உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 25

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 25



  அன்பான வாசகர்களே! ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கிய இந்த பகுதி இன்று 25ஐ எட்டியிருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் இத்தனை வாரங்கள் இதை தொடர்ந்திருக்க முடியாது. தமிழின் இலக்கண இலக்கியங்களை தேடி பலரோடு பகிர்ந்து கொள்வதே இப்பகுதியின் நோக்கம்! நான் அறிந்தவற்றை நாலுபேரோடு பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இருக்க முடியாது.
             டிகிரி முடித்து இருந்தாலும் நான் படிக்கும் போது அறியாத இலக்கணங்களை இந்த பகுதிக்காக என்னால் இப்போது தேடிப் படித்து அறிந்துகொள்ள முடிகிறது. முடிந்தவரை அதை எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற பகுதியில் இலக்கியவகை சொற்களை பார்த்தோம். இந்தவாரம் வழக்கு என்பதை பார்க்க போகிறோம். கோர்ட் வழக்கு அல்ல!
    வழக்கு என்பது நம் முன்னோர் வழங்கி வந்தமையை குறிக்கும். நம் முன்னோர்கள் வழக்கமாக சில சொற்களை வழங்கி வந்தனர். அதை நாமும் பின்பற்றி வருகிறோம். அதுவே வழக்கு சொல் ஆயிற்று. இதை இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்று இருவகையாக பிரிக்கலாம்.
   இயல்பு வழக்கு ஒரு பொருளை சொல்வதற்கு எந்த சொல் இயல்பாக வருகிறதோ அந்த சொல்லாலேயே வழங்குதல் இயல்பு வழக்கு என்று சொல்லுவர். இயல்பு வழக்கினை, இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என்று மூவகையாக பிரிக்கலாம்.
 ஒரு சொல்லை இலக்கணமாக பேசுதல் அல்லது சொல்லுதல் இலக்கணமுடையது என்பர். உதாரணமாக மாலினி பாடம் படித்தாள். இது இயல்பாக நடப்பது. இலக்கணப்பிழையும் இல்லை! இதுவே இலக்கணமுடையது.
   இலக்கணமுடைய சொற்களை இலக்கணமில்லாமல் மாற்றி வழங்கி வருதல் இலக்கணப் போலி ஆகும். உதாரணமாக, நகர்ப்புறம்,கால்வாய், கொம்பு நுனி, போன்ற இலக்கணச் சொற்கள் இன்று புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு என்று வழங்கி வருகிறது இவை இலக்கணப்போலி ஆகும்.
  மரூஉ: மருவி வந்தது மரூஉ என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் மயிலை என்றும் தஞ்சாவூர் தஞ்சை, என்றும் பாண்டிச்சேரியை , பாண்டி என்றும் அழைக்கிறோம். இவ்வாறு ஊர் பெயர்கள் சிதைந்து வருவது மரூஉ ஆகும்.
 தகுதி வழக்கு: ஒரு சொற்களுக்கு தகுதியான இன்னொரு சொற்களை பேசுவது தகுதி வழக்கு ஆகும். இதுவும்  மூன்றுவகைப்படும்.
  இடக்கரடக்கல்,மங்கலம், குழு உக்குறி என்பன அவை.
பலர் முன்னே சொல்ல சங்கடமாக உள்ள சொற்களை மாற்றி தகுதியான சொற்கள் பேசுவது இடக்கரடக்கல் எனப்படும். உதாரணமாக வாய் கழுவி வந்தேன் என்பதை வாய் பூசி வந்தேன் என்று சொல்வது இடக்கரடக்கல் ஆகும்.
மங்கலம்: அமங்கலமான சொற்களை நீக்கி மங்கலமான சொற்களை சொல்லுதல் மங்கலம் எனப்படும். விளக்கை அணைத்து விடு என்று சொல்லாமல் விளக்கை குளிரவை என்பது மங்கலமாகும்.
குழு உக்குறி ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயர் குழு உக்குறி என்பர்.
  பொற்க்கொல்லர் பொன்னை “பறி” என்று வழங்குவர்.


 இனி இலக்கிய சுவையை பார்ப்போம்! இன்று ஒரு கதையை பார்க்க போகிறோம்.
   ஒர் ஊரில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஏரி நிரம்பி கடைக்கால்வழி வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது. ஏரிக்கரை அருகே நிலக்கிழார் ஒருவரும் புலவர் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அந்த ஏரிப் பாய்ச்சல் பகுதியில் நிலக்கிழாரின் நிலம் இருந்தது.
     அப்போது அங்கு வந்த முதல் புலவர், “ஏரி கடை போகிறது” என்றார். அவர் கூறி முடிக்கும் முன்னே ஏரியின் கரை நடுவே உடைந்து விட்டது. அதை கவனித்த இரண்டாம் புலவர் “ ஏரி இடை போகிறது” என்றார்.
    இதை பார்த்துக் கொண்டிருந்த நிலக் கிழாரோ  தம் வயல்கள் பாழாவதை கண்டு வேதனைப் பட்டு, புலவர்களை பார்த்து, புலவர்களே “கடைபோவதனையும் இடை போவதனையும் தான் பார்த்தீர்கள்; முதல் போவதனை பார்க்கவில்லையா?” என்று கேட்டார்.
   புலவர்கள் இருவரும் திகைத்தனர். நிலக்கிழார் சொன்னார். “ஏரி உடைந்தமையால் என் வயல்கள் முழ்கி நான் போட்ட ‘முதல்’ (செல்வம்) போகிறதே!” அதைச் சொன்னேன் என்றார்.
 துன்பத்திலும்  புலவர்களுக்கு இணையாக தமிழோடு விளையாடிய அந்த நிலக்கிழாரின் மன உறுதிதான் என்ன?
     நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவும் புலமையும் பெற்றிருந்தனர்! என்று அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா?

  மீண்டும் அடுத்த பகுதியில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திக்கிறேன்! பதிவு குறித்த உங்கள் பின்னூட்டங்கள் இத்தொடரை சிறப்பிக்க உதவும்! மறக்காமல் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. துன்பத்திலும் புலவர்களுக்கு இணையாக தமிழோடு விளையாடிய அந்த நிலக்கிழாரின் மன உறுதிதான் என்ன//தமிழை நேசித்ததால் புலவர்களை அடிக்க முடியாமல் அவர்களைப் போலவே கூறியிருக்கிறார்

    ReplyDelete
  2. தமிழ் தேனாக இனிக்கிறது உங்கள் பதிவுகளின், நாங்களும் தெரிந்து கொள்கிறோம் தொடருங்கள்...!

    ReplyDelete
  3. இலக்கியச் சுவைத்’தேன்.
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2