 2013

ஹைக்கூ பூக்கள்!

ஹைக்கூ பூக்கள்!

வாழ்விலும் சாவிலும்
வந்து வாழ்த்தின
பூக்கள்!

மகிழ்வித்து
மகிழ்ந்தன
மலர்கள்!

விருந்துண்டன
கண்கள்
மலர்கள்!

உலகிற்கு
வண்ணங்கள் அறிமுகம்
பூக்கள்

வாசம் வீசியதும்
பாசமான வண்டுகள்

பூக்கள்!

மறைந்தாலும்
மணத்தன
பூக்கள்!


விலை மகளான பூக்கள்
விரக்தியில் வாடின
செடிகள்!

தங்கம் திருடின வண்டுகள்
மஞ்சளாய் ஜொலித்தது
சரக்கொன்றை!


முடி சூடா மலர்கள்
அழகிழந்தன
கூந்தல்கள்!

நகை புரிந்தன சிகை
கூந்தலில்
மல்லிகை!

இறங்கி வராவிட்டால்
ஏறிவிடுகிறது விலைவாசி!
மழை!

சவலையான பூமி
பெய்யவில்லை
மழை!

 
குளிரெடுத்த மேகத்தால்
குளிர்ந்து போன பூமி!
மழை!

 
விதைத்தவன் சும்மா இருக்க
அறுவடை செய்தது பூமி!
மழை!

கடல் நீரைக்
குடி நீராக்கியது
மழை!


மேகப் பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!

Sunday, November 24, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 34

சென்ற வாரம் கார்த்திகை தீபம் என்பதால் இந்த தொடரை தொடர முடியவில்லை! அதற்கு முன்பு தமிழில் சொல்லின் முதலில் இந்த எழுத்துக்கள்தான் வரவேண்டும் என்ற மரபை பற்றி படித்தோம். அதை நினைவு கூற இங்கு செல்லவும்
   சொல்லின் இடையில் என்னென்ன எழுத்துக்கள் வரலாம் என்றும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதை இந்த வாரம் பார்ப்போம்!
  ஐ என்ற எழுத்து மட்டும் உயிர்மெய்யெழுத்தின் இடையில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து ஒரு மாத்திரை குறைந்து ஒலிக்கும். உதாரணமாக இணயம், உமயம்மை,பழய, வலயர், பாளயம் முதலிய சொற்களில் வரும்,ண, ம,ழ,ள,ல எழுத்துக்களின் ஒலிகள் ணை,மை,ழை,ளை, லை எழுத்துக்களின் குறுக்கம் ஆகும். இது ஐகாரகுறுக்கம் என்றும் வழங்கப்படும். இவ்வாறு பேச்சுவழக்கில் ஒலிக்கலாமே தவிர எழுதும்போது சரியாகத்தான் எழுத வேண்டும்
  அதேபோல் சொல்லின் இடையில் வல்லின மெய்களான ட்,ற் ஆகிய ஒற்றெழுத்துக்கள் வரும்போது அடுத்து இன்னொரு வல்லின ஒற்று மிகுந்து வராது. காட்சி என்பது சரியான சொல், காட்ச்சி என்பது தவறானது. சாட்சி என்பது சரியானது, சாட்ச்சி என்பது தவறானது.

 சரியான சொல்- பிழையான சொல்
வெட்கம்-             வெட்க்கம்
முயற்சி                முயற்ச்சி
பயிற்சி                 பயிற்ச்சி
கடற்கரை             கடற்க்கரை

மொழியின் இடையில் வரும் எழுத்துமரபுகளில் முக்கியமானவை மட்டும் இவை. இதை அறிந்து கொண்டாலே பிழைகளை தவிர்த்து விடலாம்.

தமிழ் சொல்லின் இறுதியிலே வரும் எழுத்து மரபுகள்.

மெய்யெழுத்துக்களில் வல்லின ஒற்றெழுத்துக்களான க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வருவதில்லை. வேற்றுமொழி சொற்களை எழுதுகையில் இதில் சிக்கல் வருவது உண்டு.
  உதாரணமாக மார்க், கேட்ச், பேட், பாத், மேப் என்ற ஆங்கில சொற்களை அப்படியே தமிழ்படுத்தும்போது அப்படியே எழுதுகிறோம். தவிர்க்க முடியாத சூழலில் இதை எழுத வேண்டுமெனில் அதற்கு இணையான தமிழ் சொல்லை சேர்த்து எழுதி சரி செய்யலாம் உதாரணமாக மேப் என்பதை மேப்பு என்றும் மார்க் என்பதை மார்க்கு என்றும் எழுதலாம்.
  உயிர் எழுத்துக்களில் ஊ, எ, ஏ,ஒ, ஔ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வராது.
  எ, ஒ ஆகிய உயிரெழுத்துக்கள் பேச்சுவழக்கில் வரும். ஆனால் எழுத்து வடிவில் வராது. உதாரணம் ஊரிலே, அங்கெ, வாங்கொ

சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துமரபுகளை அறிந்து கொண்டோம்! இனி பிழையின்றி எழுதிப் பழகுவோம்.
இனி இனிக்கும் இலக்கிய சுவைக்குள் புகுவோமா?


காதல் இல்லாத கவிதைகள் இல்லை எனலாம். பண்டைய இலக்கியங்களிலும் காதல் சுவை மிளிர்ந்து காணப்படும். முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களை புகழ்ந்து பாடும் ஒரு செய்யுள் இதில் கைக்கிளை வகை செய்யுள்கள் அதிகம். கைக்கிளை என்பது ஒருதலைக் காதல்.

பாண்டியனை ஒருதலையாய் காதலித்த பெண்ணொருத்தி பாடுகிறாள் கேளுங்கள்.

   உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
   கழுதை செவியரிந் தற்றால்- வழுதியைக்
   கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
   கொண்டன மன்னோ பசப்பு.

வயலிலே விளைந்த உளுத்தஞ்செடிகளை ஊரிலே வளர்ந்த கன்று மேய அதை விட்டுவிட்டு கழுதையை பிடித்து காதை அறுத்தார்களாம். அதேபோல பாண்டியனை கண்டு காதல் கொண்டாள் ஒருத்தி. பாண்டியனை பார்த்தது அவள் கண்கள். தவறு செய்த அக்கண்களுக்குத்தானே தண்டனை தரவேண்டும். ஆனால் மாறாக அவளது தோள்களுக்கு தண்டனை தரப்பட்டதாம். இது என்ன நியாயம் வழுதியை கண்ட கண்கள் சும்மா இருக்க தோள்கள் பசந்துவிட்டதே! என்று பாடுகிறாள். பசப்பு என்பது பசலையை குறிக்கும். பசலைநோய் என்பது மெலிந்து போதலை குறிக்கும். பாண்டியனை ஒருதலையாய் காதலித்து மெலிந்து போன பெண்ணொருத்தி தன்னுடைய மெலிவை இப்படி அழகான கவிதையாக்கி இருக்கிறாள்.
 இதை கொண்டுதான் மேய்ந்த மாட்டை விட்டு கழுதையின் காதறுத்தானாம்! என்ற பழமொழியும் தோன்றியிருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!

தொடர்புடைய பதிவுகள்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 33

உங்கள் தமிழ் அறிவு எப்படி? பகுதி 32


Related Posts Plugin for WordPress, Blogger...