Sunday, September 30, 2012

ஆன்றோர் பொன்மொழிகள்!ஆன்றோர் பொன்மொழிகள்!

மொழி மண்ணுலகின் புதல்வி, செயல் விண்ணுலகின் புதல்வி.
                            ஜான்சன்

தாய்மொழியை செம்மையாக பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிற மொழியில் புலமை வராது.
                              பெர்னாட்ஷா.

ஜனநாயகத்தின்  பொருள் சகிப்புத் தன்மை.
                        நேரு.

வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மையான வீரன்.
                               அன்னிபெசண்ட் 

அரசாங்கம் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை!
                                  சாம்பேன்.

இலட்சியம் இல்லாத மனிதன் திசைகாட்டும் கருவி இல்லாத கப்பலைப் போன்றவன்.
                                       ஆவ்பரி.

கண்ணியமான மனிதனே இல்லையென்று எவன் சொல்லுகிறானோ அவன்  அயோக்கியன்.
                                   பெர்க்கிலி

கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
                                      லவேட்டோ.

சட்டம் மரணத்தை போலிருக்க வேண்டும் மரணம் எவரையும் விடுவதில்லை!
                                        மாண்டெஸ்கியு.

இல்லத்தில் குழந்தை இன்பத்தின் ஊற்றுவாய்.
                                   மார்ட்டின்.

தீய மனிதர்கள் பயத்திற்கு கீழ் படிகின்றனர். நல்ல மனிதர்கள் அன்புக்கு கீழ் படிகின்றனர்.
                               அரிஸ்டாடில்

ஆழ்ந்த சிந்தனைக்கு அதிக பலன் உண்டு.
                                     ஆல்பர்ட்.

குழந்தை பருவம் பகுத்தறிவின் உறக்க நிலை.
                                   ரூஸோ.


மக்கள் மாக்களாவதும், மக்களாவதும் பெற்றோரை பொறுத்த விசயம்.
                                 லாமனே.


டிஸ்கி} கடந்த பத்து தினங்களாக கடும் மின்வெட்டு மற்றும் எங்கள் பகுதியில் மின்மாற்றி பழுது காரணமாகவும் எனது வேலைப்பளு காரணமாகவும் இணையத்திற்கு வர இயலவில்லை! ஓய்வு நேரத்தில் மின் தடை இருந்தமையால் வழக்கமான பதிவுகள் இட முடியவில்லை! வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிப்பு கூட செய்ய இயலாத இந்த நிலைக்கு வருந்துகிறேன். இன்னும் எங்கள் பகுதியில் பத்துமுதல் பன்னிரண்டு மணி நேர மின் தடை ஏற்படுகிறது. அதனால் நேரம் கிடைக்கும் சமயம் நமது வலைப்பூ மலரும் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கு நன்றி!

Saturday, September 22, 2012

ஏமாற்றாதே! ஏமாறாதே! பாப்பா மலர்!ஏமாற்றாதே! ஏமாறாதே!

செல்வன் ஒருவன் தன் பணப்பையை எங்கோ தொலைத்துவிட்டான். அதில் நூறு பொற்காசுகள் இருந்தன.
  என் பணப்பையைக் காணவில்லை! அதை கண்டுபிடித்து தருபவருக்கு பத்து பொற்காசுகள் தரப்படும் என்று ஊரெங்கும் தெரியப்படுத்தினான்.
  அந்த பணப்பையை  ஏழைச் சிறுவன் ஒருவன் கண்டெடுத்தான். நேர்மையாளனாகிய அவன் அந்த பையை செல்வனிடம் கொண்டுவந்து கொடுத்தான். தன் பணப்பையை பார்த்தவுடன் செல்வனுக்கு மகிழ்ச்சி. இந்த சிறுவனுக்கு ஏன் வீணாக பத்துப் பணம் தர வேண்டும் என்று மனதிற்குள் கணக்குப் போட்டான். சிறுவனைப் பார்த்து, சிறுவனே இந்த பையில் நூற்றிருபது பொற்காசுகள் வைத்திருந்தேன். இருபது காசுகள் குறைவாக உள்ளது மரியாதையாக கொடுத்துவிட்டால்  உன்னை விட்டு விடுகிறேன் என்று மிரட்டினான்.
   சிறுவனோ அஞ்சவில்லை!ஐயா இந்த பையில் இருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கவில்லை! எனக்குத் தரவேண்டிய பத்து காசுகளை தந்து விட்டால் நான் சென்று விடுகிறேன் என்றான்.பணக்காரனோ என்னுடைய காசுகளை திருடியது மட்டுமில்லாமல் கூலி வேறு கேட்கிறாயா? வா நீதிமன்றத்திற்கு என்று அழைத்து சென்றான்.
  நீதிபதிமுன் வழக்கு வந்தது. பணப்பையை வாங்கி பார்த்தார் நீதிபதி. அந்த பையினுள் நூறு பொற்காசுகள் மட்டுமே வைக்கமுடியும் என்று அறிந்தார்.பணக்காரனின் ஏமாற்று புத்தியை அறிந்து தக்க பாடம் புகட்ட நினைத்தார் நீதிபதி.
  பணக்காரனைப்பார்த்து. உம் பையில் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தது உண்மைதானே என்றார். செல்வனும் ஆம் நீதிபதி அவர்களே   பையினுள் நூற்றிருபது பொற்காசுகள் இருந்தன. இவன் தான் திருடிக் கொண்டு தர மறுக்கிறான் என்றான்.
  நீதிபதி, புன்னகையுடன் கூறினார். செல்வனே இந்த பையினுள் நீ சொன்னது மாதிரி நூற்றிருபது பொற்காசுகள் வைக்க முடியாது. நூறு பொற்காசுகள் வைக்கும் அளவுதான் பை தைக்கப்பட்டுள்ளது. எனவே நீ தொலைத்த பை இதுவல்ல! வேறு யாரோ தவற விட்ட பைதான் இது. ஆனால் இதுவரை யாரும் பையை தவற விட்டதாக இங்கு வரவில்லை!
எனவே இந்த பை உன்னுடையது அல்ல. இதைக் கண்டெடுத்த இந்த சிறுவனே இதன் உரிமையாளன். இந்த பொற்காசுகள் அவனுக்கே சொந்தம். உன் பணப்பையை யாராவது கண்டெடுத்து கொடுத்தால் உன்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
சபையோர் நல்ல தீர்ப்பு என்று புகழ ஏமாற்ற நினைத்து தனது பணத்தை இழந்தேனே என்று வருத்தமுடன் அங்கிருந்து சென்றான் பணக்காரன். சிறுவனோ நீதிபதியை வணங்கி மகிழ்வுடன் வீட்டிற்கு சென்றான்.

  ஏமாற்றாதே! ஏமாறாதே!

பேராசிரியர் சோதியின் 150 நன்னெறிக் கதைகளில் இருந்து தழுவல்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Friday, September 21, 2012

திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் சிவானந்தேஸ்வரர்நாலு பேர் போன வழியில் நாமும் செல்வோம் என்றொரு பழமொழி உண்டு. யார் அந்த நால்வர்?முன்னே செல்பவர்களை பின்பற்றி செல்ல வேண்டுமா? இல்லை! சமய குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் தான் அந்த நால்வர்.இந்த பெரியோர்கள் அக்காலத்தே வண்டி பாதை வசதிகள் இல்லாத போதும் பல அரிய சிறப்பு வாய்ந்த தலங்களுக்குச் சென்று இறைவனின் சிறப்புக்களை பாடல்களாக பாடி துதித்து இறையருள் பெற்றதோடு மட்டுமல்லாமல் நமக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர்.
    நம் நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 275 ஆகும். அவற்றுள் தொண்டை நாட்டில் 32 தலங்கள். அவற்றுள் ஒன்றுதான் திருக்கள்ளில். திருஞான சம்பந்தரால் போற்றி பாடப்பெற்ற இந்த அழகிய தலம் இன்று திருக்கண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
 நந்தி தீர்த்தம்
     சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னை- பெரியபாளையம் செல்லும் வழியில் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் இருந்து தெற்கே பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கள்ளில் என்னும் திருக்கண்டலம். திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் வழியாக பெரிய பாளையம் செல்லும் சாலையில் வெங்கல் என்னும் ஊரிலிருந்து கன்னிகைப்பேர் செல்லும் சாலையில் வலப்புறம் திரும்பினால் 10 கி.மீ தொலைவில்  திருகண்டலம் அடையலாம்.
    திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள குசஸ்தலை ஆற்றில் நீராடுவதற்கு முன் தனது பூஜைப் பெட்டிகளை கரையின் மீது வைத்து விட்டு அடியார்களோடு நீராடினார்.அப்போது இறைவன் சம்பந்தரது பூஜைப்பெட்டிகளை கவர்ந்து அருகில் உள்ள கள்ளிக் காட்டில் மறைத்து தான் அங்கு உறைவதை குறிப்பால் உணர்த்தினார்.  கள்ளில் உறையும் ஈசனை வழிபட்டு கள்ளில் பதிகம் பாடினார் சம்பந்தர் என்பது வரலாறு.
 ராஜகோபுரம்

தலவிருட்சம்: இத்தலத்தின் விருட்சம் கள்ளியாகும். அபூர்வமான கோட்டுப்பூ வகையைச் சேர்ந்த கப்பலறி எனப்படும் இக்கள்ளி மரத்தடியில் இறைவன் எழுந்தருளி இருந்ததால் திருக்கள்ளில் நாதர் என்றும் திருக்கள்ளீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். ப்ருகுமுனிவர் அகத்தியர் போன்றோர் வழிபட்ட தலம் திருக்கள்ளில்.

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற சிறப்புடையது திருக்கள்ளில். இத்தலத்தின் மூர்த்தி சிவானந்தேஸ்வரர்.  தீர்த்தம் நந்தி தீர்த்தம். தலம் திருக்கள்ளில் மூன்றுமே சிறப்புடையது. ஆலயத்தின் எதிரே நந்தி தீர்த்தம் அருமையாக அமைந்துள்ளது. புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி விமானம் பழமையான கஜபிருஷ்டம் என்னும் வகையை சேர்ந்தது.
 ஆலய உள் பிரகாரத்தின் ஒரு பகுதி
 
சோமாஸ்கந்தவடிவம்.
 சுந்தர விநாயகர் சன்னதி
   சுவாமி- அம்மன் சன்னதிகளுக்கு இடையே முருகர் சன்னதி அமையப்பெற்ற ஆலயங்கள் சோமாஸ்கந்த வடிவ தலங்கள் ஆகும்.  திருக்கள்ளில் அவ்வாறு அமையப்பெற்றுள்ளது. மகேஸ்வர வடிவங்களில் சிறப்புடையது இந்த வடிவம். மூன்று தெய்வங்களும் கிழக்கு நோக்கி அமையப்பெற்று வணங்குபவர்களுக்கு வளங்களை வாரித் தருகின்றனர். இத்தல விநாயகர் பிரும்மாண்டமாய் சுந்தர விநாயகர் என்ற நாமத்துடன் காட்சி அளிக்கிறார். இங்கு விநாயகருக்கு மாலை சார்த்தி வழிபட திருமணத் தடை அகலுகிறது.
  இவ்வாலயத்தில் உள்ள பைரவருக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்து வழிப்பட்டால் இழந்த பொருட்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை! பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நூறுவயது ஆறுமுக குருக்கள் (சேரில் அமர்ந்திருப்பவர்)

100 வயது குருக்கள்: இந்த ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றும் திரு வெ.சி ஆறுமுக குருக்கள் 100 வயதை கடந்தவர். பரம்பரையாக பூஜித்து வரும் அவர் இந்த தள்ளாத வயதிலும் உற்சாகமாக கோவிலை பராமரித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து பக்தர்கள் சிறப்புற பூஜைகள் செய்து வருகிறார். அவர் ஆசி பெற்று வருதல் மிகச்சிறப்பு.
திருக்கள்ளில் பதிகம்:
முள்ளின் மேல் முதுகூகை முரலும் சோலை
வெள்ளின் மேல் விடுகூறை கோடி விளைந்த
கள்ளின் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
சம்பந்தர் பாடிய பதினோறு பதிகங்களில் முதல் பதிகம் இது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  ஊத்துக் கோட்டை பெரியபாளையம் செல்லும் பேருந்துகளில் ஏறி கன்னிபுத்தூர் என்னுமிடத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் திருக்கள்ளில் அடையலாம்.
தட எண்கள் 92, 123, 125,
தட எண்58டி என்ற பேருந்து திருக்கண்டலம் செல்கிறது.
செங்குன்றத்தில் இருந்து மாநகர பெரிய பாளையம் செல்லும் மாநகர பேருந்துகள் 514,592 ஆகியவை மூலம் கன்னிபுத்தூர் வந்து அங்கிருந்து ஆலயத்திற்கு செல்லலாம்.
 நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணிவரை
 மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை.

திருக்கள்ளில் செல்வோம் திருவருள் பெருவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, September 20, 2012

சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்!சுந்தரப்பாண்டியன்! என் பார்வையில்!

சினிமா விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு சினிமா பற்றிய பெரிய ஞானமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களை பார்ப்பதோடு சரி! தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருடங்கள் ஆகிவிட்டன. சுந்தரப்பாண்டியனை திங்களன்று ரெட்டில்ஸ் பாலா திரையரங்கில் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்! அந்த கதையையே தனிப்பதிவாக போடலாம். அது இப்போது வேண்டாம். படத்தை பத்தி ஒரு பதிவு எழுதி பார்ப்போம் என்று எழுதுகிறேன். சினிமா விமர்சகர்கள் மன்னிப்பார்களாக!

   சுந்தரபாண்டியன் மதுரை பக்கத்து இளைஞன்! படித்துவிட்டு வேலைக்கு போகாமல் நண்பர்களோடு(பாட்டிமார்களோடு) சுற்றிவருகிறார். அவ்வப்போது முறைப்பெண்ணை கிண்டல் செய்து வருகிறார். அவர்களும் அதை விரும்புகிறார்களாம். அந்த ரூட் பஸ்ஸில் வரும் பெண்ணை அவர் நண்பர் லுக் விட அவருக்கு உதவப் போகிறார். இதற்கு நடுவில் அப்புகுட்டி வேறு அந்த பெண்ணை லவ்வ ஒருமாதம் டைம் கொடுத்து அவரால் கரெக்ட் பண்ண முடியவில்லை என்றால் ஒதுங்கி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அவர் ஒதுங்க மறுத்து தொடர்கிறார்.
நண்பர் சொதப்ப இவரே நண்பரின் காதலை சொல்கிறார். அந்த பெண்ணோ உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்கிறது. இப்போதுதான் ஒரு ட்விஸ்ட்! அந்த பெண் பள்ளியில் படிக்கும் காலத்தில் சசிக்குமார் அந்த பெண்ணை விரும்பியிருக்கிறார். இவர்கள் ஒப்பந்தப்படி சீனியரான இவரே அந்த பெண்ணை லவ்வுகிறார். அப்புகுட்டி அந்த சமயத்தில் வந்து தகறாரு பண்ண பஸ்ஸில் சண்டை வந்து தள்ளி விட்டு இறந்து போகிறார்.
   இதற்கு நடுவில் ஹீரோயின் வீட்டில் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அது வேறு யாருமல்ல! ஹீரோவின் நண்பர்தான்! அவரது முறைப்பெண்தான் ஹீரோயின். ஹீரோவின் காதல் அந்த நண்பருக்கும் தெரியும். இருந்தாலும் தீவிரமாக முறைப்பெண்ணை மணக்க முயற்சிக்கிறார். ஹீரோயின் காதல் தெரிந்து கல்லூரியைவிட்டு நிறுத்திவிடுகிறார்கள் பஸ் சம்பவத்தால் ஜெயிலுக்கு சென்று திரும்பும் ஹீரோ வீட்டுக்குத் திரும்புகிறார்.
   ஹீரோயினை சந்தித்து சண்டை போடுகிறார். அந்த பெண் நடந்ததை கூறுகிறது! அப்போது கூட ஹீரோவிற்கு நண்பன் தான் அந்த பெண்ணின் முறைப்பையன் என்று தெரியவில்லை! இறுதியில் பெண் கேட்டு சென்று அவர்களும் கொடுப்பதாக சொல்லிவிட திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  ஹீரோயினை மணக்க முடியாத வெறுப்பில் இருக்கும் நண்பரும் தான் பார்த்த பெண்ணை தட்டிவிட்டானே என்று நினைக்கும் நண்பரும், அப்புகுட்டியின் நண்பரும் ஹீரோவை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். அதில் வென்றார்களா? ஹீரோ ஹீரோயினை கைப்பிடித்தாரா என்பதே கதை!
   கோர்வையாக எழுதமுடியவில்லை என்று நினைக்கிறேன்!  சரி விசயத்திற்கு வருவோம்! மதுரை சுற்றியுள்ள கிராமங்களை கேமிரா சுற்றி வருகிறது. அருமையான ஒளிப்பதிவு என்று கூறலாம். சசிக்குமார், லஷ்மி மேனன் காதல் பாடலில் மதுரை இயற்கை காட்சிகள் அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் எனது நினைவில் நிற்கவில்லை! ஆனால் கேட்கும் போது இரண்டுபாடல்கள் சிறிது ரசிக்கவைத்தன.
    ஹீரோயின் தோழியாக வரும் பெண்ணும் இயல்பாக நடித்துள்ளார். அருமையான தேர்வு. ஹீரோவின் முறைப்பெண்ணாக வரும் பெண்ணும் ஹீரோயினின் சித்தியாக வரும் பெண்ணும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்கள். காமெடி என்று தனி டிராக்கோ அதற்கான நடிகர்களோ இல்லை!
    சசிக்குமார் ஆங்காங்கே ரஜினி, டீ. ஆர் மேனரிசங்களை பயன்படுத்தி கை தட்டல் அள்ளிச் செல்கிறார். ஆனால் சில சமயங்களில் அது ஓவர் டோஸாகத் தெரிகிறது.லஷ்மி மேனன் அருமையான தேர்வு. கிராமத்து பெண்ணாக இயல்பாக நடித்துள்ளார். ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது.நன்றாக நடித்துள்ளார். ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களில் காமெடி பண்ணுபவரின் நடிப்பு சூப்பர்.

 க்ளைமேக்ஸ் நாடோடிகளை நினைவுப்படுத்துகிறது. தியேட்டரில் இளைஞர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். மாற்றியிருக்கலாம். சசிகுமாரின் காதலை ஒப்புக்கொண்டு பெண்கேட்டு செல்லும் அவர் அப்பா, பெண்ணுடைய அப்பாவிடம் நீங்களும் நானும் ஒரே ஜாதிதான்! நீங்க இங்க எப்படியோ அதுபோல எங்க ஊருல நானும் பெரிய இடம்தான் என்று சொல்லும்போது தியேட்டரில் கலாய்க்கிறார்கள் பணமும் ஜாதியும்தான் காதலுக்கு எதிரி என்பது போல உறுத்தினாலும் யதார்த்தம் அதுதான். அதுபோல இறந்த நண்பனின் குடும்பத்திற்கு பண உதவி செய்வதும் நிலம் எழுதி வைப்பதும் நடைமுறையில் இருந்தாலும் கொஞ்சம் நெருடலாக உள்ளது.
  நண்பனுக்கு காதலுக்கு உதவப்போய் தானே காதலிக்க ஆரம்பிப்பது ஒன்றும் புதுசு அல்ல! இப்படி என் நண்பனுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் இதற்காக பழிவாங்கவெல்லாம் செய்வார்கள் என்பதும் கொஞ்சம் ஓவர்தான்!

 சில லாஜிக் மிஸ்டேக்ஸ்: தன்னுடைய காதலி நண்பனுக்கு  நிச்சயம் செய்யப்பட்டுள்ளது தனக்குத் தெரியாது என்கிறார் ஹீரோ! ஹீரோயின் வீட்டில் தனக்கு வேறு பையனுடன் நிச்சயம் செய்துவிட்டார்கள் என்று சொல்லும் போது யார் என்ன ஏது என்று விசாரிக்காமல் இருப்பாரா?
  ஹீரோயினை மணக்க இருப்பவர் ஹீரோவின் நண்பர்! அவர் தனக்கு நிச்சயமானதும் ஹீரோவிடம் சொல்லாமல் இருப்பது ஏன்?
 க்ளைமேக்ஸில் பெரிய கடப்பாறையால் ஹீரோவை அடித்து ஸ்பேனரால் பல்லை உடைத்து கத்தியால் குத்தியும் அவர்  சாதரணமாக எழுந்து சண்டை போடுவது ஆச்சர்யமாக உள்ளது. கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
சசிக்குமார் இந்த பாணியை விரைவில் மாற்றி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் விரைவில் காணாமல் போகலாம். சில காட்சிகள் அடுத்த என்ன நடக்கும் என்பதை உறுதி செய்து விடுகிறது. குறிப்பாக பஸ் சண்டையில் அப்புகுட்டியை தள்ளிவிடுவது சசி இல்லை என்பதை நான் முன்பே ஊகித்து விட்டேன்! அது விமர்சனங்கள் படித்த பாதிப்பாக கூட இருக்கலாம்.  ஹீரோ ஹீரோயின் நண்பர் என்று குழப்பி இருப்பதற்கு மன்னிக்கவும். அவர்களின் பெயர் தெரியவில்லை! கதாபாத்திரபெயர் மனதில் நிலைக்கவில்லை!
மொத்தத்தில் ஒரு தடவை ஜாலியாக பார்க்கலாம்!

ரெட்டில்ஸ் பாலா திரையரங்கில் படம் பார்த்தேன். பரவாயில்லை! பழைய ரெட்டில்ஸ்திரையரங்குகள் போல இல்லாமல் டீசண்டாக இருந்தது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!

Wednesday, September 19, 2012

வித்தியாச விநாயகர்கள்!வித்தியாச விநாயகர்கள்!செங்குன்றத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சேஷ்டி அங்கிருந்து மேற்கே செல்லும் பாதையில் இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் இங்குள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி முக்கண் கொண்டவர் மேலிரு கரங்களில் கோடரியும் அட்சமாலையும் கீழிறு கரங்களில் மோதகமும் தந்தமும் ஏந்தி தாமரைமலர்மீது அமர்ந்தவாறு தொந்தியில்லாமல் காணப்படுகிறார். பிரம்மன் பூஜித்த இந்த கணபதிக்கு 16 தேங்காய்கள் சூரை விட நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை!

  கேரளத்தில் பழவங்காடியில் உள்ள விநாயகர் வலது காலை மடித்து அமர்ந்து கொண்டிருப்பார். வலதுகால் ஆன்மீகத்தையும் இடதுகால் இகலோக சுகங்களையும் குறிக்கின்றன. இவர் ஆன்மீக சுகத்தினை தருகின்றார். இவருக்கு முக்கிய நிவேதனம் தேங்காய்.

திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பூந்தோட்டம் என்னும் அழகிய கிராமத்தில் மனித முகத்தோடு கூடிய அதிசய கணபதியை தரிசிக்கலாம். பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்கள் மூலம் செதலப்பதி என்று அழைக்கப்படும் தில தர்பணபுரியை அடையலாம். அங்குள்ள முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் இந்த விநாயகர் ஆலயம் உள்ளது. ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் இவர் யானை முகம் இல்லாமல் அழகிய மனித உருவில் அருள் பாலிக்கிறார்.

வேலூர் பெங்களூர் நெடுஞ்சாலையில் 1.5 கிமீ தொலைவில் உள்ள தலம் சேண்பாக்கம். இங்குள்ள ஆலயத்தில் சுயம்பு மூர்த்தியாக செல்வ கணபதி எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.இக்கோவிலில் பதினோரு சுயம்பு மூர்த்தங்கள் பாலவினாயகர், நடனவினாயகர், கற்பகவிநாயகர், சிந்தாமணிவிநாயகர், செல்வவிநாயகர், மயூரவிநாயகர்,மூஷிகவிநாயகர், வல்லபவிநாயகர், சித்திபுத்திவிநாயகர் பஞ்சமுகவிநாயகர் என்று பதினோரு திருநாமங்களுடன் அழைக்கப்படுகிறார்.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் பாபநாசத்தில் சிவசக்தி காளியம்மன் கோவில் அருகில் சர்ப்ப விநாயகர் எழுந்தருளி உள்ளார். சர்ப்பமொன்று தன் படத்தை குடையாக்கி விநாயகரின்  தலைக்கு மேலே அழகு செய்வது இம்மூர்த்தியின் தனித்தன்மை. கதை, கரும்பு,வில்,சூலம்,தாமரைமலர்,பாசம்,மலர்,நெற்கதிர், தனது கரங்களில் தாங்கி அத்துடன் அமுத கலசத்தையும் துதிக்கையில் ஏந்தி நிற்கிறார்.

சேரன் மாதேவி மிளகுப் பிள்ளையார்.
  கன்னடியன் கால்வாயில் தண்ணீர் குறைந்து போனால் அக்காலத்தில் சேரன் மாதேவி மக்கள் குளக்கரைப்பிள்ளையாருக்கு மிளகு தடவி அபிஷேகம் செய்வார்களாம்.மழைவந்து குளம் நிரம்புமாம். இதனால் இப்பிள்ளையார் மிளகு பிள்ளையார் ஆனார்.


பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் உள்ள பாலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி இருப்பவர் கதவிற் கணபதி! அரையடி உயரமே உள்ள மரத்தால் ஆன திருமேனி உடையவர். இவரை வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை!

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள ஊர் திருவேதிக்குடி! பிரம்மாவும் வேதங்களும் சிவனை வழிபட்ட தலமான இங்கு விநாயகர் செவிசாய்த்து இருக்கும் கோலத்தில் இருக்கிறார். வேதங்களை கேட்க இந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இப்பிள்ளையாரின் நாமம் வேதப் பிள்ளையார். இன்னொரு பெயர் செவி சாய்த்த பிள்ளையார்.

 திருப்பரங்குன்றத்து குடைவரை கோயிலில் முருகப்பெருமானுக்கு அருகில் தாமரைமலர் மீது அமர்ந்து கைகளில் கனியும் கரும்பும் ஏந்தி சூரிய சந்திரனுடன் காட்சி தருகிறார் கற்பக விநாயகர்.

பிள்ளையார் பட்டியில் ஆறு அடி உயரத்தில் பத்மாசனத்தில் அருள் பாலிக்கும் விநாயகர் இருகரங்கள் உடையவர். கஜமுகாசுரனை கொண்ற பாவம் விலக சிவனை நோக்கி தவமிருப்பதாக ஐதீகம். இதற்கு ஆதாரமாக வலதுகரத்தில் சிவலிங்கம் ஏந்தியுள்ளார்.

 மதுரை கீழ மாசி வீதியில் அமைந்துள்ளது மொட்டை விநாயகர் கோயில். இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.அன்னியர் படையெடுப்பின் போது ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம். அப்போது வியாபாரிகள் மொட்டை விநாயகர் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்புவதை பார்த்து  கோபமுற்ற அன்னியர்கள் பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி ஆற்றில் வீசினார்களாம். அந்த சிரசு மீண்டும் அதே இடத்திற்கு வந்தது கண்டு பயந்து ஓடிவிட்டனராம் அன்னியர்கள். இந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் இவரை தரிசித்த பிறகே கடை திறப்பது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் பெரிய உருவத்துடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு பெரிய கொழுக்கட்டை நிவேதனம் மூன்று குறுனி அரிசியில் செய்து படைக்கப்படுகிறது. இதே ஆலயத்தில் உடல் முழுக்க வெள்ளை பூசி இருக்கும் விநாயகர் விபூதி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

திருப்புறம்பியம் என்னும் தலத்தில் பிரளயம் காத்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயக சதுர்த்தி அன்று அவருக்கு ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது.

டிஸ்கி} படங்களை தேர்ந்தெடுத்து போட நேரமில்லை! கிடைத்தவரை போட்டுள்ளேன்! விரைவில் சந்திப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! 

Tuesday, September 18, 2012

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 9

உங்கள் ப்ரிய பிசாசு.

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பண் வினோத் அழைத்து வரும் பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளது. அந்த பேயே தன்னை அந்த ஊருக்கு அழைத்து வரச் சொன்னதாக கூறுகிறான் ராகவன். முகேஷின் நண்பன் ரவிக்கும் பேய் பிடித்துள்ளதாக முகேஷ் கருதுகிறான். அவனை திருப்பதிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து அழைக்கிறான். முதலில் ஒத்துக் கொள்ளும் ரவி பின்னர் வீட்டில் மறுத்து பேசுகிறான். இனி:


 இருள் சூழ்ந்த இரவு வேளையில் சில சில்வண்டுகள் சத்தம் பேயிறைச்சலாக இருந்தது. கிராமம் என்பதால் வேறு சப்தங்கள் இல்லை! ஆங்காங்கே பட்டியில் உள்ள மாடுகள் வாலை சுழற்றும் சப்தங்களும் ஒரு சில நாய்களின் குறைப்புக்களும் தவிர அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரம் என்பதால் ஊரின் அனைத்து வீடுகளும் அடைத்துக் கிடந்தன. சிலர் திண்ணையிலும் வாசலிலும் கட்டில் விரித்து படுத்துக் கிடந்தனர்.
   புது ஊர் புதிய இடம் என்ற எந்தவித பயமும் இன்றி செல்வி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த நள்ளிரவிலும் சில நாய்கள் அவளை கண்டு உரக்க குறைத்தன ஆனால் கிட்டே நெருங்க வில்லை! தூரத்தில் நின்று குறைத்துவிட்டு ஓடின. இரண்டு தெருக்கள் கடந்து பூஜாரி வீட்டின் முன் வந்து நின்றாள் செல்வி.
  அந்த நேரத்திலும் விழித்து இருந்தான் அந்த பூஜாரி! திண்ணையில் கட்டில் போட்டு கையில் ஒரு விசிறியோடு அமர்ந்து இருந்தான். செல்வி அந்த வீட்டின் படலை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். பூஜாரி அவள் வருவதை உறுதி செய்து கொண்டான். அவன் கண்கள் ஆர்வத்தால் மின்னின. அவனுள் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. வேகமாக எழுந்தான். வா அம்மணி! வா! நீ வருவேண்ணு எனக்குத் தெரியும் என் குருநாதர் எனக்கு சரியாத்தான் வித்தையை கற்பிச்சு கொடுத்து இருக்காரு என்று விகாரமாய் சிரித்தான்.
     செல்வி பதிலேதும் பேசவில்லை! மவுனமாக அவன் பின்னால் நடந்தாள். அம்மணி என்னா அழகு! உனக்கு போயி பேய் பிடிச்சி இருக்கே! அதை என் மந்திர சக்தியாலே விரட்டறேன்! ஆனா அதுக்கு முந்தி நீ எனக்கு வேணும். அதுதான் அதனாலத்தான் மந்திரிச்சி கட்டறமாதிரி இந்த தாயத்தை கட்டி அனுப்பினேன். இது வசிகரிக்கிற தாயத்து!
   நேத்து நீ ஊருல நுழையறப்பவே பாத்தேன்! அப்பவே நீ எனக்குன்னு தோணிடிச்சி! வா! அம்மணி! வா என்று அழைத்தான் பூஜாரி. இந்த பூஜாரி இப்படித்தான் ஊரை ஏமாற்றிகிட்டு இருக்கான். சில வசிய மந்திரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேய் பிடித்ததாக வரும் பெண்களை மோசம் செய்து கொண்டிருந்தான். ஆனால் இந்த விசயம் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. நல்லவன் போலவே நடித்து வந்தான்.
   குடும்பம் இல்லாதவன் தனிக்கட்டை என்று மக்கள் அவன் மீது பரிதாபப்பட்டார்கள். இதனால் தைரியமாகவே அவன் இந்த காரியங்களை செய்து வந்தான்.  அந்த நினைப்பில் செல்வியிடமும் விளையாடவே நினைத்து தாயத்து என்ற போர்வையில் வசிய தாயத்து கட்டி அனுப்பிவிட்டான்.
   இது ஒருவகை வேரினால் செய்யப்பட்ட தாயத்து. இதை பக்குவப்படுத்தவேண்டிய முறையில் செய்து மற்றவர்கள் கையில் கட்டிவிட்டால் ஹிப்னாடிசம் போலவே அவர்கள் நம் கட்டுக்கு வருவார்கள். இங்கிருந்து ஹிப்னாடிசம் பண்ணியே வரவழைத்து விடலாம். அப்படி ஒரு வித்தையைத்தான்  அந்த பூஜாரி செய்து இருந்தான்.
  {வெகு காலம் முன் மோடி வித்தைக்காரர்கள் குடுகுடுப்பை காரர்கள் இதுமாதிரி செய்வதாக செய்திகளிலும் புத்தகங்களிலும் படித்திருக்கிறேன்}  பூஜாரி இந்தவித்தையை பிரயோகிப்பது இதுவே முதல் தடவை! எனவே அவன் தன் வித்தை பலித்துவிட்டது என்று மகிழ்வுடன் செல்வியை உள்ளே அழைத்துச் சென்றான். செல்வியும் பூனை மாதிரி அவன் பின்னால் சென்றாள். பூஜாரி கதவை இழுத்து மூடினான். அதன் பின் சிலநிமிடங்கள் வரை சப்தமே எழவில்லை! அப்புறம் பூஜாரியின் அலறல் அந்த ஊரையே எழுப்பியது.

ரவிக்கு திருப்பதி செல்வதில் விருப்பமே இல்லை! அவனது தந்தையே நம்ம குலதெய்வம் கோவில்தானே போய் வா என்றதும் மறுத்து பேசமுடியாமல் முகேஷுடன் அன்று மதியம் புறப்பட்டான்.
   நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது! மண்டையில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி பஸ் நிறுத்தத்திலிருந்த நாற்காலியில் தனது பையை கழற்றி வைத்தபடி முகேஷ் நாம இப்ப திருப்பதி போயித்தான் ஆகனுமா? என்றான் ரவி.
   ஏன் இந்த சந்தேகம்! கட்டாயம் போகனும்! இல்லேன்னா நாள் கடந்தா உன் நிலை இன்னும் சீரியஸா ஆகிடும்னு எனக்கு தோணுது.
  நான் அப்படி என்ன அப்நார்மலாவா இருக்கேன்?
 ஏன் கேட்க மாட்டே? நேத்து பூரா நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும்?
 சரிடா! இப்ப திருப்பதியில போய் உங்க சித்தப்பாவை பார்த்தா எல்லாம் மாறிடுமா?
 கண்டிப்பா!
எப்படி சொல்றே?
அவரு பெரிய மந்திரவாதி! அவர்கிட்ட மினிஸ்டர்ஸ் கூட போய் வராங்க! நம்ம ஆக்ட்ரஸ் கூட அங்க போய் வருவதா கேள்விப்பட்டிருக்கேன். பெரிய பெரிய பேயை எல்லாம் அவர் பிடிச்சி அடக்கி இருக்காராம்!
  நீ நேர்ல பாத்தியா?
பார்த்தாதானா? சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்!
  ம் அவ்வளவுதானா?
என்ன அவ்வளவுதானா? பெரிய பெரிய பிரும்ம ராட்சஸஸ் கூட அவர் அடக்கி இருக்காரு தெரியுமா?
  அட என்னமோ பெரிய காசி ராஜன் கதை மாதிரி சொல்லிகிட்டு போறே!
 அது என்ன காசி ராஜன் கதை! அதை முதல்ல சொல்லு!
 ஒரு ஊருல ஒரு சோம்பேறி இருந்தானாம். முழு சோம்பேறியான அவனுக்கு எப்படியொ பகடை ஆடறதுல ஒரு நாட்டம்! அதுல அவன ஜெயிக்க ஆளே கிடையாதாம்! எல்லோரும் பயந்து ஓடிட விளையாட ஆளே கிடைக்காம பெருமாள் கோவில்ல போய் உக்காந்தானாம். அங்க பெருமாளோட ஆடறதா சொல்லிட்டு இவனே ரெண்டு பேருக்குமா ஆடி அதுல பெருமாளை ஜெயிச்சி புட்டானாம். பெருமாள் கிட்ட காசு கேட்டானாம். அவரோ ரம்பையை கூப்பிட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டாராம்!  தேவலோகத்துல ஆடறப்ப இவனை கூட்டிக்கிட்டு ரம்பை போனது தெரிஞ்ச இந்திரன் ரம்பையை பிரம்ம ராட்சஸா மாற சாபம் போட்டுட்டாராம்.
ரம்பையும் தன் கணவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு பிரம்ம ராட்சஸா மாறி காசி ராஜன் பொண்ணுகிட்ட போயி பிடிச்சிட்டாளாம். யாராலும் விரட்ட முடியாம போயிருச்சாம்.
  இந்திரன் காசியில் விசுவநாதர் கோயில் கோபுரம் இடிஞ்சு தரைமட்டமாகி புதுசா கட்டறப்பத்தான் உனக்கு சாப விமோசனமுன்னு ரம்பைகிட்ட சொல்லியிருந்தானாம். அதை புருசன் கிட்ட சொல்லிட்டு ரம்பை காசிராஜன் பொண்ணை போயி பிடிச்சிட்டா!
  புருசன் காரன் காசிக்கு போய் பேய் விரட்டறதா ராஜாகிட்ட சொல்லி அந்த இளவரசிகிட்ட நான் உன் புருஷன் வந்திருக்கேன்னு சொன்னதும் அந்த பேய் அடக்கமா பேசுச்சாம்! ராஜாவுக்கு பெரிய ஆச்சர்யம்.
  இவன் காசிவிசுவநாதர் கோபுரத்தை எவ்வளவு சீக்கிரம் இடிச்சு மண்ணோடு மண்ணாக்கி புதுசா கட்டறீங்களோ அவ்வளவு சீக்கிரம் உங்க பொண்ணுக்கு குணமாகும்னு சொல்லிட்டான். மன்னனும் இடிச்சி கோபுரம் புதுசா கட்டவும் பேய் விலகிடுச்சு! ரம்பையும் சுய உருவம் பெற்று கணவனோடு வாழ்ந்தாள் இது சின்ன வயசுல கேட்ட கதை! இது மாதிரி இல்ல பிரம்ம ராட்சஸ் அது இதுன்னு சொல்றே என்றான் ரவி.
   இல்லைடா! நான் சொல்றது உண்மை! எங்க சித்தப்பாவை நேர்ல பாத்தப்புறம் நீ நம்புவே என்றான் முகேஷ். அசுவாரஸ்யமாய் தலையசைத்தான் ரவி.
  பஸ் வரவே ஏறி அமர்ந்தார்கள். டிக்கெட் வாங்கியதும்  பஸ்ஸில் வீசிய காற்று இதமாக இருக்கவும் நேற்று முழுவதும் சரியாக தூங்காத களைப்பினாலும் அப்படியே கண்ணயர்ந்து விட்டான் முகேஷ்.
   திடீரென ஒரு இடத்தில் நின்றது பஸ்! இங்க பத்து நிமிசம் நிக்கும்! டீ காபி சாப்பிடறவங்க இறங்கி சாப்பிட்டு வாங்க! கண்டக்டர் குரல் கொடுக்க கண்விழித்தான் முகேஷ். அவனது அருகில் ரவியை காணவில்லை!
      ரவி ரவி! என்று சுற்றும் முற்றும் பார்த்தான்! பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர். என்னப்பா என்ன? யாரை தேடறே என்றார்கள்.
  என் ப்ரெண்ட்ம்மா! பக்கத்துல உட்கார்ந்து வந்தாரே அவரைத்தான் தேடறேன்!
 என்றபோது உன் பக்கத்திலயா? அப்படி யாரையும் நாங்க பாக்கலியே? என்றார்கள்.இதற்குள் நடத்துனர் வர சார்! என் கூட ஒரு பிரெண்ட் வந்தானே! அவனை காணோம் பார்த்தீங்களா? என்றார்
  என்னப்பா உளறரே? உன் கூட யாரும் வரலியே? நீ மட்டும் தானே ஏறினே?
 இல்லையே! டிக்கெட் கூட எடுத்தேனே! சட்டைக்குள் துழாவி டிக்கெட்டை தேடினான்! அவன் கையில் ஒரு டிக்கெட் மட்டுமே இருந்தது!
                                       மிரட்டும்(9)
 டிஸ்கி} சொந்த அலுவல்கள் காரணமாக மற்ற அன்பர்களின் வலைப்பூக்களுக்கு செல்ல நேரமில்லை! இரண்டு நாட்களுக்கு பிறகு சென்று படித்து கருத்திடுகிறேன்! பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!Monday, September 17, 2012

ஆக்ரமிப்பு!ஆக்ரமிப்பு!

“யோவ்! எல்லாத்தையும் அள்ளி வேன்ல போடுங்கய்யா! நான் டீ ஒண்ணு அடிச்சுட்டு வரேன்! சப் இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அகல கான்ஸ்டபிள்கள் அந்த தெருவுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள். யோவ்! எடுய்யா! சீக்கிரம் காலி பண்ணு உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது மக்களுக்கு இடைஞ்சலா கடை போடக்கூடாதுன்னு! சீக்கிரம் காலி பண்ணுங்க ஐயா வந்துட்டே இருக்காரு என்று கத்தியபடியே நுழையவும் நடை பாதை வியாபாரிகள் அவசர அவசரமாக மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்!
   அதற்குள் அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்து விட்டார்! என்னய்யா பாத்துகிட்டு நிக்கறீங்க! அள்ளுங்கய்யா! என்று சத்தம் போடவும் கான்ஸ்டபிள்கள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினார்கள்!
  ஐயா! ஐயா! இந்த ஒருதரம் விட்டுடங்கய்யா! இனிமே கடை போட மாட்டோம்! பண்டிகை சமயம் அய்யா! கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா! என்று ஒரு பெரியவர் கெஞ்ச ஏண்டா! எத்தினி தரம் சொன்னோம்! கேட்டீங்களாடா! இது பொதுமக்கள் நடந்து போற பாதை! உங்களுக்குத்தான் அரசாங்கம் கடை கட்டி கொடுத்திருக்கு இல்லே அங்க போயி வியாபாரம் செய்ய வேண்டியதுதானே!
  தப்புதான்யா! மன்னிச்சுடுங்கய்யா! இன்னிக்கு ஒரு நாள் விட்டுடுங்க ஐயா! பொருளெல்லாம் போவுதே ஐயா! ஐயா! அந்த பெரியவர் கத்த கத்த அள்ளிச்சென்றனர் கான்ஸ்டபிள்கள். 
   கடைகள் அவசர அவசரமாக காலி செய்யப்பட்டன. அன்றாடம் காய்ச்சிகளான அந்த நடைபாதை வாசிகள் கண்ணீருடன் புலம்புவதை யாரும் செவி சாய்க்க வில்லை! வாங்க வந்த மக்களும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் எதுவும் கேட்கவில்லை!
  அப்போது துணிச்சலாக  ஒரு இளைஞன்  என்ன சார்! வழக்கமா மாமூல் வாங்கிட்டு போவீங்க! இப்ப இப்படி பண்ணறீங்களே மாமூல் வேணும்னா கொஞ்சம் போட்டுதறோம் சார்! என்றபோது அவன் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது!
  ராஸ்கல்! எதிர்த்தா பேசுற! ரோட்டுல கடை போட்டு விக்கிற நாயி! உனக்கு இவ்வளவு திமிரா? நீ மாமூல் கொடுத்துதான் நான் பிழைக்கிறனா? யோவ் ஏட்டு இவனை ஜீப்புல ஏத்துய்யா? ஸ்டேஷன்ல வச்சி ரெண்டு தட்டு தட்டி அனுப்புனாத்தான் நம்மள பத்தி இவனுக்கு தெரியும் என்றார் அந்த எஸ்.ஐ.
   ஒரு மணி நேரத்தில் அந்த வீதி முழுவதும் சுத்தமாக இருந்தது. போலீஸ் வேன் நிரம்பி இருந்தது. இன்னாயா! எல்லாம் ஏத்தியாச்சா! போலாமா? என்றார் எஸ்.ஐ
எல்லாம் கிளியர் பண்ணிட்டோம் சார் கிளம்ப வேண்டியதுதான். எங்கேயே அவன்? ஜீப்ல இருக்கான் சார்!
   கொண்டு வாய்யா!
  அந்த இளைஞனை இழுத்துவந்து நிறுத்தினர். டேய் தம்பி! நியாயம் எப்படி யாருகிட்ட பேசுறதுன்னு தெரிஞ்சு பேசனும். போவட்டும் ஸ்டேஷன்ல வந்து வீணா அடிபட்டு சாகாதே உன் ஆளுங்க கிட்ட சொல்லி ஒரு ரெண்டாயிரம் கொடுத்திட்டு போயி சேரு!
  ஐயா! அவ்வளவு வசதி இல்லீங்க!
  அடச்சீ வாய் மட்டும் நீளுது! இவன் திருந்த மாட்டான்! ஜீப்புல ஏத்துங்கய்யா! அங்க வச்சி பாத்துப்போம்.
  ஜீப் விரைந்தது. வேனிற்குள் நிறைய பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஏய்யா ஏட்டு நிறைய பொருட்கள் அம்புட்டுகிச்சு போலருக்கு! ஆமாய்யா! பண்டிகை வருதுன்னு எல்லோரும் புது சரக்கு எடுத்து இருக்கானுங்க  பாவம்!
   என்னயா! நீரு பாவம் புண்ணியமுன்னு பேசிகிட்டு எவ்வளவு தேறுமுன்னு கணக்கு போடுய்யா!
  அய்யா என் பையன் ரொம்ப நாளா ஒரு வீடியோ கேம் கேட்டுகிட்டு இருந்தான். இதுல ஒண்ணை கொடுத்தீங்கன்னா?
  யோவ் இப்பவே அடி போடறீயா! முதல்ல இன்ஸ்பெக்டர் வரட்டும்! அப்புறம் பங்கு பாகம் பிரிப்பெல்லாம்! அவர்கிட்ட பேசி வாங்கிக்க என்றார் எஸ்.ஐ.
  அன்றைய மாலை செய்திகளில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. போலீஸ் அதிரடி நடவடிக்கை! என்று கொட்டை எழுத்தில் வெளியாகி இருந்தன. அதே சமயம் அந்த தெருவில் பெரிய பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டன. அமைச்சர் வருகிறாராம்.
  சிலகுடும்பங்கள் அன்றைய வருமானத்தையும் நிரந்தர முதலீட்டையும் இழந்து அழுது கொண்டிருந்த வேளையில் போஸ்டர்களில் அமைச்சர் சிரித்துக் கொண்டிருந்தார் ஏழைகளின் காவலன் என்று!
                (முற்றும்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!

Sunday, September 16, 2012

திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2திருஷ்டிகளும் பரிகாரங்களும்! 2

சில வாரங்களுக்கு முன் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டிகளும் பரிகாரங்களையும் பற்றி கூறினேன். இந்த பகுதியில் பொதுவான திருஷ்டிகளும் அதற்கான பரிகாரங்களையும் கூறப்போகிறேன். நம்பிக்கை உள்ளோர் தொடருங்கள்!


கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர்.பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
  நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்தமிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல் நலம் குன்றியவரை கிழக்குப்பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்றுமுறையும் வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி கண்பட்ட திருஷ்டிகள் கடுகுபோல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு சுற்றி கடவுளை வேண்டி கரி அடுப்பு பற்றவைத்து அந்த தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக் கொண்டு விபூதி பூசிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசி விடுங்கள். விரைவில் குணமடைவார்.

பொறாமையினால் வரும் திருஷ்டி!
   உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூட திருஷ்டி உண்டாகும். பரபரப்பாக செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாக செயல்பட நேரிடும் திடீர் மந்தம் இந்த திருஷ்டியினால்தான் ஏற்படும். இதற்கு பரிகாரம் படிகாரம் சுற்றிப்போடுவதுதான். கடையில் பெரிய படிகாரக் கட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளானவரை கிழக்கு நோக்கி உட்காரவைத்து படிகார கட்டி ஒன்றினால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மூம்மூன்று முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி வீட்டின் பின்புறம் தணல் பற்றவைத்து அதில் படிகாரத்தை போட்டுவிடுங்கள். மறுநாள் அந்த படிகாரக் கட்டி பூத்திருக்கும் அதை முச்சந்தியில்  போட்டுவிட்டு திரும்பி பாராமல் வீட்டுக்கு வந்து கைகால் கழுவி கடவுளை வேண்டி விபூதி பூசிக் கொள்ளுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படி செய்தால் அதனை பிறர் கால் படாத இடத்தில் ஊற்றவும்.
  
உங்கள் வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில்!
   முறையாக திட்டம் தீட்டியும் அலுவலகம் அல்லது தொழிலிடத்தில் இறங்குமுகமா? அந்த திருஷ்டிக்கு பரிகாரம் இதுதான். வளர்பிறை சனிக்கிழமை அல்லதுஞாயிற்றுகிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதை துணியில் வடிகட்டி  வடிகட்டிய நீரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம், தொழிலிடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள் முடிந்தால் கழுவியும் விடலாம். இதில் முக்கியமான விசயம் இதை பிறரைக் கொண்டு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை செய்து பாருங்கள் திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.

வந்த திருஷ்டிக்கு பரிகாரம் பார்த்தோம்! இனி திருஷ்டி வராம இருக்க பரிகாரம்.
சிறப்பாக வியாபாரம் நடக்க பரிகாரம்! உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய், அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களை கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள். இந்த படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதியதாய் கட்டுங்கள். இதில் முக்கிய விசயம் கடையை திறந்ததும் இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும். மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும். அப்புறம் உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!
  அமாவாசையன்னிக்கு திருஷ்டி கழிக்கறேன் பேர்வழின்னு தேங்காயையும் பூசணிக்காயையும் உடைச்சு நடு ரோட்டுல போடறீங்க! அதுமுறையா செய்யக்கூடிய ஒன்று! எப்படின்னு கேட்டுக்கங்க!
 அமாவாசையன்னிக்கு தேங்காய் உடைக்கிறவங்க அன்னைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்துகிட்டே  வைச்சிடனும் மஞ்சள் தூளை தண்ணியிலே கரைச்சி அதை தேங்காய் பக்கத்துல வைச்சிடுங்க  தேங்காயை உடைக்கிறதுக்கு முன்னாடி அதை கையில் எடுத்துகிட்டு மனசார கடவுளை வேண்டி திருஷ்டி போகணும்னு வேண்டிகிட்டு அதை உடைக்கிறவர் கிட்ட தேங்காயையும் மஞ்சள் தண்ணீரையும் கொடுத்திடுங்க தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி  வாசல்ல ஒரு ஓரமா உடையுங்க. உடைபடற தேங்காய் மத்தவங்க எடுத்து உபயோகப்படுத்தனும். குறைந்தபட்சம் ஈ எறும்பாவது சாப்பிடனும். அதுதான் நல்லது. தேங்காயை உடைச்சதும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலையிலயும் உடம்புலயும் தெளிச்சிகிட்டு சுத்தி போட்டவறை உள்ளே வரச் சொல்லுங்க. உள்ளே வந்ததும் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க! இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்யுங்க வாணிபம் வளர்பிறையா வளரும்.

  பூசணிக்காய் உடைப்பது என்றாலும் முதலில் சாமி படத்தில் வைத்து வேண்டிக் கொள்ளவும். மஞ்சள் கரைத்த தண்ணீரையும் உடன் வைக்கவும். உடைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும் போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை நீங்கள் கையில் எடுத்து கடவுளை நினைத்து மனசார திருஷ்டி கழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றுபவரிடம் கொடுத்து சுற்றி கடை வாசலில் ஓரமாக உடைக்கச் சொல்லுங்கள். பின்னர் மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொண்டு அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்.கை கால் கழுவிகொண்டு வந்ததும் குடிக்க தண்ணீர் கொடுத்து அமரச் செய்யுங்கள்.
  உடைத்த பூசணிக்காய் சிதறலாமே தவிர நசுங்க கூடாது! அதனால்தான் அதற்குள் காசுகளை போடும் பழக்கம் வந்தது. காசுகளை எடுப்பவர்கள் அதை எடுத்துக் கொண்டு குப்பையில் போட்டுவிடுவார்கள். மேலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக மஞ்சள் குங்குமம் அதில் போடப்பட்டது. ஓரமாக உடைத்த பூசணிக்காய்களை குப்பையில் அள்ளி போடச்சொல்லுங்கள்.  பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்கள் ஊழியராய் இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.

  எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!
  கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள்.  எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.

 இன்னும் சில பரிகாரங்கள் உள்ளன! இறைவன் விருப்பமிருந்தால் அவை மூன்றாவது பாகத்தில் தொடரும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Saturday, September 15, 2012

வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!


மண்ணு மோகன் சிங்கு  கையில ஆட்சிய கொடுத்திட்டு படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம் நாம! ஆவுன்னா வெளிநாடுக்கு போயி சுத்தி பாத்துட்டு ஜாலியா இருக்கிற மனுசன் இப்ப நம்ம ஜனங்களுக்கு வெச்சிட்டாருப்பா பெருசா ஆப்பு!
  ஒரு வாரமாவே பெட்ரோல் உயருது காஸ் விலை உயருது! டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு  திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு  ஆப்பு வெச்சிட்டாரு! நடுத்தர மக்கள் பாடு இனி அதோ கதிதான்!
  பொருளாதார மாமேதையான அவரு கண்டு பிடிச்சு வெளியிட்ட அறிவிப்புல
டீசல் விலையை லிட்டருக்கு அஞ்சு ரூபா உயர்த்திட்டாரு! ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு! இப்ப பண்டிகை காலம் வேற ஆரம்பிக்க போற சமயத்திலே இன்னும் தாறுமாறா விலை ஏறப்போகுது இந்த அறிவிப்பால!
  அதோடு விட்டிருந்தா பரவாயில்லை! நம்ம சோத்துக்கும் உலை வச்சிட்டாரு மன்னு மோகனு! இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம்!  ஏழாவது சிலிண்டர்ல இருந்து மானியம் இல்லாமத்தான் தருவாராம்!
  மானிய விலையில் அரசு தரும் சிலிண்டரின் விலை 386.50. இது ஏஜென்சிகளை பொருத்து 450 ரூ வரை விற்கப்படுகிறது!  ஏழாவது சிலிண்டர் வாங்குனும்னா 733. 50 கொடுத்து வாங்கணும்! நம்ம எஜென்சி காரங்க ரவுண்டு பண்ணி 750 ஆக்கிடுவாங்க! ஏறக்குறைய இரு மடங்கு விலை!  இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம்!  அடங்கொக்க மக்கா!  400 ரூபா கொடுத்து வாங்கவே கஷ்ட படற நடுத்தர மக்களை கொஞ்சமும் நினைச்சு பாக்காமா இந்த மன்னு மோகனு இப்படி பண்ணி போட்டாரே!
   நல்லா வருவீங்கடா!

பிள்ளையார் திருத்தினார்! பாப்பா மலர்!பிள்ளையார் திருத்தினார்!


விநாயக சதுர்த்தி தினம்! அதிகாலை! அனைவரும் சிறப்பாக பண்டிகை ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். கோபு தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிள்ளையார் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண்ணை பிசைந்து கொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையார் உருவாகவில்லை! தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு!
  அந்த நேரத்தில் தான் செய்த அறை குறை பிள்ளையாரை பார்த்து கோபப்பட்டு அதை தூக்கி போட்டு உடைத்தான்.எதிர்வீட்டை நோக்கினான். அங்கு அவனது தோழன் விஜய் அழகான பிள்ளையார் ஒன்றை வடிவமைத்து இருந்தான்.
  ச்சே! என்னால முடியலை! அவன் மட்டும் எப்படி அழகா செய்யறான்? நான் செய்யாததை அவன் செஞ்சு பெருமையடிச்சுக்க போறான். என்று விஜய் மீது பொறாமைப்பட்டான் கோபு.
  விஜய் என்ன சிற்பியா? நினைத்தவுடன் பிள்ளையாரை உருவாக்க? முயற்சியும் உழைப்பும் அவனை அழகான பிள்ளையார் உருவாக்கச் செய்திருந்தது. சிறுவயது முதலே களி மண்ணில் பொம்மைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவன் அவன். விடுமுறை நாட்களில் வீணாக பொழுதை கழிக்க விரும்பாது பொம்மைகள் செய்து பழகினான். அந்த பழக்கம் இப்போது அவனுக்கு கை கொடுத்தது.
 ஆனால் கோபு திடீரென பிள்ளையார் பிடிக்க முயற்சித்தால் நடக்குமா? இதை உணராது விஜய் மீது வீண் பொறாமை கொண்டான் கோபு. மீண்டும் ஒருமுறை விஜய் செய்த பிள்ளையாரை பார்த்தான். ஆத்திரம் கொண்டான். அவனுக்கு மட்டும் அழகாய் பிள்ளையாரா? கூடாது என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
  அந்த சமயத்தில் விஜயின் தாய் அவனை அழைக்க அவன் அப்படியே பிள்ளையாரை விட்டுவிட்டு உள்ளே சென்றான். இதுதான் சமயம் என்று கோபு அவசர அவசரமாக எதிர்வீட்டுக்கு சென்று விஜயின் பிள்ளையாரை உடைத்துவிட்டு மறுபடி தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
  அப்போது கோபுவின் தாய், கோபு நீ பிள்ளையார் செஞ்சு கிழிச்சது போதும்! நான் கடையில இருந்து பிள்ளையார் வாங்கி வந்தாச்சு அதை வச்சி பூஜை பண்ணிக்கலாம் எழுந்து வா! என்றாள்.
  சரி என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கோபு.கோபு உள்ளே சென்றது வெளியே வந்த விஜய் தன் பிள்ளையார் உடைபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். ஆனால் மனம் உடையவில்லை! சிறிது நேரத்தில் புதிய பிள்ளையார் ஒன்றை முன்னைவிட அழகாக மீண்டும் செய்துவிட்டான்.
   கோபு பிள்ளையாரை எடுத்துகிட்டு வா! பூஜைசெய்யலாம்! தாய் குரல் கொடுக்க இதோ வரேம்மா! என்று பிள்ளையாரை தூக்கினான் கோபு. அந்த பிள்ளையார் தலை தனியாக உடல் தனியாக பிய்ந்து போனது.
   அம்மா! பிள்ளையார் உடைஞ்சு போச்சும்மா! என்றான் அழமாட்டாத குறையாக கோபு.
  போச்சு எல்லாம் போச்சு! நீதான் பிள்ளையார் செய்யலை! வாங்கி வந்த பிள்ளையாரை கூட பத்திரமா எடுத்து வர முடியலையா? இன்னிக்கு நம்ம வீட்டுல பிள்ளையார் பூஜை அவ்வளவுதானா? என்றாள் ஆதங்கத்துடன் அவன் அம்மா.
  அம்மா! பிள்ளையார் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரும்மா! காலையில் விஜய் செஞ்ச பிள்ளையாரை பொறாமைப்பட்டு உடைச்சிட்டேன்!  இப்ப நம்ம பிள்ளையார் உடைஞ்சு போச்சு! என்று கண்ணீர் விட்டான் கோபு.
  முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்கிறது கண் கூடாயிடுச்சு பார்த்தியா? இனிமே இப்படி பொறாமைப்பட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்தகூடாது கோபு. பரவாயில்லை! வினாயகர் இல்லாமலே பூஜை செஞ்சுக்கலாம் என்றாள் அவனது அம்மா.
   அப்போது, கோபு கோபு! என்று குரல் கொடுத்தபடி வந்தான் விஜய். கோபு காலையில நீ பிள்ளையார் செய்ய முடியாம திணறினதை பார்த்தேன். உனக்காக நானே பிள்ளையார் செய்தேன். அதை யாரோ உடைச்சிட்டாங்க! மறுபடியும் புதுசா செஞ்சு கொண்டாந்திருக்கேன்  இந்தா என்று பிள்ளையாரை நீட்டினான் விஜய்.
  கோபுவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது! விஜய் என்னை மன்னிச்சுடு! நான் தான் பொறாமையில நீ செஞ்ச விநாயகரை உடைச்சிட்டேன். கடைசியிலே அது எனக்காக நீ செஞ்சதுன்னு இப்பத்தான் தெரியுது. யார் மேலேயும் பொறாமை படக்கூடாதுன்னு இந்த பிள்ளையார் சதுர்த்தியிலே விநாயகர் எனக்கு புத்தி புகட்டி இருக்காரு என்னை தயவு செஞ்சி மன்னிச்சுடு என்று அவன் கைகளை கட்டிக் கொண்டான்.
  அழாதே கோபு! நான் நேற்றே எனக்கு பிள்ளையார் செஞ்சிட்டேன்! இன்னிக்கு காலையில நீ கஷ்டப்படறதை பார்த்து உனக்காகத்தான் பிள்ளையார் செய்தேன். அது உடைஞ்சி போனதும் நல்லதா போச்சு! உன் பொறாமை குணம் உன்னை விட்டு போனது! வா விநாயகரை வழிபடுவோம் என்றான்.
  பிள்ளையார் அங்கே புன்முறுவலுடன் சிரித்துக் கொண்டிருந்தார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...