பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 10



பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 10

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதாக பூஜாரி கூறுகிறான். நள்ளிரவில் பூஜாரி வீட்டிற்கு தனியாக செல்கிறாள் செல்வி. முகேஷும் ரவியும் திருப்பதி செல்லும் சமயம் வழியில் ரவி காணாமல் போகிறான் இனி:
 முந்தைய பகுதிகளை படிக்க லிங்க் இதோ!

   சார் நான் ரெண்டு டிக்கெட் வாங்கினேன் முகேஷ் கூற அப்ப எங்க போச்சு இன்னொரு டிக்கெட்? என்றார் கண்டக்டர்.
   தம்பி நீங்க நல்லா தூங்கிட்டு வந்துருக்கீங்க! ஏதோ நினைப்புல கூட பிரெண்ட் வந்தான்னு சொல்லறீங்க  என்றார் சக பயணி ஒருவர்.
இல்லசார் ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வந்தோம். பேசிகிட்டே வந்தோம். இடையில கொஞ்சம் கண் அசந்துட்டேன். இப்ப ப்ரெண்ட காணோம்.
  அப்படியா? உங்க கிட்ட மொபைல் இருக்கு இல்ல எடுத்து ப்ரெண்டுக்கு கால் பண்ணுங்க!
  நல்ல யோசனை பதட்டத்துல இது எனக்கு தோணாம போயிடிச்சு!
முகேஷ் தன் செல்போனை எடுத்து ரவியின் நம்பரை டயல் செய்தான். ரிங் போய்கொண்டே இருந்தது. கட் ஆனது. மீண்டும் டயல் செய்தான். ரிங் போனது எடுக்கவில்லை.மூன்று நான்கு முறை போன் செய்தும் எடுக்கவில்லை. வியர்த்து வழிந்த முகேஷ். தன்னுடைய தந்தைக்கு போன் செய்தான்.
   என்ன முகேஷ்? இப்ப எங்க இருக்க? என்றார் மறுமுனையில் தந்தை.
அப்பா தடா கிட்ட இருக்கேன். அங்க ரவி இருக்கானா? அவன் வீட்டுக்கு போய் பார்த்து சொல்லுங்க!
  என்னடா சொல்றே! அவன் உன் கூடத்தானே வந்தான்.
 ஆமாம்ப்பா! ஆனா இடையில கொஞ்சம் கண் அசந்துட்டேன். ரவியை காணலை. கூட வந்தவங்க யாரும் பார்க்கலைன்னு சொல்றாங்க பயமா இருக்குப்பா!
  என்னடா சொல்றே?
 ஆமாம்ப்பா! ரவிக்கு திருப்பதி வருவதில் விருப்பமே இல்லை! நான் தான் வற்புறுத்தி கூப்பிட்டு வந்தேன். அதனால நான் தூங்கினதுக்கு அப்புறம் நைசா இறங்கி திரும்பி வந்திருப்பானோன்னு ஒரு சந்தேகம். ஒரு வேளை அவன் அங்க வந்தா எனக்கு  கொஞ்சம் போன் பண்ணி சொல்லுங்க.
  நீ அங்கேயே நல்லா தேடிப்பாரு அவன் செல்லுக்கு போன் பண்ணியா?
பண்ணேம்ப்பா!  ரிங் போயிட்டே இருக்கு ஆனா எடுக்கவே இல்லை.
ரெண்டுமூணு தரம் ட்ரை பண்ணிப் பாரு. ஜாக்கிரதையா இரு.அந்த பையன் நிலைமை சரியில்லாதப்ப நீ கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும். சரி பயப்படாதே போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திட்டியா?
  இல்லப்பா!
சரி! நீ பயப்படாம திருப்பதி போ! அவன் இங்க வந்தா நான் இன்பார்ம் பண்றேன்.
அப்பா இந்த விசயம்...
 ரவி வீட்டுக்கு தெரியாம நான் பார்த்துக்கிறேன். பயப்படாதே அவன் எங்கயும் போயிருக்க மாட்டான் கண்டிப்பா வந்துடுவான்.
  சரிப்பா வச்சிடுங்க!
 போனை வைத்த முகேஷ் தான் வந்த பஸ்ஸை பார்த்தான். நல்ல வேளை அது கிளம்பாமல் நின்று கொண்டிருந்தது. ஏறக்குறைய அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது. இவ்வளவு நேரமாய் பஸ் ஏன் கிளம்ப வில்லை! ஒரு வேளை தனக்காகத்தானோ என்று எண்ணியவாறே பஸ்ஸினுள் ஏறினான்.
   என்ன சார் உங்க ப்ரெண்ட் கிடைச்சிட்டாரா? என்றார் கண்டக்டர் சிரித்தபடி
இல்ல சார்! நீங்க தானே டிக்கெட் கொடுத்தீங்க? இல்லேன்னு சொல்றீங்களே என்று கேட்டான் முகேஷ்.
   ஆமாம் தம்பி! உங்களுக்கு ஏதோ கோளாறுன்னு நினைக்கிறேன். நீங்க ஒருத்தரா வண்டியிலே ஏறிட்டு ரெண்டு பேரா வந்தோம்னு உங்களாளே வண்டி அரைமணி நேரம் லேட். சீக்கிரம் போய் சீட்டுல உக்காருங்க! திருப்பதி போனா ஒரு திருப்பம் வரும் என்றார் கண்டக்டர்.
ரைட் ரைட் என்றது வண்டி வேகமெடுத்து கிளம்பியது.
அப்போது முகேஷின் செல்போன் அழைத்தது. எடுத்து பார்த்தான். ரவி காலிங் என்ற எழுத்துக்கள் மின்னின. ஆர்வமுடன் ஆன் செய்தான்.
   அந்த நள்ளிரவில் பூஜாரியின் வீட்டில் மரண ஓலம் கேட்கவும் ஊரே கூடி வந்து நின்றது. ஏதோ பயங்கரமான சப்தமாய் இருக்கிறதே என்று பூஜாரி வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள்தான் முதலில் உணர்ந்தார்கள். இருக்க இருக்க அந்த சத்தம் அதிகமாகவும் கொஞ்சம் தைரியம் வரப்பெற்றவர்கள் வெளியே வந்து எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தார்கள்.
  பூஜாரி வீட்டில் சத்தம் கேட்கவும் என்னவோ ஏதோ என்று பூஜாரி வீட்டின் முன்  கூடி நின்றார்கள்.சில இளைஞர்கள் தைரியமாய் பூஜாரி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி கோரமாக இருந்தது.
  ஆடை கிழிந்து முகமெல்லாம் காயங்களோடு அலறிக் கொண்டு இருந்தான் பூஜாரி. அவன் முன் பத்ரகாளியாக நின்றிருந்தாள் செல்வி. டேய் பூஜாரி என் கிட்டேயா உன் திருட்டுத் தனம். உன் உயிரை எடுத்திருப்பேன். காலில் விழுந்து விட்டாய்! ஒழிந்து போ! இனி ஒரு முறை இந்த மாதிரி யாருக்கேனும் செய்தால் கண்டிப்பாய் நீ உயிருடன் இருக்க மாட்டாய்! என்று ஆக்ரொஷித்தாள் செல்வி. அவள் கையில் பூஜாரி வீட்டில் இருந்த சூலாயுதம் இருக்க மக்கள் மிரட்சியுடன் பார்த்தார்கள்.
  பேயை விரட்டும் பூஜாரியையே விரட்டுகிறதே இந்த பெண் பேய் என்று கிட்டே நெருங்கவும் பயந்தார்கள். சில நிமிடங்களில் ஆக்ரோசம் தணிந்து சூலத்தை கீழே வீசி விட்டு செல்வி வாசலுக்கு வரவும் கூட்டம் ஒதுங்கி நின்று வழிவிட்டது. அனைவரது கண்களிலும் ஒரு மிரட்சி தெரிந்தது.
  இதற்குள் ராகவனும் வினோத்தும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். செல்வி என்ன இது? ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறே என்று கேட்டான் வினோத்.
 தீர்க்கமாய் அவனை பார்த்த செல்வி, நான் செல்வி இல்லை! செல்வி இல்லை! என்றாள்
  அப்ப நீ யாரு?
அதை சொல்ல இப்ப நேரம் இல்லை! நான் செல்வி உடம்புல புகுந்துகிட்டு இருக்கேன்! என்னோட காரியம் முடிஞ்சதும் போயிடுவேன் அதுவரை நீங்க ஒத்துழைச்சுதான் ஆகனும். என்னை விரட்ட எவனாலும் முடியாது என்றாள்.
  கூடியிருந்தோர் சிலர் மிரட்சியுடனும் சிலர் ஆர்வத்துடனும் கவனிக்க மணி அங்கு வந்தார். ஏம்பா ராகவா! இது இப்போதைக்கு ஆகிற காரியம் இல்ல! நான் சொன்ன மாதிரி பாய் தான் இதை விரட்ட லாயக்கு. சீக்கிரம் அந்த பாய்கிட்ட கூட்டிகிட்டு போற வழிய பாரு என்றார்.
  செல்வி மணியை முறைத்தாள். நான் அந்த பாயையும் பார்ப்பேன்! அதுக்கு மேலயும் பார்ப்பேன்! என்னை விரட்ட யாராலும் முடியாது! என் காரியம் முடியற வரைக்கும் நான் இங்க தான் இருப்பேன். இவகிட்ட தான் இருப்பேன் என்றாள்.
  சரி இருந்துட்டு போ! ஆனா உன் காரியம் எப்ப முடியும் பாவம் இந்த அப்பாவி பொண்ணு  உன்னாலே பாதிக்கப்படுதே!
அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. இன்னும் ஒரு வாரம் அமாவாசை வரைக்கும் இவ என் தொந்தரவை தாங்கித்தான் ஆகனும். எனக்கு பசிக்குது பசிக்குது என்று கத்த ஆரம்பித்தாள் செல்வி.
  வீட்டுக்கு வா! சாப்பிடலாம் என்றான் வினோத்.
 சரி என்று அவனுடன் கிளம்பிய செல்வி. அங்கிருந்து இரண்டாவது தெருவினுள் நுழைந்து ஒரு வீட்டினுள் நுழைந்தாள். செல்வி நில்லு! ஏன் இங்க நுழையற நம்ம வீடு அடுத்த தெருவில தான் இருக்கு.
  இல்ல! இல்ல இதுதான் என் வீடு என்று நுழைந்த அவள் அங்கு உறங்கி கொண்டிருந்த ஒரு பெண்ணை எழுப்பி அம்மா  அம்மா உன் பொண்ணு வந்திருக்கேன் சோறு போடும்மா! பசிக்குதும்மா! பசிக்குதும்மா! என்றாள்.

  வாடி என் தங்கம்! இத்தனை நாள் கழிச்சி வந்தியாடி செல்லம்! என்னை பரிதவிக்கு விட்டு போன கண்ணே! இதோ ஒரு நொடியில உனக்கு பிடிச்சது எல்லாம் தரேம்மா! என்று அந்த பெண்மணி கூறவும் செல்வி அப்படியே மயங்கி விழுந்தாள்.
 ராகவனும் வினோத்தும் எதுவும் புரியாமல் திகைத்து நின்றார்கள்.
 ஏனேனில் அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. செல்வி பேசியது யாருடன்.?
                                   மிரட்டும் (10)


 டிஸ்கி} தொடரும் மின் வெட்டு காரணமாகவே பதிவுகளில் இடைவெளியும் மற்ற அன்பர்களின் வலைப்பதிவுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. இன்று கூட பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கரண்ட் கட் ஆகி வருகிறது. நண்பர்கள் வாசகர்கள் பொறுத்தருள்க!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!






Comments

  1. மேலும் மிரட்டுகிறது...

    தொடரும் மின் வெட்டு (உங்கள் நிலைமை தான் பல இடங்களில்...)

    தொடர்ந்து எழுதவும்... நன்றி...

    ReplyDelete
  2. தொடர்ந்து மிரட்டுங்கள் நண்பரே! வாசிக்க காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  3. மிரட்டல்தான் போங்க..............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!