சரவணன்- மீனாட்சி


சரவணன்- மீனாட்சி

இப்படியெல்லாம் தலைப்பு வச்சாத்தான் நாலு பேரு நம்ம சைட்டுக்கு வந்து போறாங்க! அதனாலதான் இந்த தலைப்பு! மற்றபடி விஜய் டீவியின் சரவணன் - மீனாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
   இந்த கதை நடக்கும் வருடங்கள் 85-86. அதாவது இன்றைக்கு 27 வருடங்கள் முந்தையது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசானபூதூர் என்னும் அழகிய சிற்றூரில் என் தாத்தா வீட்டில் தங்கி பெரும்பேடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் ஆறாம் வகுப்பில் நான் தான் முதல் மாணவன். எனக்கு போட்டியாக வேல்முருகன், சரவணன், மீனாட்சி இருந்தனர்.
  இதில் வேல்முருகன், சரவணன் பெயர்கள் அப்படியே தந்துள்ளேன். மீனாட்சியின் பெயர் வேறு. அவர் இப்போது உயிருடன் இல்லையெனினும் நாகரீகம் கருதியும் நட்பை கருதியும் பெயர் வெளியிடவில்லை!
      நாங்கள் நால்வரும் நண்பர்கள்: ஒரு மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் முதலிடம் சில சமயம் மாறும். எப்படி இருப்பினும் முதல் நான்கு இடங்களில் நாங்கள்தான். இதில் சரவணன் லட்சுமி புரம் என்ற ஊரில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். பெரும்பேட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஊர். வேல்முருகன் லிங்கபையன் பேட்டையைச் சேர்ந்தவன். அதுவும் பெரும்பேட்டில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர். மீனாட்சி பெரும்பேட்டை சேர்ந்தவள் அவரது தந்தை துவக்கப்பள்ளி ஆசிரியர்.
     நான் ஆசானபூதுரில் இருந்து வந்து கொண்டிருந்தேன் பள்ளிக்கு நால்வரும் நான்கு ஊர் என்றாலும் பள்ளி எங்களை ஒன்றினைத்தது. அந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஆசானபூதூருக்கு பேருந்து வசதி கிடையாது. இடையில் மினிபஸ் சென்று இப்போது நின்றுவிட்டது. வயல் வரப்புகள் ஊடே பயணம் செய்து பள்ளிக்கு வருவோம். அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி அது.  மூன்றே மூன்று கட்டடங்கள் சீமை ஓட்டுடன் இருக்கும். தளம் கூட கிடையாது. விளையாட்டு மைதானம் கிடையாது. எதிரே வயல் பக்கவாட்டில் ஏரிக்கரை என  அந்த பள்ளி இருக்கும்.
    லட்சுமி புரத்திற்கும் லிங்கப்பையன் பேட்டைக்கும் பேருந்து வசதி உண்டு. பொன்னேரியில் இருந்து பெரும்பேடு வரும் பேருந்துகள் இந்த வழியாகத்தான் வரவேண்டும். அப்போது பொன்னேரியில் இருந்து பெரும்பேடு வர ஒரு ரூபாய்தான் கட்டணம். இடையில் ஏறினால் இன்னும் கம்மி.
   ஆனாலும் அப்போது இலவசபஸ் பாஸ் கிடையாது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் வருவார்கள். மேலும் பள்ளிநேரத்திற்கு சரியாக ஒரு பேருந்தும் அதை விட்டால் காலையிலேயே ஒரு பேருந்தும் வரும். இது மாணவர்களுக்கு சரிபட்டு வராது, எனவே கும்பலாக நடந்து வருவார்கள் சுமார் 300 மாணவர்கள் வரை இந்த பள்ளியில் படித்தார்கள்.
      ஆறாம் வகுப்பு படிக்கையில் சரவணன் தான் வகுப்பு லீடர். ஆசிரியர் ஏதாவது அலுவலகப் பணி அல்லது பேப்பர் திருத்துதல் போன்ற பணியில் இருக்கும் சமயம் லீடர்தான் வகுப்பை கவனித்துக் கொள்ளவேண்டும்.பேசும் மாணவர்களின் பெயரை எழுதி ஆசிரியர் வந்தவுடன் தரவேண்டும். மிக அதிகமாக பேசினால் அவர்களின் பெயரை எழுதி பக்கத்தில் ஓவர் என்று எழுதி வைத்து கொடுப்பார்கள் சிலசமயம் இந்தஓவர் என்பது பெயருக்கு பின்னால் மிகமிக ஓவர் என்று நான்கு ஐந்து முறை எழுதி இருக்கும். தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்க லீடர்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள்.
   பக்கத்து பையனிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் கூட பெயர் எழுதி ஓவர் என்று போட்டுவிடுவார்கள்.ஆசிரியர்கள் அவர்களை தண்டிப்பார்கள். ஆசிரியர்களுக்கு லீடர் சொல்வதுதான் வேதவாக்கு. பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.
   சரவணன் தான் எங்கள் க்ளாஸ் லீடர். அவன் இந்த பழிவாங்கும் வேலையை செய்ய மாட்டான். ஆனால் தனக்கு வேண்டப்பட்டவர்கள் பேசினால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். இது பலமுறை நடந்தது. நான் அவனை கண்டித்தும் கேட்கவில்லை! நம்ம பையன் தாண்டா! விடு! என்பான். அதே போல் பெண்களுக்கும் கருணை காட்டுவான். மீனாட்சி அவர்கள் தோழி என்று யாராவது பேசிக் கொண்டே இருப்பார்கள் ஒரு எச்சரிக்கை விடுவானே தவிர பெயர் எழுதமாட்டான்.
    அதே சமயம் வேறு யாராவது பேசிவிட்டாலோ உடனே எழுதி விடுவான். அவர்களையும் ஒருதடவை மன்னித்து விட்டால் சரி என்றிருப்பேன். அப்படி செய்ய மாட்டான். அப்போது எங்கள் வகுப்பாசிரியர் திரு தசரதன். தமிழ் ஆசிரியர். தூயதமிழில் பேசுவார். அவரிடம் சென்று  சரவணன் இவ்வாறு செய்வதாக கூறினேன்.
  அவர் மேலும் கீழும் பார்த்தார்! சரி இப்ப என்ன செய்ய சொல்றே? என்று கேட்டார்!
   லீடரை மாற்றனும்! என்றேன்.
  யாரை போடலாம்? என்றார்.
நீங்கதான் சார் சொல்லனும் என்றேன்!
சரி அப்ப நீயே லீடரா இருந்துரு என்றார்!
  எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அப்புறம் என்ன நடந்தது நாளை வரை காத்திருங்கள்! எனக்கும் பதிவு தேத்த ஒரு மேட்டரும் கிடைக்க மாட்டேங்குது. இந்த மொக்கையாவது ஒரு ரெண்டு நாளுக்கு தேத்திடறேன்!
(நினைவுகள் வளரும்)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அந்தக்கால பள்ளிகளைப் பற்றி உங்களின் பார்வை... மேலும் தொடருங்கள்...

    சரவணன்- மீனாட்சிக்காக (?) வரவில்லை... எனது dashboard-ல் உங்களின் பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. உடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி! என்னைப் போன்ற புதியவர்களை ஊக்குவிக்கும் உங்களை சந்தேகப்படுவேனா? தினம்தோறும் வந்து கருத்திட்டு செல்லும் உங்களை நன்கு அறிவேன்! சில நாட்களாக பேஜ் வியு குறைந்தது! அதனால்தான் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒரு பதிவு! நன்றி!

      Delete
    2. நீங்க 2011 ல இருந்து எழுதுறீங்க புதியவர்ன்னு சொல்றது காமெடி தான

      Delete
    3. 2011ல் இருந்து எழுதினாலும் இன்னும் புதியவனாத்தானே இருக்கேன்! இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?

      Delete
  2. நீண்ட நாள் களைத்து இந்தப் பக்கம் வருகிறேன் என்று நினைக்கிறன்... முதலிலும் முடிவிலும் இருக்கும் குசும்பு இன்னும் உங்களை விட்டு அகலவில்லை போல...

    மிக மிக மிக ஒவர் தான் எப்போதும் என் பெயரின் அருகிலும் இருக்கும்.... தொடர்ந்து வருகிறேன் நாளைய பதிவை படிக்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க! நீங்க எல்லாம் வராதது எனக்கு கஷ்டமா இருந்தது! எப்படி உங்களை வரவழைச்சேன் பார்த்தீங்களா? நன்றி!

      Delete
  3. பிறகு என்ன ஆச்சு?
    பசுமையானபழைய நினைவுகள் எப்போதுமே சுகமானவைதாம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா! இன்றைய பதிவில் தொடர்கிறது நினைவுகள்!

      Delete
  4. ஆமாங்க ரொம்ப நேரமா ஊரைப்பத்தியே சொல்லிட்டிருக்கீங்களேன்னு கேக்கலாம்னு பாத்தா பொசுக்குனு அதோட தொலைக்காட்சி தொடர் மாதிரி தொடரும் போட்டுடீங்களே..(தொடர்ச்சியை படிக்க வந்துதானே ஆகணும்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குதுங்க சுரேஷ்.)

    ReplyDelete
    Replies
    1. எங்க அக்கா வர்றீங்க! நான் ஊரை பத்தி சொல்லலை ஸ்கூலை பத்தி சொன்னேன்! அடிக்கடி வாங்க நம்ம பக்கத்துக்கு! நன்றி!

      Delete
  5. மலரும் நினைவுகள்..சுவாரஸ்யம். தொடருங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி! தொடர்ந்து வாங்க! சுவாரஸ்யம் காத்திருக்கு!

      Delete
  6. ஓ ! தலைப்பின் பெயர்க் காரணம் இங்கே இருக்கிறதா ?
    இருந்தாலும் எதற்கு இந்த வேண்டாத பப்ளிசிடி ?
    சரக்கே போதுமே . எதற்கும் அசையாதீர்கள் .
    வருவது வரட்டும் செல்வது செல்லட்டும் .
    நம் கடன் பதிவு இட்டு கிடப்பதே .
    இனிதே தொடர்க .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!