ஒளி காட்டும் வழி!

ஒளி காட்டும் வழி!


அகிலத்தின் இருளதனை
அகற்றிடுமே ஆதவனின் தீபஒளி!
அடிமை இருளதனை அகற்றியதும்
சுதந்திர தாகமெனும் சுடரொளி!
உள்ளத்தின் இருளதனை
தள்ளிடுமே சான்றோரின் ஞானஒளி!
அறியாமை இருளதனை
வறியதாக்கிடுமே கல்வியெனும் அறிவொளி!
இல்லாமை இருளதனை
இல்லாதாக்கிடுமே இயந்திரங்களின் பேரொளி!
இல்லத்தின் இருளதனை
நில்லாதுவிரட்டிடுமே நிறைவான தீபஒளி
சாதிமத இருளதனை
சாய்த்திடுமே சமத்துவம் என்னும் ஒளி!
இன்னும் எத்தனையோ இருள்களை
மண்ணிலிருந்து விரட்ட
உன்னுள்ளே உதிக்கவேண்டும்
உயர்வான ஆன்ம ஒளி!
ஒளிந்துகொண்ட இருளெல்லாம்
ஓடிடவே உள்ளத்தில்
பெருகவேண்டும் தூயஒளி
இருளதனை விரட்டி அருளதனை
தந்திடுமே தீபஒளி எனும் தீபாவளி!
ஒளிகாட்டும் நல்வழி!
வலியில்லா நல்லவழி!
வழிதொடர்ந்தால் சிறக்குமே
நம் வாழ்க்கைவழி!


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


(பதிவர் திரு ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டு பதிவிடப்படுகிறது)

Comments

  1. அறவழி சிறந்து மகிழ்வுடன் , நிறைவுடன் வாழ
    உரைத்திருக்கும் ஒளி கருத்துகள்
    இந்நாளில் மிகத் தேவையான ஒன்று.
    வாழ்த்துக்கள் சகோ !
    எண்ணிப் பார்க்கும் போது 25 வரிகளுக்கு மேல் வருகிறதே ...
    கவனிக்கலையா ?

    ReplyDelete
  2. அருமை... கலந்து கொண்டதற்கு நன்றி... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. // உன்னுள்ளே உதிக்கவேண்டும்
    உயர்வான ஆன்ம ஒளி!//

    உண்மை சகோ!
    ஆன்ம ஒளி துலங்க அகன்றிடுமே அத்தனை இருளுமே!..

    அருமையான கவிதை!
    போட்டியில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  4. அன்[இன் சுரேஷ் - வெற்றி பெற நலாழ்த்துகள் - கவிதை அருமை - எத்தனை ஒளிகள் - அவை காட்டும் வழிகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அருமை சகோ. அழகான அறியாமை இருளை நீக்க வந்த கவிதை. கவிதை 25 வரிகளுக்குள் இருப்பது சிறப்பு என்று மட்டுமே போட்டி விதி கூறுகிறது. கட்டாயப்படுத்தவில்லை. போட்டியில் வெற்றி பெற எனது அன்பான வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ஞானஒளி, சுடரொளி, பேரொளி என்று வரிசையாக தீபமேற்றி தீபாவளி திருநாளுக்கு நல்லதொரு கவிதை தந்திருக்கிறீர்கள்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சுரேஷ். பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!