உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 26

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 26


  வணக்கம் அன்பர்களே! இந்த பகுதி 25 வாரங்களை கடந்து 26வது பகுதியில் வந்து நிற்கிறது. முதலில் இதற்கு இருந்த வரவேற்பு கடந்த மூன்று வாரங்களாக இல்லை! நான் பகிரும்விதம் சுவையாக இல்லையா? அல்லது நிறைய இலக்கணங்களை கூறி சுவை குன்ற செய்கிறேனோ என்று தெரியவில்லை!
      இன்று இந்த பகுதியில் பார்க்க இருப்பது  எதுகையும் மோனையும்!
நல்லா எகனை மொகனையா பேசறாண்டா! ஆனா செயல்ல ஒண்ணும் கிடையாது! என்று சொல்வார்கள்! நமது அரசியல்வாதிகளும் இப்படித்தான் எகணை மொகணையா பேசி நம்மை ஏமாளிகள் ஆக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். கவிதை படைப்பதில் இந்த எகணை மொகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கவிதைக்கு சுவை கூட்டும்.
  அத்தகைய எதுகை மோனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
 மோனை
    செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும். இதை அடி மோனை என்றும் சொல்வார்கள்.
   ண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
   ண்ணுவம் என்பது இழுக்கு.
   முதல் அடியின் முதல் எழுத்தும் இரண்டாம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வந்துள்ளதால் மோனை என்பார்கள்.

எதுகை:
   அடி தோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது அடி எதுகை என்று அழைக்கப்படும்.
  அர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பவன் முதற்றே உலகு.
இந்த குறட்பாவில் முதல் அடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம் எழுத்தும் ஒத்து வந்துள்ளது இதனால் இது எதுகை தொடை ஆகும்.


  நாலடி கொண்ட சீருள் முதல் இரு சீர்களில் முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பது இணைமோனை எனப்படும்.
  ன்சொல் னிதீன்றல் காண்பான் எவன்கொலோ
  வன்சொல் வழங்கு வது
ஓர் அடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
  திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
ஓர் அடியுள் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.
  நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டி விடும்
ஓர் அடியுள் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது கூழை மோனை ஆகும்.
தானம் வமிரண்டும் ங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
ஓர் அடியுள் முதல் மூன்று நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று  டற்றும் பசி
ஓரடியுள் முதல் இரண்டு நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
ருள் சேர் ருவினையும் சேரா றைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
 ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்
ற்க சடற ற்பவை ற்றபின்
நிற்க அதற்குத் தக

இதே போல் எதுகையும் 7 வகைப்படும்  மோனையில் முதல் எழுத்து ஒன்றி வந்ததை போல இதில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அந்த வகையில் இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என ஏழு வகைப்படும்.
இலக்கணம் கொஞ்சம் பார்த்தாச்சு இனி கொஞ்சும் இலக்கியத்தை பார்க்கலாமா?

 விவேக சிந்தாமணி என்ற நூலில் இருந்து ஒரு பாடல்!

  தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
    தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதை சம்பு வின்கனி என்று
  தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வான் உறு மதியும் வந்ததென்று எண்ணி
  மலர்க்கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தானா
 புதுமையோ இது என புகன்றாள்.

அருமையான இந்த பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை!
  பாடலின் பொருள்:
     மலர்களிலே தேனை உண்ணும் வண்டு மலர்களிலே உள்ள தேனை உண்டு மயங்கிக் கிடந்தது.அந்த கருநிற வண்டினை நாவற்பழம் என்று கருதிய மங்கை ஒருத்தி தன் கையில் எடுத்து உள்ளங்கையில் வைத்து பார்த்தாள்.
   அப்படி அவள் அந்த வண்டை உற்று நோக்குகையில் அந்த வண்டானது அந்த மங்கையின் முகத்தை பார்த்து வான் நிலவு என்று நினைத்தது. அவள் கையை தாமரை என்று கருதியது நிலவு வந்தால் தாமரை மூடிக் கொள்ளுமே என்று அஞ்சி அவள் கையை விட்டு நொடியில் பறந்து போனது.
  அந்த மங்கை பழம் பறந்த அதிர்ச்சியில் பறந்தது பழமா? வண்டா? இது என்ன விந்தையாக இருக்கிறதே என்று மயங்கி கூறினாள்.

    இது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி! இதை இவ்வளவு அழகாக கவி படைத்த அந்த கவிஞரை மனமார பாராட்டுவோம்!
  மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திப்போம்! பதிவு குறித்த உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!



Comments

  1. எதுகை மோனையில் இத்தனை வகைகளா ?
    வியக்க வைத்தது .
    இலக்கிய பாடல் ரசனைக்கு உரியது .
    பகிர்விற்கு நன்றி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2