பாம்பின் தந்திரம்! பாப்பா மலர்!

பாம்பின் தந்திரம்!

சோலைவனம் என்ற அழகிய கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் ஓர் பெரிய குளம் ஒன்று இருந்தது. கோடைக் காலத்திலும் வற்றாத அந்த குளத்தில் ஏராளமான மீன்களும் தவளைகளும் இன்னும் நீர் வாழும் சிறிய உயிரினங்களும் வசித்துவந்தன.
    அந்த குளத்தின் அருகிலேயே ஓர் பெரிய புற்று ஒன்று இருந்தது. அந்த புற்றிலிருந்த கரையான்களை துரத்தியடித்த ஒரு பொல்லாத பாம்பு அங்கு வசித்து வந்தது. சிறுவயதில் போவோர் வருவோரையெல்லாம் கடித்தும் பயமுறுத்தியும் வந்த அந்த பாம்பிற்கு இப்பொழுது வயதாகிவிட்டது.
   முன் போல ஓடியாடி வேட்டை ஆடமுடியாமல் புற்றுக்குள்ளேயே படுத்துக் கிடக்கும் அது பொழுது சாயும் வேளையில் வெளியில் வந்து சில சிறு உயிரினங்களைபிடித்து உண்டு தன் வயிற்றை நிரப்பிக் கொண்டது. ஆனாலும் யானைப்பசிக்கு சோளப் பொறி போலத்தான் அந்த உணவு அதற்கு! எனவே நல்ல கொழுத்த இரையைத் தேடி அது காத்திருந்தது.
    ஒரு நாள் அது குளக்கரை ஓரம் சென்ற போது தவளைகளை பார்த்தது. தவளைகளை கண்டதும் அதன் நாவில் நீர் ஊறியது. ஆனாலும் தண்ணீரில் நீந்திச் சென்று அந்த தவளைகளை வேட்டையாட அதன் உடல் அதற்கு ஒத்துழைக்க வில்லை! எனவே எப்படியாவது ஏமாற்றி தவளைகளை உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று  அது நினைத்தது. பாம்பு கரை ஓரமாக சுத்தி வருவதை கண்ட  தவளைகள் சற்று எச்சரிக்கை அடைந்து நீரினுள்ளேயே பதுங்கிக் கொண்டு இருந்தன. இதனால் பாம்புமிகவும் ஏமாற்றம் அடைந்தது.
   அது ஒரு தந்திரம் செய்தது. கரையோரமாக அமர்ந்து கண்ணீர் விட்டபடி இருந்தது. சில தவளைகள் பாம்பு கண்ணீர் விட்டபடி இருப்பதை பார்த்து அருகில் செல்ல முடிவெடுத்தது.  அப்போது ஒரு வயதான தவளை அந்த பாம்பு பொல்லாதது. ஏமாற்றுக்கார பாம்பு! எனவே அதனிடம் எச்சரிக்கையாக இருக்குமாறுகூறியது. ஆனாலும் சில தவளைகள் அனுதாபத்துடன் பாம்பிடம் வந்தன.
    தவளைகள் அருகில் வருவதைக் கண்ட பாம்பு தன் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ச்சி கொண்டது. தவளைகள் பாம்பின் அருகில் வந்த போதும் தூரமாகவே நின்று பாம்பாரே ஏன் அழுகிறீர் என்று வினவின.
   பாம்பு மேலும் கண்ணீர் விட்டபடி அன்பான தவளைகளே உங்களுக்காவது என் மீது இரக்கம் பிறந்ததே! இதுவரை யாரும் என்னை எதுவும் கேட்காமல் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்து விட்டனர். நான் பொல்லாதவன் என்று யாரும் என்னிடம் நெருங்கவே பயப்படுகின்றனர். இன்று என் மூதாதையரின் நினைவு தினம் ஒரு நான்கு நபர்களுக்காவது விருந்து அளித்து விட்டுதான் உணவருந்துவேன். இன்றைக்கு யாரை கூப்பிட்டாலும் வர மறுக்கிறார்கள். அதனால் தான் கண்ணீர் விட்டபடி என் நிலையை நினைத்து நொந்து கொண்டு இருக்கிறேன் என்று மேலும் புலம்பியது.
   இரக்கப்பட்ட தவளைகள் அதனால் என்ன பாம்பாரே இன்று உங்கள் வீட்டு விருந்துக்கு நாங்கள் வருகிறோம் இதற்கு வருந்தி கண்ணீர் விடாதீர்கள் என்றன. பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி ஆனது பாம்பிற்கு ஆகா கூப்பிடாமலேயே விருந்துக்கு வர ஓத்துக்கொண்டு விட்டனவே முட்டாள் தவளைகள் என்று மகிழ்ந்தது.
  பின்னர் கண்ணை துடைத்துக் கொண்டு நன்றி தவளைகளே! உங்கள் அன்புக்கு! வாருங்கள் என்று தன்னுடைய புற்றிற்கு அழைத்துச் சென்றது. தவளைகளே வெளியே நின்றால் எப்படி உள்ளே வாருங்கள் என்று புற்றிற்குள் அழைத்து சென்றது.
   மடத் தவளைகளும் பாம்பின் பேச்சை உண்மை என நம்பி புற்றுக்குள் குதித்தன. ஆழமான புற்றினுள் இருட்டாக இருக்க உணவேதும் காணப்படாததால் தவளைகள் பாம்பாரே என்ன விருந்தை காணோம்? இனிமேல் தான் தயாரிக்க வேண்டுமா என்று கேட்டன.
  முட்டாள் தவளைகளா? ஏமாந்தீர்களா? நீங்கள் தானடா என் விருந்து! தவளைக் கறி உண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. உங்களை உண்ணத்தான் நான் அழைத்து வந்ததே என்று பாய்ந்து தவளைகளை கொன்று திண்ண ஆரம்பித்தது பாம்பு. புற்று ஆழமாக இருந்ததால் வெளியேற முடியாமல் உயிரை விட்டன தவளைகள்!
   அன்பு குழந்தைகளே! எதிரிகள் எந்தவகையிலும் ஏமாற்றுவார்கள்! அவர்களிடமிருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் தவளைகளின் கதிதான் நமக்கும்!

உங்களுக்குத் தெரியுமா?

இரவு பகல் எந்த நேரமும் மலரும் மலர் ஹனிசக்கிள்.

காற்றின் வேகம் அளக்கும் கருவியின் பெயர் அனிமா மீட்டர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட்லாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!