பிறந்த நாள் ஞாபகங்கள்!

பிறந்த நாள் ஞாபகங்கள்!

அது 1975ம் வருடம் ஜூலை மாதம் இரண்டாம் நாள் நள்ளிரவு வேளை! நான் என் தாயின் கருவறையில் இருந்து வரத்துடித்துக் கொண்டிருக்க என் அம்மாவோ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். இரவு நேரம் குக்கிராமம் என் பாட்டியின் வீடு இருந்த இடம். அங்கிருந்து பொன்னேரிக்கு வண்டி கட்டி என் தாயை அழைத்து வந்தார்களாம்.
   இன்று சற்று பெரிய நகரமாக உள்ள பொன்னேரி அன்று சற்றே பெரிய கிராமம்தான்! அங்கு டாக்டர் திருமதி பாலலட்சுமியின் கிளினிக்கில் சேர்த்து இருக்கிறார்கள். அவர் அப்போதுதான் படித்து முடித்து ப்ராக்டீஸ் ஆரம்பித்த நேரம் அது. புதியவர். தன்னால் இயன்றவரை பார்த்துவிட்டு நீங்க சென்னைக்கு கொண்டு போய்விடுங்கள் என்று கூறிவிட்டாராம்.
    நேரம் நள்ளிரவை நெருங்க வெளியே அடைமழை! சென்னைக்கு அழைத்துச் செல்ல என்ன செய்வது? எங்கோ சென்று ஒரு வாடகைக் காரை பிடித்து வந்தாராம் அப்பா! சாலையெங்கும் தண்ணீர் தேங்க அதில் சிக்கி கார் நின்று விட எப்படியோ அந்த காரோட்டி சிரமப்பட்டு வண்டியை கிளப்பி இருக்கிறார்.
    வலியில் அம்மா துடிக்க காரில் ஏற்றி ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு  வந்து சேர்ந்தார்கள். வழியெங்கும் வெள்ளமாம். மெதுவாக செல்லவும் முடியாது. வேகமாகவும் போகமுடியாது. இருளும் தண்ணீரும் சூழ்ந்த சாலை இதில் வெகு சாமர்த்தியமாக அந்த காரோட்டி சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பேசிய சில நூறுகளை கொடுக்கவும் அப்போது என் தந்தையிடம் பணமில்லையாம். ஒரு வழியாக எங்கோ கடன் வாங்கி அவருக்கு கொடுத்து அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.
   இதற்குள் மூன்றாம் தேதி பிறந்துவிட்டது. ஆம் நள்ளிரவு பன்னிரண்டு மணி கடந்து சரியாக விடியல் காலை 1. 30க்கு தாயின் வயிற்றிலிருந்து வெளியேறினேன் நான் ஆ என அம்மா கதற வீலென்று அழுதபடி உலகை காண ஆரம்பித்தேன் நான்.
    ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் எல்லோரும் உனக்கு பிள்ளை பிறந்துவிட்டது. ஆண்குழந்தை! ராசியான ஆளுதான் சில்லறையை வெட்டு என்று மகிழ்வோடு காசு கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என் தாத்தா(அம்மாவின் அப்பா) சில்லறை தந்து மகிழ்வித்திருக்கிறார்கள்.
  ஒருவழியாய் சிரமம் கொடுத்து பிறந்த நான் இன்னமும் வீட்டிற்கு மட்டுமல்ல என் தாய்க்கும் சிரமம்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பிறக்கும் போதே தலை பெரியதாக இருந்ததால் பனங்கொட்டை தலையன் என்று எல்லோரும் கிண்டல் பண்ணியுள்ளார்கள்.
   நான் பிறந்ததில் என் அத்தைக்கு சற்று வருத்தம் தானாம்! அவருக்கு பிறந்தது எல்லாம் பெண்குழந்தைகள் என்ற கடுப்பில் இருந்தவரை இனி உனக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்று சமாதானப்படுத்தினாராம் என் தாய்வழிப்பாட்டி! அம்மைத் தடுப்பு ஊசி போட்ட டாக்டரை கடிந்துகொண்டாராம் என் அப்பா. ஏம்பா பச்சை குழந்தை உடம்புல ஊசியை குத்துறீங்க என்று அவர் டாக்டர்களிடம் சண்டைக்கு போக இது தடுப்பு ஊசி டாக்டர்கள் எங்களுக்கு தெரியாதா என்று டாக்டர்கள் கோபித்துக் கொண்டார்களாம் மருத்துவர்கள்.
   பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வரத்தான் செய்கிறது. முதல் பிறந்த நாளில் ஆண்டார்குப்பம் முருகர் சன்னதியில் மொட்டையடித்து காது குத்தி விழா எடுப்பார்கள். அதற்கப்புறம் ஒவ்வொரு பிறந்த நாளிலும் புது துணி. வடை பாயசம். கடவுள் வழிபாடு எல்லாம் நடக்கும்.ஆனால் என்னுடைய பெரும்பாலான பிறந்த நாட்கள் என் தாய்வழி பாட்டி ஊரில் கடந்து போயின. அங்குதான் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வளர்ந்தேன்.
  பிறகு நத்தம் வந்த பிறகும் என் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் எந்த மாறுதலும் இல்லை. அப்படியே நடந்து கொண்டிருந்தது. என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் சரி பிறந்தநாளை நாமே கொண்டாடிக் கொண்டால் போதுமா? ஒரு நாலு பேருக்கு உபயோகமாகட்டும் என்று என் டியுசன் மாணவர்களுக்கு பேனா பென்சில் போன்ற அன்பளிப்புகள் கொடுத்து கொண்டாடினேன். அது இதுநாள்வரை தொடர்ந்தது. இப்போது டியுசனும் இல்லாத நிலையில் என் பிறந்தநாள் எனக்கே மறந்து போனது ஏழுகழுதை வயசாச்சு இன்னும் என்ன பிறந்த நாளு? நாமென்ன அரசியல்வாதிகளா? நடிகர்களா? பிறந்த நாள் விழா எடுக்க என்ற சலிப்பும் வந்து விட்டது.
   தேதிப்படி பிறந்த தினம் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை! நட்சத்திரப்படி தான் கொண்டாடுவோம். என் பிறந்த தேதியில் ஃபேஸ்புக்கிலும் தமிழ் தோட்டத்திலும் என் நண்பர்கள் பிறந்த தின வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறினேன். இன்னிக்கு காலையில் இன்னிக்கு உனக்கு முப்பத்தெட்டு வயசு ஆகுதுடா! என்றார்கள் அம்மா!
   அப்போதுதான் இன்று என் பிறந்தநாள் என்று தெரிந்தது. பிறர்க்கரிய பிறப்பு மனிதப்பிறப்பு என்று சொல்வார்கள். அத்தகைய மனிதப்பிறப்பெடுத்து இத்தனை ஆண்டுகள் கடந்தாகிவிட்டது. பல நல்ல பெயர்களையும் சில கெட்ட பெயர்களையும் எடுத்து ஆகிவிட்டது. தோன்றின் புகழொடு தோன்றுக என்றான் வள்ளுவன்! அவ்வாறு புகழோடு பிறக்காவிட்டாலும் சிறிது புகழை இப்போது ஈட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். அதை காத்து வைக்க வேண்டும் என்பதே என் பிறந்தநாள் ஆசை! அத்துடன் இந்த தளிர் வலைப்பூவை சற்று பிரபலப்படுத்தி நல்ல விசயங்களை தரவேண்டும். சொந்தமாக எழுதி நிறைய வாசகர்களை கவர வேண்டும் என்பதும் ஆசை!
   இந்த பிறந்த நாளில் இந்த ஆசைகளை நிறைவேற்றி தருமாறு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். வாசகர்களும் என் பிரார்த்தனைகளை ஆண்டவனிடம் வேண்டி என் வாழ்க்கையும் வலைப்பூவும் சிறக்க உதவுங்களேன்!நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!