அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!


அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.
     அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம்.
இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம்! ஒரு நாள் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சி போயிடாது என்று அலட்சியப்படுத்துகிறோம்.
    பள்ளிப் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையை அலட்சியப்படுத்தியதால்தான் பாவம் ஒரு அப்பாவி சிறுமி பலியானாள். நம்முடைய அலட்சியம் வாக்களிப்பதில் கூட இருக்கிறது. ஒரு நாள் லீவு ஜாலியா இருக்காம எவன் போய் ஓட்டு போட்டுகிட்டு கியுவில காத்து கால் கடுக்க நின்னு நாம போடுற ஒரு ஓட்டுல உலகமே மாறிப்போயிட போவுதா என்று எண்ணி போகாமல் இருந்து விடுகிறோம்! இது எவ்வளவு பெரிய அலட்சியம்! ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை! இதை கூட அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
   இதைப்போலத்தான் பல அலட்சியங்கள் கண்கூடாக பார்க்கிறோம்! மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் பகலில் கூட விளக்குகள் ஒளிர்கின்றது. குழாயில் தண்ணீர் வீணாகிறது. சாலையில் வாழைப்பழத்தோலை அலட்சியமாக வீசுவது. பூசணிக்காய்களை உடைத்து சாலையில் போடுவது. இதெல்லாம் இருக்கட்டும் தலைக்கவசம் அணியாமல் அலட்சிமாக இருப்பதால்தானே எண்ணற்ற விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.
    கட்டணங்கள் கட்ட வேண்டிய தேதிவரை கட்டாமல் கடைசிநாள் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது. வண்டியில் சிறிது காற்று குறைவாக இருக்கும் போதே கவனிக்காமல் விட்டு சுத்தமாக பஞ்சர் ஆகி நிற்கும் போது எரிச்சல் அடைவது. என்று நாம் அலட்சியப்படுத்தும் விசயங்கள் ஏராளம்.
 சின்ன வயதில் படித்த ஒரு பாட்டு! அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன்! பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன்  அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில்  ஒரு ஆணி கழன்று விடும்.  ஒரு ஆணி தானே! பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி பயணிப்பான் அவன். ஒரு ஆணி போனதால் லூஸான லாடம் கழன்று கொள்ளும். லாடம் கழன்றதால் குதிரையால் வேகமாக பயணிக்க முடியாமல் போகும். மேலும் கால் புண்ணாகி பயணம் தடைபடும். இதற்குள் அண்டை நாட்டுகாரன் படையெடுத்து வந்து அந்த நாடே அடிமைப் பட்டு போகும். ஒரு ஆணியை அலட்சியப்படுத்தியதால் வந்த வினை  இது!
 நாமும் அப்படித்தான்! வியாபாரத்திற்குத்தானே வந்தார்கள் என்று அலட்சியப் படுத்தியதால் முன்னுறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம் அன்னியரிடம்.
  பெரிய பெரிய கோயில்கள் பாழடைந்து கிடக்கும்! அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தையே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள்! இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ! சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா? ஆனால் கவனிக்காமல் விட்டோ! சிறு செடிதானே என்று எண்ணியதால் என்ன ஆயிற்று கட்டிடமே குலைந்து போகின்றது அல்லவா?
  வெற்றி பெற விரும்புபவர்கள் எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை  அலட்சியப்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அலட்சியப்படுத்துவர்களுக்கு லட்சியம் இருக்காது என்பதை பல உதாரணங்களுடன் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. நல்ல ஒரு பகிர்வு அண்ணா உண்மையிலே நல்ல கருத்துக்கள் நன்றி

    ReplyDelete
  3. அலட்சியபடுத்தவில்லை இந்த பதிவை - அடேங்கப்பா எம்புட்டு அலட்சியம்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையாக சொல்லி உள்ளீர்கள்...

    ReplyDelete
  5. அலட்சியத்தை அலட்சியப்படுத்துவோம் அனைவருக்குமான அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  6. தேவையான அனைவரும் உணரவேண்டிய விஷயத்தை பதிந்தமைக்கு பாராட்டுக்கள்... நாம் அலட்சியபடுத்தி தான் வாழ்வின் எல்லையில் நிற்கிறோம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!