அறுபதிலும் ஆசை வரும்!


அறுபதிலும் ஆசை வரும்!


   பரசு ராம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி! வயது அறுபதை கடந்து விட்டிருந்தது.வயதுதான் அறுபதே தவிர உள்ளத்தால் இளைஞர்தான். வீட்டில் ஈசி சேரில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தார். பேஷன் டீவி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வேலைக்காரி மீனாட்சி அவரது அறையை சுத்தம் செய்ய வந்தாள்.
      அவளைப் பார்த்ததும் அவருள் அடங்கி இருந்த சைத்தான் மீண்டும் தூபம் போட ஆரம்பித்தது. இவள் சரிபட்டு வருவாளா? இவளிடம் கேட்டுப் பார்க்கலாமா? என்ற யோசனை செய்தது அவரது மனது. வேண்டாம் கேட்க வேண்டாம்! கேட்டுத்தான் பாரேன்! என்று பட்டிமன்றமே நடத்தியது அவரது மனசு.
      “கேட்காதே! எவ்வளவு பெரிய மனுசன் நீ! உனக்கு இந்த அறுபது வயதில் இப்படி ஒரு ஆசையா? வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு!” வாயை மூடிக் கொண்டு சும்மா இரு என்று மனசாட்சி அதட்டினாலும் அவரால் ஆசைய அடக்க முடியவில்லை! வயசானால் என்ன? உணர்வுகள் மறத்து போய் விடுமா? மனசால் என்றுமே இளைஞன் தான் நான் என்று பெருமைப் பட்டுக் கொண்டார் அவர். தயங்காதே கேட்டுவிடு என்றது இன்னொரு மனம்.
      “ பாவி! கிழவி! அவள் மட்டும் சம்மதித்து இருந்தால் இப்படி வேலைக்காரியிடம் கையேந்தும் நிலை வந்திருக்குமா?” “மீசை நரைச்சும் ஆசை நரைக்கலையே கிழவா?” என்றல்லவா ஒரு கேலிப் புன்னகை புரிந்தபடி நேற்று இரவு கேட்டபோது திரும்பிப் படுத்துக் கொண்டு விட்டாள்.
     அவளின் கொட்டத்தை அடக்க வேண்டும்! அவள் இல்லாவிட்டால் என்னால் முடியாதா?உடம்பு ஒத்துக்காதாம்! ஏன்? மாசத்தில் ஒரு முறைதானே கேட்கிறேன்! அதைக் கூட  தரமுடியாமல் இவள் என்ன மனைவி? அவரால் அந்த ஆசையை அடக்கவே முடியவில்லை! முன்பெல்லாம் தினம் தோறும் திருவிழாதான்! அப்படி இருந்தவர் இப்படி கட்டிப் போட்டால்?
      ஜல்லிக்கட்டு காளையாக சீறியது அவரது மனம்! மீனாட்சி மட்டும் மறுக்காமல் சம்மதித்து விட்டால்! அப்புறம் கவலை இல்லை! இதற்காக அவளுக்கு தனியாக சன்மானம் கொடுத்து விட்டால் போகிறது! கிழவி புழுங்கி சாகட்டும்! ஆனால்... மீனாட்சி ஒத்துக் கொள்ள வேண்டுமே?
  அடடே! இந்த யோசனையில் மீனாட்சி அறையை சுத்தம் செய்து விட்டு போய்விட்டாளெ! விட்டு விட்டோமே? நேரே சமையல் கட்டுக்கு சென்றார்.
    தொண்டையைக் கணைத்துக் கொண்டார். “என்னங்க முதலாளி! இந்த பக்கம்? “மீனாட்சியின் குரல் தேனாக அவர் காதில் ஒலிக்க, “ஒண்ணுமில்ல மீனாட்சி!  நான் ஒண்ணு கேப்பேன்! நீ மறுக்க கூடாது”
  “ என்னங்க ஐயா! நீங்க எது கேட்டு நான் இல்லன்னு சொல்லிருக்கேன்?”
  “இல்ல! இது இது.. என் பொண்டாட்டிக்கு தெரியக்கூடாது! நீதான் கொஞ்சம் ஒத்துழைக்கனும்!”
   “ என்னங்க ஐயா! ஒரு மாதிரி பேசறீங்க! அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை!”
  “அதான் தெரியக்கூடாதுன்னு சொல்லறேன்!  ஒரு வாரமா ஆசைய அடக்க முடியலை! ப்ளீஸ் மீனாட்சி நீதான் ஹெல்ப் பண்ணனும்!”
   “ ஐயா! அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுறுவாங்க!”
  “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்! ப்ளீஸ்!  ஒருவாரமா நாக்கு செத்துப் போய் கிடக்கு! பாழாப் போன இந்த சுகர் வந்ததுலே இருந்து கிழவி வீட்டுல ஸ்வீட்டே கண்ணுல காட்டமாட்டேங்கிறா! ப்ளீஸ் மீனாட்சி! நீதான் யாருக்கும் தெரியாமா ஐயர் கடையில இருந்து ஒரு கால் கிலோ அல்வா வாங்கிட்டு வந்து தரனும்! ப்ளீஸ் மீனாட்சி!”
   அந்த அறுபது வயது பெரியவர் கெஞ்சிக் கொண்டிருக்க செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!