உழைப்பே உயர்வு! பாப்பா மலர்!

உழைப்பே உயர்வு!

சோலை வயல் என்ற கிராமத்தில் வேலப்பன், முத்தப்பன் என்ற இரு நண்பர்கள் வசித்துவந்தனர். வேலப்பன் நல்ல உழைப்பாளி! நிலத்தில் வியர்வை சிந்தி உழைப்பவன். ஆனால் முத்தப்பன் ஒரு முழுச் சோம்பேறி! வேளாவேளைக்கு உண்டு உறங்கி வந்தான்.
     இருவருக்கும் சிறிதளவு வயல்கள் இருந்தன. வேலப்பன் தன் வயலில் நெல் விதைத்து நீர்பாய்ச்சி களை எடுத்து பாடுபட்டார். அவரது உழைப்பின் பயனாக வயலில் விளைச்சல் மிகுந்தது. வேலப்பனின் வேலைக்காரர்களும் எஜமானனே வயலில் இறங்கி வேலை செய்கிறாரே நாமும் நன்றாக உழைக்க வேண்டும் ஏமாற்றக் கூடாது என்று சுறுசுறுப்பாக உற்சாகமுடன் வேலை செய்தனர். அதன் பயனாக நிறைய விளைச்சலை அறுவடை செய்தார் வேலப்பன்.

  நன்கு பாடுபட்ட வேலப்பன் தன்னிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை ஐந்து ஏக்கராக மாற்றினான். அதே சமயம் முத்தப்பன் தன்னிடமிருந்த சிறு நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான். ஒரு நாள் முத்தப்பன் இது பற்றி வேலப்பனிடம் முறையிட்டான்.
     நண்பா நீயும் நானும் ஒரே அளவு நிலத்தை தான் வைத்திருந்தோம் இன்றோ நீ ஐந்து ஏக்கர் நிலத்திற்கு சொந்த காரனாகி விட்டாய் நானோ இருந்த நிலத்தையும் இழந்து கடன் காரனாக நிற்கிறேன். உனக்கு அதிர்ஷ்டம் அதிகமாக உள்ளது. நானோ துரதிருஷ்டசாலி! என்று வருத்தமுடன் கூறினான்.
     வேலப்பனோ! நண்பா நான் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியதற்கு காரணம் அதிருஷ்டம் இல்லை! உழைப்பு! நீ உன் நிலத்தில் இறங்கி ஒரு நாளேனும் வேலை செய்திருப்பாயா? மாட்டாய்! எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள் வைத்தாய்! சரி அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்று கண்காணிக்க கூட சோம்பல் பட்டாய்! நண்பா நாம் வியர்வை சிந்தி உழைத்தால் மண்ணும் பொன்னாகும். உரிமையாளன் சோம்பேறியாக இருந்தால் வேலைக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்! அவர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் வெட்டி அரட்டை பேசி களைந்து சென்று விட்டார்கள் உன் பயிர் கவனிப்பாரற்று ஆடு மாடுகள் மேய்ந்து விளையாமல் போயிற்று!
    நானொ தினமும் வயலில் இறங்கி உழைத்தேன்! வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக உடன் வேலை செய்தேன். இதில் இன்னொரு லாபமும் இருக்கிறது ஒரு வேலைக்காரனுக்கு கொடுக்கும் கூலியும் மிச்சமாகும் உரிமையாளன் அருகில் இருக்கிறான் என்ற அச்சத்தில் வேலைக்காரர்களும் ஒழுங்காக பணியாற்றுவார்கள். இதனால்தான் என் நிலத்தில் விளைச்சல் மிகுந்தது.
   நீ உன் சோம்பேறித் தனத்தை உதறி எறி! ஒழுங்காக இருக்கும் சிறு நிலத்தில் உன் உழைப்பை காண்பி! நீயும் விரைவில் என்னை போல மாறி விடுவாய் என்றான் வேலப்பன்.
    முத்தப்பனுக்கு தன் தவறு புரிந்தது! உழைப்பின் பெருமையை உணர்ந்தான். இனி அவனும் முன்னேறுவான் என்பதில் சந்தேகமே இல்லை!

உங்களுக்குத் தெரியுமா?

வானில் சாதாரணமாக நமது கண்களுக்கு தெரியும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 5776

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!