கிருத்திகை திருவிழா நினைவுகள்!


கிருத்திகை திருவிழா நினைவுகள்!


இன்று சித்திரை கிருத்திகை! எங்கள் பகுதியில் ஆண்டார்குப்பம் முருகர் கோயில் சிறுவாபுரி முருகர் கோயில் பெரும்பேடு முருகர் கோயில்களில் விழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த கொளுத்தும் வெயிலிலும் கந்தன் அருளை பெற கால்நடையாகவும் வண்டிகளிலும்  கோயில்களுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
   இதை கண்ணுற்ற போது பழைய நினைவுகள் வந்தன. ஆண்டார்குப்பம் கோயிலில் எனக்கு அவ்வளவாக பழக்கம் கிடையாது. சிறுவயதில் ஆசானபூதூரில் வளர்ந்தமையால் ஓரளவு வளர்ந்த பிறகு கோயிலுக்கு பூஜைக்கு அனுப்புவார்கள். பெரும்பேடு முருகர் முத்துக்குமாரசாமி பூமியில் இருந்து தோன்றியவர். வள்ளி தேவசேனா இடம் மாறி அமர்ந்த கோலத்தில் ஆஜானுபாகுவாக ஆறரை அடி உயரத்திலிருப்பார். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அதாவது 1978-79 களில் தான் சுவாமி பூமியில் இருந்து கிடைத்தார். பின்னர் கூரை கொட்டகையில் வைத்து பூஜித்து பின்னர் ஆலயம் அமைத்தனர். 1980களில் பெரும்பேடு கோயில் மிகவும் பிரபலமாக இருந்தது. பல ஊர்களில் இருந்து மக்கள் குவிவர். என் தாத்தாதான் பிரதான குருக்கள். உதவிக்கு பல ஊர்களிலிருந்து உறவினர்கள் வருவார்கள். என் தந்தையும் வருவார். பரணி அன்று சங்காபிஷேகமும் மறுநாள் கிருத்திகை அபிஷேகமும் இரவு திருக்கல்யாணம் வீதி உலா எல்லாம் நடைபெறும். பிரபல பாடகி எல். ஆர் ஈஸ்வரியின் கச்சேரி, மதுரை சோமுவின் கச்சேரி சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப்பாட்டு என விழா களை கட்டும்.
   கோயில் வேலை புரிபவர்களுக்கு உணவளிப்பதில் என் தாத்தா தயக்கம் கொள்ள மாட்டார். அந்த சிறு கிராமத்தில் தாமோதர ஐயர் ஓட்டல் என்று ஒன்று இருக்கும். அதில் சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளும் படி கூறிவிடுவார். வேலைக்கு வருவோர் இஷ்டம் போல் விரும்பியதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்று விடுவர். கிருத்திகை விழா முடிந்ததும் தாத்தா கணக்கு செட்டில் பண்ணுவார். இவருக்கு சம்பாதித்ததில் எதுவும் மிஞ்சாது. ஆனால் அந்த ஓட்டல் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அங்கு சாப்பிட்ட இட்லியும் வடைகறியும் இன்னும் என் நாவில் ஊறுகிறது. அதே போல் மந்தார இலையில் மடித்து தரும் மிக்சரின் சுவை அதுவும் கலக்கலாக இருக்கும்.
      கொஞ்சம் வயதான பின் தாத்தா அந்த கோயிலை தனது மைத்துனருக்கு விட்டுக் கொடுத்து விட்டார். கோவிலில் மவுசும் குறைந்து போனது. இப்போது அந்த அளவிற்கு கூட்டம் வருவது இல்லை என்று கேள்விப் பட்டேன். நானும் அந்த கோவிலில் வேலை செய்து இருக்கிறேன். முருகர் ஆலயம் பக்கத்தில் ஜோதீஸ்வரர் ஆலயம் இருக்கும். அங்கு பூஜை செய்வேன். சேவார்த்திகளுக்கு கற்பூர தீபம் காட்டுவேன். பத்து காசு இருபது காசு அதிகம் ஒருரூபாய் என ஒரு கிருத்திகையில் அந்த காலத்தில் நூறு ரூபாய் வரை கிடைக்கும். தாத்தாவிடம் கொடுப்பேன். ரக வாரியாக பிரித்து எண்ணுவார்.

   கோவில் கை மாறிய பின் அந்த கோவிலுக்கு உதவிக்கு செல்வதில்லை! எப்போதாவது தரிசனத்திற்கு மட்டும் செல்வதுண்டு. கோயிலை சுற்றி பெரிய ஏரி ஒன்று இருக்கும். கோவில் முகப்பில் இரு பெரிய அரசமரங்கள் மேடையில் இருக்கும். அதில் ஏராளமான பறவைகள். அதன் கீழே எப்போதும் பறவைகளின் எச்சங்கள் குவிந்து கிடக்கும். கிருத்திகை அன்று ஏராளமான கடைகள் அங்கு குவியும்.
   அப்போது அப்பாவிடம் கேட்டு விசில், பஸ், ஜீப் நாதஸ்வரம் போன்ற பொம்மைகள் ஓவ்வொரு சமயம் வாங்கியது நினைவில் இருக்கிறது. ஒரு கிருத்திகை இரவில் அப்பாவுடன் சைக்கிளில் ஊருக்கு வந்தது நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் சுகமான நினைவுகள்.
   இப்போது வாகன வசதிகள் பெருகிவிட்டன! மாட்டு வண்டிகளை காணமுடிவதில்லை! ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கோயில்களுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நாங்கள் அன்று அனுபவித்த சந்தோஷம் கண்டிப்பாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த வருடம் கூட்டம் குறைவாக உள்ளது என்று காலையில் வழியில் பேசிக் கொண்டார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். முன்பெல்லாம் ஆண்டார்குப்பம் செல்லும் நடைபயணம் செல்வோர் எங்கள் ஊர் வழியாகத்தான் செல்வார்கள். காலையிலும் மாலையிலும் சாரி சாரியாக இவர்களை காணலாம். இரண்டு வருடங்களாக இதை காண முடிவதில்லை!
  ஆனாலும் நடை பயணம் செல்வோருக்கு தாகம் தீர்க்க வசதியாக தச்சூர் போன்ற இடங்களில் நல்ல உள்ளம் படைத்தவர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், கூல்டிரிங்ஸ், தண்ணீர் போன்றவை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
   இன்று இரவு ஆண்டார்க் குப்பம் முருகன் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருவார். இரவு கூட்டம் அதிகமாக இருக்கும். நாளை காலை கூட்டம் கலைய துவங்கும். வீதியில் கடை வைத்து வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
   இது போன்றோர் பிழைக்கத்தானே அன்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. இதுதானே நமது பாரம்பரியம். எனவே சோம்பல் படாமல் விழாவை கண்டு களித்து மகிழ்வோம்.
 படம் உதவி: சொல் அடுக்குகள் சொற்றடுக்குகள் வலைப்பூ
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இனிய நினைவுகள்... வரிகளில் ஏக்கமும் தெரிகிறது...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள் என்றும் இனிமைதான். ஆண்டார் குப்பத்தில் தற்போது இருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  4. திருவிழாக் காலங்களில் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்
    நினைவுகள் சிலவற்றை மறக்கவே முடியாது .சிறப்பான பகிர்வு .
    மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!