Thursday, October 31, 2013

“சயின்ஸ்”ல வீக்கா இருக்க பெண்ணை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்புவது ஏன்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.      எடுத்துகிட்டு இருக்கற படத்துக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு!
       அப்புறம்?
     ஒரே குழப்பமா இருக்குன்னு பேர் வைச்சிட்டோம்!
                         -யாக்கோப்
   2. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம்..!
      ஆமா… வெங்காய வியாபாரியா இருக்காராம்!
                          நா.கி.பிரசாத்.

 3. நடிகை ரூபஸ்ரீ இருக்காங்களான்னு கேட்டதுக்கு எதுக்கு    அந்தம்மா கோவிச்சுட்டு போறாங்க?
அவங்கதான் நடிகை ரூபஸ்ரீ மேக்கப் இல்லாம இருந்திருக்காங்க!
                 கி.ரவிக்குமார்.
4.      தலைவர் எப்படி கிரானைட் ஊழலிலே மாட்டினார்?
கிரானைட் உடைக்கிற உளியின் ஓசையை ரிங்டோனா வச்சிருந்தாராம்!
                      திரிபுரசுந்தரி.
5.      யாருக்குமே பயிர்க்கடன் தராத மேனேஜர் எப்படி அண்ணா உனக்கு தந்தார்?
நான் கடன் கேட்டது வெங்காயம் பயிர் செய்ய
                         சுரேஷ்.
6.      தங்களுடைய வாள் தூக்க முடியாத அளவுக்கு மிக கனமாக இருக்குமாமே மன்னா?
அட தங்களுக்கு யார் சொன்னது அமைச்சரே!
பேரிச்சம்பழ கடைக்காரன் தான் மன்னா!
                  கே. ஆனந்தன்.

7.ஏம்மா கைக்குழந்தையை தூக்கிகிட்டு ஆபிசுக்கு வந்திருக்கே?
  வீட்டுல தூங்க மாட்டேங்குது சார்!
   இப்பவேவா!
                   கி.ரவிக்குமார்.
8.நான் ஆபிசுக்கு பூ வைச்சிகிட்டு போனா மேனேஜர் திட்டுவாரு!
  அநியாயமா இருக்கே!
 அப்புறம் அவர் வாங்கி வந்த பூவை எங்கே வைப்பாரு?
                 வி.சாரதிடேச்சு.
9.ஏண்டி கமலா குக்கர் ரிப்பேர்னு சொன்னியே விசில் சத்தம் வருதே!
  சும்மா இருக்கற வீட்டுக்காரர் கிட்டே விசிலை கொடுத்து மூணுநிமிஷத்துக்கு ஒருமுறை விசில் அடிக்க சொன்னேண்டி!
                 அ. கிருஷ்ண சாமி

 10. இவர் மன்னருக்கு வைத்தியம் பார்ப்பவர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?
  போரில் காயம் பட்டுவிட்டது என்று சொன்னதும் முதுகை பார்க்கிறாரே!
                         கே. ஆனந்தன்.
11. மாப்பிள்ளை என் பொண்ணை கண்கலங்காம பார்த்துக்கங்க!
  வெங்காயம் வாங்கற அளவுக்கு எனக்கு வசதி கிடையாது மாமா!
               வி. சகிதா முருகன்

12. ஓலை கொண்டுவந்த புறாவிடமே பதில் ஓலை கொடுக்காமல் பறவைகாய்ச்சல் உள்ள நம் புறாவிடம் பதில் ஓலை கொடுத்து அனுப்புகிறீர்களே ஏன் மன்னா?
  காரணமாகத்தான் தளபதியாரே! புறாக்கறி என்றால் அவன் ருசித்து சாப்பிடுவான்; அத்தோடு அவன் அழியட்டும்!
                     சீர்காழி வி. ரேவதி.

13. பதுங்கு குழியில் உள்ள மன்னருக்கு டிபன் போகுது!
   குழிப்பணியாரம்தானே!
               இ.கோவலன்.


14.கோயிலுக்குள்ளே வந்ததும் தலைவர் சுவிட்ச் போர்டு எங்கேன்னு கேட்கிறாரே ஏன்?
  கோவில்ல விளக்கு போட்டா நல்லதுன்னு ஜோஸ்யர் சொன்னாராம்!
                     மீனா முருகேசன்.
15.என்னது சயின்ஸ்ல வீக்கா இருக்க உன் மகளை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்ப போறீயா?
  ஆமா அவங்க கிட்டதான் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகுதுன்னு ஆர்யா சொல்லியிருக்காரே!
                  த. கருணைச் சாமி
16.தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பா ஏன்?
  அமலாப் பால் சம்பளம் உயர்த்தும் போது ஆவின் பால் விலை மட்டும் ஏற்றக் கூடாதான்னு அறிக்கை விட்டாராம்!
                      வி.எம். செய்யதுபுகாரி.
17.என் மாமியார் கரும்பு மாதிரி!
  அவ்வளவு இனிப்பானவங்களா?
  ஊகும்! உடம்பு பூரா சுகர்!
                  தீ. அசோகன்.
18.இப்போதெல்லாம் தாங்கள் பெண்களுக்கு குறி சொல்வதில்லையே குருவே!
  போலீஸ் என்னை குறிவைத்து கைது செய்ய பொறி வைத்திருக்கிறார்கள் சிஷ்யா!
               சீர்காழி வி.வெங்கட்.

19. பிறந்தநாளும் அதுவுமா தலைவர் வீட்டுல சி.பி.ஐ ரெய்டு நடக்குதே!
  எவனோ ஒருத்தன் ஆறு கோடி மக்களிடம் நூறுகோடி சம்பாதித்த தலைவர் வாழ்கன்னு போஸ்டர் வெச்சானாம்!
                     வி,எம். செய்யது புகாரி.
20 மன்னா! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து நம் ராணியை கடத்திச் செல்கிறான்!
   ராணி சத்தம் போடவில்லையா?
 ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று  அலறினார்கள் அரசே!
                      சீர்காழி.வி.ரேவதி.
21 சென்னைக்கு வர்றப்ப பெரிய கனவோட வந்தவன் நான்!
    அப்படியா?
  பஸ்ல ஏறி உக்காந்ததுமே தூங்கிட்டேன்!
                       கே. ஆனந்தன்.
22. வீட்ல செடி நட எதுக்கு தலைவரை கூப்பிடற?
   அவருதான்  கூட இருந்து குழி பழிக்கறவராச்சே!
                          எஸ். சடையப்பன்.

23. என்கிட்ட ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டு திருப்பி தரும்போது 50 ஆயிரம் ரூபாய் தர்றீங்க!
   நம்ம ரூபாயோட மதிப்புத்தான் பாதியா குறைஞ்சிடுச்சே!
                       பி.பாலாஜிகணேஷ்!

நன்றி: குமுதம் வார இதழ்.


Wednesday, October 30, 2013

ஒரு ரூபாய் தோசையும் புலவர் செய்த புதுமையும்! கதம்ப சோறு பகுதி 11

கதம்ப சோறு பகுதி 11

மின்மிகை மாநிலமாகுமாம் தமிழ்நாடு

      இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலம் ஆகிவிடும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். இப்போது வீட்டு மின்சாரத்தில் மின்வெட்டு அறவே இல்லை எனவும், ஆனாலும் பகிர்மானத்தில் குளறுபடிகளை தவிர்க்க மின்வெட்டு அறிவித்து விட்டு மின்விநியோகம் ஒழுங்காக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு இல்லை! அப்படி இருந்தாலும் ஒரு மணி அரைமணி நேர மின்வெட்டே உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதுவும் சீர் செய்யப்பட்டுவிடும் என்று கூறியுள்ள அவர் வழக்கம் போல தமது ஆட்சிக்காலத்தில் தான் மின் திட்டங்களில் இந்த இந்த செயல்பாடுகள் செய்யப்பட்டன என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டுள்ளார். அவர் மின்வெட்டு இல்லை என்று அறிவித்த மறுநாளே எங்கள் ஊரில் மூன்று மணிநேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டு இன்று வரை தொடர்ந்து வருகிறது. நல்லா காட்டுறாங்கப்பா ஷோ!

அலோ மிஸ்டர் ராங் நம்பர்!
     ஒன்றரை வருடங்களில் 723 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதாங்க 100ம் நெம்பருக்கு போன் செய்து பெண் காவலர்களிடம் ஒழுங்கீனமாக பேசிய கீளினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
   அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்பவர்களிடம் கனிவாக பேசவேண்டும் என்று இந்த சேவைக்கு பெண்களை நியமித்தது இது போன்ற கிரிமினல்களுக்கு வசதியாக போய்விட்டது. ஏடாகூடமாக இப்படி பேசிவந்த அந்த கிளீனரின் பெயர் பன்னீர் செல்வம். அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் விசாரித்தபோது நூறுக்கு போன் பேசினா யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நண்பன் கூறியதால் போன் செய்தேன். போன் செய்யும் போதெல்லாம் பெண்களே பேசியதால் சந்தோசத்தில் தொடர்ந்து பேசினேன். என்றான். பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் இந்த நூறு என்ற எண்ணுக்கும் மற்ற சேவை எண்களுக்கும் விளையாட்டாக இப்படி யாரும் போன் செய்யாதீர்கள் என்றார் போலீஸ் அதிகாரி. உண்மைதானே!

கிச்சன் ரூம் பாடகி ரெகார்டிங்க் ரூம் பாடகியானார்.

      கேரளாவை சேர்ந்தவர் சந்திரலேகா அடூர் குடும்ப வறுமையால் கல்வி கற்க முடியாத இவருக்கு இளமையிலேயே நல்ல குரல்வளம் உண்டு. முறைப்படி சங்கீதம் கற்கும் வசதியின்மையால் சங்கீதம் கற்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக தாலாட்டுப் பாடல் ஒன்றை பாடினார். குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு அவர் தாலாட்டு பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து கடந்த மாதம் யூடியுப்பில் வெளியிட்டார். ஒரே மாதத்தில் ஏழுலட்சம் பேர் அந்த வீடியோவை பார்க்க வீடியோ பிரபலமானது. சந்திரலேகாவின் குரல் வளத்தை கண்ட மலையாள இயக்குனர்கள் இப்போது அவரை தங்கள் படத்தில் பாட வைக்க அவரது வீட்டில் காத்துக் கிடக்கின்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டி உள்ளார். திறமை எங்கிருந்தாலும் ஒரு நாள் அடையாளம் காணப்படும் என்பதற்கு சந்திரலேகா  ஒரு உதாரணம்.

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு காசநோய்!

    இந்தியாவில் பத்துலட்சம் பேருக்கு காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 2.7 லட்சம் பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இருமல் தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்துளி உமிழ்நீர் ஆகியவற்றிலிருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்று மூலமாக பரவுவது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் போன்றவை இருக்கும்.
   காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம்,பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, காங்கோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் அதற்கான சிகிச்சை பெறாமலேயே இருக்கின்றனர் என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொஞ்சம் விழிப்பா இருந்து காச நோயை விரட்டியடிங்கப்பா!

சீனாவில் பிரபலமாகிவரும் கரப்பான் பூச்சி பண்ணை!

    சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப்புழுக்களை வறுத்து சாப்பிடுவது அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலரவைத்து சீனமருந்துகள், அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள புரதச்சத்து மற்றவகை புரதச்சத்தைவிட விலை மிகவும் குறைவு. மேலும் இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளும் பயன்படுகிறது.கரப்பான் பூச்சிகளுக்கு இருட்டான இடங்கள் மிகவும் பிடிக்கும். பழைய கோழிப்பண்ணைகள் இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள் இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். வாங்க் பூமிங் என்ற கரப்பான் பூச்சி பண்ணையாளர் மட்டும் தன்னுடைய ஆறு பண்ணைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகளை வளர்க்கிறார். கரப்பான் பூச்சி வளர்க்க முதலீடும் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால் 670 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 1200 ஆக உள்ளது. சீனாவில் இப்போது கரப்பான் பூச்சி பண்ணைதான் மிக பிரபலமாக உள்ளது.

புற்றுநோயால் அவதிப்படும் நடிகர்

   பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ். தமிழ்படங்களிலும் நடித்துள்ளார்.பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையும் இவரே! 90 வயதான் நாகேஸ்வரராவிற்கு பெருங்குடல் மற்றும் மலத்துவார பகுதிகளில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ்  புற்றுநோய் தாக்கியவர்கள் ரத்தவாந்தி எடுத்து இறந்து விடுவார்கள் என்ற கதை உள்ள படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அது நூறு சதவீதம் உண்மையல்ல. முன்னாள் குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி போன்ற பலர் இந்த புற்றுநோயை தோற்கடித்துள்ளார்கள். என்னை பொறுத்தவரை இந்த மாதிரி போராட்டங்கள் புதிதல்ல 1974,1988 களில் இதய நோயால் பாதிக்கப்பட்டு ஜெயித்தவன் நான். இப்போது என் போராட்டம் புற்றுநோயுடன். அவ்வளவுதான். ரசிகர்கள் ஆசியால் இதில் வெற்றிபெற்று நூறுவயது வரை வாழ்வேன்! என்றார் தன்னம்பிக்கையுடன். இந்த வயதிலும் மன உறுதியுடன் இருக்கும் அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஹாப்!

டிப்ஸ்:


இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி 5 நாட்கள் தேனில் ஊறவைத்து தினமும் ஒர் இஞ்சித் துண்டை சாப்பிட்டுவர சரும சுருக்கங்கள் நீங்கும்.

வெள்ளைப் பூண்டை விழுதாக்கி இரவில் தூங்கும் முன்பாக கால் ஆணியில் வைத்து கட்டி வைத்து காலையில் கழுவி விடவும் தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்தில் கால் ஆணி குணமாகும்.

ஜாதிமல்லி மல்லிகைப்பூ போன்றவை நிறம் மாறாமல் இருக்க பூவை இலேசாக உலர்த்தி செய்தித்தாளில் பொட்டலமாக கட்டி ப்ரிட்ஜில் வைத்தால் புதியது போல அப்படியே இருக்கும்.

சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள்தூள் போட்டு தெளிந்தது உப்பு, சீரகத் தூள் கலந்து அருந்த அஜீரணக் கோளாறு நீங்கும்.

உண்மையாவா?

   நயன் தாராவை தொடர்ந்து இப்போது சோனாக்‌ஷி சின்ஹாவுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டி வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தனது அடுத்தப்படத்தில் சோனாக்‌ஷியை நாயகியாக்க முடிவெடுத்திருக்கிறாராம் பிரபுதேவா.அந்த பட ஒத்திகையில் இருவரும் நெருக்கம் காட்டிவருவதுதான் இப்போது பாலிவுட் ஹாட் டாபிக்.

ஒரு ரூபாய்க்கு தோசை!

   விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் உள்ள திருவம்பட்டு கிராமத்தில் தான் ஒரு ரூபாய்க்கு தோசை தரப்படுகிறது தொட்டுக்கொள்ள கடலை சட்னியுடன். இந்த கடையின் உரிமையாளர் தமிழரசு. அந்த காலத்துல எல்லாம் தீபாவளி பொங்கல்னாதான் எங்க வீட்டுல இட்லி தோசை பார்க்க முடியும். கல்யாணமாகி பிள்ளைங்க பிறந்ததும் பிள்ளைகளுக்கு தினமும் இட்லி தோசை சாப்பிட கொடுக்கணும்தான் இந்த கடையை ஆரம்பிச்சேன் என்கிறார். அவரது மகனும் மருமகளும் இப்போது கடையை கவனித்துக் கொள்வதில் உதவுகிறார்கள். ஒரு ரூபாய்க்கு கட்டுப்படியாகிறதா? என்றால் ஊர்க்காரங்க சப்போர்ட் இருந்தால் நீங்க கூட ஒரு ரூபாய்க்கு தோசை கொடுக்கலாம் என்கிறார். ஊரில் விளையும் அரிசி, உளுந்து போன்றவை குறைந்த விலையில் இவர்களுக்கு விற்பார்களாம்.அதனால் எங்களுக்கு கையை கடிக்காது. அவங்க கிட்ட கம்மியா வாங்கி அவங்களுக்கு கம்மியா கொடுக்கிறோம் அவ்வளவுதான் என்கிறார்கள். அம்மா உணவகம் என்று ஊரெங்கும் விளம்பரம் தேடும் உலகில் விளம்பரம் இல்லாமல் இப்படியும் இருக்கிறார்கள்!

வாரியார் விருந்து!

     ஒரு புலவர் துரை ரங்கன் என்ற மன்னனிடம் சென்றார். துரை ரங்கன் என்பவர் குறுநில மன்னர். இவர் சிறந்த ரசிகர். அறிஞர். ஜோதிடக் கலையிலும் வல்லவர். புலவர் புரவலனைப் பார்த்து மன்னவரே ஒரு புதுமை சொல்லுகிறேன் கேள். ஒரு பெண்ணுக்கு நான்கு புருவம், ஐந்து கம்மல், ஆறு தனம், ஏழு கண்கள் என்று ஒரு பாடலை பகர்ந்தார்.
   ‘துங்கவரை மார்ப! துரைரங்க பூபதியே!
   இங்கோர் புதுமை இயம்பக் கேள்! பங்கையக்கை
   ஆயிழைக்கு நான்குநுதல்,ஐந்துகுழை,ஆறுமுலை
    மாயவிழி ஏழா மதி’
 மன்னவன் பேஷ்! பேஷ் என்று சிலாகித்து ஆயிரம் பொன் பரிசு கொடுத்தார்.
  அருகில் இருந்தவர்களுக்கு விளங்கவில்லை! என்ன ஒரு பெண்ணுக்கு நான்குபுருவமா? ஐந்து கம்மலா? ஆறுமுலையா? ஏழு கண்ணா? என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து விளங்காது விழித்தார்கள்.
  புலவர் விளக்கினார். ராசிகள் 12, மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தநுசு, மகரம், கும்பம், மீனம். இந்த அடிப்படையில்
  ஆயிழைக்கு நான்கு நுதல்- ஆயிழை கன்னி, பன்னிருராசிகளில் கன்னி என்பது ஒரு ராசி. கன்யா ராசிக்கு நாலாவது ராசி தநுசு. நுதல்- அதாவது பெண்ணின் புருவம் வில்லைப் போன்றுள்ளது. ஐந்து குழை- கன்னியில் இருந்து ஐந்தாவது ராசி மகரம்- அவளுக்கு மகரக் குழை. ஆறு முலை – கன்னியா ராசியில் இருந்து ஆறாவது ராசி கும்பம், கும்பம் போன்ற தனம். ஏழாவது ராசி மீனம்- மீனம் போன்ற கண்கள்.
       புலவரின் விளக்கம் புரிந்ததா? இத்தனை சிறப்புள்ள புலவர்கள் வாழ்ந்த நம் தமிழ் நாடு சிறப்புடையது அன்றோ?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Tuesday, October 29, 2013

புகைப்பட ஹைக்கூ 56

புகைப்பட ஹைக்கூ 56


1.சிலருக்கு குப்பை
சிலருக்கு நிறையுது
தொப்பை!

2.இருப்போருக்கு குப்பை
இல்லாதாருக்கு
இதுவாகும் அகப்பை!

3.வீசி எறியும் முன்
யோசித்தால் வறியோர்க்கு
தீரும் ஒருவேளை பசி!

4.உணவுத் தேடலில்
தொலைந்தது
சுகாதாரம்!

5.அமுதசுரபிகளாய்
அவதாரமெடுத்தது
குப்பைத்தொட்டிகள்!

6.எச்சிலுக்கும்
இடம்கொடுத்தது
பசி!

7.தீராத துயரம்
தெருவோர அவலம்
உயராத சமூகம்!

8.வளர்ச்சி வந்தது
தொட்டிக்குள் உணவு
ஏழ்மை!

9.எறிந்த உணவு
அணைத்தது
ஏழையின் பசி!

10.தேடிக்கொண்டே
 தொலைக்கிறார்கள்
 நலவாழ்வு!

11, வளர்ந்து கொண்டே
   போகிறது
   வறுமைக் கோடு!

12. குப்பையில் சோறு
   பாதையில் படுக்கை!
   விளிம்புநிலை மனிதர்கள்!

13. விளைநிலமானது
   வீணானவை நிறைக்கும்
   குப்பைத் தொட்டி!

14.          தேடி சலித்ததில்
தேறியது
    உணவு.

15.          இறைத்தவை
இறைவனானது
    இல்லாதவனுக்கு!

 16. பசி அழைக்க
     பந்திபறிமாறியது
     குப்பைத்தொட்டி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, October 28, 2013

ஒளி காட்டும் வழி!

ஒளி காட்டும் வழி!


அகிலத்தின் இருளதனை
அகற்றிடுமே ஆதவனின் தீபஒளி!
அடிமை இருளதனை அகற்றியதும்
சுதந்திர தாகமெனும் சுடரொளி!
உள்ளத்தின் இருளதனை
தள்ளிடுமே சான்றோரின் ஞானஒளி!
அறியாமை இருளதனை
வறியதாக்கிடுமே கல்வியெனும் அறிவொளி!
இல்லாமை இருளதனை
இல்லாதாக்கிடுமே இயந்திரங்களின் பேரொளி!
இல்லத்தின் இருளதனை
நில்லாதுவிரட்டிடுமே நிறைவான தீபஒளி
சாதிமத இருளதனை
சாய்த்திடுமே சமத்துவம் என்னும் ஒளி!
இன்னும் எத்தனையோ இருள்களை
மண்ணிலிருந்து விரட்ட
உன்னுள்ளே உதிக்கவேண்டும்
உயர்வான ஆன்ம ஒளி!
ஒளிந்துகொண்ட இருளெல்லாம்
ஓடிடவே உள்ளத்தில்
பெருகவேண்டும் தூயஒளி
இருளதனை விரட்டி அருளதனை
தந்திடுமே தீபஒளி எனும் தீபாவளி!
ஒளிகாட்டும் நல்வழி!
வலியில்லா நல்லவழி!
வழிதொடர்ந்தால் சிறக்குமே
நம் வாழ்க்கைவழி!


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


(பதிவர் திரு ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டு பதிவிடப்படுகிறது)

Sunday, October 27, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 31இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக சந்திப்பிழையின்றி எழுதுவது பற்றி படித்தோம். இந்த வாரமும் அது தொடர்பான ஒரு பகுதிதான் ஒலிமயக்கம் என்னும் மயங்கொலிப் பிழைகளை பற்றி இந்த பகுதியில் பார்க்க உள்ளோம். தமிழில் எழுதும் போது சின்ன ‘லா’வா பெரிய ‘ளா’ வா என்றும் சின்ன ‘னா’ வா பெரிய ‘ணா’வா என்றும் குழம்பி மாற்றிப் போட்டுவிடுவோம். ஆங்கிலத்திலும் இந்த ஒலி மயக்கம் உண்டு. ஆங்கிலத்தில் B-P, C-G-J,D-T,G-K, V-W, என பல்வேறு ஒலிமயக்கங்கள் உண்டு. ஆனால் தமிழில் மூன்றே மூன்று இனங்களில் தான் இந்த ஒலிமயக்கம் ஏற்படும்.
  அவை
1.      ர-ற  2. ந-ன-ண, 3. ல-ள-ழ
இந்த மூன்று இன எழுத்துக்களும் உச்சரிப்பது எப்படி என்று அறிந்துகொண்டால் பிழையே வராது. பேச்சுத்தமிழிலேயே இப்போதெல்லாம் பிழையாக பேசுவதால் எழுத்து தமிழும் பிழையாகிப் போகின்றது.

வெளிநாட்டு பாதிரியார் ஒருவர் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டார். அவருக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை! மீன் வாங்கி வந்துவிட்டார். சமையல்கார அம்மாளுக்கு மீன் குழம்பு வைக்க தெரியுமா என்று அவருக்கு சந்தேகம்.அந்த சமையல்கார அம்மணியிடன் பாதிரியார் இப்படிக் கேட்டாராம். “நீங்கள் மீனைக் குழம்பு வைக்க அரிவீர்களா?
  இதைக்கேட்டதும் சமையல்கார அம்மாள், ‘மீனை அரியாமல் எப்படி குழம்பு வைப்பது?’ என்று திருப்பிக் கேட்டாராம். பாதிரியாருக்கு ஒன்றும் புரியாமல் விழித்தாராம். இவர் கேட்க நினைத்தது மீன் குழம்பு வைக்கத் தெரியுமா? (அறிவீரா?) என்று அர்த்தத்தில் அவர் புரிந்து கொண்டது மீனை அரியாமல் எப்படி குழம்பு வைப்பது என்று? பாதிரியார் அரைகுறை தமிழினால் குழம்பிப் போனார். நமது தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளும் இப்படி கொஞ்சி பேசி தமிழை கொலை செய்து வருகின்றனர்.

இப்படி ஒலிமயக்கம் இன்றி பேசவும் எழுதவும் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். ஒரு சில பயிற்சிகளும் உண்டு. உதாரணமாக பெரிய என்று எழுதும் போது சின்ன ‘ரானா’ போட வேண்டும்  சிறிய என்று எழுதும் போது பெரிய ‘றானா” போட வேண்டும். இப்படி எதிர்மறையாக வரும்.
   பேச்சுத்தமிழில்  ர,ற வேறுபாடு அறிந்து கொள்ள ஒரு தொடர் பயிற்சியும் உண்டு. ‘அரைகுறையா உரசினாளாம்,பாறையில பரத்தினாளாம்’ என்ற வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிப் பார்ப்பதன் மூலம் பயிற்சி பெறலாம்.
ஒலி மயக்கத்தில் முதலில் நாம் பார்க்க இருப்பது ந-ன-ண ஒலி மயக்கம்.
  த்,ற்,ட் ஆகிய வல்லின எழுத்துக்களுக்கு உறவுடைய மெல்லினங்கள் ந்,ன்,ண் ஆகும். ந்,ன்,ண் ஆகிய மெல்லினங்கள் பிறக்கும் இடத்திலேயே த்,ற்,ட் என வல்லின எழுத்துக்கள் பிறக்கின்றன. அதனால் தமிழ் சொற்களில் எப்போதும்
   ந் பக்கத்தில்தான் த் வரும்
   ன் பக்கத்தில் ற் வரும்
   ண் பக்கத்தில் ட் வரும்

உதாரணமாக பந்து, கந்தன், கன்று, நன்றி, நண்டு, வண்டி,
இப்போது புரிந்ததா? இது புரிந்தால் ந,ன,ண எழுத்துப் பிழைகள் உங்களுக்கு வரவே வராது.

       ந,ன இவையில் சில இடங்களில் குழப்பம் வரும்.அவை இடம் மாறினால் பொருளும் மாறிவிடும் உதாரணமாக முந்நூறு, முன்னூறு இவை இரண்டையும் எடுத்துக் கொள்வோம்.
   முந்நூறு என்றால் மூன்று நூறு என்று பொருள்படும். அதையே முன்னூறு என்றால் “முன்பு சொன்ன நூறு”என்று பொருளாகிவிடும்.  முந்நாள் தலைவர் என்றால் மூன்று நாள் தலைவர் என்ற பொருளாகிவிடும். அதையே முன்னாள் தலைவர் என்று சொன்னால் முன்பு தலைவராக இருந்தார் என்று பொருள்படும்.
  அதே போல் னவும் ணவும்இடம் மாறினால் சில குழப்பங்கள் ஏற்பட்டு பொருள் மாறும்.
  உன் (உன்னுடைய) உண் (சாப்பிடு) ஊன்( உடம்பு) ஊண் (உணவு) மான்( ஒருவிலங்கு) மாண் (மாண்புடைய) தினை( ஒருவகை தானியம்) திணை( ஐந்திணைகள் ஆகிய ஒழுக்கம்)
தன்மை( பண்பு) தண்மை( குளிர்ச்சி) கனி(பழம்) கணி(கணக்கிடு) என பொருள் வேறுபாடு அடையும்.
   இத்தகைய பொருள் வேறுபாடு அடையும் சொற்களை அறிந்துகொண்டால் ஒலிமயக்கமின்றி பேசவும் எழுதவும் முடியும். அடுத்த வாரத்தில் ல-ள-ழ வேறுபாடு பற்றி பார்ப்போம்.

இனி இலக்கியம்.

   சிற்றிலக்கியங்கள் தமிழில் 96 வகைப்படும். பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு கட்டுதல் என்று பொருள். அழகிய சொற்களை கட்டுதல் கவிதை இலக்கியமாயிற்று. இந்த சிற்றிலக்கியங்களில் முத்தொள்ளாயிரம் பாடலை இப்போது பார்ப்போம். சேரன் –சோழன் –பாண்டியன் ஆகிய மூவேந்தர்களை பற்றிய பாடல்கள் இதில் அமைந்துள்ளன. அதில் யானை மறம் என்பது ஒன்று.
  யானையின் வீரத்தை, காதலை, வர்ணிப்பது யானை மறமாகும். பாண்டிய நாட்டு யானையின் மறத்தை இந்த பாடலில் பார்ப்போம்.

     மருப்புஊசி யாக மறங்கனல்வேல் மன்னர்
     உருத்தரு மார்புஓலை யாக – திருத்தக்க
     வையகம் எல்லாம் எமதுஎன்று எழுதுமே
     மொய்யிலைவேல் மாறன் களிறு.


பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தலைநகராகக் கொண்டது. சங்கப்புலவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதும் அழகை பார்த்த பாண்டியனின் படையில் இருந்த யானைகளுக்கும் எழுதும் ஆசை வந்தது. அதுவும் புலவர்களைப் போல கவிதை எழுத ஆசை வந்தது. அவை எப்படி எழுதின? அதற்கு எழுதுகோலாக எதை பயன்படுத்தியது? தம்முடைய தந்தங்களையே எழுதுகோலாக்கிக் கொண்டன. சரி எழுத ஓலை வேண்டுமே? அதற்கு பகைவரின் மார்பினை எடுத்துக் கொண்டன. அதில் அவை என்ன எழுதின தெரியுமா? ‘வையகம் எல்லாம் எமது’ என்று எழுதினவாம்.
  பாண்டியனின் யானைப்படை முன் எத்தகைய ஆற்றலும் வீரமும் மிக்க மன்னராக இருந்தாலும் உயிர் தப்ப முடியாது. பாண்டியரின் யானைகள் எதிரியின் மார்பை பிளந்துவிடும் என்பதையே கவிஞர் இத்தனை கவி நயமாக எடுத்துரைக்கிறார். யானைப்படையின் ஆற்றலால் பாண்டியன் உலகையே தன் ஒரே குடையில் ஆளும் வாய்ப்பைப் பெற்றான் என்று யானையின் வீரத்தையும் பாண்டியனின் வீரத்தையும் சிறப்பிக்கிறது இந்த பாடல்.

மீண்டும் அடுத்த பகுதியில் இன்னும் சிறப்பான தகவல்களோடு சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Saturday, October 26, 2013

பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!

பட்டாசு விளையாட்டு! பாப்பாமலர்!


   தீபாவளி தினம் ராஜேஷ் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தான். காம்பவுண்ட் வாசலில் நின்றுகொண்டு சாலையில் யாராவது போகிறார்களா என்று பார்த்தான். வயதான பெரியவர் ஒருவர் அந்த தெருவழியே வருவதை கவனித்தான்.
    உடனே அவனது முகம் பிரகாசமானது வேகமாக உள்ளே வந்த அவன் கையில் தற்போது ஒரு மிளகாய் வெடி இருந்தது. மற்றொரு கையில் ஒரு ஊதுவத்தி, மீண்டும் வாசலுக்கு வந்து அந்த பெரியவர் இந்த பக்கமாக வருகிறாரா? என்று பார்த்தான். அவர் மெதுவாக ராஜேஷ் வீட்டு வாசலை கடக்கும் சமயமாக கையில் இருந்த மிளகாய் வெடியை கொளுத்திப் போட்டான். அந்த வெடி அவரது அருகில் விழுந்து  ‘டமால்’ என வெடித்து சிதற அந்த பெரியவர் திடுக்கிட்டு போனார். அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் கண்ணில் படாதவாறு ஒளிந்து கொண்டான் ராஜேஷ்.
    சுற்றிலும் யாரும் இல்லை என்று தெரிந்து அவர் பாட்டுக்கு எதையோ முணுமுணுத்து சென்றுவிட்டார் அந்த பெரியவர். ராஜேஷ் அடுத்த இரைக்காக காத்திருந்தான். இப்போது வந்தது ஒரு சின்னவயது பையன் அவன் அருகில் வரும்போது மறைந்திருந்து கொளுத்திப் போட அவன் அலறி அடித்து ஓட வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தான் ராஜேஷ்.
       தீபாவளி நெருங்கியது அடம்பிடித்து நிறைய பட்டாசுகளை வாங்கி குவித்துவிட்டான் ராஜேஷ். ஒரே மகன் என்பதால் அவரது தந்தையும் நிறைய வாங்கி கொடுத்தார். ஆனால் ராஜேஷிற்கு இந்த பட்டாசு விளையாட்டு ரொம்பவே பிடித்துவிட்டது. யார் அருகிலாவது அவர் அறியாமல் பட்டாசை கொளுத்திப் போட்டு அதில் அவர் திடுக்கிட்டு பயப்படும்போது மனதிற்குள் பெரிய ஹீரோவாக நினைத்து சிரித்து மகிழ்வான் ராஜேஷ். பலர் அவனை வாய்க்கு வந்தபடி திட்டி செல்வதை அவன் சட்டை செய்வதே இல்லை! அவர்கள் கண்ணில் படாதவாறு ஒளிந்துகொள்வான்.
     சில சமயம் சிலர் அவனைக் கண்டுபிடித்து திட்டினாலும் அதையெல்லாம் துடைத்து எறிந்துவிட்டான். சிலர் நல்லபடியாக அறிவுரையும் கூறினர். தம்பி! நீ செய்யறது சரியில்லை! யார் மேலயாவது பட்டாசு பட்டு தீக்காயம் ஆச்சின்னா ரொம்ப கஷ்டமாயிரும்! இது கெட்ட விளையாட்டு! சின்ன பிள்ளையாக இருக்கிறயேன்னு விடறவங்க அப்ப சும்மா இருக்க மாட்டாங்க! உனக்கு மட்டும் இல்லே உன் வீட்டுல எல்லாருக்கும் திட்டு விழும்! வேணாம் விட்டுரு! என்று சிலர் சொல்லும் போது நல்ல பிள்ளையாக கேட்டுக் கொள்வான். ஆனால் அவர்கள் அந்த பக்கம் சென்றதுமே இவன் இந்த பக்கம் விளையாட்டை ஆரம்பித்து விடுவான்.
     இப்படி பலரை பயமுறுத்துவதின் மூலம் ஒரு சுகத்தையே அவன் கண்டான். இது விபரீத விளையாட்டு என்பதை அவனது விளையாட்டு மனம் உணரவில்லை! எனவே இந்த விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான். காலையில் அலுவலகம் சென்றுவிடும் அவனது தந்தை இரவில்தான் திரும்புவதால் மகனின் விளையாட்டு அவருக்குத் தெரியவில்லை! அன்று அவர் அலுவலகம் செல்லும் போது வழி மறித்த பெரியவர் ஒருவர், ஏம்பா! உன் பையனை கொஞ்சம் அடக்கிவை! போற வர்றவங்க மேல எல்லாம் பட்டாசு கொளுத்தி போடறான் என்றதும்தான் விசாரித்தார். மகன் செய்யும் தவறு அப்போதுதான் தெரிந்தது அவருக்கு. கண்டிச்சு வைக்கிறேங்க! என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு எப்படி அவனை திருத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
    அன்று  ராஜேஷ் வழக்கம் போல பட்டாசு கொளுத்திப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். தீபாவளி தினம் என்பதால் கூடுதல் உற்சாகம் வேறு. அவன் பட்டாசு வெடியில் பயந்து செல்வோரை பார்த்து இடி இடியென சிரித்துக் கொண்டிருக்கும் போதுதான்  அவனது தந்தை நெற்றியில் கட்டுடன் வந்தார்.
   என்னப்பா! என்னப்பா ஆச்சு! நெத்தியிலே கட்டு போட்டிருக்கீங்க? எப்படி அடிபட்டுச்சு? பதறிப் போய் கேட்டான் ராஜேஷ்.
   பதட்டப் படாதே ராஜேஷ்! சின்ன காயம்தான்!
சின்ன காயமா? நீங்க கீழே விழுந்துட்டீங்களா? எப்படி ஏற்பட்டுச்சு?
   இல்ல ராஜேஷ்! கீழ விழலை! தெருவழியா போயிட்டிருந்தப்ப ஒரு பையன் பட்டாசு கொளுத்தி போட்டுட்டான்! நான் குறுக்கே போயிட்டேன்! அது சரியா என் மேல விழுந்து வெடிச்சது! நல்ல வேளை கண்ணுக்கு ஒண்ணும் பாதிப்பில்லாம போயிருச்சு! இன்னும் கொஞ்சம் கீழே பட்டிருந்தா கண்ணும் போயிருக்கும்!
   பசங்களுக்கு அறிவு வேணாம்! இப்படியா மனுசங்க மேல பட்டாசு கொளுத்தி போடுவானுங்க! நீங்க சும்மாவா வந்தீங்க!
    எதோ சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் சரிவிட்டுத் தள்ளு!
   எப்படிப்பா விட்டு தள்ளுறது! அவன் செஞ்சது நல்ல காரியமா? உங்க கண்ணுல பட்டு கண்பார்வை பாதிப்படைஞ்சிருந்தா என்ன பண்றது பட்டாசுகளை தெருவிலயா கொளுத்திப் போடுவாங்க? அவனை சும்மா விடக்கூடாது! அவனுங்களை சேர்த்து வைச்சு உதைக்கணும் அப்பத்தான் புத்திவரும்!
   சரி ராஜேஷ்! உதைச்சிரலாம்! ஆனா முதல்ல உன்னை என்ன செய்யறதுன்னு நீயே சொல்லிரு!
   என்னப்பா சொல்றீங்க?

  நீ கூடத்தான் தெருவில போற வர்றவங்க பயப்படற மாதிரி பட்டாசு கொளுத்தி போடற?  நம்ம கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு அடுத்தவன் குற்றத்தை எப்படி தட்டிக் கேக்கறது?
   உனக்கொரு நியாயம் அவங்களுக்கு  ஒரு நியாயமா? அப்படி அவங்களை கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கு? உன்னாலே பாதிக்கப்பட்டவங்களும் இப்படிதானே கோபப்பட்டு இருப்பாங்க! அவங்க வசவ தீபாவளி திருநாளில் வாழ்த்தா எடுத்துக்க போறீயா? தந்தையின் கேள்விகள் முள்ளாய் ராஜேஷின் நெஞ்சில் குத்தின.
   தலைகுனிந்து நின்றான் ராஜேஷ். அவன் கண்களில் கண்ணீர்! அப்பா! என்னை மன்னிச்சிருங்கப்பா! இனிமே இந்த பட்டாசு விளையாட்டை விட்டுடறேன்! இது ஒரு போதையா மாறி என் கண்ணையே மறைச்சிருச்சு! தக்க சமயத்திலே உங்களுக்கு பட்ட அடி என் கண்ணை திறந்திருச்சு! இந்த விபரீத விளையாட்டை இதோடவிட்டுடறேன்! என்றான்.
   மாறமாட்டேயே ராஜேஷ்? தந்தை கேட்க! கண்டிப்பா மாறமாட்டேன் அப்பா! இனி பட்டாசோட விளையாட மாட்டேன்! என்றான்.
  அப்ப இந்த நெத்திக் கட்டுக்கு அவசியம் இல்லே! என்று கட்டை அவிழ்த்த தந்தை உன்னை திருத்தத் தான் இந்த நாடகம்! என்றார்.
  அப்பா! நீங்க பெரிய நடிகர்தான்! பிரமாதமாய் நடிச்சு என் தவறை உணர்த்திட்டீங்க! என்று ராஜேஷ் சிரிக்க அவனது தந்தையும் சிரிப்பில் கலந்து கொண்டார்.

நீதி: பட்டாசுகளை தெருவில் கொளுத்தி போடாதீர்கள்! அக்கம் பக்கத்தினரை பாதிக்காத வண்ணம் தீபாவளி கொண்டாடுங்கள்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Friday, October 25, 2013

இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்!

இரண்ய வாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர்!


வைகுண்ட வாசன் ஏழுமலையான் பூலோகத்தில் பக்தர்களுக்கு தமது அருளினை அள்ளித்தர ஆங்காங்கே ஆலயங்களில் குடிகொண்டு அருள்பாலிப்பது வழக்கம். கருணை வடிவான எழுமலையான் ஆலயங்கள் எத்தனையோ பூமியில் அத்தனைக்கும் ஏதாகினும் ஒரு வரலாறு இருக்கும்.
   இது எங்கள் ஊர் அருகில் உள்ள எர்ணவாக்கம் எனும் இரண்யவாக்கம் ஸ்ரீ லஷ்மி நாராயணர் பற்றிய பதிவு.
    எங்கள் வீட்டில் இருந்து பார்த்தாலே இந்த எர்ணவாக்கம் ஊர் தெரியும் மிகச்சிறிய ஊர். சுமார் முப்பது வீடுகள் தான் இருக்கும். ஏழைக் கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் ஊர். இந்த ஊரில்தான் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீ லஷ்மி நாராயணர்.


   மஹாலஷ்மியை தனது இடதுபுறத்தில் தொடையில் அமர்த்தி வைத்தபடி அணைத்தபடி சங்கு சக்கரத்துடன் அபயவரத முத்திரையுடன் காட்சி தருகிறார் இந்த பெருமாள்.
   சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை கொண்டது இந்த ஊர் என்று ஊருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.ஊரும் சிறியது ஆலயமும் சிறியதாக இருந்தாலும் இந்த ஆலயத்தின் வரலாறு பெரியது. இது செவிவழிக் கதையாக கூறப்பட்டுவருவது ஆகும்.
    தன்னுடைய பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை வதம் செய்கிறார் மஹாவிஷ்ணு. இரண்யனை ஆகாயத்திலும் பூமியிலும் கொல்ல முடியாது. இரவிலும் கொல்லமுடியாது பகலிலும் கொல்லமுடியாது. அதனால் பகலும் இரவும் சேரும் வேளையான சந்தியா காலத்தில் வாசற்படியில் வைத்து அவனது மார்பை கிழித்து கொல்கிறார் ஸ்ரீ நரசிம்மர்.

     இரண்யனை கொன்றதும் ஆவேசமாக அலைகிறார். வாயிற்படி மஹாலஷ்மியின் அம்சம். அதன் மீது வைத்து இரண்யனை கொன்றதால் மஹாலஷ்மி அவரிடம் வாசம் செய்யாமல் கோபித்து சென்று விடுகிறார். இதனால் மேலும் ஆவேசம் கொண்டு திரிகிறார் நரசிம்மர். பின்னர் சிவன் சரபேஸ்வர வடிவம் எடுத்து நரசிம்மரின் கோபம் தணிக்கிறார். நரசிம்மர் கோபம் தணிந்ததும் மஹாலஷ்மியை அடைவது எப்படி என்று யோசனை வருகிறது.
    இகணைப்பாக்கத்தில் உள்ள தற்போது நத்தம் எனப்படும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வாலீஸ்வரரை பூஜித்து வழிபடுகிறார். மஹாலஷ்மியும் இந்த தலத்தில் அப்போது கோபித்து வந்து இருந்தார். வாலீஸ்வரரை வழிபட்டு தன்னுடைய தோஷம் நீங்கியதும் மஹாலஷ்மி மீண்டும் விஷ்ணுவை வந்தடைந்தாள்.
    இதனாலேயே இங்கு பெருமாள் ஸ்ரீ லஷ்மியை தனது இடது தொடையில் தாங்கி நிற்கிறார்.

   இரண்யனை வதம் செய்த பெருமாள் வசிக்கும் இடமாததால் இரண்யவாக்கம் என்றழைக்கப்பட்ட கிராமம் இப்போது மறுவி எர்ணவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
   மிகச்சிறிய ஆலயம் கிராமத்தின் தொடக்கத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒருவேளை பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரா பவுர்ணமி அன்று சுவாமி வீதி உலா வருவார்.
  அன்று சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் திரண்டு வருவர். விழா விமரிசியையாக நடைபெறும்.
  இந்த ஆலயத்திற்கு போதுமான வருமானம் இல்லை! கிராம மக்களே முன்வந்து தங்களால் இயன்ற தொகையை போட்டு நிர்வாகம் செய்து வருகின்றனர்.

   ஆலயத்தில் முதலில் உற்சவர் இல்லாது இருந்தது. அந்த சமயத்தில் எனது தந்தையார் சிமெண்ட் கலவையில் விக்கிரகம் செய்து கொடுத்தார் அதைக்கொண்டு உற்சவம் நடைபெற்றுவந்தது. இப்போது பஞ்சலோக உற்சவர் சிலை செய்யப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் அருகே ஓடும் ஒரு மடுவில் பள்ளம் எடுத்தபோது சில சிலைகள் உடைபட்ட நிலையில் கிடைத்தனவாம். அதில் ஒன்றுதான் விநாயகர். இது இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஊரில் அக்ரஹாரம் இருந்ததாகவும் செவிவழிக் கதைகள் உண்டு. மிகச்சிறிய அழகிய கிராமம். அழகான கோயில்.
  

 இந்த சிற்றூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ லஷ்மி நாராயணரை தரிசனம் செய்து ஆனந்த களிப்படைவோம்!
  டிஸ்கி} ஐப்பசி அன்னாபிஷேக பதிவில் எங்கள் ஊர் சிவன் கோயிலில் நடக்கும் அன்னாபிஷேகம் சங்கட நிவாரண ஹோமம் பற்றி கூறுவதாக சொல்லி இருந்தேன்.

    கடந்த வெள்ளியன்று ஸ்ரீ வாலீஸ்வரருக்கு வெகு சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. கிராமமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நண்பர் திரு ஆத்தியப்பன் அன்னாபிஷேக அபிஷேகத்தின் உபயதாரராக இருந்து விழாவினை சிறப்பித்தார். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று கூறியுள்ளார். அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  சென்ற செவ்வாய் கிழமை 22-10-13 அன்று மழை மிரட்டியபோதும் சங்கட நிவாரண ஹோமம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹோமத்தின் இறுதியில் ஸ்ரீ காரிய சித்தி கணபதிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. இந்த இரண்டு விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெற்று அதில் பங்குபெற்றது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
  (ஆலயத்தில் மூலவர் வாலீஸ்வரர் படம் போதிய வெளிச்சம் இன்மையால் சரிவர எடுக்க முடியவில்லை!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Thursday, October 24, 2013

மசாலா டைரக்டர் ஏன் மசாலா படம் எடுப்பதில்லை? ஜோக்ஸ்
1.      என்னப்பா சொல்றே? நம்ம தலைவர் கூட தெருவிளக்குல படிச்சி முன்னேறினவரா? ஆச்சர்யமா இருக்கே?
    ஆமா நைட் லேம்ப்  போஸ்ட்ல  ஏறி பல்பை கழட்டி வித்துட்டு அந்த ரூபாயில் புக் வாங்கி படிச்சாரு!
                         புதுவண்டி ரவீந்திரன்.

2.தாம்பூலப் பை இவ்ளோ பெரிசா இருக்கே/
   மாப்பிள்ளைக்கு தர்பூசணி தோட்டம் நிறைய இருக்காம்!
                         கோவி.கோவன்.

3.நாவலுடன் இஞ்சிமராப்பா இலவசமா?
  கதையை படிச்சி ஜீரணிக்கறதுக்காக தராங்கலாம்!
                     வாசுதேவன்.

4. தரகரே பெண் பார்க்க வர்ற பிள்ளை வீட்டுக்காரங்க எல்லோரும் கையோட ஆளுக்கொரு பேப்பர் நாப்கின் கொண்டுவந்திருக்காங்களே ஏன்?
   பெண் முடிவாகாம அவங்க இந்த அஞ்சு வருசமா எங்கேயும் கையை நனைச்சதே இல்லையாம்!
                          வெ.சீதாராமன்.
5.நம்ம தலைவருக்கு ’மாலைக்கண்’
   அப்படியா எப்போதிலிருந்து?
அவர் தலைவர் ஆனதிலிருந்துதான் தனக்கு யார் யார் எவ்வளவு பெரிய மாலை போடறாங்கன்றதுலே ‘கண்’ணா இருக்காரே!
                   வெ.சீதாராமன்.

6. சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல் ஒண்ணு கிடைக்குமா?
  எதுக்கு?
எங்க ஆபிஸுக்குதான்!
                  வி.சாரதிடேச்சு.

7.அடுத்து என்ன சார் கொண்டுவரட்டும்?
  ஒருபடி அரிசி, அரைப்படி உளுந்து கொண்டு வாங்க மாவாட்ட!
                      வி.சாரதிடேச்சு.

8. உங்களுக்குத்தானே பசின்னு சொல்லி ஓட்டலுக்கு சாப்பிட போனீங்க எனக்கு எதுக்கு பஜ்ஜி பார்சல் வாங்கிட்டு வந்தீங்க?
  கணவனோட கஷ்டத்துல மனைவி பங்கெடுத்துக்கணும்னு நீதானே அடிக்கடி சொல்லுவே சாப்பிடு!
            
        வெ.சீதாராமன்.

9.பொண்ணு என்ன சொல்றா?
  நீங்கதான் பொண்ணை பிடிச்சுபோச்சுன்னு சொல்லிட்டீங்களே அதனாலே இப்பவே மாமியாரோட மாதிரிச்சண்டை போட்டு பார்க்கலாமான்னு கேட்கிறா!
                         வி.சாரதிடேச்சு.

10. ஏன் உங்க டைரக்டர் இப்ப மசாலா படம் எடுக்கிறதில்லை?
   வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்!
                       வெ.சீதாராமன்.

11.தலைவலி, காய்ச்சல், வாந்தி,பேதி, தலைச்சுற்றல் இருமல்,சளி எல்லாம் இருக்கு டாக்டர்!
  அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் எனக்கு கொடுக்கவேண்டிய பீஸ் இருக்கா?
                        கிணத்துகடவு ரவி.

12.டேய் உங்க அப்பா எங்கே?
    ஹோம் ஒர்க் பண்ணிட்டிருக்காரு!
 என்னது உன் வீட்டுப்பாடத்தை அவர் எழுதறாரா?
இல்லே! காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்!
                    வி.சாரதிடேச்சு.

13.உங்களுக்கு திடீர்னு இஞ்சின் டிரைவர் வேலை போயிருச்சாமே ஏன்?
 பனி சார்! பனி!
ஏன்? பனியால என்ன பிரச்சனை?
பனிமூட்டத்துல வழி தெரியலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸை மும்பைக்கு ஓட்டிட்டு போயிட்டேன்!
                        பாஸ்கி

14. டாக்டர் எங்க வீட்டுல நடக்க கூடாததெல்லாம் நடக்குது! எனக்கு மனசே சரியில்லை!
  என்னம்மா சொல்றே? புரியும்படியா சொல்லு!
 என் மாமியார் நடக்கறாங்க!
                     ஆர்.ராஜ்குமார்.

15. எங்க ஆபீஸ்ல மத்தியானத்துக்கு மேல அரைநாள் லீவு யாருக்கும் கொடுக்க மாட்டாங்க!
  ஏன்?
 இதுக்குன்னு ஒருத்தர் முழிச்சிகிட்டு இருந்து லீவு எடுத்தவரை எழுப்பி அனுப்பனுமே!
                        வி.சாரதிடேச்சு.


16. இந்த கண்ணாடி என்ன விலைங்க?
முப்பத்தஞ்சு ரூபாய்
கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!
சொல்றது மட்டும்தான் என் வேலை பார்க்கிறது எல்லாம் உங்க வேலைங்க!
                ஷீபா ஷண்மதி.

17.உங்க அம்மா முடியாம இருந்தாங்களே! என்ன பண்ணினே?
ரப்பர் பேண்ட் வாங்கி கொடுத்தேன்!
                      அருண்

18. எஜுகேஷன் லோன் கொடுத்தோமே உங்க பையன் எப்படி படிக்கிறான்?
   கடனேன்னுதான்!
                           எஸ்.மோகன்.

19. அவங்க அப்பா சாகும்போது சேர்த்து வச்ச பணத்தை அந்த ஆள் ஒரே நாள்ல அழிச்சுட்டாரு!
  ஒரே நாள்லயா?
ஆமாம் அவங்க அப்பா சாகும்போது நூறு ரூபாய்தானே சேர்த்து வச்சிருந்தாரு!
                     வி. சாரதிடேச்சு.

20 என்ன அந்த டாக்டர் எம்.பி.பி.எஸ்னு மட்டும் போட்டுகிட்டு இருக்காரு பேரே போடலியே?
    நான் தான் சொன்னேனே அவர் பேர் போன டாக்டர்னு!
                          வி. சாரதிடேச்சு.

21 ஆளுக்கொரு விலங்கு முகமுடி மாட்டிகிட்டு எங்க கிளம்பிட்டீங்க?
 கோயிலுக்குத்தான் கால்நடையா வர்றதா வேண்டிகிட்டோம்!
                           நிலா.

22. உன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட தனியா பேசனும்னு கூட்டிக்கிட்டு போனாரே என்ன கேட்டார்?
 சமையல்ல உப்பு முன்ன பின்ன இருந்தா சத்தம் போடாம அட்ஜஸ்ட் பண்ணிப்பியான்னு கேட்டார்.
                        எஸ்.எஸ் பூங்கதிர்.

நன்றி: ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Related Posts Plugin for WordPress, Blogger...