மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்

 உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமவராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. பசுமைப்படை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளும் பள்ளியில் செயல்படுகின்றன.
மாணவர்களின் நிர்வாகத்திறமையை வளர்க்கும் வகையில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்திலேயே அங்காடி ஒன்றை துவங்கலாம் என ஆலோசித்து முடிவெடுத்தனர்.இதற்காக ஆசிரியர்கள் சார்பில் பங்களிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஒரு அங்காடி ஒன்றும் துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 6,7,8 மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்காடியில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், வரைபட அட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மற்ற குழந்தைகளுக்கு லாபம் இல்லாமல் அடக்க விலையிலேயே விற்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் சில அவசர தேவைகளுக்காக கடனாக பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள் தலையீடு இல்லாமல் கணக்கு பார்ப்பது முதல் பணத்தை பாதுகாப்பது வரை நிர்வாக ரீதியான அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். தேவையான பொருட்களை மாணவர்களே ஆசிரியர்கள் உதவியுடன் கொள்முதல் செய்கின்றனர்.படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், காலை பள்ளி துவங்குவதற்கு முன்பு அரைமணி நேரம், மதியம் உணவு இடைவெளியில் போதும் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

""மாணவர்களிடம் நிர்வாகத்திறன் மற்றும் தன்னம்பிக்கையினை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்காடித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை வெற்றிகரமாக இயக்கி வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது,' என்கிறார் அங்காடி பொறுப்பாசிரியர் ஆலிஷ் திலகவதி.

"" அங்காடித்திட்டத்தை மாணவர்கள் ஆர்வமுடன் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டம் மூலம் கிடைக்கும் லாபத்தொகை மட்டுமின்றி மாணவர்கள் சேமிப்பு திட்டம் மூலம் கிடைக்கும் தொகையினை கொண்டும், பெதப்பம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஒரு கணக்கு துவக்கி சேமித்து வைக்கப்பட்டு வருகிறது,'' என பெருமையுடன் தெரிவித்தார் பள்ளித்தலைமையாசிரியர் மணி.


thanks: dinamalar

Comments

  1. இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் பல வித்தியாசமான பயனுள்ள செயல்பாடுகளை செய்கிறார்கள். அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எங்கும் நடந்தால் நல்லது...

    ReplyDelete
  3. பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2