Sunday, July 28, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 24
 சென்ற வாரம் ஆகுபெயர்கள் குறித்து கொஞ்சம் அறிந்துகொண்டோம்! இந்த வாரம் இலக்கியவகைச்சொற்களை பார்க்க போகிறோம். அதற்கு முன் சொல் எத்தனைவகைப்படும் என்று அறிந்துகொள்வோமா?
  சொல் நான்கு வகைப்படும் என்று  சின்ன வயதில் படித்திருப்போம்! நினைவுக்கு வருகிறதா?
  1.பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3.இடைச்சொல், 4. உரிச்சொல். 
 இவை இலக்கண வகையால் பிரிவுபட்டன.
  இலக்கியவகையால் சொற்கள் நால்வகைப்படும் அவை 1. இயற்சொல், 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வட சொல் என  நால்வகைப்படும்.
 1.இயற்சொல் :  எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். உதாரணம் தீ, காடு, மரம், புத்தகம், அருவி
 காற்று, நிலவு, ஞாயிறு, பலகை இந்த சொற்களும் எளிதில் பொருள் விளங்கக்கூடிய பெயர்சொற்கள். இவை பெயர் இயற்சொற்கள் எனப்படும்.
படித்தான், உறங்கினான், உண்டான், வந்தான் இவையும் எளிதில் விளங்க கூடிய வினைச்சொற்கள் இவை வினை இயற்சொற்கள் எனப்படும்.

2.திரிசொல்: கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் திரிசொல் எனப்படும்.
   பீலி, உகிர்,ஆழி இந்த சொற்களின் பொருள் கற்றாருக்கு மட்டுமே தெரியும் பாமரருக்குத்தெரியாது.
இவை திரிசொல்லாகும். பீலி என்றால் மயில் தோகை, உகிர் என்றால் நகம், ஆழி என்றால் கடல் மற்றும் சக்கரம். இதை கற்றவர் அறிவர்.
 திரிசொல்லும் பெயர் திரிசொல், வினை திரிசொல் என இருவகைப்படும்.
 எயிறு- பல், வேய்- மூங்கில்:  மடி- சோம்பல்; நல்குரவு- வறுமை என்பன பெயர் திரிசொல்கள்.
வினவினான்-கேட்டான், விளித்தான்-அழைத்தான், நோக்கினார்-பார்த்தார் போன்றவை வினைத்திரிச்சொற்கள் 

3. திசைச்சொல்;  தமிழ்நாட்டை சுற்றியுள்ள பிறபகுதிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள்.
  ( எ.கா) கேணி -கிணறு , பெற்றம்- பசு

4. வடமொழி சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.
    கமலம்- தாமரை, விஷம்- நஞ்சு, புஷ்பம்-மலர் இவை வடமொழி கலந்த வடசொற்கள்

  இலக்கியவகைச் சொற்களை அறிந்து கொண்டோம்! இனி இனிக்கும் இலக்கிய சுவையை பருகுவோமா?

      ஐங்குறுநூறு பாடல் ஒன்றை பார்ப்போம்!
     ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே!
   மணலாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
   புனலாடு மகளிர்க்கு புணர்துணை உதவும்
   வேழம் மூதூர் ஊரன்
   ஊரானாயினும் ஊரன் அல்லன்னே!
  
   இப்பாடல்  ஐந்து திணைகளுள் ஒன்றான மருதத் திணைக்குரிய பாடல் எழுதியவர் ஓரம் போகியார். இது வேழப்பத்து என்னும் துறையின் கீழ் வரும். மருத நில கருப்பொருள்களில் வேழம் ஒன்று. வேழம் பற்றிய கருப்பொருள் கொண்ட பத்து பாடல்களை கொண்டது வேழப்பத்து.

     தலைவனோடு தலைவி முரண்பட தோழி, ஏன் இந்த வேறுபாடு என்று தலைவியிடம் கேட்டபோது தலைவி சொல்வதாக அமைந்த பாடல். இங்கு வேழம் என்பது தலைவனையும் யானையையும் குறிக்கும்.
   மணலை அளைத்தபடி வருகின்ற பெருவெள்ளத்தில் விரும்பிய ஒள்ளிய தழையை உடுத்து புனலாடும் மகளிர்க்கு புணை துணையினை செய்யும் வேழம் நிறைந்த மூதூரை உடைய ஊரன் உறைதலால் தலைவன் நம் ஊரில் உள்ளவனே ஆயினும் புறதொழுகுதலால் ஊரன் அல்லாதவன் ஆனான்.
       புது வெள்ளத்தில் பரத்தையர் மலர்களாலும் தழையாலும் செய்யப்பட்ட ஒருவகை ஆடையை அணிந்து புணலாடுவர். அதற்கு உதவியாக வேழமான யானை இலை தழைகளை பறித்துப் போடும். அத்தகைய ஊரை சேர்ந்தவன் தலைவன். அதாவது பரத்தியரோடு சேர்ந்துள்ளான். அதனால் அவன் ஊரில் இருந்தும் இல்லை என்று தலைவி வருத்தம் மேலிட கூறினாள். தலைவன் ஒழுங்கீனன், புறத்தொழுக்கம் உடையவன் அதனால் அவனோடு வேறுபாடு கொண்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றாள்.

 மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல செய்திகளோடு சந்திப்போம்! இப்பதிவு குறித்த உங்கள் கருத்துரைகள் பதிவை மேம்படுத்த ஏதுவாக இருக்கும். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

1 comment:

  1. இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என வடமொழி சொற்கள் உட்பட ஐங்குறுநூறு பாடலோடு விளக்கங்கள் அருமை... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...