ஏமாந்த சோனகிரியா நீங்கள்?!


ஏமாந்த சோனகிரியா நீங்கள்?!

 ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்களின் ஊடே அவ்வப்போது ஏமாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். நினைப்பது எல்லாம் நிறைவேறிவிட்டால் அப்புறம் மனிதனை கையில் பிடிக்க முடியாதுதான். நினைப்பது நடக்காத போது ஏற்படுவது ஏமாற்றம்தான். ஆனால் கிடைப்பதை ஏற்றுக்கொண்டால் அந்த ஏமாற்றம் பெருமளவில் குறைந்து போகும்.
    ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதொ ஒரு தருணத்தில் எந்த விஷயத்திலாவது ஏமாற்றப்பட்டிருப்போம். அப்போது நமது மனம் படும் வேதனையைத்தான் இந்த பதிவு அலசப்போகிறது. ஏமாறுதல் இந்த உலகில் சகஜம்தான். ஆனால் தொடர்ந்து நீங்கள் ஏமாந்துகொண்டிருந்தால் புத்திசாலியல்ல!
     சில  சமயங்களில் நாம் தெரிந்தே ஏமாறுகிறோம்! அதில் தேர்தலில் வாக்களிப்பது. இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்களிப்பவர்கள் அப்பாவிகள். ஆனால் எந்த கட்சி வந்தாலும் நமக்கு நன்மை ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை என்பது என்னை போல அறைகுறையாக படித்தவர்களின்?! எண்ணப்போக்கு! இந்த சமயத்தில் நாம் வாக்களிக்காமல் விட்டு விடுகிறோமோ? அது பெரும் குற்றம் அல்லவா? அதனால் இருக்கிற குப்பையில் நல்ல குப்பையாக ஒன்றை தேர்ந்தெடுக்கிறோம். அப்புறம் அவர்கள் ஏமாற்றுவதை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
     சின்னவயதில் ஏப்ரல் ஒன்று அன்று உருளைக் கிழங்கில் ஏ எப் என்று எழுதி இங்க்தடவி சட்டையில் முதுகில் குத்திவிடுவார்கள். அல்லது ஏதாவது பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் சக மாணவர்கள் அப்போதும் ஏமாந்து போய் இருக்கிறேனே தவிர ஏமாற்றியது கிடையாது. தொடர்ந்து ஏமாந்து கொண்டிருந்தால் அங்கு ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
    ஒருவனை ஒருநாள் ஏமாற்றலாம்! தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்ற சொலவடையே உண்டு. விஷயத்திற்கு வருவோம். ஏமாற்றம் அடைந்த வலியும் வேதனையும் ஏமாற்றியவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை! ஆகா இன்று ஏமாற்றி பணம் கறந்தாயிற்று என்றோ வேறுவகையிலோ அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஏமாந்தவன் அடையும் வேதனை சொல்லொனாதது. அடடா! ஏமாந்துவிட்டோமே! இப்படி ஆகிவிட்டதே! என்று அவன் பல முறை உள்ளம் குமுறுவான். இரவில் தூக்கம் வரமால் தவிப்பான். இன்னும் மனம் தளர்ந்தவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.
     இது எல்லாம் யாரை பாதிக்கும் ஏமாற்றியவனை அல்லவா பாதிக்கும்! அதனால்தான் சொன்னார்கள் ஏமாற்றாதே ஏமாறாதே! என்று.  டிகிரி படித்துக் கொண்டிருந்த சமயம் நண்பர் ஒருவரோடு சென்னை பாரிஸ் கார்னரில் சென்று கொண்டிருந்த போது  ஒருவர் எதிரே வந்து சார் ப்லிம் ரோல் இருக்கு  ஒருபாக்ஸ் அப்படியே தரேன் இருநூற்றைம்பது ரூபாதான்! என்றார். அப்போது கோனிகா ப்லிம் ரோல் 45ரூபாய் விற்றுக் கொண்டிருந்த சமயம். விலை கம்மியா இருக்கே! வேண்டாம் என்று நண்பரை எச்சரித்தேன்.
     அவன் என்னை விட உஷார் பேர்வழிதான். ஆனாலும் சபலம்! ரோலை பிரிச்சு காட்டு! வெறும் டப்பாவை கொடுத்து ஏமாற்றாதே! என்றான். அந்த ஆள்  ஒரு சந்தில் கூட்டிச்சென்று ஒரு பெட்டியைத்திறந்து சிறிது ரோலை உருவியும் காட்டினான். நண்பருக்கு திருப்தி! சரிசரி! இருநூற்றைம்பது எல்லாம் தரமாட்டேன். நூற்றைம்பது ரூபாதான் என்றார். சார் ஒரு இருநூறு கொடுங்கள் என்றான் அந்த ஆள். இல்லை இல்லை இன்னும் பத்து ரூபா எக்ஸ்ட்ரா தரேன்! வேணும்னா கொடு இல்ல கிளம்பு என்றார் நண்பர். அவனும் கொடுத்துவிட்டு சென்று விட்டான். நானூற்றைம்பது ரூபாய் பொருளை 160 ரூபாய்க்கு வாங்கியதில் நண்பருக்கு மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்து கேமராவில் போட ரோலைப் பிரித்தால் எல்லாம் புஸ் ஆகிப் போயிற்று ஒன்று கூட முழு ரோல் இல்லை! நான்கைந்து பிலிம்களை மட்டும் கொண்ட ரோல் அது. நண்பருக்கு ஏமாற்றமாகிவிட்டது. அவ்வளவு தூரம் பிரிச்சு பார்த்தும் என்னை ஏமாற்றிவிட்டானே பாவி! என்று ஒருவாரம் வரை புலம்பிக் கொண்டிருந்தார்.
     நாமாக மனது வந்து ஒரு நூறோ ஐநூறோ யாருக்கோ தந்துவிட்டால் கூட நமக்கு மனம் வலிப்பதில்லை சந்தோஷம் அடைகிறது. அதே சமயம் ஒருவனால் ஒரே ரூபாய் ஏமாந்து போனால் கூட அந்த வலி ஆயுள் வரை நம்மிடம் இருக்கும். ஆனால் ஏமாளி ஆவது நம்முடைய தவறான அணுகு முறையினால்தான்!
    எப்படி என்கிறீர்களா? அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நிச்சயமாக நீங்கள் ஏமாற்றவில்லை;நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. ஒருவனால் ஒரே ரூபாய் ஏமாந்து போனால் கூட அந்த வலி ஆயுள் வரை நம்மிடம் இருக்கும்.//உண்மைதான்

    ReplyDelete
  3. உண்மை தான்... ஏமாறுவது-குற்றம் நம் மீது தான்....

    ReplyDelete
  4. நானும் இந்த பதிவை பார்த்து ஏமாந்து போய் விட்டேன்.... அடுத்த பதிவில் பார்க்கலாம் என்றவுடன்

    ReplyDelete
  5. உண்மைதான் ஏமாறுவது நம்மீது உள்ள குற்றம்தான்

    ReplyDelete
  6. ஏமாற்றம் தவிர்க்க இயலாததுவே..எச்சரிக்கையாக இருந்தால் குறைக்க முயலலாம்..வாழ்துக்கள் !

    ReplyDelete
  7. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

    ReplyDelete
  8. மறுக்க முடியாத உண்மை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!