Tuesday, May 28, 2013

புகைப்பட ஹைக்கூ 30

புகைப்பட ஹைக்கூ 30


பூவோடு சேர்ந்து
குளித்தது
பூ!

வாடினால்
வதங்கும் மனசு
பூ!

பூ வியாபாரம்
கூடவே குழந்தைக்கு
உபசாரம்!

கொளுத்தும் வெயிலிலும்
குளிர்விக்கிறது அன்னையின்
அன்பு!

வெயிலுக்கு
கவசமானது
தண்ணீர் குளியல்!

வாட்டும் வெயிலில்
வாடாமல் சிரித்தது
குழந்தை!

வாசமுடன்
பாசமும் சேர்ந்தது
பூக்காரியின் குழந்தை!

குடும்பச் சுமையை
குறைத்து வைத்தது
குழந்தை!

பாச ஊற்றீல்
மூழ்கியது
குழந்தை!

உருக்கும் வெயிலில்
பெருக்கெடுத்தது தாயின்
பாசம்!

பூக்கடையில் ஒரு
விலையில்லா
பூ!

குழந்தை குளிப்பது
நீரில்மட்டுமல்ல
தாய்ப்பாசத்திலும்!

வாசம் மணத்தது மல்லியில்!
பாசம் மணத்தது
பிள்ளையில்!

வாடாமல் இருக்க
ஈரமானது
பூ!

ஈரமான மனம்
ஈரமானது
பூ!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Monday, May 27, 2013

யார் இந்த குயிலி?!

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.
தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.
அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.
1776ம் ஆண்டு
வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.
குயிலி. அதுதான் அவள் பெயர்.
வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.
வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,
"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"
"சொல்லுங்கள் ஐயா!''
"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''
"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.
அன்றிரவு.
குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
ஒருநாள். நள்ளிரவு.
வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.
அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.
நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். "பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.
நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.
இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!
(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)

- எல்.முருகராஜ்                                                                                                                                                                                       நன்றி: தினமலர்.

புகைப்பட ஹைக்கூ 29

 புகைப்பட ஹைக்கூ  29


நீர்ச் சிதறலில்
நிறைந்து வந்தது
மகிழ்ச்சி!

குளிர்ச்சி
தந்தது
குழந்தைக்கு
மகிழ்ச்சி!

அக்னி வெயிலை
அசைத்துப் பார்த்தது
ஊற்று நீர்!

கொளுத்தும் வெயிலில்
கொண்டாட்டம்
குழாய்குளியல்!

புல்லுக்கு கொஞ்சம்
பிள்ளைக்கு கொஞ்சம்
பங்கிட்டு மகிந்தது குழாய்!

எல்லையில்லா மகிழ்ச்சி!
அள்ளித்தந்தது
ஊற்றுநீர்!

பீய்ச்சும் நீரில்
பிணைந்தது
பிஞ்சு!

உடலைத் தழுவிய நீர்
உருவாக்கியது
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி!

மலையருவியில்லை!
மழையுமில்லை! குழாயில்
குளியல்!

புல்லோடு சேர்ந்து
குளித்தது
இந்த பூ!

சில்லென்ற தண்ணீரில்
சிலிர்ந்து கொண்டு வந்தது
சிரிப்பு!

கோடை வெப்பம்
குளித்து தணித்தது
குழந்தை!

வெயிலோடு விளையாடி
நீரோடு நீராடும்
குழந்தை!

நீராடுகையில்
நீராட்டம்!
குழந்தை!

நீர்த்திவலைகள்
கிச்சுகிச்சு மூட்டின!
சிரித்தது குழந்தை!

சிக்கன குளியல்
பாடம் சொல்லியது
பாப்பா!

தங்கள் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் மறைவு! அஞ்சலி!

தமிழ் திரையிசையில் தனக்கென  ஒரு தன்னிகர் இல்லாத இடத்தை பிடித்து அரை நூற்றாண்டு காலம் திரையிசையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த பிரபல பின்னனி பாடகர் டி.எம்.எஸ். இவரது  குரல்வளம் இனிமை அருமை, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி என பல நடிகர்களுக்கு ஏற்றவாறு தன் குரலை வேறுபடுத்தி பாடி அந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது.                                                                                                                 91வயது நிரம்பிய பாடகர் டி.எம்.எஸ் சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அவரது உயிரை பறித்துவிட்டது. காலன் அவரது உயிரை பறித்தாலும் அவரது கானங்கள் என்றும் நம்மிடையே நிறைந்திருக்கும். அவரது காதல் ரசம் பாடும் டூயட்களும் தத்துவம் பாடும் பாடல்களும் பக்தி பாடல்களும் என்றும் அழியா இசைக் காவியங்கள்.                   அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்!
                                   இந்த பாடலை யு டியூபில் தேடி பார்த்த போது என் மகள் ஜனனி  ஐ! பாட்டும் நானே பாவமும் நானே! ஜேஜா பாட்டு! என்றது! டி.எம். எஸ்  பாட்டும் அவரே! பாவமும் அவரே! 

அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!


அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!


விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன. மன்னர்கள் பொழுது போக்கிற்காக கானகம் சென்று வேட்டையாடுதல் மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். மன்னர்களுடன் அவரது பரிவாரங்களும் கானகம் செல்லும். ஆனாலும்  காடு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.
   விஜய புரம் காட்டில் திடீரென அரக்கன் ஒருவன் புகுந்துவிட்டான். அவன் முதலில் விலங்குகளை பிடித்து உண்டு கொண்டிருந்தான். பின்னர் மனிதர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்துவிட்டான். இதனால் யாரும் காட்டிற்கு செல்லவே அஞ்சினர். மாதம் ஒரு முறை கானகம் சென்று வேட்டையில் ஈடுபடும் மன்னரும் வேட்டைக்கு செல்வது தடைபட்டது.
   அரக்கன் மிகுந்த பலசாலியாகவும் மனிதர்களையே உண்பவனாக இருந்ததாலும் அவனை வெற்றி பெறுவது எளிதான காரியமாக இல்லை! அரக்கனுடன் போரிட்ட பலர் மாண்டு போயினர்.நாளுக்கு நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகமாகி காட்டு எல்லையோரம் இருந்தவர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்து விட்டான். இதனால் மன்னர் மனம் வேதனை அடைந்தார். மக்களை காக்காமல் மன்னனாக இருந்து என்ன பயன்? என்று அரசன் அரக்கனுடன் மோதுவதற்கு கிளம்பினார்.
    அந்த சமயத்தில் அந்த ஊரில் வசித்த குள்ளன் ஒருவன் அரசனை காண வந்தான். அரசே! நான் அந்த அரக்கனை எப்படியும் வென்று வருகிறேன். எனக்கு உதவியாக பத்தே பத்து வீரர்களை மட்டும் அனுப்புங்கள் என்றான். சபையில் இருந்தோர் எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்! இந்த சபையில் மாபெரும் வீரர்கள் எல்லாம் அரக்கனுடன் மோதி மரணத்தை தழுவி விட்டார்கள். நீ எப்படி அரக்கனை வெல்லப் போகிறாய்? என்று கேலி பேசினார்கள்.
    குள்ளன் மிகவும் அமைதியாக எவ்வளவு பெரிய வீரன் என்றாலும் அவனுக்கு ஒரு பலவீனம் இருக்கும். அதை நாம் ஆயுதமாக கொள்ள வேண்டும். என்னுடைய உருவத்தை கண்டு எடை போடாதீர்கள்! என் திறமையை கண்டு எடை போடுங்கள்! என்று கூறினான்.
     மன்னரும் குள்ளனின் பேச்சை ஆமோதித்து, குள்ளனே! நீ சொல்வது உண்மைதான்! ஆளைக் கண்டு எடை போடுவது தவறுதான்! சரி உனக்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறேன்! நீ அந்த அரக்கனை வென்று வந்தால் நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்! உனக்கு உதவியாக பத்து வீரர்களை அனுப்புகிறேன்! என்றான்.
    மறுநாள் குள்ளன் பத்து வீரர்களுடன் கானகம் நோக்கி புறப்பட்டான். போயும் போயும் இந்த குள்ளனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளதே! இவனோடு செல்லா விட்டால் அரச தண்டனை கிடைக்கும் இவனோடு சென்றாலோ அரக்கனிடம் சாவு நிச்சயம்! என்ன கொடுமை இது என்று வீரர்கள் பேசி கொண்டனர்.
   குள்ளன் அவர்களின் அவநம்பிக்கையான பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான். வீரர்களே! முதலில் உங்களை நம்புங்கள்! அரக்கனை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை குள்ளனாகிய எனக்கே இருக்கிறது! வாள் வேல், வில் வீச்சுக்களில் திறமைப் பெற்ற உங்களுக்கு இருக்க வேண்டாமா? என் மீது நம்பிக்கை இருந்தால் என்னோடு வாருங்கள்! இல்லையேல் நீங்கள் தங்கி விடுங்கள்! நான் அரசனிடம் காட்டிக் கொடுக்க மாட்டேன்! என்றான்.
      அடேய் குள்ளா! உனக்கு ரொம்பவும் அதீத நம்பிக்கைதான்! நீ என்ன எங்களை காட்டிக் கொடுப்பது! நீ எப்படியும் அரக்கனால் சாகடிக்கப் படுவாய்! நாங்கள் தப்பித்து வந்ததாக மன்னரிடம் கூறிக் கொள்கிறோம்! உன்னுடன் எங்களால் வர முடியாது என்று வீரர்கள் கலைந்து சென்றனர்.
   அட கோழைகளே! என்று நினைத்து விட்டு குள்ளன் கானகம் நோக்கி நடந்தான். அப்போது தாகம் மேலிட குளக்கரையில் நீர் அருந்த சென்றான். அங்கு ஒரு எறும்பு நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. குள்ளன் ஒரு இலையில் அதை எடுத்து மேலே விட்டான். அந்த எறும்பு பேசியது மிக்க நன்றி நண்பரே! என்னை காப்பாற்றியமைக்கு! நீங்கள் என்ன காரியமாய் இந்த வழியே செல்கிறீர்கள் என்று கேட்டது.
   அரக்கனை கொல்ல செல்வதாக குள்ளன் கூறினான். நண்பரே! நானும் உங்களுடன் வருகிறேன்! என்று எறும்பு அவனது தோள் மீது ஏறிக் கொண்டது. இன்னும் சற்று தூரம் சென்ற போது ஒரு கழுகு ஒன்று வழியில் அடிபட்டு கிடந்தது. குள்ளன் அதை எடுத்து பச்சிலை பறித்து கட்டி பறக்க விட்டான். அந்த கழுகும் மிக்க நன்றி நண்பா! நீ எங்கே செல்கிறாய்? என்று கேட்டது. குள்ளன் விபரம் சொல்ல நானும் உன் உதவிக்கு வருகிறேன் என்றுஅவனுடன் புறப்பட்டது.

    குள்ளன் கானகத்தை நோக்கி  முன்னேறுகையில் வழியில் சங்கு ஒன்று கிடந்தது. அதை எடுத்து ஊதுகையில் அந்த சங்கு பேசியது, நண்பா! நான் உனக்கு உதவுவேன் எடுத்துக் கொள் என்றது. குள்ளன் அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான். அங்கிருந்து கிளம்பி மேலும் சில மைல்கள் கடந்தான். அப்போது கண்ணிழந்த குருடன் ஒருவன் வழியில் மரத்தடியில் இருப்பதைக் கண்டான். அவனிடம் சென்று நண்பரே! ஏன் இந்த கானகத்தில் தனியாக இருக்கிறீர்கள்!  என்று கேட்டான் குள்ளன்.
      நண்பா! நான் பெரிய வில்லாளி! ஒரு போரில் என் கண்களை இழந்து விட்டேன்! ஆனாலும் சத்தம் வரும் திசை அறிந்து வில் எறிவதில் நான் கில்லாடி! ஆனாலும் என் வீட்டில் என்னை துரத்திவிட்டனர். அதனால் நாடோடியாகத் திரிகிறேன்! ஆமாம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டான் வில்லாளி.
    குள்ளனும் தான் அரக்கனை கொல்ல போகும் செய்தியை சொல்ல, நானும் உங்களுடன் இணைந்து கொல்கிறேன் என்று வில்லாளி இணைந்து கொண்டான்.
   இப்படி இவர்கள் ஐவரும் அரக்கன் வசிக்கும் இடம் சென்றனர். சங்கு சொல்லியது! நண்பா! என்னை எடுத்து ஊது! அரக்கனுக்கு சத்தம் என்றால் ஆகாது என்றது. எறும்பு சொன்னது என்னுடைய உத்தரவுப் படி என் வீரர்கள் இங்கு குழுமி உள்ளனர். அவர்கள் அரக்கனை கடிக்கத் தயராக உள்ளனர் என்றது. கழுகு சொன்னது நண்பா! நான் அரக்கனின் கண்களை குத்திவிடுகிறேன்! என்றது.
     குள்ளன் சொன்னான்! அதோ பாருங்கள்! அந்த அரக்கன் சிறு குன்று போல படுத்து உறங்கிக் கொண்டு இருக்கிறான். மனித வாடை பட்டால் விழித்து எழுந்து விடுவான். நானும் வில்லாளியும் இங்கே ஒளிந்து நின்றுதான் அவனை தாக்க வேண்டும். எறும்புகளே நீங்கள் முன்னேறுங்கள்! அரக்கனின் உடலில் ஏறி ஆங்காங்கே கடியுங்கள்! நவதுவாரங்களில் புகுந்து தொல்லை பண்ணுங்கள்! நான் சங்கெடுத்து ஊதுகிறேன்! சத்தமும் வலியும் தாளாமல் அரக்கன் எழுந்து என்னைத் தேடுவான்! அந்த சமயம் கழுகாரே! நீங்கள் கண்ணிமைப்பதற்குள் அவனது கண்களை குத்தி விடுங்கள்!  அவன் பார்வை இழந்ததும் நான் அவனருகே சென்று ஒளி எழுப்புகிறேன்! வில்லாளரே! நீங்கள் சரமாரியாக அம்புகளை விடுங்கள்! அரக்கன் மாண்டுவிடுவான் என்று சொல்லி விட்டு சங்கெடுத்து ஊதத் துவங்கினான்.
    சங்கோசை சத்தத்தில் எரிச்சல் அடைந்து அரக்கன் விழித்து கொண்டு சுற்றும் முற்றும் தேடினான். அதே சமயம் எறும்புக் கூட்டம் அவன் உடலில் பல இடங்களில் புகுந்து கடிக்க அவன் தவிக்கும் சமயம் கழுகு பாய்ந்துவந்து அவன் கண்களை கொத்தியது. அரக்கன் ஆ! ஐயோ! என்று கத்த வில்லாளி சத்தம் வந்த திசை நோக்கி அம்புகளை பறக்க விட்டான். அம்புகள் உடலில் தைக்க மாண்டு விழுந்தான் அரக்கன்.
   குள்ளன் அரக்கன் இறந்ததை அருகில் சென்று உறுதி செய்து கொண்டான். பின்னர் அவர்கள் அனைவரும் அரசனிடம் சென்றனர். அரக்கனை கொன்ற விதத்தை கூறினான் குள்ளன். அரசன் மகிழ்ந்து போனான்.குள்ளனே! உருவத்தில் சிறியவனாய் இருந்தாலும் பெரிய காரியத்தை சாதித்து விட்டாய்! உனக்கு என்ன வேண்டும் கேள்! என்றான் அரசன்.
  மன்னா! நான் ஒருவனாக இதை சாதிக்க வில்லை! எனக்கு எறும்பு முதல் கண்ணிழந்த வில்லாளி வரை அனைவரும் உதவினார்கள்! எங்கள் அனைவருக்கும் இந்த சாதனை உரியது என்றான் குள்ளன்.
அவனது சுயநலமற்ற பேச்சை கண்டு வியந்த அரசன் அவனை தனது மெய்க்காப்பாளனாகவும் வில்லாளியை பாதுகாவலனாகவும் நியமித்து கழுகு மற்றும் எறும்புகளுக்கு சரணாலயம் அமைத்துக் கொடுத்து கவுரவித்தார்.
  
நீதி: உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, May 24, 2013

வைகாசி விசாகத் திருநாள்!


வைகாசி விசாகத் திருநாள்!உமா கோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித லலாடகம்
ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்!


முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்றருள்வாய்!
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

இன்று வைகாசி விசாகத்திருநாள் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். பால்குடம், காவடி எடுத்து தமிழ் கடவுள் முருகனை பக்தர்கள் வழிபடும் சிறப்பான நாள் வைகாசி விசாக நன்னாள்!
   
   சூரபத்மன் தேவர்களை கொடுமைப் படுத்தி இந்திர லோகத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தை போக்கும் படி படைப்புக் கடவுள் பிரம்மனை நாடினர். வேதங்களின் பிறப்பிடமான பிரம்மன் அவர்களுக்கு அபயம் தந்து, தேவர்களே! உங்களாலோ என்னாலோ சூரபத்மனை அழிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும் ஆலோசனைப் படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார்.
   அது என்ன? என்று அவரை ஆவலோடு நோக்கினர் தேவர்கள்.
சிவகுமாரனால்தான் சூரபத்மனுக்கு அழிவு என்பது எழுதப்பட்ட விதி! நீங்கள் மன்மதனை நாடுங்கள்! அவனது மன்மத பாணம் நிஷ்டையில் இருக்கும் சிவனை எழுப்பட்டும். என்றார் பிரம்மா.
   தேவர்களும் மன்மதனை நாடி தங்களை காக்க சிவனை எழுப்பும் படி கூறினர். தன்னுடைய இனத்தவரின் அழிவை தடுக்க தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மன்மதனும் சிவன் மீது மன்மத பாணம் பொழிய ஒத்துக் கொண்டான்.
    மன்மதனின் ஆற்றல் மிக்க பாணங்கள் சிவனை எழுப்பியது. சிவனின் சுட்டெறிக்கும் பார்வையில் மன்மதன் மாண்டு போனான். அதே சமயம் சிவனின் கண்களில் இருந்து தோன்றிய ஆறு சுடர்கள் கங்கை நதியில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தன. அங்கிருந்த ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அந்த  நாளே வைகாசி விசாக நன்னாள்.
   பின்னர் கார்த்திகேயன் ஆனதும் சூரபத்மனை அழித்து தேவயானை, வள்ளியை மணந்து ஆறுபடை வீடுகளில் அருளாட்சி புரிவதும் நாம் அறிந்ததே!


   வைகாசி விசாகத்தன்று, அதிகாலையில் நீராடி சுத்தமான ஆடை உடுத்தி பால் பழம் மட்டும் அருந்தி அல்லது முழு விரதமாக இருந்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
  முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவண பவ! என்னும் மந்திரம் உச்சரித்து நாள் முழுதும் ஜெபிக்க வேண்டும்.
  திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், போன்ற முருகர் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.
முருகன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
மலைக்கோயில்களில் மலையை வலம் வருதல் சிறப்பாகும்.
வைகாசி விசாக விரதம் மேற்கொள்பவர்களுக்கு புத்திர தோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

   ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க வெற்பை
   கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க செவ்வேள்
   ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
   மாறிய வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு குடைவரைக் கோயில். இங்கு முருகன் குடைவரை சிற்பமாக இருப்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சார்த்தி வழிபடுவார்கள். அங்குள்ள வேலுக்குத்தான் அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆறுபடை வீடுகள் அறிவீர்கள்! ஏழாம்படை வீடு தெரியுமா?
   கோவை அருகே உள்ள மருதமலை முருகன் ஆலயம் ஏழாம் படை வீடு என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் வழிபட்ட முருகர் இவர். இரண்டு கரங்களுடன் பழநி முருகனை போல கையில் தண்டத்துடன் இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தரும் இவருக்கு தலைக்கு பின் புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்துள்ளார். தினமும் ராஜ அலங்காரம், விபூதி காப்பு, சந்தன காப்பு அலங்காரத்துடன் காட்சி தருவார் மருதமலை முருகன்.


வைகாசி விசாக நன்னாள் முருகர் ஆலயங்களில் விசேசமாக கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் முருகர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இறையருள் பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Thursday, May 23, 2013

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5


   சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5


1.நம்ம தலைவரு ரொம்ப புத்திசாலின்னு எப்படி சொல்றே?
 அவர் கட்சிக்கு ஆளும்கட்சின்னு பெயர் வெச்சிருக்காரே!
                                        எம். மேகநாதன்.
2. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு சொன்னதுக்கு தலைவர் என்ன சொல்றார்?
  நல்லா மோந்து பார்த்துட்டு சொல்ல சொல்லுங்கன்னு சொல்றார்.
                                எம். செல்லையா.
3.இதை ரொம்ப நல்ல பாம்புன்னு எப்படி அடிச்சி சொல்ற?
சட்டையை உரிச்ச பிறகும் பனியன் தெரியுது பார்!
                                              பி. கருப்பையா.
4.மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே சொன்னேனே கவனிக்கலையா?
                                               அ. பேச்சியப்பன்.
5.வேலூர் ஜெயில்ல இருக்கற தலைவர் பழமொழியை மாத்தி சொல்றாரா? எப்படி?
  புழலின் அருமை வேலூரில் தெரியுதுங்கிறாரு!
                                ராம் ஆதிநாராயணன்.
6.கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் சீர்வரிசைக்கு வரிவிதித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்னு தலைவர் பேசியிருக்காரே!
  சமச்சீர் கல்வியை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்!
                              எஸ். எஸ். பூங்கதிர்.
7.என்ன சார் வீட்டு வாடகை ரொம்ப அதிகமா சொல்றீங்க?
  பின்னே அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன் தம்பி!
                                     ம.பாலகிருஷ்ணன்.

8.தலைவர் எதுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தாவிட்டாரு?
 வேற வழி.. ஜோசியர் சிவப்பு துண்டு போடச்சொன்னாராம்!
                                 ஆனந்த சீனிவாசன்.
9.சின்ன வயசுல இருந்தே என் பையனுக்கு புளிப்பு மாங்காய் கொடுத்துவரேன்!
எதுக்கு?
அவன் ஒரு அரசியல்வாதி ஆகி வாய் கூசாம பொய் பேசனுமே!
                           சி.பி செந்தில்குமார்.
10இந்த டாக்டர் மட்டும் ஆபரேஷனுக்கு கம்மியா பீஸ் வாங்கிறாரே!
   மயக்க மருந்துக்கு பதிலா, மயக்க பிஸ்கெட்தானே உபயோகிக்கிறார்!
                                  பர்வீன்யூனூஸ்.
11. நீங்க இந்திய குடிமகனா?
   மற்ற மாநிலங்களுக்கு போய் குடியிருக்கற அளவுக்கு வசதி இல்லீங்க... அதனாலே இங்கேயே தமிழ்நாட்டு குடிமகனா இருக்கேன்.
                                       சீத்தா தம்பி.
12.என்னது மாப்பிள்ளை சீடை காண்பிக்கிறாரா?
  பின்னே எத்தனை காலந்தான் மாப்பிள்ளை முறுக்கை காண்பிக்கிறார்னு சொல்றதாம்!
                                       ரிஷிவந்தியா.
13.தாலுகா ஆபிஸ்ல பட்டா வாங்குற இடத்துல என்ன தகறாரு?
  தலைவர் ஆரிய ‘பட்டா’ வேணும்னு கேட்டாராம்!
                              பெ. பாண்டியன்.
14.என்ன அமைச்சரே! இந்த புலவர் வாழ்த்தி பாடியதில் ஒரு வரி கூட புரியவில்லையே!
  அவர் புலவர் இல்லை மன்னா! அர்ச்சகர்!
                                      சி. சாமிநாதன்.
15 உன் கணவர் ஏன் அலுத்துக்கிறார்?
   முகூர்த்த நாள் இல்லாத சமயத்தில் பையன் செருப்பு வாங்கித்தரச் சொல்லி கேக்கறான்.
                               பர்வீன் யூனூஸ்.
16.என்னப்பா சர்வர் எல்லா ஓட்டல் குப்பைத்தொட்டியிலும் நாய்கள்தான் நிற்கும் இங்க கழுதை நிற்குதே!
 அது பேப்பர் ரோஸ்ட்டுக்கு நிற்குது சார்!
                             பெ. பொன்ராஜாபாண்டி.
17. அந்த ரவுடி தொழிலுக்கு புதுசுன்னு எப்படி சொல்றீங்க?
    என் எதிரியைக் காட்டி அவரை தூக்கணும்னு சொன்னேன். முடியாதுங்க... அவரு ரொம்ப குண்டா இருக்காருன்னு சொல்றானே!
                                        அனார்கலி.
18.என்னப்பா இது அப்ளிகேசன் பார்ம்ல சாமி போட்டோவை ஒட்டி வச்சிருக்கே!
அது நான் தான் சார்! ஸ்கூல் டிராமாவுல பரமசிவன் வேஷம் போட்டப்ப எடுத்த படம்!
                                       கி. திவ்ய ஜோதி.

19.நீதான் டெய்லராச்சே.. அப்புறம் எதுக்கு கார்ப்பெண்டர் வேலை கத்துக்கணும்னு ஆசைப்படறே?
 வெயில் காலம் வந்தாலே சன்னல் வச்ச ஜாக்கெட்தான் வேணும்னு நிறைய ஆர்டர் வந்துடுதே!
                                        விஜயநிர்மலன்.
20 டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்துடுச்சி!
 அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்துப் போடுங்க!
                                   பி.. கவிதா
நன்றி: தினமலர்- வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Wednesday, May 22, 2013

ஒரு காலை இழந்த கைப்பந்து வீராங்கணை அருணிமா : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், அருணிமா சின்கா, 25. தேசிய அளவில், கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். 2011ம் ஆண்டு, லக்னோவிலிருந்து, டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.ரயிலில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளிடம் இருந்து உடமைகளை திருடினர். அவர்களை தீரத்துடன் எதிர்த்து போராடிய அருணிமாவை தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்தனர்.அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயில் மோதி, பலத்த காயமடைந்த அருணிமா, ஒரு காலை இழந்தார்.
முழங்காலுக்கு கீழே, அவரின் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த அவர், பல மாதங்கள், படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார்.பிறர் தன்னை பரிதாபமாக பார்ப்பதை தவிர்க்க, மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என நினைத்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, மலையேற்றக் குழுவில் சேர்ந்து, பயிற்சி பெற்றார்.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய, உலகின் முதல் இந்தியப் பெண் என போற்றப்பட்ட, பச்சேந்திரி பால், காலை இழந்த அருணிமாவுக்கு பயிற்சி அளித்தார்.உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உச்சியை, நேற்று காலை, 10:55 மணிக்கு அடைந்த அருணிமா, அந்த சாதனையை படைத்த, ஒரு காலை இழந்த, முதல் இந்தியப்பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

பிறரை நம்பி வாழ்பவரிடம் இருப்பது எது? பொன்மொழிகள்!


ஆன்றோர் பொன்மொழிகள்!


உள்ளதை சொன்னால் பொல்லாதவன்: சொல்லாமல் இருந்தால் அறிவில்லாதவன்.
                                                         -வால்டேர்
மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான் எங்கும் விலங்கு பூட்டப்பட்டு காணப்படுகிறான்
                                                           -ரூசோ
சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பது இல்லை!
                                                    -மெட்டர்னிக்
முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்: கெடுதல்கள் பறந்துபோய்விடும்: உலகம் முழுவதும் மாறிவிடும்
                                                     -விவேகானந்தர்.

வெற்றி பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.
                                                      கார்ல் மார்க்ஸ்
தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
                                                 -சாக்ரடீஸ்
உங்களால் நம்பிக்கையுடன் கனவு காணமுடியும் என்றால் கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில் செய்து முடிக்க முடியும்.
                                                       -ஜாண்டுவே
எதையும் செய்யாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்.
                                                   வில்லியம் ஜேம்ஸ்
வெற்றியை காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள் வேறு குறுக்குவழிகள் இல்லை!
                                                        எட்மண்ட்பர்க்
வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிடக்கூடாது.
                                                  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
சின்னஞ்சிறு செலவானாலும் கவனமாக இரு. அடித்தளத்தில் உள்ள சிறிய ஓட்டை கூட கப்பலையே கவிழ்த்து விடும்.
                                             ப்ராங்க்ளின்.
ஆணவம் கொண்டோருக்கு ஆபத்து எப்போது வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
                                                   வால்டேர்.
பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து கொண்டே இருக்கும்.
                                            வில்லியம் டெம்பிள்.
இந்த நிமிடத்தை முறையாக பயன்படுத்தும்போது இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்கொள்கிறோம்.
                                                      வால்டேர்.
உழைப்பு, மூன்று பெருந்தீமைகளை நம்மிடம் இருந்து நீக்குகிறது. அது, தொந்தரவு, தீயஒழுக்கம், தரித்திரம்.
                                               வால்டேர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...