Tuesday, July 31, 2012

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2

உங்கள் பிரிய “பிசாசு”

சென்ற பகுதியில் : ராகவன் பொன்னேரியில் இருக்கும் சமயம் அவனது நண்பன்  வினோத் ஊருக்கு வருவதாக கூறுகிறான். வினோத் வெளிநாட்டில் வசிப்பவன் அவனது திடீர் வருகை ராகவனுக்கு ஆச்சர்யம் தருகிறது. அதே சமயத்தில் பஞ்செட்டியில் கோயில் குளக்கரை அருகே வசிக்கும் முகேஷ் தன் நண்பன் ரவியுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் ஆவிகளை பற்றி பேச்சு கிளம்புகிறது. ரவி ஆவி, பேய் எதுவும் இல்லை என்கிறான் முகேஷ் இருக்கிறது என்று விவாதிக்க மின்வெட்டில் கரண்ட் கட் ஆகிறது. திடீரென ரவி குரல் மாறி விகாரமாக பேச முகேஷ் பயப்படுகிறான். இனி.

    எ.. என்னது உசுரு உன். உன்னோடதா? ஒண்னும் புரியலை?
 ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்!
  என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ!
  அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்!
   என்னது உன்னை அடிச்சி கொன்னுட்டாங்களா?
  ஆமா! பிரண்ட்! ம்ம்ம்! ரவி அழ ஆரம்பித்தான்! நான் என்ன தப்பு செஞ்சேன்! ஒரு பொண்ணை லவ் பண்ணேன். அந்த பொண்ணும் என்னை லவ் பண்ணுச்சு! பாவிப் பசங்க  பொண்ண கொடுக்க விருப்பம் இல்லாமா என்னையும் அந்த பொண்ணையும் கொன்னுட்டாங்க! நான் விடமாட்டேன்! அவங்களை விடமாட்டேன்! ஆவேசமாக பேசினான் ரவி.
   ரவி! ரவி உனக்கு என்னடா ஆச்சு இப்படியெல்லாம் பேசற? வியர்த்து வழிந்தபடி கேட்டான் முகேஷ்.
  டேய்! விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு இப்ப சீதைக்கு ராமன் சித்தப்பான்னு கேக்குற? நான் தான் சொன்னேனே! நான் ரவி இல்லே!
   அ.. அப்ப நீ யாரு?
  அட அத நாங்க சொல்லிடுவோமா? இப்ப நான் வாரேன்! இவன் உடம்பு எனக்கு செட் ஆவலை? நாளைக்கு உன் உடம்பை டெஸ்ட் பண்ணி பார்க்கறேன்! இப்ப வரட்டா?  
   ஒரு செகண்டில் ரவி பழைய நிலைமைக்கு வந்திருந்தான்.  அவன் முகம் வெளிறியபடி நின்றிருந்த முகேஷிடம்  அப்பா முகேஷு! என்ன இப்படி பேய் அடிச்சாப்பல நிக்கற? என்ற போது முகேஷ் முழுவதும் அதிர்ந்தான்.
  டேய்! உனக்கு ஒண்ணும் இல்லையே? இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி ஏதேதோ பேசின? இப்ப நார்மல் ஆயிட்டியா?
  என்னடா சொல்றே? நான் எப்ப அப்நார்மல் ஆனேன்! நார்மலாத்தான் இருக்கேன்! கரண்ட் ஆப் ஆனதும் கேண்டில் ஏத்தறேன்னு உள்ளே போன நீ எதைக்கண்டு பயந்து இப்படி நிக்கறே? வர வர நீ பேய் ப்ரோக்ராம் பாத்து பாத்து இப்படி ரொம்பவே பயந்து சாகிற. ஐயம் ஆல்ரைட்! கேண்டில் என்ன ஆச்சு? சரி நான் கிளம்பட்டா என்றான் ரவி.
 இல்ல வேண்டாம்! கரண்ட் வர்ற வரைக்கும் நீ இங்கேயே இரு!
  இதென்னடா வம்பா போச்சு! ஒருமணி நேரம் வராதுடா கரண்ட்! அதுவரைக்கும் நான் இங்க இருந்தா என் வீட்டுல தேட ஆரம்பிச்சிடுவாங்க! இப்பவே கண்ட இடத்துல சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வரேன்னு ஒரே அலப்பறையா இருக்கு. இன்னும் ஒன் அவர்! நம்பளாலே முடியாது. நெவர் உனக்கு பயமா இருந்தா நீ என் கூட வா! என்றான் ரவி!
   உன் கூடவா?
  நான் என்ன பேயா பிசாசா? இங்க மட்டும் நான் உன் கூட இருக்கலாம்! நீ என்கூட வரக்கூடாதா?
  இ.. இல்ல!
  என்ன இல்ல நொல்லன்னுகிட்டு! இஷ்டமா இருந்தா வா! இல்லே இங்கேயே கதவை சாத்திகிட்டு தூங்கு! இதுக்குத்தான் இந்தமாதிரி கண்ட கண்ட புரொகிராம்லாம் பார்க்க கூடாது! இப்படி பயந்து சாகிறயே? ரவி புலம்ப சற்று முன் பேசிய ரவியா இது என்று குழம்பி போயிருந்தான் முகேஷ்!
   சாரிடா முகேஷ்! நான் கிளம்பறேன் என்று அவன் கிளம்ப அவன் கையை பிடித்து நிறுத்தினான் முகேஷ்!
  நில்லுடா! என்னமோ ஒன்னும் தெரியாதவன் போல பேசற? பேய் இல்லை பிசாசு இல்லேன்னு  சொன்ன உன் மேலேயே ஒரு பேய் இறங்கி இருக்கு. கரண்ட் ஆப் ஆனவுடன் நீ போட்ட ஆட்டம் அப்பாடா! இப்ப என்னடான்னா? ஒண்ணுமே தெரியாத மாதிரி பூனை மாதிறி பம்மறியே?
   ஹா! ஹா வென சிரித்த ரவி!, டேய் முகேஷ் உனக்கு என்னமோ ஆயிருச்சு! டீவியில பேய்க் கதை பார்த்து பார்த்து நல்லாவே கற்பனை பண்ணறே? நல்ல ஜோக்குடா இது! என் மேல பேய் இறங்கிச்சா? எங்கடா? எங்க? காட்டு பார்க்கலாம்!
    டேய் சீரியஸாடா! நான் சொல்றதெல்லாம் உண்மைதாண்டா! இப்ப அது போயிடிச்சு திரும்பவும் பிடிக்கலாம்!
   டேய்! எனக்கு உன்னை அப்படியே நாலு சாத்து சாத்தலாம்னு தோணுது! ஏண்டா இன்னும் இப்படியே இருக்கே?
  அப்ப நீ நம்பலை?
  நீ ஆயிரம் தடவை சொன்னாலும் நம்ப மாட்டேன்!
  நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும் நீ கரண்ட் போனதும் என்ன பண்ணேன்னு இந்த ஆடியோவில கேளு கரண்ட் போனதால ஃபேஸ் தெளிவா  இல்ல ஆனா ஆடியோ கிளியறா வந்திருக்கு! என்று தன் செல் போனை ஆன் செய்தான் முகேஷ்!
  வியப்பாக அப்படி என்னதாண்டா பண்ணேன் நான் என்று அதில் ஆழ்ந்தான் ரவி.

பொன்னேரியில் ஷாப்பிங் முடித்து தனது ஸ்பெலண்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான் ராகவன். அவன் பஞ்செட்டி வரும் சமயம் மீண்டும் போன் சத்தமிட்டது.பைக்கை ஓரம் கட்டி செல்லை ஆன் செய்தான். அழைத்தது வினோத் தான்!
  என்ன வினோத் எங்க இருக்கே?
 என்னடா ரோடு இது ஒரே டிராபிக்! இப்ப டோல்கேட்ல மாட்டிகிட்டுருக்கேன்! நீ வீட்டிற்கு வந்திட்டியா?
   ஆல் மோஸ்ட்! பஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிக்கறேன்! இன்னும் அஞ்சு நிமிசத்துல வீட்டுக்கு போயிருவேன். என்னடா திடீர் விசிட்! இப்பத்தானே தீபாவளிக்கு வந்தே? பொங்கலுக்கு வரமாட்டேன்னு சொன்னே? ஆனா உடனே வந்திருக்கே? என்ன விசயம்?
  அதான் வந்திட்டேன் இல்லை! வந்து எல்லாம் விவரமா சொல்றேன்? வீட்டுல எனக்கு ஸ்பெஷலா சமைக்க சொல்லு!
   அதைபத்தி நீ கவலையே பட வேண்டாம்! சீக்கிரம்  வந்து சேரு! ஓக்கே போனை கட் செய்து நத்தம் செல்லும் வழியில் வண்டியை திருப்பினான் ராகவன்.
  அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இப்போது திடுமென வினோத் வர காரணம் என்ன? யோசித்துக் கொண்டே ஊருக்குள் வந்தான் ராகவன்.
   ஊர் காவல் தெய்வம் போரியம்மன் சன்னதியில் பூசாரி ஒருவர் மந்திரித்துக் கொண்டு இருந்தார். தட்டில் விபூதி பரப்பி சூடம் கொளுத்தி வைத்து விட்டு ஒரு பெண்ணை நிற்க வைத்து வேப்பிலையால் மந்திரித்து கொண்டு இருந்தார்.
   கிராமங்களில் இது சகஜமான ஒன்று பேய் மிரட்டி விட்டது! ஆவி அடித்து விட்டது என்று பூஜாரிக்கு எப்போதும் கிராக்கிதான்! தினம் யாராவது ஒருவர் வந்து மந்திரித்துச் செல்வார்கள்.திருநீறு மந்திரித்து வேப்பிலை அடித்து அனுப்புவார் பூஜாரி. வருபவர்கள் தங்கள் சக்திக்கு ஏதாவது ஐம்பதோ அல்லது இருபதோ தந்துவிட்டு மந்திரித்துச் செல்வார்கள்.
   என்னய்யா? பூஜாரி! நல்ல வருமானம் போல?
 ஆம்! பெரிய வருமானம்! இந்த பொண்ண பெரிய ஆவி ஒண்ணு பிடிச்சிகிட்டு இருக்கு கழிப்பு எடுத்தாதான் குணமாகும். அவங்க கிட்ட சொல்லிபுட்டேன்!
  என்னது பெரிய வருமானத்துக்கு அடிப்போட்டிட்டியா?
நீ சும்மா இரு தம்பி இது நம்ம மந்திரத்துக்கு அடங்காது தம்பி? பெரிய விவகாரமான பேயா இருக்குது அதான் பாய் கிட்ட போவ சொல்லியிருக்கேன்!
  அப்ப உனக்கு கமிசன் கிடைக்கும்னு சொல்லு!
  போங்க தம்பி எப்பவும் உங்களுக்கு எப்பவும் என் வருமானத்து மேல தான் கண்ணு!
  அட நான் இப்ப என்ன இல்லாததையா சொல்லிட்டேன்! சரி யாரு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு?
   போன மாசம் மருந்த குடிச்சி செத்து போனாலே செண்பகம் அவதான் இவ மேல வந்து குந்தியிருக்கா?
  ஏனாம்?
அது அதெல்லாம் சொல்ல கூடாது! ரகசியம்! சரி சரி கிளம்புங்க தம்பி எனக்கு ஜோலி இருக்கு.
  இதற்கு மேல் அந்த பூஜாரி வாய் திறக்க மாட்டார் என்று தோணவே வினோத் வேறு வந்து விடுவான் என்ற நினைப்பு வர வேகமாக வீட்டிற்கு சென்று வாசலில் நிற்கவும் காரில் வந்து இறங்கினான் வினோத். அவன் பின்னாலேயே ஒரு பெண்ணும் இறங்க
   ஆகா! பையன் விவகாரத்ததான் கூட்டி வந்திருக்கான் என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.
  வாடா! வா! நானும் ஜஸ்ட் இப்பத்தான் வந்து  சேர்ந்தேன் வழியில கொஞ்சம் பூஜாரியோட அரட்டை அடிச்சதாலே லேட்டாயிடுச்சு.
    இருவரையும் உள்ளே அழைக்க வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ராகவனின் மனைவி மீனாட்சியும் வாசலில் வந்து வினோத்! அட ஆச்சர்யமா இருக்கே! என்னப்பா திடீர்னு ஆமா இது யாரு? என்றாள் அவனுடன் உரசியபடி நின்ற பெண்ணைக் காட்டி!
    இது! இது என்னோட ஒய்ப்! உள்ள போய் பேசுவமா? என்றான் வினோத்.
என்னடா என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்ட சரி எப்ப மேரேஜ் நடந்துச்சு!
  வினோத் பதட்டமாக இருந்தான். அதெல்லாம் அப்புறம் பேசுவோம்! முதல்ல இந்த காரை கட் பண்ணி அனுப்புவோம். லக்கேஜ் எல்லாம் எடுக்கலாம் என்று காரில் இருந்த பொருட்களை இறக்குவதில் கவனம் செலுத்தினான்.
  பின்னர் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வினோத், வா செல்வி உள்ள வா! பயப்படாதே இது நம்ம வீடு மாதிரிதான் என்றான்.
   அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது. கல்யாணம் ஆகிவிட்டது என்கிறான். ஆனால் காலில் மெட்டி இல்லை! கழுத்தில் தாலி அதுவும் இல்லை!
  ஏதோ விபரீதம் என்பது மட்டும் புரிந்தது ராகவனுக்கு. அது எந்த அளவுக்கு அவன் வாழ்க்கையில் விளையாடப் போகிறது என்பதை அறியாதவனாக நண்பனை உள்ளே அழைத்துச் சென்றான் ராகவன்.
                                 மிரட்டும் (2)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே!
  

Monday, July 30, 2012

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!

பாராட்டுங்கள் பாராட்டப் பெறுவீர்கள்!

இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு.
       ஒவ்வொரு சின்ன செயலையும் ஒருவித எதிர்பார்ப்புடனே செய்யும் மனிதன் அதற்கான விளைவுகளை எதிர்நோக்கியிருக்கிறான். அந்த விளைவு நேர்மறையாக இருப்பின் மிகவும் மகிழ்கிறான். எதிர்மறையாக இருப்பின் மனம் நோகிறான். ஆனால் பாராட்டோ எதிர்ப்போ அவன் விரும்புகிறான்.
    தன்னுடைய ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கவனிக்கப்படுகிறது என்பதே அவனுக்கு ஒரு ஆர்வத்தை தருகிறது. ஒரு சிறுவன் அல்லது சிறுமி பள்ளியில் தேர்வில் முதலாவதாக வந்தால் பாராட்ட படுகிறார்கள்.அதே சமயம் தோல்வி அடையும்போது வசைபாடப்படுகிறார்கள்.
   வாழ்க்கை என்பது வெற்றிகளை மட்டுமே கொண்டிருக்க கூடியது அல்ல! வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறித்தான் வரும். இதற்காக ஒருவரை நொந்து கொள்வதால் என்ன பயன்? வசைமொழிகளாக இல்லாமல் இசைப் பாடி பாருங்கள் ஒரு இனிய மாற்றம் உங்களுக்குள்ளும் அடுத்தவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கும்.
   ஒரு சிறிய பாராட்டுச் சொல்! அது ஒருவனை உற்சாகப்படுத்தி சிறப்பாக உழைக்கவைக்கும். அவனது தன்னம்பிக்கையை அதிகரிக்கவைக்கும். அவனது பொறுப்புணர்ச்சியை கூட்ட வைக்கும். இதற்கெல்லாம் மேலாக அவனை இந்த உலகில் எதையாவது சாதிக்க வைக்கும்.
   பாராட்டுவதால் உங்கள் பணம் வங்கியில் குறைந்துவிடப்போகிறதா? உங்கள் நேரம் களவாடப்படுகிறதா? இல்லை உங்கள் சொத்து குறைந்து விடப்போகிறதா? அப்படி ஒன்றும் இல்லைதானே! அப்படியென்றால் நல்லது செய்யும் ஒருவனை பாராட்டுவதில் என்ன தவறு நடந்து விடப் போகிறது?
   எந்த செயல்களிலும் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லிக் கொண்டிருந்தால் அந்த பணியாளர் உங்கள் மீது வருத்தமும் வெறுப்புமே அடைவார். நாம் என்ன தான் செய்தாலும் முதலாளி குறைதானே சொல்ல போகிறார்? எதற்கு ஒழுங்காக செய்ய வேண்டும்? எப்படி இருந்தாலும் திட்டு கிடைக்க போகிறது! அந்த திட்டை வேலை செய்யாமலே வாங்கி கொண்டால் என்ன என்றுதான் அவர் எண்ணுவார். வேலையில் கவனம் செலுத்தமாட்டார்.
    அதே சமயம், அவரது வேலையில் உள்ள ஒரு நல்லதை கண்டு பிடித்து பாராட்டிவிட்டு இந்த வேலையை இன்னும் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிப்பாருங்கள். அந்த மனிதர் மிகவும் மகிழ்ந்து போவார். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக அந்த வேலையை செய்திருப்பார்.
  இது என் அனுபவத்தில் அறிந்த ஒன்று. அப்போது நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு டியுசன் எடுத்துக் கொண்டு இருந்தேன். ஒரு மாணவன் புதிதாக ஒன்பதாம் வகுப்பில் வந்து சேர்ந்தான். சராசரி மாணவன் தான். ஆனால் கணக்கு மற்றும் ஆங்கிலத்தில் சராசரிக்கும் குறைவாக இருந்தான். அவனது பெற்றோர் படிக்கவே மாட்டேங்கிறான். நீங்க தான் எப்படியாவது புத்தி சொல்லி படிக்க வெச்சு பாஸ் செய்ய வைக்கணும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
  ஓரிரு நாள் சென்றது. சில ஆங்கிலப்பாடல்கள் நடத்தி அந்த பாடல்களை டெஸ்ட் வைத்து எழுதச் சொன்னேன். புதிய மாணவனும் எழுதி இருந்தான். எல்லோரும் இரண்டு பாரா எழுதி இருந்தால் இவன் ஒரே பாரா எழுதி இருந்தான். அதிலும் பல தவறுகள்.
     தவறுகளை சுழித்துக் காட்டி, நல்லா எழுதி இருக்கே! இவ்வளவுதான் ஆங்கிலம் இதைக் கண்டு பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு முறை முயற்சித்தால் இந்த பிழைகளும் குறைந்து விடும் என்று ஊக்கம் கொடுத்தேன். அடுத்த அடுத்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று 10 வகுப்பிலும் தேர்ச்சி பெற்றான் அந்த மாணவன்.
   இதையே நான் என்னடா எழுதி இருக்கே? ஒரே தப்பும் தவறுமா? நீயெல்லாம் தேற மாட்டே என்றால் என்ன ஆகியிருக்கும். அவனுள் தன்னம்பிக்கை அன்றே அழிந்து போயிருக்கும் நாம் வேஸ்ட்! இனி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று படிக்காமலே இருந்து விடுவான்.
   இதுதான் வித்தியாசம்! இன்னொன்று நான் ஹைக்கூ எழுத ஆரம்பித்த போது நிகழ்ந்த நிகழ்வு. தமிழ் தோட்டம் தளத்தில் எனது படைப்புகளை பகிர்ந்து வந்தேன். அப்போது ஹைக்கூ என்று சில கவிதைகளை தளத்தில் பகிர்ந்தேன். எனக்கு கவிதையின் இலக்கணம் தெரியாது. நான் தமிழிலக்கியம், இலக்கணம் படித்தவன் அல்ல, எனக்கு தோன்றியதை எழுதினேன்  சிறு கவிதையாக இருந்தால் ஹைக்கூ என்று தலைப்பிட்டேன்.
   தளத்தில் கவிதையை வாசித்த திரு ம. ரமேஷ்   ஹைக்கூ என்பது இப்படி இருக்க வேண்டும் மூன்று அடிகளில் அமைய வேண்டும் தலைப்பு இருக்க கூடாது என்று இன்னும் சில அடிப்படைகளை கூறியிருந்தார். எனக்கு அவர் கூறிய முறை பிடித்து இருந்தது. இறுதியாக அவர். இதுதான் ஹைக்கூ இலக்கணம். ஆனால் படைப்பாளியின் சுதந்திரத்தில் நான் தலையிட விரும்ப வில்லை! நான் கூறியது பிடித்திருந்தால் ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள் இல்லை நீங்கள் எழுதுவதுதான் சரி என்றால் விட்டுவிடுங்கள் ஆனால் அது ஹைக்கூ ஆகாது என்று சொல்லியிருந்தார். அவர் கவிஞரும் கூட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்து சில நாட்கள் கழித்து சில ஹைக்கூக்களை எழுதி இது ஹைக்கூவா என்று ரமேஷ்தான் கூற வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
   அவர் அந்த ஹைக்கூக்களை படித்து பாராட்டி சிறப்பாக எழுதுகிறீர்கள்! தொடருங்கள் திருத்தம் தேவைப்படின் திருத்துகிறேன் என்று உற்சாகம் தந்தார். அவரது உற்சாகத்தால் இன்று நானூறு ஹைக்கூக்கள் அந்த தளத்தில் பதிந்து உள்ளேன். இத்தனைக்கும் நானும் அவரும் சந்தித்தது கிடையாது. போனிலும் ஓரிருமுறை பேசிக்கொண்டதோடு சரி! இன்று அவரும் நானும் நண்பர்கள் ஆகிவிட்டோம்.
     ஒரு சிறிய பாராட்டு ஒன்றும் தெரியாதவனை கவிஞன் ஆக்கியுள்ளதை பார்க்கும் போது பாராட்டுவதில் என்ன தப்பு இருக்க முடியும்? எனவே எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன்! ப்ளீஸ்!

  உங்கள் பாராட்டு உங்களுக்கும் பாராட்டை பெற்றுத்தரும்! மொய்க்கு மொய் என்று பதிவுலகில் கூறப்படும் வார்த்தை போல பாராட்டினால் நீங்களும் பாராட்டப் படுவீர்கள்.ஒவ்வொரு செயலுக்கும் ஒர் எதிர்வினை உண்டு என்று படித்திருப்பீர்கள் நீங்கள் நல்லது செய்தால் நன்மை கிடைக்கும் தீமை செய்தால் தீமை கிடைக்கும். பாண்டவர்களுக்கு உலகில் எல்லோரும்நல்லவர்களாக தெரிந்தார்கள்! அதே சமயம் கௌரவர்களுக்கு எல்லோரும் கெட்டவர்களாக தெரிந்தார்கள். எதுவுமே நாம் அணுகும் விசயத்தில் தான் இருக்கிறது.
   எனவே மனம் திறந்து பாராட்டுங்கள் நன்மையை காணும் போது! அது பாராட்டப் படுபவர்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் மன மகிழ்ச்சியை தரும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! 


Sunday, July 29, 2012

வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...? தினமணி கட்டுரை!

கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
"சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!
நன்றி: தினமணி

டிஸ்கி} தினமணியில் வந்த கட்டுரையை தட்ஸ் தமிழில் படித்துவிட்டு என்னை தொடர்பவர்களும் அறிந்து கொள்ள பகிர்ந்து கொள்கிறேன்! கவிஞர் வாலிக்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சமில்லை! இந்த எண்பது வயதிலும் அவர் மீது எழுந்துள்ள சர்ச்சை இது!  என்ன சொல்கிறார் பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

அறிஞர்களின் பொன்மொழிகள்!

அறிஞர்களின் பொன்மொழிகள்!

நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
                                          நெப்போலியன்.

வீரன் தோல்வியைக் கண்டு ஓட மாட்டான்.
                                                    நெப்போலியன்.

தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி!
                                              பெர்னாட்ஷா.

கற்றவரும் அறிஞரும் வீரர்களும் ஒரு நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக கொள்ள மாட்டார்கள்.
                                                               ரஸ்கின்.

உழைக்காமல் வாழ்பவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவன்.
                                                             ரஸ்கின்.

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.
                                                                             கன்பூஷியஸ்.
நன்மைக்கு நன்மை செய்! தீமைக்கு நீதி வழங்கு!
                                                                          இங்கர்சால்.

நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை!
                                                                                கதே

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன் என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்.
                                                                                 கதே.

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
                                                                                                 கார்லைல்.

தான் பயந்தவன், பிறரையும் பயப்பட செய்கிறான்.
                                                                                                 மகாவீர்.

வாழ்வென்னும் ஆடையில் இன்பம் துன்பம் என்னும் இரு நூல்களும் இருக்கவே செய்யும்.
                                                                                                    ஷேக்ஸ்பியர்.

அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக் கூடியவன்.

                                                                                                        ஷேக்ஸ்பியர்.

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்.
                                                                                 விவேகானந்தர்.

வீணான விரயம் வேதனை தரும் வெறுமைக்கு வழி வகுக்கும்.
                                                                                     புல்லர்.
அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
                                                                              பெர்னாட்ஷா..

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
                                                                                    நெப்போலியன்.

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும்.
                                                                           கண்ண தாசன்.

எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் விழிப்பாய் பழக வேண்டும்.
                                                                                                         கண்ணதாசன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
                                                                                         

Saturday, July 28, 2012

பூனையும் எலியும் ! பாப்பாமலர்!

பூனையும் எலியும்

அந்த வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் வீட்டின் எஜமானர் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தார்.
    பூனை வந்த்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடிய வில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி அதை நண்பனாக்கி கொல்வதோ நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாத காரியம் எனவே நாம் வேறு இடம் தேடிக்கொள்வதே உத்தமம் என்றது.
      கிழட்டு எலியின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த மற்ற எலிகள் வீட்டை காலி செய்துவெளியேற ஆரம்பித்தன. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் வெளியேற வில்லை.பூனைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுவதாவது. எப்படியாவது அதை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கி விட்டது.

 தளிர்
   ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் பிடிபட்ட எலி,அண்ணா பூனையாரே என்னை விட்டுவிடும் நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன் நீ என்னை பிடிப்பதால் உனக்கு என்ன லாபம் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே எஜமானர் தருகிறார் என்று ஆசை வார்த்தைகள் பல கூறியது.
      பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும்போதுமானது. எப்பொழுதும் எஜமானருக்கு துரொகமிழைக்கமாட்டேன் நான். நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது சுவையான கறியை இழக்க நான் முட்டாளுமில்லை மேலும் நீ தினமும் தின்பண்டம் தருவாய் என்பது என்ன நிச்சயம்? உன்னை நம்பி விடுவது தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகிவிடும் அதற்கு நான் விரும்பவில்லை என்று எலியைக் கொன்று ருசித்தது,
நீதி: எதிரிகளிடம் நியாயம் கேட்டு பலனில்லை. எங்கள் ஊர் நூலகம்

எங்கள் ஊர் நூலகம்
எளிமை அழகு நூலகம்
தினமும் சென்று படித்திடலாம்!

 தளிர்
தெளிவைப் பெற்று வந்திடலாம்!
பாட்டுக் கதைகள் படித்திடலாம்!
நாட்டு நடப்பினையே அறிந்திடலாம்!
நல்ல நல்ல நூல்களையே
நாடி தினுமும் படித்திடலாம்!
பெரியோர் சிறியோர் எல்லோருமே
பெரிய பயனை பெற்றிடலாம்!

 உனக்குத் தெரியுமா?

பிராணிகளில் முதலைக்கு எத்தனை முறை பல் விழுந்தாலும் முளைத்துவிடும்.

1639 ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கினர்.

உலகில் உள்ள நாடுகளில் மிக அதிக அளவு வெளிநாட்டினரை கொண்டுள்ள நாடு அமெரிக்கா.

தென்மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயர் தான் நமீபியா

ஒரு கடல் மைல்(நாட்டிகல் மைல்)என்பது 1825 மீட்டர்களை குறிக்கும்

முதன் முதலில் மருத்துவமனைகள் தோன்றிய நாடு இத்தாலி.

 டிஸ்கி} இது நான் முதல் முதலில் பதிவு செய்த பாப்பாமலர் பதிவு! இதை அப்போது நிறையபேர் படித்திருக்க வாய்ப்பில்லை! இன்று வேளைப்பளு காரணமாக இதை மீள்பதிவு இடுகின்றேன்! பொருத்தருள்க! நன்றி!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! 

Friday, July 27, 2012

சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!

சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!

சிராவண மாதம் (ஆடி அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும்.

சுமங்கலிகள் அன்றைய தினம் உபவாசமிருந்து பக்திசிரத்தையாக வீட்டை மெழுகி கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை வைத்து அதை அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து கலசத்தில் அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சித்து நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம்,இட்லி, சாதம், பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.
   இதன் பின்னர் அஷ்டலஷ்மிகளை வழிபாடு செய்து அர்சித்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நோன்பு கயிறு அணிந்து கொள்ள வேண்டும். இந்த நோன்புக் கயிறில் மஞ்சள் தடவி ஒன்பது முடிச்சிட்டு புஷ்பம் கட்டி கலசத்தில் வைத்து பூஜித்து கையில் கட்டிக் கொண்டு மற்ற சுமங்கலிகள் உடன் பூஜை செய்தால் அவர்களுக்கு கட்டி விட வேண்டும்.
  கலசத்தில் ஒன்பது வெத்தலை, ஒன்பது பாக்கு, ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் இட வேண்டும்.நெய் பந்தம் ஆரத்தி செய்தல் வேண்டும். இந்த பூஜை முடித்தபின் மறுநாள் கலசத்தை எடுத்து பத்திரமாக வைத்திருந்து அதில் இட்ட அரிசியில் மறு வெள்ளியன்று பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
  கலசம் அலங்கரித்த பின் ஹாலில் தாம்பாளத்தில் வைத்து ஆரத்தி காட்டி வரலஷ்மி தேவியை ஆவாஹனம் செய்து தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்துப் பாடி பூஜையறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பூஜையறையில் மண்டபத்தில் வைத்து முதலில் விநாயகர் பூஜை செய்து பின் சங்கல்பம் செய்து கொண்டு வரலஷ்மி விரத பூஜை செய்ய வேண்டும்.
   லஷ்மி ஸ்தோத்தரம், மற்றும் துதிகளை பாடி பூஜை செய்யலாம். வசதியுள்ளவர்கள் இதற்கென உள்ள புரோகிதர்களை அழைத்தும் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும்.
விரதம் அணுஷ்டிப்பவர்கள் ஒரு வெற்றிலை ஒருபாக்கு சுண்ணாம்பு சேர்க்காமல் கடித்து மெல்ல வேண்டும். அப்பொழுது வாய் சிவக்காமல் இருந்தால் இந்த விரதத்தை அனுஷ்டிக்க கூடாது.
 விரதம் முடிந்தபின். பிராமணன், சன்யாசி, தெய்வம்,பிரம்மச்சாரி, சுவாசினி, என ஐந்து நபர்களுக்கு நைவேத்தியம் செய்த பட்சணங்களை வாயன தானம் செய்ய வேண்டும். அதன் பின்னரே தன் உபவாசம் முடிக்க வேண்டும்.
விரதக் கதை!
  முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது அங்கிருந்த சித்ர நேமி என்ற கணதேவதை நியாயம் கேட்டார்கள். அவன் ஒரு தலைப் பட்சமாக சிவன் ஜெயித்ததாக கூறினான். பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து தவிப்பாயாக என்று சபித்து விட்டாள்.
  பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுதுஅழகிய தடாக தீரத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்று கூறினாள்.அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து வந்தான்.
  பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு  தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம். சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில் முறைப்படி மஹாலஷ்மியை பற்றியதான இந்த விரதத்தை தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி கூறினார்கள்.
  அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான். பார்வதி தேவியும் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள்.விக்ரமாதித்தன் இவ்விரதம் அணுஷ்டித்து நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு பெற்றாள்.  குண்டினம் என்ற நகரத்தில் வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள்.
  லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும்

 இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள்!
  சகலவரும் வரலஷ்மியை வணங்குவோம்! வரம் பெற்று இன்பமாக வாழ்வோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! திரட்டிகளில் இணைத்து பிரபல படுத்துங்கள்!

Thursday, July 26, 2012

திரி ரோஸஸ்! கடன் காரன் ஆன ரஜினி!

 த்ரி ரோஸஸ்! கடன்காரன் ஆன ரஜினி!  மகசேசேவிருது பெறும் தமிழர்! உறுதியில்லா சீடன்!

ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி


சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.
பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:
இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.
ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.
என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.
காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.


தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருதுமணிலா: 2012ம் ஆண்டுக்கான ரமோன் மகசாசே விருது பெறுபவர்களின் பெயர்கள் மணிலாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் 6 பேரில் தமிழகத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் குழந்தை பிரான்சிஸும் ஒருவர்.
ரமோன் மகசாசே விருது கடந்த 1957ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் 3வது அதிபரின் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த சேவை நிறுவனம் அல்லது சேவையில் ஈடுபடும் நபருக்கு வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நிறுவனம் ரமோன் மகசாசே விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது மணிலாவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை பிரான்சிஸ்(65), தைவானைச் சேர்ந்த சென் ஷூ சு, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரொமுலோ டேவிட், வங்க தேசத்தைச் சேர்ந்த சையதா ரிஸ்வானா ஹசன், கம்போடியாவைச் சேர்ந்த யாங் சைங் கோமா, இந்தோனேசியாவைச் சேர்ந்த அம்ரோசியஸ் ருவின்ட்ரிஜாடோ ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகசாசே விருது வழங்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் கடந்த 1979ம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
அதன்மூலம் கிராமப்புற பெண்களின் வறுமையை போக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த குழந்தை பிரான்சிஸ் உதவி செய்து வருகிறார். அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 8,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தை பிரான்சிஸ்சின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இந்த நிறுவனத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
பிரான்சிஸுடன் தைவான், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கும் இந்த ஆண்டு மகசாசே விருது வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மணிலாவில் நடக்கும் விழாவில் இந்த 6 பேருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

மனதில் உறுதி வேண்டும்!!!

 

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.
அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.
அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.
துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.
பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.
அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.
இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது.

நன்றி} தட்ஸ் தமிழ்.

 டிஸ்கி} படித்த செய்திகளை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...