நத்தை வரான்டா! பாப்பா மலர்!

நத்தை வரான்டா!

விஜய் சைக்கிளில் மிக மெதுவாக வந்து பள்ளியின் கேட் அருகே இறங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழையும்போதே அவனின் சகமாணவர்கள் ‘ஓ’வென்று கூச்சலிட்டபடி, நத்தை வந்துட்டாண்டா! ஏய்! நத்தை வராண்டா! என்று குரல் கொடுத்தனர். அதற்கு தலைவனாய் நின்றவன் மணி. இருவரும் ஒரே வகுப்புத்தான்! ஆனாலும் பிறரை கேலி பேசி துன்புறுத்துவதில் மணி நிபுணன். அவன் தலைமையில் ஒரு குழுவே நின்று ஏளனம் செய்த போதும் அமைதியாகவே ஒன்றும் பேசாமல் சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்புக்குள் நுழைந்தான் விஜய்.
    மணியும் விஜயும் ஓரே ஊர்தான்! இருவரின் வீடுகளும் அருகருகே வேறு அமைந்திருந்தது. மணி சைக்கிளில் வேகவேகமாக பறப்பான். கண்மண் தெரியாத வேகம் அது! சைக்கிளா இல்லை மோட்டார்வண்டியா என்று பார்ப்பவர்கள் மிரளும் வண்ணம் வேகமாகச் செல்வான் மணி. விஜயோ அதற்கு நேர் எதிர். நிதானமாகவே செல்வான். வழியில் யாராவது வந்தால் நிறுத்தி ஏற்றியும் செல்வான். வாகனங்கள் வரும் சமயம் சாலை ஓரமாக செல்வான்.இவனது பொறுமையான சைக்கிள் ஓட்டும் பழக்கம் அவனுக்கு நத்தை பட்டத்தை வாங்கி தந்தது. டேய் நத்தை மாதிரியே வர்றதுக்கா உங்கப்பா சைக்கிள் வாங்கி கொடுத்தார்? ஏண்டா இப்படி சைக்கிள் ஓட்டி சைக்கிளோட மானத்தை வாங்கிற? என்று கேட்டான் மணி.
    விஜய் அவனது கிண்டலை சட்டை செய்யவில்லை! என்னடா பதில் பேசாம் போறே? என்று முறைத்தான் மணி. இப்ப என்ன செய்யணுங்கிற? உன்னை மாதிரி என்னால வேகமா ஓட்ட முடியாதுதான்! நீ நத்தைன்னு சொல்லு ஆமைன்னு சொல்லு இல்ல வேற ஏதாவது சொன்னாலும் என் பழக்கத்தை மாத்திக்க முடியாது! நான் நத்தை மாதிரி வந்தாலும் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்திடறேன் இல்லையா? உன்னை மாதிரி லேட்டா கிளம்பி லேட்டா வர்றதில்லையே? என்று விஜய் கேட்கவும் யாரு யாரு லேட்டா கிளம்பறாங்க? என்னோட வேகத்துக்கு நான் இன்னும் லேட்டா கூட கிளம்பி சீக்கிரமே வந்துடுவேன் உன்னை மாதிரி நத்தைங்கதான் காலையிலேயெ கிளம்பணும் என்று சிரித்தான் மணி.
  உன்னை திருத்தவே முடியாது என்றான் விஜய் சிரித்தபடி! உன்னையும்தான் என்றான் மணி. மணியின் கிண்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் வழக்கம் போல நிதானமாகவே வந்துகொண்டிருந்தான் விஜய்.
   ஒருநாள் பள்ளிக்கு கிளம்பாமல் நிதானமாக வீட்டிலேயே டீவி பார்த்துக் கொண்டிருந்தான் மணி. என்ன மணி ஸ்கூலுக்கு கிளம்பலயா? என்று கேட்டான் விஜய். உன்னை போல நத்தைங்கதான் இவ்வளவு சீக்கிரமே கிளம்பணும் நான் குதிரை மாதிரி லேட்டா கிளம்பினாலும் லேட்டஸ்டா இருப்பேன் என்று கிண்டலாக கூறினான் மணி. தலையில் அடித்துக் கொண்ட விஜய் உன்னைப் போய் கேட்டேன் பாரு! என்று கிளம்பி போய் விட்டான். அவன் சென்று பதினைந்து நிமிடங்கள் கழித்து கிளம்பிய  மணி வேகமாக பறந்தான்.
   அது ஒரு யூ டர்ண் வளைவு மணி வேகமாக திரும்பவும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவனை தூக்கி வீசவும் சரியாக இருந்தது ரத்தவெள்ளத்தில் மிதந்தான் மணி. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
   மறுநாள்  மணி கண்விழித்தபோது அங்கே அவனது உறவினர்கள் சூழ்ந்திருந்தனர். அப்பா என்று தழுதழுத்தான் மணி! அவர் முகத்தை திருப்பிக் கொண்டார். அம்மா! என்று அழைத்தான். அவனது அன்னையோ கண்ணீர் மல்க டேய் மணி சொல்ல சொல்ல கேட்காம இப்படி வேகமா போயி எங்க நெஞ்சம் பதற வைச்சிட்டியே! நீ பொழைச்சதே பெரிய விசயம்! உன் வேகத்தால அருமையான உயிரை இழக்க துணிந்தாயே! வேகம் விவேகம் இல்லைன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோ! நீ நத்தை நத்தைன்னு சொன்ன விஜய் தான் உன் உயிரைகாப்பாற்றினான். அவன் ரத்தம் கொடுக்கலைன்னா இப்ப உன்னை உயிரோட பார்த்திருக்க முடியாது. இனியாவது நீ திருந்து என்றார்.
    அம்மா என்னை மன்னிச்சிடுங்க! வேகம் வேகம்னு ஒருவித ஆர்வத்தில நான் தவறு செஞ்சிகிட்டிருந்தேன்! பட்டால் தான் புத்திவரும் என்பார்கள்! இன்று நான் பட்டு திருந்தி விட்டேன்! இனி யாரையும் கிண்டல் பண்ணவும் மாட்டேன்! வேகமாகவும் சைக்கிள் ஓட்டவும் மாட்டேன் என்று கண்ணீர் விட்டான் மணி.அவனை தேற்றினார் அவனது அன்னை.
 
உங்களுக்குத் தெரியுமா?
கல்பாக்கம் அணுமின் நிலையம் 1983ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!