Sunday, March 31, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12

அன்பான வாசக பெருமக்களே! ஏதோ விளையாட்டாக இந்த பகுதியை தொடங்கினேன். தமிழ் சொற்களையும் பொருட்களையும் இலக்கியங்களையும் படித்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்பது உண்மை! இன்றைய பகுதிக்கு எதை எழுதலாம் என்று யோசித்து தமிழ் நூல்களை புரட்டியதில் சுவாரஸ்யமான பகுதி ஒன்று கிடைத்தது. அதை கீழே தந்துள்ளேன். படித்து கருத்திடுங்கள்!

திசைச்சொற்கள்:
    திசைச்சொற்கள் என்றால் என்ன என்று தெரியுமா? படிக்கிற காலத்தில் படித்து இருப்போம்! இப்போது மறந்து போயிருக்கும். சரி அதை அப்புறம் பார்ப்போம். இப்போது கீழே உள்ள பத்தியை படியுங்கள்.
      நம்பி குல்லா வாங்க ரிக்சாவில் ஏறி பஜாருக்குச் சென்றான். கடைக்குள் நுழைந்தவுடன் அலமாரியில் எக்கச்சக்க குல்லா இருப்பதை பார்த்தான். விற்கும் நபரிடம் “குல்லா என்ன விலை?” என்று கேட்டான். விலை இருபத்தைந்து ரூபாய். ஒரு குல்லா வாங்கினால் ஒரு பேனா இனாம் என்றான் கடைக்காரன். விலை ஜாஸ்தியாக உள்ளது என்று கூறிக்கொண்டே துட்டை எண்ணிக் கொடுத்தான் நம்பி. பீரோவில் இருந்து குல்லாவை எடுத்து கடுதாசியில் கட்டிக்கொடுத்தான் கடைக்காரன்.
    படித்து விட்டீர்களா? இது என்ன மொழி? தமிழ் மொழிதான் என்கிறீர்களா? மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். புரியவில்லையா? இது தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும் இதில் பல மொழிச் சொற்கள் கலந்து இருக்கின்றன. தாய் மொழி தமிழ் பிற மொழிகளையும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இப்படி தமிழ் இல்லாமல் பிற மொழிகளில் இருந்து வந்து கலந்த சொற்களை திசைச் சொற்கள் என்கிறோம்.  இந்த பத்தியில் திசைச்சொற்களையும் அது எந்த மொழியில் இருந்து  வந்துள்ளது என்று அறிய முடிகிறதா? முடியாவிடில் பரவாயில்லை! கீழே கொடுத்துள்ளேன் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
      
1.   குல்லா - பார்ஸி
2.   ரிக்ஷா- ஜப்பானி
3.   பஜார்-பார்ஸி
4.   அலமாரி-போர்ச்சுகீசியம்
5.   எக்கச்சக்கம்- தெலுங்கு
6.   நபர்- அரபி
7.   பேனா- போர்ச்சுகீசியம்
8.   இனாம்- உருது
9.   ரூபாய்-இந்துஸ்தானி
10. ஜாஸ்தி-உருது
11. துட்டு- டச்சு
12. பீரோ-பிரெஞ்சு
13. கடுதாசி-போர்ச்சுகீசியம்.

திசைச்சொற்களை அறிந்து கொண்டீர்களா இனி இலக்கியம்.


புறநானூற்றில் இருந்து ஒரு பாடல்

சிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்றவயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.
                             காவற் பெண்டு.


விளக்கம்   இந்த சிறிய இல்லத்தின் தூணை பற்றிக் கொண்டு என்மகன் எங்கு உள்ளான் என்று கேட்கிறாய்? என் மகன் எங்கு இருப்பான் என்று நான் அறிய மாட்டேன். காடுகளில் வசிக்கும் புலி ஓய்வெடுக்க வரும் குகை போன்றது அவனை ஈன்ற என் வயிறு. வீரம் மிக்க அவன் போர்க்களத்தில் இருப்பான்.

தன்னுடைய வீர மகனை போர்க்களத்தில் இருப்பான் என்று கூற இந்த தாய் பயன் படுத்தும் உவமையினை ரசியுங்கள்! புலி சேர்ந்து போகிய கல்லளை. புலி ஓய்வெடுக்க வரும் குகை. அதற்கு ஈடாக தன் வயிற்றினை கூறிய தாய் மகனை புலி என்று வீர மகனாக உருவகம் செய்கிறார். அழகிய வீரம் மிக்க பாடல்!  படித்ததும் பிடித்த ஒன்று.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! அதுவரை வணக்கங்களுடன் விடை பெறுகிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, March 30, 2013

நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!


நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!

முழுத்திருடன் கதை!


தன்னுடைய தம்பிகள் மூவரும் தங்களுடைய சாமர்த்தியமான திருட்டினால் தந்தையிடம் பேர் வாங்கிவிட்ட நிலையில் தன்னுடைய பெயரை நிலை நாட்ட முழுத்திருடன் குந்தள நகரம் வந்தான். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை அணுகினான். அடேய்! தம்பிகளா! இந்த ஊரில் என்னடா விசேஷம்? என்று வினவவும் செய்தான்.
   மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும், அண்ணே! இந்த ஊரில் மூன்று நாட்களாக திருடன் ஒருவன் புகுந்து செட்டியாரையும் தலையாரியையும் மந்திரியையும் ஏமாற்றி பொருட்களை கொள்ளையடித்து போய் விட்டான். எனவே இன்று மன்னரே அந்த திருடனை பிடிப்பதாக் சபதம் செய்து இருக்கிறார். என்று விவரம் சொன்னார்கள்.
   இதைக்கேட்ட முழுத்திருடன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். குந்தள நகரம் சென்று பாக்கு புகையிலை உப்பு இனிப்பு போன்ற சாமான்களை வாங்கி ஒரு பெரிய கோணிப்பையில் வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு சிறிய கூண்டு விளக்கு ஒன்றும் கொஞ்சம் விளக்கெண்ணையும் ஓலைப்பாய்கள் இரண்டும் வாங்கிக் கொண்டு வியாபாரி போல மாறுவேடமணிந்து தலைநகரின் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறமானபாதையில் விளக்கேற்றிவைத்துக் கொண்டு ஓலைப்பாய்களை விரித்து வெற்றிலை பாக்கு புகையிலை முதலானவைகளை பரப்பி வைத்து வியாபாரி போல அமர்ந்து இருந்தான்.
    திருடனை பிடிப்பதற்காக கங்கணம் பூண்ட கோபால வர்ம மகாராஜா குதிரை மீது ஏறி முப்பது தலையாரிகளுடன் நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு நகருக்குள் வெளியூர் திருடன் நுழைய முயலும் போதே பிடித்துவிட வேண்டும் என்று எண்ணியவனாக எல்லைப் புறத்தே அடைந்தான். ஒருபுறம் தன்னந்தனியனாக சிறுவெளிச்சம் வருவதை கண்டு முழுத்திருடன் கடை இருக்கும் இடத்தை அடைந்தான்.
    கடைக்காரனைப் பார்த்து, யாரடா நீ? இந்த இரவு நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்? என்று அதட்டலாக கேட்டான் மன்னன். திருடனான வியாபாரியும் பயந்தவன் போல நடித்து, மன்னா! இந்த வழியாக இரவு நேரத்தில் திருடர்கள் வந்து இரவு நேரத்தில் நகரத்தில் கொள்ளையடித்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் எல்லாம் என் கடையில்தான் வெற்றிலை பாக்கு முதலிய வாங்கி செல்வார்கள். ஜகஜ்ஜால திருடன் ஒருவன் இரண்டு நாட்களாய் என்னிடம் நிறைய திண்பண்டங்களையும் வெற்றிலை பாக்கு முதலியன வாங்கிச் சென்றான். எனக்கு நல்ல வியாபாரம்! அதனால்தான் இங்கு கடை விரித்து இந்த இரவில் காத்திருக்கிறேன்! என்று சொன்னான்.
     உடனே அரசன், இந்த வியாபாரியின் உதவியால் திருடனை பிடித்துவிடலாம் என்று எண்ணி, ஏய்! கடைக்காரா! உன் உதவி எனக்கு தேவை! இரண்டு நாளாக தப்பிச் சென்ற திருடனை பிடிப்பதாக சபதம் செய்துள்ளேன். நீ உதவி புரிந்தால் உனக்கு நிறைய பொருள்களை பரிசாக தருகிறேன். திருடன் வந்தால் எனக்கு தெரிவித்தால் உடனே அவனை பிடித்து விடுகிறேன்! என்றான்.
   வியாபாரியாக நடித்த திருடனும் மன்னா! தாங்களும் பரிவாரங்களும் இங்கே இப்படி நின்றிருந்தால் திருடன் எப்படி வருவான்? வேற்றாள்கள் நிறைய இருந்தால் திருடன் இங்கே வர மாட்டான். அதனால் உங்கள் பரிவாரங்களை எல்லாம் வேறு வழிகளில் திருப்பி விடுங்கள். நீங்கள் மட்டும் தனித்து என்னுடன் இருந்தால் திருடனை நான் அடையாளம் காட்டுகிறேன்! நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.
    அரசனும் பரிவாரங்களை எல்லாம் திருப்பி வேறு இடங்களில் காவல் புரிய அனுப்பி விட்டு வியாபாரியுடன் அமர்ந்தான். இப்போது வியாபாரி, மன்னா! தாங்கள் இப்படி சர்வ அலங்காரமான ஆபரணங்களுடன் என்னுடன் இருந்தால் மன்னன் என்று திருடன் அறிந்து கொண்டு வராமல் போய்விடுவான். எனவே நீங்கள் உங்கள் அணிகலன்களை எல்லாம் கழற்றி மூட்டையாக கட்டி என்னிடம் கொடுங்கள் சாதாரண உடையில் இருந்தால் தான் திருடனுக்கு சந்தேகம் வராது. என்றான். மன்னனும் அவனது கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்து ஆபரணங்களை கழற்றி மூட்டை கட்டி வியாபாரியிடம் கொடுத்துவிட்டு சாதாரண உடையில் அமர்ந்தான். சிறிது நேரம் சென்றது. திருடன் வரவில்லை! என்னடா! திருடன் வரவில்லையே! என்று மன்னன் கேட்க, புதியவர்கள் என்னருகில் இருப்பதை அறிந்து அந்த திருடன் வரவில்லையோ என்னமோ? ஒன்று செய்யலாம் நீங்கள் இந்த கோணிப்பையில் புகுந்து கொள்ளுங்கள் நான் மூட்டையாக கட்டி வைத்து விடுகிறேன்.ஏதோ சாக்குப்பை என்றெண்ணி திருடன் வருவான். அப்போது நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்! என்றான்.
  நல்ல யோசனை என்று முட்டாள் மகாராஜாவும் கோணிப்பைக்குள் புகுந்து கொள்ள வியாபாரி பையை இறுக கட்டினான். அதன் மீது ஒரு தண்ணீர் தொட்டியை கவிழ்த்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டு அரசனுடைய நகைகள் ஆடைகளை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான்.

    அரசனுடைய வீரர்கள் வியாபாரியின் இடம் இருளாக இருப்பதை அறிந்து அங்கு வந்து திருடன் அகப்பட்டான் என தேடினர் இருட்டில் தண்ணீர் தொட்டியை உருட்ட உள்ளே கோணிப்பை மூட்டை இருப்பதை கண்டு அரசன் தான் திருடனை பிடித்து தப்பிக்காமல் இருக்க தண்ணீர் தொட்டியை கவிழ்த்து வைத்துவிட்டு தங்களை அழைக்க வந்திருக்க வேண்டும் என்று அந்த மூட்டையை அவிழ்க்காமலே நையப்புடைத்தனர். உள்ளே ஐயோ! அம்மா! என்று அடிதாங்காமல் மன்னன் கத்தவும் மூட்டையை அவிழ்த்தனர்.
    உடலெங்கு வலியும் வேதனையுமாக வெளியே வந்த மன்னன், ஏமாந்து போனோம்! வியாபாரிதான் திருடன்! என்னையே ஏமாற்றி திருடிச்சென்றுவிட்டான். உண்மையிலேயே அவன் கில்லாடிதான்! என்றுசொல்லிவிட்டு தலை குனிந்தவாறு அரண்மனை திரும்பினான்.
   முழுத்திருடன் தந்தையிடம் நடந்ததை விளக்கி மன்னரிடம் திருடிய பொருட்களை கொடுத்தான். அட களவாணிப் பய மகனே! நீ பலே திருடன் என்று நிருபித்துவிட்டாய் என்று அவனும் தன் மகனை பாராட்டி ஆரத்தழுவி கொண்டான்.
                       முற்றும்.
(என் பாட்டி சொன்ன செவி வழி கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, March 29, 2013

ஓசிச்சோறு! பேஸ்புக்கில் பிடித்தவை!


பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை ெய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.


நீதி :- வியாபாரி வியாபாரிதான்..!

நன்றி: சூர்யா


கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பாஎன்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் உண்மையான நட்பு...!

நன்றி : Ilayaraja Dentist.
            நன்றி : முகநூல்

Related Posts Plugin for WordPress, Blogger...