Monday, September 30, 2013

புகைப்பட ஹைக்கூ 51

 புகைப்பட ஹைக்கூ 51


  வரவில்லை தண்ணீர்
  வந்தது
  கண்ணீர்!

  மது ஓடும் நாட்டில்
  மனிதனுக்கு இல்லை
  தண்ணீர்!

  புனிதநீர் ஆனது
  கழிவு நீர்!
  இல்லை தண்ணீர்!

   தாகம் அறியவில்லை
   தண்ணீரின்
   குணம்!

   குணம் கெட்டதும்
    குடிநீரானது
  கழிவு நீர்!

  விலை போன தண்ணீர்
  வீதியில் திரிவோருக்கு
  கழிவு நீர்!

  திக்கெட்டும் அம்மாவாட்டர்!
  திக்கற்றவர்களுக்கு
  டிரைனேஜ் வாட்டர்!

  தணியாத தாகம்!
  தரம் அறியா
  சோகம்!

  கழிக்கப்பட்டவர்கள்
  நாடுகிறார்கள்
  கழிவை!

  வீதிக்கு வீதி டாஸ்மாக்!
  தொலைந்துபோனது தெருக்குழாய்!
  ஆட்சிக்கு இல்லை பாஸ்மார்க்!

   மிளிரும் தமிழகத்தின்
   ஒளிந்த
   பக்கங்கள்!
   
     தெருவோர மக்களின்
     தீர்த்தமானது
     சாக்கடை!

   விலை போன குடிநீர்
   வீழ்ந்து போன மனிதம்!
   உயர்ந்தது கழிவுநீர்!


    சித்தம் கலங்கியதால்
    நித்தம் அருந்துகிறார்கள்
    கழிவுநீர்!

    காட்சி எடுத்தவர்க்கு
    உள்ளதோ
    மனசாட்சி!

   கலங்க வைத்த காட்சி!
   யாருக்கும் இல்லை
   மனசாட்சி!

   சுகாதாரம் மறந்தது
   சுற்றித் திரிந்த
   தாகம்!

   நிலை மறந்ததால்
   அறியவில்லை
   நீரின் நிலை!

   வறுமையின் கொடுமை!
   மாறுமா நிலைமை!
   குடிநீரான கழிவு நீர்!

   நிறம் மாறிய
   நீர்நிலைகள்!
   நிலைமாறிய மக்கள்!

  வற்றிய ஈரம்!
 தேற்றியது தாகம்!
  குடிநீரான கழிவுநீர்!

  குளங்கள் தூர்ந்ததால்
  களம் புகுந்ததோ
  கழிவு நீர்!
 

ஈரோடு மருத்துவமனை அருகில் இப்படி கழிவு நீரை அருந்துகிறார்கள் என்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது தினமலர். மினரல் வாட்டர் விற்கும் அரசுக்கு இதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது. ஆனால் புகைப்படம் எடுத்தவர் தொழில் பக்தியை விடுத்து கழிவு நீர் அருந்துவதை தடுத்து நல்ல குடிநீர் வாங்கி தந்து இருக்கலாம் அல்லவா? எல்லாவற்றையும் செய்தியாக்குவதை விட கொஞ்சம் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளலாம் அல்லவா?

Sunday, September 29, 2013

ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவக் குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் ஜெயலட்சுமி டீச்சர்.
''மிகப்பெரிய மீனவ கிராமமான இந்த பழையாரில் மக்களுக்கு படிப்பு மேல் ஆர்வமே கிடையாது. ஆணும் பெண்ணும் கடலுக்கு போயிருவாங்க. கடலுக்கு போக ஆளு வேணுமேங்கிறதுக்காக நிறைய புள்ளைங்கள பெத்துக்குவாங்க. ஆனா, படிக்க வைக்கமாட்டாங்க. பிழைப்புத்தான் அவர்களுக்கு பிரதானம். படிப்பு ரெண்டாம்பட்சம்தான். போன வருஷம் வரைக்கும் இதுதான் நிலைமை. ஆனா, இந்த வருஷம் ஒன்றாம் வகுப்பில் சாரை சாரையாய் பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்த்தி ருக்கிறார்கள். காரணம் படிப்பு மீது அவர்களுக்கு வந்திருக்கும் ஆர்வம். அதற்கு காரணம் எங்க ஜெயா டீச்சர்” பெருமிதத்துடன் சொல்கிகிறார் பள்ளித் தலைமையாசிரியர் மஞ்சுளா.
அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ஜெயலட்சுமி டீச்சர்? அவரிடமே கேட்கலாம்..
''புள்ளைங்கள பள்ளிக்கு அனுப்புறதுல இங்குள்ள மக்களுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சுது. அந்த மனப்பான்மையை உடைக்கணும்னு நெனச்சேன். அதுக்காக மீனவ மக்களை முடிஞ்சவரைக்கும் சந்திச்சுப் பேசி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புரிய வச்சேன். அப்படி போற நேரங்கள்ல அவங்க வீட்டு சின்னப் புள்ளைங்ககிட்ட பரிவு காட்டிப் பேசுவேன். புள்ளைங்களுக்கு என்னை ரொம்ப புடிச்சுப் போச்சு. டீச்சர்.. டீச்சர்னு சுத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியே அவங்கள பள்ளிக்கூடத்துக்கு இழுத்து வந்துட்டேன். பெத்தவங்களும் சந்தோஷமா வந்து அட்மிஷன் போட்டுட்டு போனாங்க.
ஆசிரியர்னா கையில பிரம்பு வைச்சிருப்பாங்க; சேட்டை பண்ணுனா வலிக்க புடைக்க அடிப்பாங்கன்ற நினைப்பை முதலில் தவிடுபொடி ஆக்கினேன். குழந்தைங்களோட உக்காந்து பேசி, அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளுக்கு எல்லாம் காதுகுடுத்து அவங்களுக்கு என் மீது நம்பிக்கை வர வச்சேன். இதெல்லாம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆசிரியர்தான் பிள்ளைங்கள அடிப்பார்னு கேள்விப்பட்டுருப்பீங்க. என்னோட பிள்ளைங்க, ‘போங்க டீச்சர்’னு எத்தன தடவ என்னை செல்லமா முதுகுல தட்டிட்டு போயிருக்குங்க தெரியுமா?
பள்ளிக்கூடத்துல பாடம் படிக்கிறோம்கிற பயம் இல்லாத வகையில அந்தப் புள்ளைங்களுக்கு அத்தனையையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். பிள்ளைங்களை ’போங்க வாங்க’ன்னு மரியாதையாத்தான் அழைப்பேன். எதுவா இருந்தாலும் எங்கிட்ட பகிர்ந்துக்கிற பக்குவத்தை பிள்ளைங்களுக்கு வளர்த்திருக்கேன். என் அன்பையும் அரவணைப்பையும் புரிஞ்சுக்கிட்டதால இந்தப் புள்ளைங்க ஒருநாள்கூட பள்ளிக்கு வராம இருந்ததில்லை. அவங்களோட நடத்தை மாற்றத்தையும் ஒழுக்கத்தையும் தெரிஞ்சுக்கிட்ட பெற்றோர்கள் பிள்ளைங்கள ஒருநாள் கூட வீட்டுல வைச்சுக்காம பள்ளிக்கு அனுப்பிவைச்சிடுறாங்க.
இன்னொரு முக்கியமான விஷயம், சுகாதார மாற்றம். குளிக்காம, தலைசீவாம அப்படியே வந்துக்கிட்டிருந்த பிள்ளைகளுக்கு சுத்தமும் சுகாதாரமும் எவ்வளவு முக்கியம்னு அக்கறையோடு எடுத்துச் சொன்னேன். அதையும் புரிஞ்சிக்கிட்டு அழகா ஆரோக்கியமா மாறிட்டாங்க’’
வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாய் சொன்னார் ஜெயலட்சுமி டீச்சர்.
ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது நாற்பது ஆங்கில ரைம்ஸ்களை ஆட்டம் பாட்டத்துடன் ஒப்பிக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை உற்சாகத்துடன் பாடுகிறார்கள். ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் போடும் உத்தரவுகளை அழகாய் புரிந்து கொள்கிறார்கள். ஐம்பதிலிருந்து நூறு ஆங்கில வார்த்தைகளுக்கு அழகுத் தமிழில் அர்த்தம் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட, நாள் முழுவதும் உற்சாகம் குறையாமல் இருக்கிறார்கள். இவை எல்லாம் ஜெயலட்சுமி டீச்சரால் இந்தப் பள்ளி கண்ட பலன்கள்.
'’தனியார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் சளைக்கமாட்டார்கள் என் மாணவர்கள். அவர்களைவிட கூடுதலாகவே இவர்களுக்கு கல்வி அறிவு இருக்கும்’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி டீச்சர், எல்லா பாடங்களையும் செயல்முறையோடுதான் நடத்துகிறார். செயல்வழிக் கற்றலில் இன்று என்னென்ன தொழில்நுட்பங்கள் வந்திருக்கிறதோ அத்தனையையும் வாங்கிப் பார்த்து அதில் இருப்பவற்றை உடனே வகுப்பறையில் செயல்படுத்திவிடுகிறார்.
இவர் பாடம் நடத்தும் முறையைப் பார்த்து வியந்த முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் அதை வீடியோ படமாக்கி மாவட்டம் முழுவதுமுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கே வந்து ஜெயலட்சுமியின் வகுப்பறை உத்திகளை கவனித்துக் கொண்டு போய் தங்கள் வகுப்பறையில் செயல்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படி, மாவட்டத்திலேயே முன்னுதாரண ஆசிரியராக இருக்கும் ஜெயலட்சுமி டீச்சருக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பழையாரில் தங்கியிருந்து சாதனையை தொடர்கிறார்.
தங்கள் பிள்ளைகள் கட்டுச் செட்டாய் பாடம் படிக்கும் அழகை பழையார் கிராமத்து மக்கள் தினம் தினம் வந்து பார்த்து ரசித்துவிட்டுப் போகிறார்கள். ''படிச்சு என்ன பண்ணப்போவுதுங்க, பாடு பார்க்கிற வயசு வர வரைக்கும் இருந்துட்டு அப்புறம் பாடுக்கு போவட்டும்னுதான் நெனைச்சிருந்தோம். ஆனா இப்ப, எங்கவூட்டு புள்ளைங்க அழகா துணி மணி உடுத்துறதும் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஸ்ல பேசுறதும் ரொம்ப அழகா இருக்கு. புள்ளைங்கள படிக்க வைக்கணும்கிற ஆசை எங்களுக்கும் பள்ளிக்குப் போகணும்கிற ஆர்வம் அதுகளுக்கும் இப்பத்தான் வந்திருக்கு” என்கிறார் பழையாரைச் சேர்ந்த அமிர்தவள்ளி.
படம் எடுப்பதற்காக ஜெயலட்சுமி டீச்சரை தனியாக அழைத்தால், அவரை விடாமல் கையை பிடித்துக் கொண்டு கூடவே சங்கிலித் தொடராய் வருகிறார்கள் அந்தக் குழந்தைகள். தள்ளிப் போகச் சொன்னால் டீச்சரிடம் செல்லமாய் கோபிக்கிறார்கள். அவர் சமாதானம் சொன்னதும், ஓடிவந்து முகம் தடவி தலை கலைக்கிறார்கள் அந்தப் பிஞ்சு மக்கள். திடீரென டீச்சரை சுற்றி நின்று ஆட்டம் ஆடுகிறார்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தாயின் கருவில் இருக்கும் தலைச்சன் பிள்ளையைப் போல் நிம்மதியாய் இருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்.

Thursday, September 26, 2013

நர்ஸுக்கு லவ்லெட்டர் கொடுக்கும் போது பண்ணக்கூடாத தப்பு! எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்!

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் பகுதி 2


1.      நம்ம மாநிலத்துல அச்சடிச்ச கள்ளநோட்டுன்னு எப்படி சொல்ற?
அதுல ரிசர்வ் பேங்க் ஆப் தமிழ்நாடுன்னு போட்டிருக்கே!

2.      என் மூளைக்கு இரத்தம் மத்தவங்களை விட வேகமா போகுதாம்!
இதுல என்னடா ஆச்சர்யம்? திரவப்பொருட்கள் எப்பவும் வெற்றிடத்தை நோக்கித்தானே போகும்!

3.      டார்லிங்! நாளைக்கு நம்ம வெட்டிங்க் டே! இதுவரைக்கும் நான் போகாத இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா?
வாடி! செல்லம்! கிச்சனுக்கு போகலாம்!

4.      பசங்களா நீங்க எல்லோரும் நல்லா படிச்சு நம்ம நாட்டுக்கு நல்லப்பேரு வாங்கித்தரனும்!
ஏன் இந்தியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு!

5.      தரகரே பொண்ணு குயில் மாதிரி பாடுவான்னு சொன்னீங்க ஆனா நாங்க பாடச்சொன்னதும் கொல்லைப்பக்கம் ஓடிட்டாளே!
இருங்க! அவசரப்பட்டா எப்படி? கொல்லையில போயி மரத்துல ஏறி உட்கார்ந்துட்டு பாடுவா!


6.      எதிரிகள் வெட்டிய குழியில் மன்னர் எப்படி சிக்கினார்?
படுக்கை வசதிகளுடன் கூடிய அழகிய பதுங்குக் குழின்னு போர்டு வச்சிருந்துதாம்!

7.      அமெரிக்கன்: நாங்க இ-மெயில்ல லவ் பண்ணுவோம்!
    இந்தியன்: நாங்க ஃபீமேலதான் லவ் பண்ணுவோம்!

8.      பேங்க்ல பணம் எடுக்க போன போது ஷாக் அடிச்சுடுச்சாம்?
ஏன்?
அவர் கரண்ட் அக்கவுண்ட்ல இல்ல பணம் எடுக்க போனாரு!

9.      மச்சி எனக்கும் என் லவ்வருக்கும் கல்யாணம்டா!
ரொம்ப சந்தோஷம்! எப்படா கல்யாணம்?
எனக்கு ஆகஸ்ட் 18, அவளுக்கு ஆகஸ்ட் 28.

10.  இண்டர்வியுவில்: வாட் இஸ் மைக்ரோ சாப்ட் எக்ஸல்?
இது நியு ப்ராண்ட் ஆஃப் சர்ப் எக்ஸெல் டு கிளின் த கம்ப்யூட்டர்!

11.  என்ன சார்! கார் ஆயில் டேங்கை ஓப்பன் பண்ணிட்டு சிரிக்கறீங்க?
ஒண்ணுமில்ல மனசு விட்டு சிரிச்சா ஆயில் கூடும்னு சொன்னாங்க அதான்!

12.  நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சுடி?
ஏன்?
இப்பத்தான் திருக்குறளை போர்டுல எழுதிட்டு திருக்குறள் எழுதினது யாருன்னு கேட்கிறாங்களே!


13.  நர்ஸுக்கு லவ் லெட்டர் கொடுக்கறப்போ ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேண்டா!
என்ன பண்ணே!
ஐ லவ் யூ சிஸ்டர்னு எழுதிட்டேன்டா!

14.  எங்க ஊர்ல நேத்திக்கு அடை மழை!
அப்படியா! ஆளுக்கு எத்தனை சாப்பிட்டீங்க!
15.  மாம்பழம் ஆரஞ்சு,வாழைப்பழம், திராட்சை ஆப்பிள், இதுல எது ஸ்வீட் சொல்லுங்க?
 தெரியலையே!
  ஐயோ! இது எதுவுமே ஸ்விட் இல்ல! ஃபுருட் தாங்க!

16.  ஏம்பா! காபி ஆர்டர் பண்ணா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கறே!
நீங்கதானே சார்! கப் கிளீனா இருக்கணும்னு சொன்னீங்க!

17.  பாட்டி கொஞ்சம் கண்ணை மூடிக்கோயேன்!
எதுக்குடா?
நீ கண்ணை மூடினா நிறைய பணம் கிடைக்கும்னு அம்மா சொன்னாளே!

18.  நல்ல பையனுக்கும் டைனோசர்ஸுக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
இரண்டுமே இப்ப இல்ல! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அழிஞ்சு போச்சு!


19.  நம்ம நட்பு வெங்காயம் மாதிரி!
எப்படி?
கட் பண்ணி பாரு! கண்ணு கலங்கும்!

20.  டேய் எங்கடா போறே!
அரிசி மாவு திரிக்கப் போறேன்!
அதுக்கு ஏன் ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே?
அம்மாதான் நைஸா அரைச்சுட்டு வரச் சொன்னாங்க!

21.  டீச்சர்: காம்பவுண்ட் செண்டன்ஸுக்கு ஒரு எக்ஸாம்பிள் சொல்லு!
ஸ்டூடண்ட்ஸ்: இங்கே நோட்டீஸ் ஒட்டக்கூடாது.
22.  இன்னிக்கு மூணு மணிக்கு பலத்த மழை பெய்யுமாம் ரேடியோவில சொன்னாங்க!
நீங்க கேட்டீங்களா?
நான் கேட்கலை! அவங்களா சொன்னாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Wednesday, September 25, 2013

மனைவிக்கு பயந்த ஓபாமா! கதம்ப சோறு! பகுதி 6

கதம்ப சோறு பகுதி 6

மொள்ளமாரி அரசியல்வாதிகளுக்கு முகம் இழக்கும் சட்டம்:

       தண்டணை பெறும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சுப்ரீம் கோர்ட் ஓர் உத்தரவை பிறப்பித்தது. கிரிமினல் வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டு தண்டணை விதிக்கப்பட்ட எம்.பிக்கள் எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படவேண்டும். தண்டணை அறிவிக்கப்பட்டதுமே அவர்களின் பதவியை பறிக்கலாம். குற்றப்பின்னணி உடையவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்பிரிவு8, துணைப்பிரிவு 4 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பொறுக்குமா நம்ம மொள்ள மாரிகளுக்கு! இந்த உத்தரவு அவர்களின் அடிவயிற்றை கலக்க இந்த உத்தரவை செல்லாதது ஆக்க துரிதமாக பணிகள் நடந்தன. இதனால் குற்ற பின்னணி உள்ள அரசியல்வாதிகளை காப்பாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டத்தை தயாரித்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது. அவர்களும் ஒப்புதல் அளித்துவிட்டார்கள் எல்லோரும் கூட்டு களவாணி பயலுவதானே! இப்போது இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் தந்துவிடுவார் பின்னே?? அதுக்குத்தானே அவர் ஜனாதிபதி ஆகியுள்ளார். இந்த புதிய சட்டத்தினால் கிரிமினல் வழக்குகளில்  தண்டணை பெற்ற பிரதிநிதிகள் தங்கள் தண்டணையை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்திருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது. தண்டணையை எதிர்த்து தடை உத்தரவு பெற்றிருந்தாலும் பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் ஜாலியாக சபைக்கு வந்து போகலாம். சம்பளம் மட்டும் கிடைக்காது! அதான் கிம்பளம் நிறைய வருமே! அது போதாதா? எப்படி போகுது பாருங்க நம்ம நாட்டோட நிலைமை!
ஒரு புள்ளி விவரம் தெரிஞ்சுக்குங்க! லோக்சபாவில் உள்ள 543 எம்பிக்களில் 162 பேர் மீது பல்வேறு கோர்ட்டுக்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன.
இந்த 162 பேரில் 76 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்கள்4032 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த லட்சணத்தில் சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தத்திற்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துவிட்டாராம்!
   எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!

அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாலும் வீட்டுல பூனைதான்!   வெளியே சமுகத்தில் பெரிய பந்தாவாக பலரை மிரட்டி வேலை வாங்கும் சிலர் வீட்டுல பூனையாக இருப்பார்கள். இந்த வகையில் நம்ம ஒபாமாவும் விதிவிலக்கு அல்ல! அமெரிக்க ஜனாதிபதியா இருந்தாலும் ஐயா செல்வாக்கு எல்லாம் வெளியிலதானாம். வீட்டுல அம்மா தர்பார்தான் நடக்குமாம்.
  மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டதாக பராக் ஒபாமா தெரிவித்து உள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா அதிகாரி ஒருவர் சிகரெட் வேண்டுமா என்று கேட்டபோதுதான் இதை  தெரிவித்துள்ளார் ஒபாமா.
   நான் ஆறு ஆண்டுகளாக சிகரெட் பிடிப்பது இல்லை! மனைவிக்கு பயந்து புகைபிடிப்பதை விட்டுவிட்டேன்! என்று தயக்கமின்றி கூறியுள்ளார். அதிபரான புதிதில் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்தார். இது செய்தியாக வர இது என் தந்தையிடம் இருந்து தொடர்ந்த பழக்கம் என்றார் ஒபாமா.
  ஒபாமாவின் மனைவி மிச்சல் உடல் பருமனை குறைக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்காக அவர் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து உடல் நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த விஷயத்தில் நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால் ஒபாமா புகைப்பழக்கத்தை கைவிட்டுள்ளார்.
   நம்மூர் அரசியல்வாதிகளை நினைச்சு பெருமூச்சுத்தான் விட்டுக்கணும்!

இலங்கை தேர்தலில் தமிழ் அமைப்பு வெற்றி!


  இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கை சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி விக்ணேஷ்வரன் மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை இந்த அமைப்பு கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை தமிழர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
  தமிழர்களுக்கு உரிய அதிகாரம் சட்ட ரீதியாக கிடைக்க விரும்பும் விக்னேஷ்வரனின் முயற்சிகள் இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் இந்த எழுச்சி ராஜபக்‌ஷேவிற்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. நீண்ட நாளுக்குப் பின் தமிழர்களுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நீடித்து அவர்கள் வாழ்வை இனிக்க செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

மலிவு விலை அங்காடிகள்!    தமிழகத்தை பிடித்த இந்த தொற்று நோய் டில்லியையும் தாக்கியுள்ளது. டில்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் டில்லியில் சில இடங்களில் மலிவு விலை நடமாடும் அங்காடிகளை திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த இந்த மாதிரி உருப்படியில்லாத விசயங்களில் நேரத்தை செலவிட்டு மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்வதில் அம்மாவுக்கு நிகர் யாரும் கிடையாது. சில மாதங்களுக்கு முன் காய்கறி விலைகள் உச்சத்தில் இருந்த போது சில மலிவு விலை காய்கறி கடைகளை திறப்பதாக கூறி அது கானல் நீராகிவிட்டது. அந்த கடைகளில் இப்போது விற்பனை இல்லை! பல இடங்களில் அந்தகடைகள் பரவவும் இல்லை! சீப் பப்ளிசிட்டி பிரியரான ஷீலா தீக்‌ஷித்தும் இந்த மாதிரி காய்கறி கடைகளை டில்லியில் சில இடங்களில் திறந்துள்ளார். இதனால் மக்களுக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை! விலைவாசி எதனால் உயர்கிறது! அதை அறிந்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் தானே வியாபாரத்தில் இறங்கும் இந்த மாதிரி கேவலமான ஐடியாக்களை எந்த சிகாமணிகள் அம்மணிகளுக்கு வழங்கினரோ தெரியவில்லை! பாவம் மக்கள்!

15வதுமனைவியை தேர்வு செய்த சுவாசிலாந்து மன்னர்!

    பெண்ணுரிமை இயக்கங்கள் எவ்வளவோ போராடியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேலாடையின்றி பெண்களை நிற்க வைத்து தன்னுடைய பதினைந்தாவது மனைவியை தேர்வு செய்துள்ளார் சுவாசிலாந்து மன்னர் எம்ஸ்வாட்டி வயது 45.
   இந்த நாட்டு பாரம்பர்யப்படி மன்னராக பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும். மன்னர் புதிய மனைவியை தேர்வு செய்வதற்காக நாணல் புல் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான கன்னிப் பெண்கள் மேலாடை அணியாமல் நாணல் புற்களை ஏந்தி மன்னர் முன் நடனமாடி அணிவகுத்துச் செல்வர். அதில் ஒருவரை மன்னர் தேர்வு செய்து அந்த பெண்ணின் தலையில் சிவப்பு இறகை செருகி மனைவியாக்கி கொள்வார். இந்த செயலுக்கு எதிர்கட்சிகளும் பெண்ணுரிமை அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் கண்டுகொள்ளவில்லை மன்னர். இதுவரை 14 மனைவிகள் மூலம் 24 குழந்தைகள் அவருக்கு உள்ளனர். இவரது செக்ஸ் தொல்லை தாளாமல் மூன்று மனைவிகள் ஓடிவிட்டனராம். இருந்தும் சளைக்காமல் 15வது மனைவியை தேர்வு செய்துள்ளார் மன்னர்.

ஆன் லைனில் வாக்காளர் பெயர் சேர்ப்பு!


   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி தாலுக்கா அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை! இணையதளம் மூலம் ஆன் லைனில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நடைமுறையை இரண்டு ஆண்டுகளாக தமிழகம் அமல் படுத்தியும் மக்களிடையே ஆர்வம் குறைவாக இருந்தது. இதற்கு காரணம் பெரும்பாலான வீடுகளில் இணைய தள வசதி இல்லாதது காரணமாக இருந்தது.
  இந்த குறையை போக்க நாட்டில் முதல் முறையாக 944 இணையதள மையங்களுடன் தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.இதற்கு அடையாள அட்டை எதுவும் தேவையில்லை! வாக்காளர் சரிபார்ப்புக்கு அதிகாரிகள் வரும்போது சான்று காட்டினால் போதுமானது. சென்னையில் 84 இணையதள பயிற்சியாளர்களுக்கு மாநாகராட்சி கட்டிடத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆன் – லைனில் விண்ணப்பித்த 40 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும்.

பார்வையற்றோர் போராட்டமும் அம்மாவின் பாரமுகமும்!


   ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்றோர் போராடி வருகின்றனர். உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் குதித்துள்ள இவர்களை அரசு நடத்தும் விதம் சரியானதாக இல்லை! மாற்றுத் திறனாளிகளான இவர்களின் குறைகளை சற்றும் செவி கொடுக்காமல் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி அப்புறப் படுத்துவதிலேயே அரசு குறியாக உள்ளது. இந்த பிரச்சனையில் முதல்வரும் கண்டும் காணாமலும் உள்ளார்.இந்த போராட்டத்தினால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொஞ்சமாவது இரக்கம் காட்டி இவர்களின் சில குறைகளை அரசு நிவர்த்தி செய்து இருக்கலாம்! இதெல்லாம் அம்மாவுக்கு நினைவு இல்லை! சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்றுவிட்டார். என்ன செய்வது? விழியிழந்தோர் வழி தெரியாது தவிக்கின்றனர்!

டிப்ஸ்! டிப்ஸ்!


குழந்தை வளர்ப்பு பற்றி பெண்கள் மலரில் நித்யா குணசேகரன் எழுதி இருந்த சில தகவல்களை பகிர்கிறேன்!
  வீட்டில் அனைவரும் விரும்பும் உணவைத் தேர்ந்தெடுத்து அவற்றில் குழந்தைகள் விரும்பாத ஓரிரு உணவையும் சேர்த்துவிடுங்கள் இதனால் அவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் சாப்பிட்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களுக்கு பிடிக்காத உணவை சாப்பிட கட்டாயப்படுத்த கூடாது.

குழந்தைகள் உணவுடன் விளையாட ஆரம்பித்தால் சத்தம் போடாமல் தட்டை எடுத்து விட வேண்டும்.

உணவு உண்ணும் நேரத்தை கல கலப்பாக வைத்திருக்க குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஊட்டவோ சாப்பிடவோ வைக்க வேண்டும்.

உணவு நேரங்களை ஒட்டி நொறுக்குத்தீனிகள், பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நல்ல பசி ஏற்பட்டு சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் குறைந்தது ஒரு வகையாவது அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.

உணவுக்கு பதிலாக பால் என்னும் பழக்கத்தை மாற்ற வேண்டும். இது நல்ல உணவுப் பழக்கம் இல்லை! அதை தவிர்க்க வேண்டும்.

ஓநாயிடம் கற்ற பாடம்! குட்டிக்கதை!
   


   ஒரு காட்டில் சிங்கம், ஓநாய், நரி மூன்றும்  நண்பர்களாக இருந்தன. வேட்டையில் எது  கிடைத்தாலும் மூவரும் பங்கிட்டுக் கொள்வது என்று முடிவு செய்தன. மூவரும் ஒன்றாக வேட்டைக்குச் சென்றன. மான் ஒன்றை  அடித்துக் கொன்றது சிங்கம். ஓநாயே இந்த மானை மூன்று பங்காக பிரி என்றது சிங்கம்.
   மூன்று சமமான பங்குகளாக பிரித்தது ஓநாய்.
இதைப்பார்த்து கோபம் கொண்டு ஓநாய் மீது பாய்ந்தது சிங்கம், நீயும் நானும் சமமா? என்ன பங்கு பிரித்து வைத்திருக்கிறாய் நீ? என்று ஓநாயைக் கொன்று போட்டது.
   இப்போது நரியிடம் பாகம் பிரிக்க சொன்னது.
நரி சிறு துண்டு இறைச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை சிங்கத்திடம் தந்தது. மகிழ்ச்சி அடைந்த சிங்கம், நரியே! இந்த அளவு நியாயமாக பங்கிடும் முறையை நீ எங்கு கற்றாய்? என்று கேட்டது.
   சற்று முன் தான் ஓநாயிடம் கற்றேன் நண்பா! வலிமை உள்ளவர் பக்கமே நியாயம் உள்ளது என்ற பெரிய பாடத்தை இறந்து போன இந்த ஓநாய் தான் கற்றுக் கொடுத்தது என்றது நரி பணிவாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Tuesday, September 24, 2013

தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!

தல தோனியின் வித விதமான தலை அலங்காரம்!


மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட்டில் அடிஎடுத்து வைத்தபின் அவரது வித்தியாசமான கிரிக்கெட் ஷாட்டுக்கள் போல அவரது வித்தியாசமான தலை அலங்காரங்களும் பேசப்படுகின்றன.


   கூல் கேப்டன் தோனியின் தலை அலங்காரங்கள் அவருக்கு அழகுதான் சேர்க்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த புதிதில் நீண்ட கூந்தலுடன் விக்கெட் பின்புறம் நின்று அவர் கீப்பிங் செய்த விதமும் அடிக்கடி கிளவுஸை கழட்டி மாட்டி ஹெலிக்காப்டர் ஷாட் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததும் கொள்ளை அழகு. இவரது ஸ்டைலை அவரது தீவிர ரசிகர்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.

   கொஞ்சம் வளர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ஆனபோது தனது நீண்ட கூந்தலுக்கு விடை கொடுத்தார் தோனி. கொஞ்சம் ஒட்ட வெட்டிய கிராப் வைத்தார்.  அப்புறம் செண்ட்ரல் ஸ்பைக்கோ என்னமோ வைத்தார்.  அவர் ஒவ்வொரு முறை முடி அலங்காரம் செய்ய ராஞ்சியில் உள்ள முடி திருத்தகம் செல்லும் போதும் கூட்டம் அலை மோதுமாம். அவரது ஸ்டைலை நிறைய பேர் ரசித்தார்கள் விரும்பினார்கள்.
   உலக கோப்பை ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்டைலில் இருந்தவர். வென்றதும் மொட்டை அடித்து அதிர்ச்சி கொடுத்தார். சென்ற ஐபிஎல் தொடரில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தார் தோனி. இவரைப் பார்த்துதானோ என்னவோ சச்சின் கூட கொஞ்சம் நீளமாக முடி வளர்க்க ஆரம்பித்தார்.

  வித விதமாய் அலங்காரம் செய்து கொள்ளும் தோனி தற்போது ஒரு வித்தியாசமாக கீரிப்புள்ள ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து கொண்டு சாம்பியன்ஸ் லீக் கில் கலந்து கொண்டு உள்ளார்.

    தலையின் இருபுறமும் மழித்து நடுவில் மட்டும் கீரிப்புள்ள மாதிரி முடிவளர்ப்பதுதான் இந்த ஸ்டைல்!
   ம்...! பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடறான்! நாம எல்லாம்! பெருமூச்சுதான் விடனும்!
 டிஸ்கி: என்ன இருந்தாலும் இந்த கீரிப்புள்ள ஸ்டைல் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை! உங்களுக்கு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


துரத்தும் நிழல்! பகுதி 1

துரத்தும் நிழல்!   பகுதி 1


அன்று தை கிருத்திகை தினம்! ஆண்டார்குப்பம் முருகர் ஆலயத்தில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. அந்த பகுதியில் அது பிரசித்தி பெற்ற ஒரு வழிபாட்டுத்தலம். சுற்றுவட்டார மக்களின் கவலைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார் அந்த பால முருகன்.
    வைத்தியநாத குருக்கள் வரும் சேவார்த்திகளின் தேங்காய் பழத்தட்டுக்களை வாங்கி அர்ச்சணை செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை! 30ஐ கூடத்தொடாத வயது. குள்ளமான உருவம் ஒல்லியான தேகம். பிராமணர்களில் சற்று வித்தியாசமாக கருப்பு தேகம்! மந்திரம் மட்டும் கணீர் என ஒலித்தது அவரது வாயிலிருந்து. அந்த கோவிலில் கிருத்திகை தோறும் சென்று பணியாற்றுவதால் மக்கள் அவரிடம் நல்ல அபிமானம் வைத்திருந்தனர்.
    மற்ற குருக்கள்கள் இருந்த போதும் அவரிடம் தேடிவந்து அர்ச்சனை செய்துகொண்டு போயினர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் முடிந்து இருந்தது. இளம் மனைவி கைக்குழந்தையோடு வீட்டில் காத்திருப்பாள் இரவாகிவிட்டது. வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு உதித்த போது மணி இரவு 9ஐ கடந்து விட்டிருந்தது.
   அவரது வீடான பாக்கம் செல்ல அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். இந்த கதை நடக்கும் சமயத்தில் வாகன வசதிகள் குறைவு. இந்த காலமென்றால் நொடிக்கு ஒரு பேருந்து கிடைக்கும். அன்று மணிக்கொரு பேருந்து வருவதே அபூர்வம். அதுவும் வைத்தியநாதனின் ஊரோ ஓர் குக்கிராமம். அங்கு செல்ல பஸ் ஏதும் கிடையாது.
   முருகன் கோயில் தலைமை குருக்கள் வைத்திய நாதனுக்கு ஒரு வகையில் சொந்தம் தான். இவருடைய அத்தையை அவர் மணந்து இருந்தார். வைத்திய நாதன் அவரிடம் சென்று மாமா! போயிட்டு வரென்! ஆத்துல அவ தனியா இருப்பா! என்றார்.
   தலைமை குருக்களும் சரி! பத்திரமா பாத்து போயிட்டுவாடா! சைக்கிள்ள டைனமோ  இருக்கோல்லியோ? என்றார்.
  அதெல்லாம் இருக்கு மாமா! நீங்க கவலைப்படாதேங்கோ! நான் பத்திரமா போய் சேர்ந்துருவேன்! என்று அந்த முன்னிரவில் சைக்கிளை  தள்ளிக் கொண்டு கொஞ்சம் இருள் கவிந்த அந்த சாலையில் இருந்து வெளிச்சம் வந்த பகுதிக்கு வந்து ஏறி மிதிக்க ஆரம்பித்தார் வைத்திய நாதன்.
    குழந்தைக்கு இரண்டு நாளாய் பால் இல்லை! வீட்டில் மளிகைப் பொருட்களும் தீர்ந்து போயிருந்தன. ஆத்துக்காரிக்கு ஒரு புடவை எடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. பல கவலைகள் அவரை சூழ்ந்து கொண்டாலும் இன்றைய கிருத்திகை வருமானம் அதற்கு ஒரு தீர்வாய் இருக்கும் என்ற மகிழ்ச்சியும் அவரை சூழ்ந்தது. சைக்கிளை விரைந்து அழுத்தி மிதித்தார் வைத்திய நாதன்.
     சுமார் ஒரு அரை மணி நேரத்தில் பாக்கம் கிராமத்தில் தனது வீட்டிற்கு வந்து விட்டார் குருக்கள். அவரது சைக்கிள் என்றும் அவரை கைவிட்டதில்லை! விரைவாக வந்து விட்டவர். கோயில் வாசலில் படுத்திருந்த கருப்பு நாய் அவரை அடையாளம் கண்டு வாலாட்டியது.

      திண்ணையில் அவரது மனைவிக்கு துணையாக வந்து படுத்துக் கொள்ளும் பொன்னம்மா கிழவி படுத்துக் கிடந்தாள். அரவம் கேட்டதும் விழித்துக் கொண்டு சாமீ! வந்துட்டீங்களா! இவ்ளோ நேரம் அயிரம்மா! முழிச்சிக்கிட்டுதான் இருந்துச்சு! இன்னும் வரலியே கவலைப்பட்டுக்கினு இருந்துச்சு! இப்பத்தான் படுத்துச்சு! அவள் சொல்லி முடிக்கவும் வாசல் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
        என்னங்க! வந்துட்டீங்களா! இவ்ளோ நேரம் ஆயிருச்சே! இந்தாங்க தீர்த்தம்! குடிச்சுட்டு காலை அலம்பிண்டு உள்ளே வாங்க!  குருக்களின் மனைவி ஹேமாவதி தண்ணீர் செம்பை நீட்டினாள்.
    என்ன ஹேமா! நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே! ஆள் ரொம்ப டல்லடிச்சு போயிருக்கே!
    அது ஒண்ணும் இல்லீங்க! இன்னிக்கு மத்தியானத்தில இருந்து ரெண்டு காலும் அப்படியே வீங்கி கிடக்குங்க! நடக்க முடியலை!  பூரான் ஏதாவது குத்தியிருக்குமோன்னு வசம்பு கூட அரைச்சு போட்டேன்! ஒண்ணும் பிரயோசனப் படலை! காலை அசைக்க முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு!
   எங்கே! காட்டு!
  அவள் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே புடவையை சற்றே உயர்த்திக் காட்டினாள். இரண்டு பாதங்களும் வீங்கி அந்த வீக்கம் முட்டி வரை பரவியிருந்தது. அந்த இரவின் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்தில் ஒரு கிலி தெரிந்தது.
    என்னம்மா? என்றான் வைத்தி

 இல்ல! திடீர்னு எனக்கு இப்படி கால் வீங்கிருச்சே! நான் உங்களையும் பொண்ணையும் விட்டுட்டு போயிருவேனோன்னு பயமா இருக்குங்க!
   அடச் சீ பைத்தியம்! இது சாதாரணமான கால் வீக்கம்! நீர் கோர்த்து இருக்கலாம்! இல்ல பூச்சிக் கடியா இருக்கலாம்! நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு போனா சரியாயிரும்! ஆமா! நீ சாப்பிட்டியா?
    நீங்க வராம நான் என்னிக்கு சாப்பிட்டு இருக்கேன்!
 சரி! எலையை போடு! இல்ல வேணாம் நானே போய் எடுத்துண்டு வரேன்! நீ சிரமப்பட வேண்டாம்!
     சமையல் கட்டுக்குள் நுழைந்த வைத்திய நாதன் இருவருக்கும் இலையும் போட்டுவிட்டு மனைவியை மெல்ல அழைத்துச் சென்று அமர வைத்தான்.
   இருவரும் அன்றைய இரவு உணவை உண்ண ஆரம்பித்தார்கள்.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அவர்களின் நிழலும் இரவு உணவை உண்டுகொண்டிருந்தது. அந்த நிழல் அவர்களை துரத்த போகிறது என்பதை அவர்கள் அறிந்தார்கள் இல்லை!
                                    துரத்தும்(1)

டிஸ்கி: பேய்கள் ஓய்வதில்லை எழுதிய பின் ஒரு நீண்டகால ஓய்வுக்குப்பின் இந்த தொடரை எழுதுகிறேன்! இதிலும் அமானுஷ்யம் கலந்திருக்கும். இதற்கான கரு ஒரு மூன்று மாதத்திற்கு முன் உதித்து விட்ட போதும் சரியான தலைப்பு உதிக்கவில்லை! என்னென்னமோ யோசித்து இன்று திடீரென தோன்றியது இந்த தலைப்பு. ஊழ்வினை தான் கதையின் முக்கிய கரு! அதனால் இந்த தலைப்பு பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்! உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Monday, September 23, 2013

புகைப்பட ஹைக்கூ 50

புகைப்பட ஹைக்கூ 50


  1. உடைபட்டது
  உழைப்பு!
  கடலில் பிள்ளையார்!

  1. விருந்து கொடுத்து
  விரட்டி அடித்தனர்
  கடலில் பிள்ளையார்!

  1. பிடித்து வைத்து
  உடைத்து எறிந்தனர்!
  கடலில் பிள்ளையார்!

  1. குளிப்பதற்கு
  ஊர்வலம் போனார்
  பிள்ளையார்!

  1. பக்தியில்
  கரைந்து போனார்
  பிள்ளையார்!

  1. உடைத்து போட்டாலும்
  உயிர்த்து வந்தார்
  கடலில் பிள்ளையார்!

  1. தீர்த்த யாத்திரை
  கிளம்பினார்
     தெருப்பிள்ளையார்!

  1. மண்ணிலே தோன்றி
  மனதினிலே ஊன்றி
  நீரிலே கரைந்தார் பிள்ளையார்!

  1. வீதிவீதியாய்
  சுற்றிவந்தவர்
     வீசப்பட்டார் கடலில்!

  1. உற்சாக ஊர்வலத்தில்
  உடைக்கப்பட்டார் கடலில்
  பிள்ளையார்!

  1. மகிழ்வோடு
  இறுதி ஊர்வலம்!
  கடலில் பிள்ளையார்!

  1. கரைந்து போனாலும்
  நிறைந்து நின்றார்
  மனதில் பிள்ளையார்!

  1. அன்பில் திளைத்து
  ஆழியில் மிதந்தார்
  பிள்ளையார்!

  1. ஒரு வாரம் பூசனை
  ஒரு நாள் ஊர்வலம்!
   ஒரு மணியில் கரைந்தார் பிள்ளையார்!

  1. விருந்தும் மருந்தும் மூன்றுநாள்
  விளக்கமாய் நிருபித்தார்
  கடலில் பிள்ளையார்!

  1. கடல் கொண்டு போனாலும்
  திடம் கொண்டு எழுகின்றார்
  அடம் கொண்ட பிள்ளையார்!

  1. கடவுள்
  கடலில் வீசப்பட்டார்!
  கலியுகத்தில் பிள்ளையார்!

  1. விதவிதமாய் ஜனித்தனர்
  ஒரே விதமாய் மறைந்தனர்
  கடலில் பிள்ளையார்!
      
  1. கடலில் வீசப்பட்டது
  கடவுள் ரூபத்தில்
   காசு!

  20 விலை போன கடவுள்
     வீசப்பட்டார்
      கடலில்!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


    
   

Sunday, September 22, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 27


சென்ற வாரம் இந்த பகுதியை நிறுத்திவிடலாமா என்று கேட்டமைக்கு முரளிதரன், மற்றும் திண்டுக்கல் தனபாலன், மற்றும் சிலர் நிறுத்த வேண்டாம் தொடருங்கள் என்று சொல்லியிருந்தனர். எனக்கும் இதை நிறுத்த வேண்டாம் அவ்வப்போது சிறு இடைவெளி விட்டுத் தொடரலாம் என்றே எண்ணம்.
    இந்த தொடர் ஆரம்பித்த புதிதில் சில ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்கள், பிறமொழி சொற்களுக்கு தமிழ் சொற்கள் என்று பார்த்தோம். பின்னர் இலக்கணம், இலக்கியம் என்று கொஞ்சம் ஆழமாக சென்று விட்டோம். இன்று மீண்டும் கொஞ்சம் பின்னே வந்து ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்களை கற்க இருக்கிறோம். சரி பகுதிக்குள் நுழைவோம்.

ஆங்கிலச் சொல்                     தமிழ் கலைச்சொல்

1.international law                      அனைத்து நாட்டுச் சட்டம்
2.constitutional law                      அரசியல் அமைப்புச் சட்டம்
3. supreme court                       உச்சநீதிமன்றம்
4.High court                           உயர்நீதிமன்றம்
5.Writs                               சட்ட ஆவணங்கள்
6.sustantive Laws                       உரிமைச் சட்டங்கள்
7.procedureal Laws                   செயற்பாட்டுமுறைசட்டங்கள்
8.Indian penal code              இந்திய தண்டனைச்சட்டத்தொகுப்பு
9.criminal procedure code     குற்றவியல்செயற்பாட்டுமுறைதொகுப்பு
10.civilprocedure code      உரிமையியல்செயற்பாட்டுமுறைதொகுப்பு
11.indian evidence act      இந்திய சான்று சட்டம்.
12.transfer of property act      சொத்து மாற்று சட்டம்.
13.indian succession act         இந்திய வாரிசுரிமை சட்டம்.
14.court fee stamp.             நீதிமன்ற கட்டண வில்லை.

இவை அனைத்தும் சட்டம் சம்பந்தமான கலைச்சொற்கள் பத்தாம் வகுப்பு பாடநூலில் கொடுக்கப்பட்டிருந்தது. இது போன்று ஒவ்வொரு துறைக்கும் கலைச்சொற்கள் உள்ளன. வரும் பகுதிகளில் அதைப் பார்க்கலாம்.
இனி இனிக்கும் இலக்கியத்தில் நுழையலாம்!

எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் சங்க இலக்கிய நூல்கள்! இதில் எட்டுத்தொகை நூலில் முதலாவதாக உள்ள நூல் நற்றிணை ”நல்” என அடைமொழியோடு போற்றப்படும் இந்த நூல் அகத்திணை நூலாகும்.
   நற்றிணை நூலை பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். நற்றிணை நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.


    அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
    மறுகால் உழுத ஈரச் செறுவின்
    வித்தொடு சென்ற வட்டி பற்பல
    மீனோடு பெயரும் யாணர் ஊர
    நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புண்கண்  அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வமென் பதுவே.
                    மிளைகிழான் நல்வேட்டனார்.

பொருள். தோழியானவள் தன் தலைமகனுக்கு கூறியதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
    உழவர்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தபின் அகன்ற அழகிய வயல்களை மறுபடி உழுவர். அப்படி உழுதபின் பனையோலைப் பெட்டிகளில் கொண்டு சென்ற விதைகளை அந்த ஈரமுள்ள நிலத்தில் விதைத்து விட்டு காலியான பெட்டிகளில் அங்குள்ள நீர் நிலைகளில் வாழும் பல்வேறு வகையான மீன்களை பிடித்து அடைத்து எடுத்துச் செல்லக்கூடிய வருவாயினை உடைய மருத நிலத்து தலைவனே!
      அரசால் சிறப்பு செய்யப்பெறுதலும், யானை தேர் குதிரை முதலிய ஊர்திகளில் அரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் சிறப்பு கிடையாது. செல்வ சிறப்பு என்பது அவர்களின் முன்வினைப் பயனே ஆகும். தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த எளிமையானவர்களை கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வம் என்று சான்றோர் சொல்வார்கள்!
  இப்படி செல்வம் என்றால் என்ன என்று தோழி தலைவனுக்கு கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.
  இதை இந்த காலத்திற்கு ஏற்றமையாக பார்க்கும் போது, பணக்காரன் என்பது பணத்தினாலும் கௌரவத்தினாலும் வருவது அல்ல! அமைச்சர்கள் அரசியல்வாதிகள் முன்பு பகட்டாக காரிலும் இன்னும் பிற வாகனங்களில் மிடுக்காக செல்வது அவர்களோடு உறவாடுவது செல்வமாகாது. ஏழை எளியோர்க்கு உதவுதலே செல்வமாகும் என்று பொருள் கொள்ளலாம்.


மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல தகவல்களோடு சந்திக்கிறேன்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இட்டு தெரிவியுங்கள்! நன்றி!

Saturday, September 21, 2013

ஆதார் அட்டை வாங்கீட்டீங்களா? அட்டென்ஷன் ப்ளீஸ்!

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வங்கிக் கணக்குத் துவக்க, கியாஸ் இணைப்புப் பெற, பாஸ்போர்ட் பெற, வீடு வாங்க, விற்க போன்றவற்றிற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? எப்போது கிடைக்கும்? யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் உங்களுக்காக இதோ...

ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:

இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?

இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.

தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.

சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.

இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.

1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?

தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:

https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:

ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.

மேலதிக தகவலுக்கு:

புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066

தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053

1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.

https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
நன்றி! : புதிய தலை முறை வார இதழ் 
Related Posts Plugin for WordPress, Blogger...