Thursday, January 31, 2013

ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7

1.இவனோட அப்பா நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுத்தவரு..
  பெரிய தியாகியா?
 உஹூம் பெரிய ரவுடி போலீஸே சுட்டுக் கொன்னுட்டாங்க!
                                           நிதின்.
2.டேய்! உனக்கு நம்ம மானேஜர் கிட்ட இருந்து போன் வந்திருக்கு!
 ஏன் போன் அவருக்கு வேணாமாமா?
                               பாஸ்கி.
3.உங்களுக்கு வாரண்ட் வந்திருக்கண்ணே!
 ஐயையோ!  ஊழலை கண்டு பிடிச்சிட்டாங்களா?
 அட இது இண்ட்ரஸ்ட் வாரண்ட் அண்ணே!
                                 பாஸ்கி
4.மாமியாருக்கு சர்க்கரை வியாதின்னு  டாக்டர் சொன்னதும் உடனே நான் ஸ்வீட் சாப்பிடறதையே விட்டுட்டேன்!
பரவாயில்லையே உன் மாமியார் மேல அவ்வளவு பாசமா?
 நீ வேற! அந்த நியுஸே எனக்கு ஜென்மத்துக்கும் ஸ்வீட் சாப்பிட்டமாதிரி ஆயிருச்சு!
                            வி.சாரதிடேச்சு
5.அந்த ஆள் ஏன் கோபப்பட்டார்?
அவர் பேத்தியோட இருக்கார் என்ற அர்த்தத்தில் பேத்திகிட்டே இருக்காருன்னு சொல்லிட்டேன் அதான்.
                     சாயம் வெ.ராஜாராமன்.
6.ஆபிஸ் வேலைக்கு போறவங்களை மட்டும் மையமா வச்சி ஒரு படம் எடுக்கப் போறேன்!
அப்ப நிறைய கனவு சீன் இருக்கும்னு சொல்லுங்க!
                         சென்னிமலை சி.பி.செந்தில்குமார்.
7.நான் நாட்டுலே சிறந்த தலைமையை உருவாக்குவேன்!
  நீ என்ன கிங் மேக்கரா?
இல்லை ஹேர் டை தயாரிக்கிறேன்!
                               தஞ்சை தாமு.
8.என்ன நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு பாத்திரம் வாங்கி சேர்க்கப்போறேன்னு சொல்லிட்டு நீ தினமும் ஒரு புடவை வாங்கிட்டு இருக்கே?
 இந்த புடவையெல்லாம் பழசான பாத்திரக்காரன் கிட்ட போட்டு பாத்திரம் வாங்குவேன்!
                                  வி.சாரதிடேச்சு.
9.நம் மன்னர் ஏன் தினமும் பிச்சைக்காரன் வேஷத்துலேயே இரவு நகர்வலம் போகிறார்?
 கொஞ்சம் வருமானமும் கிடைக்கும்ல!
                                கோவி. கோவன்.
10.பாங்க்ல மாடு வாங்க லோன் வாங்கினீங்களே ஏன் கட்டலை?
   கயிறு வாங்க லோன் கொடுக்கலையே!
                                     வி.சாரதிடேச்சு
11.உங்க படம் ஆனாலும் ஸ்லோவா போகுது!
    நிஜமாவா?
  ஆமாம்!பக்கத்து தியேட்டர்ல நைட்ஷொ படம் முடியும்போதுதான் உங்க படம் ஈவினிங் ஷோவே முடியுதுன்னா பாருங்களேன்!
                                      வி.சாரதிடேச்சு
12.தலைவர் எங்கேயாவது அடிவாங்கப் போறாருன்னு எப்படி சொல்றே?
 எவ்வளவு காலத்துக்குத்தான் பாட்டியையே கட்டிப்பிடிச்சிகிட்டு போஸ் கொடுக்கிறது ஒரு மாறுதலுக்கு வைப்பாட்டியை  கட்டிப்பிடிச்சிட்டு போஸ் தரட்டுமான்னு கேக்கறாரு!
                                      அசூர்.ஆர். பார்த்திபன்.
13.தலைவர் ரொம்ப அடிமட்டத்துலேயிருந்து வந்தவருன்னு எப்படி சொல்றே?
பின்னே தேர்தல்ல தனக்கு டிக்கெட் கொடுக்கலைன்னு தெரிஞ்சவுடனே எதாவது ப்ளாக்ல கிடைக்குமான்னு பார்க்க சொல்றாரே!
                                  க.ராஜசேகர்.
14.தம்பி இங்கே பங்க்சர் எந்த இடத்திலே போடுவாங்க தெரியுமா?
   ட்யுபிலே எந்த இடத்திலே பொத்தல் விழுந்திருக்கோ அந்த இடத்திலேதான்!
                                           பாஸ்கி
15.ஆனாலும் நம்ம லதாவுக்கு பணத்திமிர் அதிகம்!
  எப்படி சொல்றே?
எல்லோரும் புடவைக்கு கஞ்சிதான் போடுவாங்க! அவ மட்டும் காம்ப்ளான் போடுவா!
                          வி.சாரதிடேச்சு.
16.இட்லி மல்லிப்பூ மாதிரி இருக்குமுன்னு சொன்னா போதாதா! இப்படி நார்ல கட்டிக்கொண்டு வைக்கணுமா?
                              தஞ்சை இரா.ஆதி.
17 என்ன ஆச்சர்யம் ஆபிஸ் ஸ்டாஃப் எல்லாம் தூங்காம சுறுசுறுப்பா இருக்காங்க!
இன்னிக்கு ஸ்டிரைக் பண்றாங்கய்யா!
                                 எம் பூங்கோதை
18என்னங்க நம்ம தலைவரு எல்லா மீட்டிங்கிலேயும் ஒரே மேட்டரையே பேசறாரு?
     இல்லாட்டி “பேச்சு மாறிட்டாருன்னு எதிர்கட்சிகாருங்க தாஙக்குவாங்கலாம்!
                                   ப்ராசீஷ்.
19.அவர் போலி பல் டாக்டர் போல இருக்கு!
  ஏன்?
வாய் துர்நாற்றத்துக்கு பல் இடுக்கிலே ஊதுவத்தியை கொளுத்தி சொருகிக்க சொல்றாரே!
                                      எம். பூங்கோதை
20என்னங்க கட்சியிலே தொண்டர்கள் எல்லாம் ஓடறாங்க?
 பின்னே என்னங்க! தலைவர் ரயில் மறியல் மாதிரி கப்பல் மறியல் பண்ணலாம் எல்லோரும் கப்பலுக்கு முன்னே கடல்ல போய் படுங்கன்னு சொன்னா?
                                             பாஸ்கி.
நன்றி: ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Wednesday, January 30, 2013

புகைப்பட ஹைக்கூ 1


                                                                                                                                                                          பூக்களோடு
பூவாய் பூத்து
நிற்கிறது
வண்ணத்துப் பூச்சி!

வண்ணத்து பூச்சியின்
அழகில்
தனை இழந்தது மலர்!

முத்தமிட்டதும்
சிவந்து போனது
மலர்
வண்ணத்துப்பூச்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உறுத்தல்


உறுத்தல்


     சிறுகதை

‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.
     உயரமாய் ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா”
தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.
     “அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”
   “ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”
  “இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ”
“சரிங்கய்யா” அவன் அகன்றான்.
நான் அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது. “ச்சே” எரிச்சலாய் வந்தது.யாராவது செருப்பு தைப்பவர்கள் கிடைப்பார்களா என்று தேடினேன்.அதோ ஒருவன். சென்று வார் அறுந்துடுச்சு தெக்கனும் என்றேன்.
நிமிர்ந்த அவன் அடையாளம் கண்டுகொண்டு சார் நீங்களா? என்றான்.
காலையில் கையெழுத்திற்காக வந்தவன். ஐந்து நிமிடத்தில் தைத்து முடித்தவன் சார் பத்து ரூபா என்றான்.
     அஞ்சு நிமிஷவேலைக்கு பத்துரூபாயா அநியாமா இருக்கே என்றேன்.அஞ்சுரூபாதான் தருவேன். என்று ஒரு அஞ்சு ரூபாத்தாளை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.சிறிது தூரம் நடந்திருப்பேன் சார்!சார்! அவன் பின்னாலேயே குரல் கொடுத்தபடியே ஓடிவந்தான்.
    நின்று என்னப்பா கையெழுத்தா ? 100ரூபா ரெடி பண்ணிட்டியா? என்றேன்.
இல்லசார்!.. “பின்ன என்ன?” “சார் நீங்க 5ரூபா கொடுப்பேன்னு சொன்னீங்க.”
“அதான் கொடுத்திட்டேனே”. இல்ல சார் நீங்க 10ரூபா கொடுத்திட்டீங்க நீங்க கொடுத்த 5ரூபாத் தாளில் ரெண்டுத்தாள் ஒட்டிண்டிருந்தது சார்.இந்தாங்க 5ரூபா என்று 5ரூபாயை திருப்பி தந்தான்.
    செய்யும் வேலைக்கு சம்பளம் கிடைத்தும் உபரியாய் லஞ்சம் வாங்கிய நான் அவன் முன் கடுகாய் சிறுத்துப்போனேன். அவனது செயல் என்னை உறுத்த நாளைக்கு வாப்பா கையெழுத்துப்போட்டுத்தரேன் என்றேன் தவறுக்குப் பிராயச்சித்தமாய்                                             {மீள்பதிவு.}                                                     டிஸ்கி} வலைப்பூ தொடங்கிய புதிதில் பதிவிட்ட சிறுகதை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பில்லை! எனக்கு பிடித்த கதை அதனால் மீண்டும் பதிவிட்டுள்ளேன்!                                  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Tuesday, January 29, 2013

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31
உங்கள் பிரிய “பிசாசு”
முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வியின் உடலில் ப்ரவீணா என்ற பெண்ணின் ஆவி புகுந்து கொள்கிறது. குஹாத்ரி மலை சுவாமியிடம் அது வந்த சமயம் அங்கு ப்ரவீணாவை கொன்றவனை முன் நிறுத்துகிறார் சுவாமிஜி.
  முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:http://thalirssb.blogspot.in/2013/01/30.html பகுதி 30                    
  தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா.
அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே?
  தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான்.
   செல்வி எகத்தாளமாய் சிரித்தாள்.
அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! பிழைத்துப் போ! உன்னை கொல்வதால் எனக்கு எந்த லாபமும் வந்து விடப்போவதில்லை!
 அப்போ நீ ஏன் இப்படி இந்த பொண்ணை பிடிச்சிகிட்டு அலையற?
அதான் சொன்னேனே என் கணக்கு ஒன்று பாக்கி இருக்கிறது என்று!
அதுதான் யார்?
அதைச் சொன்னால் நீங்கள் தடுத்து விடுவீர்கள்! உங்களால் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்! என்னை நாசப்படுத்தியவர்களில் அவன் தான் முதன்மையானவன்! அவனை தேடித்தான் இங்கு வந்தேன்!
அப்போது சுவாமிஜி! சுவாமிஜி! என்றவாறு ஒரு நாற்பது வயது நபர்  வந்து நிற்க
  என்ன என்றார் சுவாமிஜி கோபத்துடன்
அவர் ஏதோ சுவாமியின் காதில் கூற சுவாமி தலை அசைத்தார்.
 செல்வி ரவியை பார்த்தாள்.
அக்கா! அக்கா! என்றான் ரவி கண்ணீருடன் தம்பி! அழாதே! உனக்கு ஒன்றும் இல்லை! நான் வந்த காரியமும் இன்றோடு முடிந்து விடும் அப்புறம் இந்த பெண்ணிடம் இருந்து விடை பெற்று விடுவேன்.
  அக்கா நீ யாரை தேடி வந்திருக்கே!
அது ரகசியம் தம்பி!
என்னிடம் கூட சொல்ல மாட்டாயா?
காரியம் முடியும் வரை அதை சொல்வதற்கு இல்லை! முடிந்த பின் உங்களுக்கே தெரியும்.
உன் காரியம் எப்போதக்கா முடியும்?
அநேகமாக இன்றிரவுக்குள் முடிந்து விடும்!
சரி நீ போய் ஓய்வெடுத்துக் கொள்! இந்த சுவாமிஜி என்னை கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இங்கிருந்து நகர என்னால் முடியவில்லை!
  சுவாமிஜி அக்காவை விடுவித்து விடுங்கள்!
அது அவ்வளவு சுலபம் அல்ல!
ஏன்?
இவளை விடுவித்தால் மீண்டும் எப்படி சிறை பிடிப்பது? பொதுவாகவே சிறைபடுத்திய ஆவிகளை விடுவித்தால் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும்!
அப்போது இவளை விடுவிக்க மாட்டீர்களா?
அதை அந்த குகன் தான் முடிவு செய்ய வேண்டும்  மலையில் தண்டாயுதபாணியாக நின்ற முருகனை கை காட்டினார் சுவாமிஜி.
 பொழுது வேகமாக கரைந்து கொண்டிருந்தது.
சரி இவர்கள் இங்கேயே இருக்கட்டும்! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது! போய் விட்டு வந்து விடுகிறேன்!
சித்தப்பா நானும் கூட வருகிறேனே! எனக்கு இங்கே இருக்கப் பயமாய் இருக்கிறது!
இங்கென்ன பயம்! இவர்கள் உன் நண்பர்கள்தானே!
ஆமாம்! ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் நிலையில் என்னை அவர்களோடு விட்டு விடாதீர்கள்!
 முகேஷ்! நீ வீணாக பயப்படாதே! இவள் என் அக்கா உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள் என்று ரவி சொல்ல செல்வியும் இது சுவாமிஜியின் எல்லை! இங்கு அவர் கட்டளைப்படிதான் நடப்பேன் என்றாள்.
  சுவாமிஜி புன்னகை புரிந்தவாறு இனி உனக்கு என்ன பயம்? பயப்படாதே நான் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவேன்! வந்தவுடன் உங்களுக்கு விடுதலையும் தருவேன் என்று அர்த்தமுடன் கூறிச் சென்றார்.
  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க முகேஷ் இந்த கதையில எனக்கு ஒண்ணு புரியலை! என்று முணு முணுத்தான்.
  உன்னோட அக்காதான் ப்ரவீணா அவ செல்வியை பிடிச்சிகிட்டு இருக்கா ஓக்கே! தன்னை கொன்னவங்களை பழிவாங்க வந்திருக்கா! எல்லாம் சரி! இது நடந்து ஏறக்குறைய பத்து பன்னிரண்டு வருசம் ஆகியிருக்கும் போல! இதுக்கெல்லாம் மூல காரணம் அந்த பண்ணையார்!
அவரு பஞ்செட்டியிலும் இல்லை! நத்தத்துலயும் இல்லே! அப்ப அவரு எங்கே! கருவிகளை பழிவாங்கின ப்ரவீணா கர்த்தாவை என்ன செய்ய போறா?
    அப்போது செல்வியின் கண்கள் ஒளிர்ந்தன!
முகேஷ்! சரியா கண்டுபிடிச்சிட்டே! கர்த்தாவை தேடித்தான் இப்போ இங்க வந்திருக்கேன்!
 கர்த்தா இங்கதான் இருக்காரா?
இதே ஊரிலேதான் இருக்கார்! கிரானைட் பேக்டரி நடத்திகிட்டு இருக்கான்!
 அப்போது மணி சத்தம் கேட்டது!
அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்றாள் ப்ரவீணா!
                                            மிரட்டும்(31)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, January 28, 2013

தளிர் ஹைக்கூ கவிதைகள் 18


இரவல் நகை!
பாராட்டினார்கள்!
நிலா!


பயந்து
பயப்படுத்துகிறது
பாம்பு!


தொங்கிக் கொண்டே இருக்கிறது
வலிக்கவில்லை!
பல்பு!

 
ஒளித்து வைத்ததை
உடைத்து குடித்தார்கள்!
இளநீர்!

அலைந்து கொண்டே இருக்கிறது
அவதிப்படுகிறோம்
மனசு!

பிள்ளைகள் வளர்கையில்
வயதாகிறது
நமக்கு!

கண்சிமிட்டின
களங்கம் அடையவில்லை!
நட்சத்திரங்கள்!

விளக்கினடியில்
விருந்து
தவளை!


அழுகை சத்தம்!
மகிழ்ந்தார்கள்!
பிரசவம்!

வலி!
இன்பமானது
சுக பிரசவம்
 
மை பூசியதும்
பொட்டு இட்டுக்கொண்டது வானம்!
நிலா!

 
வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலக்கிறது
நீர்!

அழகான பூ
மிதிபட்டது!
மிதியடி!

துப்பறிந்ததும்
விரட்டப்படுகின்றன!
எறும்புகள்!

அசைந்தாலும்
நகரவில்லை!
நீரில் நிழல்!

 

தேடிக்கொண்டே இருக்கின்றன
எதையும் தொலைக்கவில்லை!
எறும்புகள்!
 தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Sunday, January 27, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? கொஞ்சும் தமிழ்!


உங்களின் தமிழ் அறிவு எப்படி?
சில தமிழ் சொற்களை இந்த பகுதிகளின் வாயிலாக கடந்த வாரங்களில் அறிந்து கொண்டோம்! இந்த முறை கொஞ்சம்  கொஞ்சும் தமிழை பார்ப்போமா? இவை நான் பழைய புத்தகங்களில் படித்து ரசித்தவை! இவை தமிழுக்கே உரியன!  தமிழ் அத்தனை வளமையும் இனிமையும் கொண்டது. இனி நான் ரசித்த தமிழை பார்ப்போமா?
முகம் தெரியும் போது வந்துவிடு!
திருமணமான கொஞ்ச நாள் சென்றதும் மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். போகுமுன் தாயாரிடம், “ நான் எப்பொழுது திரும்பி வர?”  எனக் கேட்டான்.அவன் தாய் எதையும் உள் அர்த்தமுடனும் சுருக்கமாகவும் பேசக்கூடியவள். “முகம் தெரியும் போது வந்துவிடு” என்று கூறி அனுப்பினாள்.
         பையன் புறப்பட்டுச் சென்றான். மாமியார் வீட்டில் நல்லவிதமாக கவனித்தனர்.ஒரு மாதமாயிற்று. மவுசு மெல்லக் குறைந்தது. வாழை இலை தையல் இலை ஆயிற்று.பிறகு கிண்ணத்தில் சாப்பாடு வந்தது. ஒரு நாள் மாப்பிள்ளை சாப்பிடுவதற்கான கிண்ணத்தை குனிந்து எடுத்தான். அன்று கஞ்சிதான் தரப்பட்டது. அதில் அவர் முகம் தெரிந்தது. உடனே தாயார் சொன்னது நினைவுக்கு வந்தது. அன்றே கிளம்பி விட்டான் வீட்டுக்கு!

பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டது இது.
  “காலாயுதக் கொடியோன் கையாயுத விழியாள் மாலாயுதம் என்ற மாமணியை உதிர்த்தாள்..ஏன்?” என்று கேட்டார் பெரியவர் ஒருவர் புதிராக.
 புரியவில்லை என்றேன்.
காலையே ஆயுதமாக கொண்டு போரிடுவது சேவல்.சேவற்கொடியோன் முருகன். அவன் ஆயுதம் வேல், மால் ஆயுதம் பெருமாளுடைய ஆயுதம் சங்கு. சங்கிலிருந்து தோன்றுவது முத்து. அதாவது முத்து முத்தாக கண்ணீர் வடித்தாள் ஒரு பெண் என்பதைத்தான் ஒரு தமிழ் சிற்றிலக்கியம் இவ்வாறு சொல்கிறது. அது எந்த இலக்கிய நூல் என்று கண்டுபிடியுங்கள் என்றார்.
  என்னால் முடியவில்லை! உங்களால் முடிந்தால் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

போதுமானது! சிலேடை!

ஒரு முறை சேதுபதி மன்னரை அவரது மாளிகையில் சந்தித்து பேசுவதற்காக உ.வே,சாமிநாதையர் சென்றார். சென்றபோது மன்னர் வறவேற்பறையில் மன்னர் இல்லை. அங்கே மன்னர் அமர தனி ஆசனமும் சந்திக்க வருவோர் அமர தனி ஆசனமும் போடப்பட்டிருந்தன. ஐயர் அங்கிருந்த நீண்ட ஆசனத்தில் அமர்ந்தார். மன்னரின் வருகைக்காக காத்திருந்தார்.
தனக்காக தமிழறிஞர் காத்திருப்பதை பணியாட்கள் மூலம் அறிந்த மன்னர் சேதுபதி நெடுநேரம் காக்க வைத்து விட்டோமே என்று பதட்டத்துடன் வந்தவர் தனது தனி ஆசனத்தில் அமராமல் ஐயர் அமர்ந்த அதே ஆசனத்தில் அவர் பக்கத்திலேயே அமர்ந்தார்.
  மன்னர் தன் பக்கத்தில் அமர்ந்தது கண்டு மகிழ்ந்த சாமிநாதையர் மன்னரிடம் சமஸ்தான அதிபதி அவர்களே! எனக்கு சம ஸ்தானம் தந்தீர்கள் (நிகரான இடம்) என்றார். மன்னர் அவரின் சிலேடையில் மகிழ்ந்தார். இருவரும் நீண்ட நேரம் அளவளாவிய பின்னர் மன்னர் தனது கைக்கெடிகாரத்தைப் பார்த்தார்.குறிப்பறிந்த ஐயர் அவரிடம், “போது மானது”  எனவே “போதுமானது” என்றார். “போதும்” பொழுதும் ஆனது. நேரமும் போதுமானது என்ற அவரின் சிலேடையை மன்னர் வெகுவாக ரசித்தார்.

ரசித்து இருப்பீர்கள்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! புதிய தமிழ் சொற்களுடன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, January 26, 2013

பத்ம விருதுகள் அறிவிப்பு! விருதை நிராகரித்த பின்னணி பாடகி ஜானகி!

பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர், பத்ம விபூஷன் விருதுக்கும், 24 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 80 பேர், பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களில், 24 பேர் பெண்கள்.ஒடிசாவை சேர்ந்த ரகுநாத் மெகாபத்ரா, டில்லியை சேர்ந்த ஹெய்தர் ரஸா, உ.பி.,யைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ்பால், கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் ரோத்தம் நரசிம்மா ஆகியோர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த, திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, ராமமூர்த்தி தியாகராஜன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், நடிகை சர்மிளா தாகூர், மறைந்த இந்தி திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா உட்பட, 24 பேர், பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த, தற்போது மும்பையில் வசிக்கும் நடிகை ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், லட்சுமி நாராயண சத்திய ராஜூ, ராஜ் ஸ்ரீபதி, டாக்டர்.டி.வி.தேவராஜன் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உட்பட, 80 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.அதேநேரத்தில், மிகப்பெரிய விருதான, "பாரத் ரத்னா விருதுக்கு, இந்த ஆண்டு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன், 2008ம் ஆண்டில், மறைந்த, பீம்சென் ஜோஷிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதுகள் எல்லாம், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும். 
2013ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிரபல பின்னணி  பாடகி எஸ்.ஜானகி பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அந்த விருதை அவர் புறக்கணித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் மழலை குரலுக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்றவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தனது 19வயதில் பாட தொடங்கிய ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 4முறை தேசிய விருது, 31முறை பல்வேறு மாநில அரசுகளின் விருது, பிலிம்பேர் ‌விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுக்கு எஸ்.ஜானகியும் தேர்வாகியுள்ளார். ஜானகிக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட இருக்கிறது. தனது 74வயதில் இந்த விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார். ஆனால் இந்த விருதை நிராகரிப்பதாக ஜானகி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. பத்மவிருதுக்கு தேர்வு செய்யப்படுவர்கள் பெரும்பாலும் வடஇந்தியர்களாகவே இருக்கின்றனர். தென்னிந்தியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது.  எனவே எனக்கு கொடுக்கப்பட இருக்கும் பத்மபூசன் விருதை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.                                                                                             நன்றி : தினமலர்

கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!


கண்ணா லட்டு தின்ன ஆசையா? கமலின் தவிப்பு! பாப்பா மலர்!

“கமல்! கமல்! எழுந்திருடா! மணி ஏழு ஆகப்போவுது! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் வேன் வந்திரும்!”
“இரும்மா! இன்னும் ஒரு பத்து நிமிஷம் படுத்து தூங்கிட்டு வரேன்!”
“ஆமாம் இப்படியே தூங்கிகிட்டு இருந்தா அப்புறம் எப்படி ஸ்கூலூக்கு போறது?”
 “எழுந்து பத்து நிமிசத்துல ரெடியாகிடுவேன்மா!”
“என்னத்தை ரெடியாகிடுவே? ஒழுங்கா பல் தேய்க்க மாட்டே! காக்கா குளியல் குளிச்சிட்டு டிபன் சாப்பிடாமா அரக்க பரக்க வேனுக்கு ஓடுவே?”
 “ இப்படி பேசியே என் தூக்கத்தை கெடுத்திட்டேம்மா!” என்று எழுந்து வந்தான் கமல்.
  இது அந்த வீட்டில் அன்றாடம் நடக்கும் தாய்க்கும் மகனுக்குமான உரையாடல்! கமல் பன்னிரண்டு வயது சிறுவன். பக்கத்து கான்வெண்டில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். படிப்பில் படு சுட்டியாக இருப்பான். ஆனால் இந்த தூக்கம் மட்டும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்! காலை 7.30 மணிக்கு பள்ளி வேன் வரும் என்றால் 7.15 வரை தூங்கிக் கொண்டிருப்பான். அப்புறம் அந்த பதினைந்து நிமிடத்தில் அரக்க பரக்க ரெடியாகி பல் துலக்காமல்,சரியாக உண்ணாமல் வேனைப்பிடிக்க ஓடுவான். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தினமும் வீட்டில் ரகளையே நடக்கும்.
      சரியாக ஏழு இருபத்தைந்துக்கு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த மகனை முறைத்தாள் அம்மா! “காக்கா குளியல் சரி! ஆனா இந்த பல்லை துலக்கக் கூடாதா? பாரு பல்லெல்லாம் மஞ்சள் கறை!”
  “ஏம்மா! மனுசனுங்க தான் பல்லு விளக்கறோம்! ஆடு மாடெல்லாம் விலக்குதா? அதுங்க நல்லாத்தானே இருக்கு! என்னை மட்டும் குறை சொல்லலேன்னா உனக்கு தூக்கமே வராதா?”
“ சரி எக்கேடாவது கெட்டுத்தொலை! ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் இந்த அம்மா சொன்னது உனக்கு உறைக்கும்”
  “அப்ப உறைக்கட்டும்! இப்ப சட்னியிலே உறைப்பே இல்லை! கொஞ்சம் உப்ப போடு”
இதற்குள் வேன் சத்தம் கேட்க பாதியிலேயே எழுந்து ஓடினான் கமல்!
     இது தினசரி நடக்கும் கூத்துதான்! மாதத்தில் பாதி நாள் பல் துலக்காமல் பற்கள் மஞ்சள் படிந்து கிடந்தன. பள்ளியிலும் இதை கேட்க மாட்டார்களா? இவனை எப்படி திருத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அந்த தாய்.
     பள்ளியிலிருந்து திரும்பியிருந்தான் கமல்! அவனது தாய் காபி கலந்து கொண்டிருந்தாள். ‘என்னம்மா நீ காபி கலக்க இவ்வளவு நேரமா? ஒரே டயர்டா இருக்கு தூக்கமா வருது? சீக்கிரம் கொண்டா!”
  “இருடா வரேன்!”
கமல் அப்படியே கொட்டாவி விட அவன் வாயில் இருந்து ஒரு குள்ளன் கீழே விழுந்தான்.
  கமலுக்கு ஆச்சர்யம்! “ஏய் யாரு நீ என் வாயிலிருந்து கீழேவிழுற?
  “நான் தான் உங்கள் அடிமை! நீங்கள் தான் எனக்கு உயிர் கொடுத்த தெய்வம்” என்றது அந்த குள்ள உருவம்!
  “ஆமாம் நீ எப்படி என் வாயிலிருந்து வந்தே?”
“நீங்கதான் பல் துலக்காம என்னை வளத்து விட்டீங்க!”
“அடிமைன்னு சொல்ற? நான் எது கேட்டாலும் நீ தருவியா?”
“என்ன எஜமான் இப்படி கேட்டுட்டீங்க? நீங்க எது கேட்டாலும் நான் தருவேன்! உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”
  “எனக்கு லட்டு தின்னனும் ஆசையா இருக்கு! லட்டு வர வை பாக்கலாம்!”
  குள்ளன் கண்ணை மூடிக்கொண்டு “கொய், முய் சய்” என்று ஏதோ கூற லட்டு ஒன்று பறந்து வந்து டேபிளில் உட்கார்ந்தது.
   “எஜமான் உங்களுக்குத்தான் லட்டு சாப்பிடுங்க!”
குள்ளன் கூற, எடுத்து ஒரு கடி கடித்தான். மறுகணம் ஐயோ! அப்பா ! என் பல்லு போச்சே! என்றான் அவனது முன் பல் ஒன்றல்ல இரண்டும் உடைந்து கையில் வந்தது.
  “டேய் குள்ளா! எங்கேடா இருந்து வந்தே? என்னோட பல்லை உடைச்சிட்டே!”
  “எஜமான்! நான் உடைக்கலை! நீங்க தான் உடைச்சிட்டீங்க!”
 “டேய்! மரியாதையா என் பல்லை ஒட்டவை!”
  “எஜமான் அது முடியாது! என்னால புதுசா ஏதாவது கொண்டு வர முடியுமே தவிர ஒட்ட வைக்க முடியாது!”
  “அப்ப புதுசா என் பல்லை முளைக்க வை!”
“அதுவும் இப்ப முடியாது எஜமான்! ஒரு நாளைக்கு ஒரு முறைதான் என் மந்திரம் பலிக்கும்!”
 “அப்ப நான் ஓட்டை பல்லோடதான் ஸ்கூலுக்கு போகனுமா? பசங்க கேலி பண்ணுவாங்களே!”
குள்ளன் பதில் சொல்லாமல் மறைந்தான்.
  மறுநாள் பள்ளியில்! டேய்! மடை திறந்துடுச்சா! ஓட்டை பல்லா!  என்று அனைவரும் கமலை சூழ்ந்து கொண்டனர்.
  “என்னடா கமல்! இப்ப போய் உன் பல்லு விழுந்திருக்கு! அதுவும் ஒரே சமயத்துல ரெண்டு பல்லு! ராசிக்கார பையந்தான் நீ”
 “ டேய் ஓட்டை வாயா! இங்க வாடா!’ ஒருவன் அழைக்க கமல் முறைத்தான்.
“ஓட்டை வாயனுக்கு பாத்தியா எவ்வளவு கோபம்?”
  “கமல்! உனக்கு பிடிக்குமேன்னு  லட்டு கொண்டாந்திருக்கேன்! இந்தா சாப்பிடு!” அவனது நண்பன் குள்ள மணி கொண்டு வர “நோ! என்றபடி தட்டிவிட்டான் கமல்.
  “என்னடா கமல்! என்ன ஆச்சு!நான் காபி கலந்து வர்றதுக்குள்ளே குட்டி தூக்கம் போட்டு அதுலேயும் கனவா?” அவனது அம்மா கேட்க
   “ச்சே! எல்லாம் கனவா? பயங்கரமா இல்லே இருக்கு!” என்று மனதினுள் முணுமுணுத்துக் கொண்டான்.
  ஒண்ணுமில்லேம்மா! என்று காபியை குடித்தவன் மீண்டும் கனவை அசை போட்டான்.
மறுநாள் காலை அதிசயமாய் சீக்கிரம் எழுந்து பல் துலக்கும் கமலை பார்த்து அவளது அம்மா ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அது நமக்கு ஆச்சர்யம் இல்லை தானே!

டிஸ்கி} இதுவரை பாப்பா மலரில் நான் சிறுவயதில் கையெழுத்து பத்திரிக்கை நடத்திய போது எழுதிய கதைகளும் செவிவழி கதைகளும் பதிவிட்டேன்! இது இப்பொழுது நேற்று இரவு கருவில் உதித்து இன்று காலை சுடசுட நானே எழுதிய கதை! என் மகள் வேத ஜனனி பல்துலக்க மறுத்து அடம்பிடிப்பாள். அவளுக்கு நேற்று இரவு கதை சொன்னேன். அதை கொஞ்சம் மாற்றி இப்பொழுது பதிவிட்டுள்ளேன்! தலைப்பு சும்மா அட்ராசிட்டிக்கு அப்பத்தானே உள்ளே வருவீங்க! உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...