உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 20

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 20


இந்த பகுதிக்காக இணையத்தில் பலவற்றை தேடிய போது  இணையத்தில் தமிழ் வளர்ப்போர் ஏராளம் என்று அறிய முடிந்தது. தமிழையே உயிராகவும் மூச்சாகவும் கொண்டிருப்போர் பலர் என்று உணரமுடிந்தது. நாம் அவர்களோடு ஒப்புநோக்குகையில் இராமருக்கு உதவிய அணிலிலும் சிறியதாகவே என் பணி எனக்குத் தோன்றுகிறது. எனக்கு பெரிதாய் தமிழ் அறிவு ஒன்றும் கிடையாது. தமிழ்படித்தவனும் கிடையாது. ஆயினும் சிறுவயது முதலே தமிழ் மீது கொண்ட ஆர்வம்தான் இப்பகுதியை தொடரத் தூண்டியது.
     இதில் வரிசையாக இலக்கணமாக எல்லாம் இல்லாமல் நான் அறிந்த தெரிந்துகொண்ட பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற பகுதியில் கடவுளர்களின் பெயரை தமிழ்ப்படுத்துதலில் சில சந்தேகங்கள் இருப்பதாக திரு நண்டுநொரண்டு ராஜசேகர் சொல்லியிருந்தார். அதன் பின் யோசிக்கையில் எனக்கும் சில சந்தேகங்கள் தோன்றியது. அது என்னவென்றும் அதற்கான விடைகளையும் தேடிக் கொண்டு இருக்கிறேன். சந்தர்ப்பமும் விடையும் கிடைத்தால் பகிர்கிறேன்.
  இன்று நாம் பார்க்க போவது சிற்றிலக்கியங்கள் பற்றி.
    சிற்றிலக்கியம் என்றால் என்ன? பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு நன்றாகக் கட்டப்பட்டது என்று தமிழில் பொருள்.ஒரு பெருங்காப்பியத்தின் உறுப்புகளாக அமைந்திருந்த தூது, குறம் போன்றவை பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன.அந்த இலக்கியங்கள் பின்னர் சிற்றிலக்கியங்கள் என்று வழங்கலாயின.
    பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களை சிறப்பாக வகைப்படுத்தி கூறுகின்றன. வீரமா முனிவர் எழுதிய சதுரகராதி என்னும் இலக்கண நூல் சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று வகைப்படுத்தியுள்ளது. இறைவன், மன்னன், மக்களில் சிறந்தோரை சிறப்பிக்கும் வகையிலேயே சிற்றிலக்கியங்கள் எழுதப்பட்டு உள்ளன.

     சிற்றிலக்கியங்களில் கோவை, உலா,தூது. கலம்பகம்,பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அந்தாதி முதலியன சிறப்பானவைகளாக கருதப்படுகின்றன.
 வீரமாமுனிவர் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்கள்:
1.சாதகம்2.பிள்ளைத்தமிழ்,3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருள்கோவை 6.ஐந்தினைச் செய்யுள். 7.வருக்க கோவை 8.மும்மணிக்கோவை 9.அங்கமாலை 10. அட்டமங்கலம் 11.அநுராகமாலை 12.இரட்டைமணிமாலை 13.இணைமணிமாலை. 14.நவமணிமாலை 15.நான்மணிமாலை 16.நாமமாலை 17.பலசந்தமாலை 18.கலம்பகமாலை 19. மணிமாலை 20 புகழ்ச்சிமாலை 21.பெருமகிழ்ச்சிமாலை 22.வருத்தமாலை 23.மெய்க்கீர்த்திமாலை 24.காப்புமாலை 25. வேனில் மாலை 26.வசந்தமாலை 27.தாரகைமாலை 28.உற்பவமாலை 29.தானைமாலை 30.மும்மணிமாலை 31. தண்டகமாலை 32.வீரவெட்சிமாலை 33.வெற்றிக்கரந்தை மஞ்சரி. 34.போர்க்கெழுவஞ்சி 35.வரலாற்றுவஞ்சி 36.செருக்கள்வஞ்சி 37.காஞ்சிமாலை 38நொச்சிமாலை 39.உழிஞை மாலை 40.தும்பைமாலை 41.வாகைமாலை 42.வதோரணமஞ்சரி.43.எண்செய்யுள் 44.தொகைநிலைசெய்யுள். 45 ஒலியல் அந்தாதி 46.பதிற்றந்தாதி 47.நூற்றந்தாதி 48.உலா 49.உலாமடல் 50.வளமடல் 51. ஒருபா ஒருபஃது 52. இருபா இருபஃது 53.ஆற்றுப்படை 54.கண்படைநிலை 55.துயிலெடை நிலை 56.பெயரின்னிசை 57.ஊரின்னிசை 58.பெயர்நேரிசை 59.ஊர்நேரிசை 60.ஊர்வெண்பா. 61.விளக்கநிலை 62.புறநிலை 63.கடைநிலை 64.கையறுநிலை 65.தசாங்கப்பத்து 66.தசாங்கத் தையல் 67.அரசன்விருத்தம் 68.நயனப்பத்து 69. பயோதரப்பத்து 70. பாதாதி கேசம் 71.கேசாதிபாதம் 72.அலங்காரபஞ்சகம். 73.கைக்கிளை 74.மங்களவள்ளை 75 தூது 76 நாற்பது 77.குழமகன் 78.தாண்டகம். 79.பதிகம் 80.சதகம் 81.செவியறிவுறூஉ 82வாயுறைவாழ்த்து 83.புறநிலை வாழ்த்து 84.பவனிக்காதல் 85.குறத்திப்பாட்டு 86.உழத்திப்பாட்டு 87.ஊசல் 88 எழுகூற்றிருக்கை 89.கடிகைவெண்பா 90.சின்னப்பூ 91. விருத்தவிலக்கணம் 92.முதுகாஞ்சி 93.இயன்மொழிவாழ்த்து. 94.பெருமங்கலம் 95.பெருங்காப்பியம் 96.சிறுகாப்பியம்.
   சதுரகராதியில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தவிர வேறு சிலவகைகளும் இலக்கண நூல்களில் காணப்படுகிறது.
   காலம் தோறும் வளர்ந்துவரும் தமிழ்த்தாய் தனக்கு புதுப்புது அணிகலன்களை அணிந்து வருகிறாள். அதன் மூலம் அழகுத்தமிழ் மென்மேலும் மெருகு பெறுகிறது என்பதில் ஐயமில்லை.
   சென்றவாரம் போல் இந்த வாரமும் காளமேகப்புலவரின் சொல் விளையாட்டு பாடலை ரசிப்போமா? “கா” வரிசையில் காளமேகம் புகுந்து விளையாடியிருப்பதை பாருங்கள்!
   காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

(
கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவிடக்கூடும்).

 என்ன அருமையான கருத்தமைந்த பாடல்! இத்தகைய அறிஞர் பெருமக்களை புதல்வர்களாக கொண்ட தமிழை வணங்கி போற்றுவோம்.

  மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய பார்ப்போம்! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிற்றிலக்கியங்கள் நல்ல தொகுப்பு...

    தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பகல்வெல்லும் கூகையை காக்கை
    இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது.---குறள் கூறும் கருத்தை காளமேகப்புலவர் தானுடைய பாணியில் பாடியிருக்கிறார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!