வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா?

வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா?


  அந்த குடும்பம் எங்களுடைய பக்கத்து வீட்டிற்கு குடிவந்தது. அவர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது நான் திண்ணையில் அமர்ந்து டச் போனில் எஃ.பியை மேய்ந்துகொண்டிருந்தேன். நேரம் போவது தெரியாமல் முகநூலில் புதைந்த என் கவனத்தை அவளது குரல் கலைத்தது. “அப்பா! இந்த சேர்களை நான் தூக்கிவரட்டா?”  அவளது வசீகர குரல் என் காதுகளில் தேனாக பொழிய முகநூலை ஓரம்கட்டிவிட்டு அவளை பார்த்தேன். ஒரு புன்னகையை வீசினேன். பதிலுக்கு அவளும் ஒரு புன்னகை வீசிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அவள் அந்த நாற்காலிகளை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்த என் மனம் புண்பட்டுப் போனது.
     அவளது பட்டுக் கைகள் பாரம் சுமக்கலாமா? பிஞ்சு விரல்கள் பிய்ந்து போகலாமா? கூடாது! நாம் போய் உதவுவோம்! என்று எழுந்து சென்றேன். அங்கே முன் மண்டையில் முடிகள் இழந்து சற்றே ஒல்லியான தேகமுடன் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் தந்தையிடம் நானே வலியச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
     சார்! நான் பக்கத்து வீடு! உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நான் ஹெல்ப் பண்ணட்டுமா? என்றேன்.
    அவர் என்னை ஆபத் பாந்தவனாய் நினைத்திருப்பார் போலும்! உதவிக்கு யாரும் இல்லாமல் அவர் ஒருவரே சிரமப்பட்டு கொண்டிருந்தார் போல! ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக தந்து ஆட்சேபனையா? இந்த காலத்துல இப்படி வலிய வந்து உதவறதே பெரிய விசயம்? உங்களை போய் ஏதாவது சொல்வேனா? இந்த காலத்துல இப்படி உதவற மனப்பான்மை நிறைய பேருக்கு இல்லாமலே போயிட்டுது! தாராளமா ஹெல்ப் பண்ணுங்க! என்றார்.
   நான் அவருக்காகவா உதவி செய்கிறேன்! எல்லாம் அவர் பெண்ணுக்காக என் செல்லத்திற்காக அல்லவா? இது தெரிந்தால் அவர் என்ன நினைப்பார்? போயும் போயும் இவனை பாராட்டிவிட்டேனே என்று தலையில் அல்லவா அடித்துக் கொள்வார்?
  ஒவ்வொரு பொருளாக லாரியில் இருந்து இறக்க உதவி செய்தேன் மனுசர் கொஞ்சம் விவரமானவர்தான் போலும்! என்னை வீட்டின் உள்ளே விடவில்லை! நீங்க மேல இருந்து எறக்கி கொடுங்க தம்பி! நான் ஒவ்வொண்ணா உள்ள கொண்டு வச்சிக்கிறேன்! உங்களுக்கு சிரமம் வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவரே எல்லா பொருள்களையும் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த பெண்ணும் அப்போது சென்றவள்  வெளியே வரவில்லை!
    நான் போன வேளை விதி சதி செய்கிறதே! அவளின் பார்வை கிடைக்காதா? என்று  தவமிருக்க அவளோ தரிசனம் தராது உள்ளேயே அடைந்து கிடக்கிறாளே! என்ன செய்யலாம்? சார்! கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டபோது பார்த்தீங்களா தம்பி? இவ்வளவோ ஹெல்ப் பண்ணியிருக்கீங்க ஒரு டம்ளர் தண்ணி தர மாட்டோமா? அம்மா! வெண்ணிலா! தம்பிக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொண்டாம்மா! என்றார்.
     அவள் தண்ணீரை சொம்பில் எடுத்து வந்த அழகே அழகு! அப்படி ஒரு நடை! தண்ணீரை என் கையில் தந்துவிட்டு மீண்டும் ஒரு புன்னகை சிந்தினாள். அடடா! என்ன அழகு! என்ன சிரிப்பு! இந்த புன்னகைக்கு உலகையே அவள் கையில் தந்துவிடலாம். என்று நினைத்துக் கொண்டேன்.
   அதற்கப்புறம் நான் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். ஆனால் வெண்ணிலவு முழு தரிசனம் கிடைக்காமல் முகம் மட்டும் காட்டி புன்னகைத்து மறைந்து கொண்டது. இது என்னை மேலும் சீண்டியது. வெண்ணிலாவை அப்படியே கட்டிப்பிடித்து தூக்கி அவள் பட்டுக் கண்ணத்தில் இதமாக ஓர் முத்தம்...
   ம்ஹுகும்! அவள்தான் எதிரே வரவே மாட்டேன் என்கிறாளே! எனக்கு எங்கே அந்த பாக்கியம் கிட்டப்போகிறது? அப்படி என்ன வெட்கமோ தெரியவில்லை அவளுக்கு? என்னை பார்த்ததும் ஒளிந்து கொள்கிறாள். வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா?
    நான் உள்ளே நுழைந்தாளே தலையை தாழ்த்திக் கொண்டு அறைக்குள் சென்று விடும் அவளிடம் என் ஆசைகளை எப்படி சொல்வது? அவளுடன் பேச வேண்டும் என்ற என் ஆசை அவ்வளவுதானா? அவள் இதயத்தில் என்னால் இடம்பிடிக்க முடியாதா? என் மேல் அவளுக்கு ஏதாவது கோபம் இருக்குமொ தெரியவில்லையே? உனக்காக இங்கே ஒருவன் உன்மத்தம் பிடித்து அலைகிறான் ஆனால் நீயோ ஏனம்மா இப்படி கண்ணாமூச்சி ஆடி மனதை கலங்கடிக்கிறாய்?
    அன்று எப்படியும் அவளை சந்தித்து இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று துணிச்சலுடன் அவள் வீட்டினுள் நுழைந்தேன். நல்ல வேளை வீட்டில் யாரும் இல்லை! அவள் மட்டும் தனியறையில்! யாரும் இல்லையா வெண்ணிலா? என்றபடி உள்ளே நுழைய அவள் கண்களில் மருட்சி! அப்படியே உள்ளே நுழைந்தேன். ஓடிய அவளை துரத்தினேன்.

   வெண்ணிலா! என்கிட்ட என்ன பயம்? ஏன் ஓடறே நில்லு! போக்குக் காட்டி ஓடிய அவளை ஒருவழியாய் மடக்கிப்பிடித்து அப்படியே இடுப்பை பிடித்து தூக்கினேன். ஒரு சுற்று சுற்றினேன். அவள் “ஓ” வென அழ ஆரம்பிக்க அவள் வாய் பொத்தி “ப்ளிஸ்! அழாதே வெண்ணிலா! இப்ப என்ன ஆயிருச்சு! காம்டவுன்!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
   அவள் அழுகை அதிகமானது வீறிட்டு அழவும் அவள் பெற்றோர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. நான் திருதிருவென விழிக்க என் இடுப்பிலிருந்த அந்த நான்குவயது சிறுமி வெண்ணிலாவை வாங்கிக் கொண்ட அவள் தந்தை! அங்கிள்டா! செல்லம்! ஏன் அழறே! டோண்ட் கிரை! என்றபடி, அவ யார்கூடவும் ஒட்ட மாட்டேங்கிறாப்பா! தனியாவே இருந்து பழகிட்டா! எப்படியோ அவளை தூக்கி முத்தம் கொடுத்து கலாட்டா பண்ணீட்டியே! என்றார்.
   அந்த நாலு வயது வெண்ணிலா! தந்தையின் மார்பில் சாய்ந்தபடி என்னை பார்த்து வெவ்வே! என்று பழிக்க  நான் சிரித்துவிட்டேன்!
       எப்புடி?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இப்படி ஏதாவது எதிர்பார்த்தேன்.. நல்ல சிறுகதை..

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரி எழுதி ரொம்ப நாள் ஆயிருச்சு! அதான் மீண்டும் ஒரு முயற்சி பண்ணேன்! உடனடி விமர்சனதுக்கு நன்றி!

      Delete
  2. மனதை கவர்ந்த வெண்ணிலா...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. மனம் கவரும் சிறுகதை...

    ReplyDelete
  4. அழகான வெண்ணிலா,,,,

    அய்யா எழுத்து படிக்க சிரமமாக உள்ளது... எழுத்துருவை முடிந்தால் மாற்றுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றிவேல்! எழுத்துரு பெரியதாகத்தான் வைத்துள்ளேன்! உங்கள் ப்ரவுசரில் கோளாறா என்று பாருங்கள்! நன்றி!

      Delete
  5. எங்கள் கதை கந்தல் !

    ReplyDelete
  6. இப்படி ஏதோ வில்லங்கமாத் தான் முடியும்னு நினைச்சேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2