பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 10

பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 10


சென்ற பதிவில் என்னுடைய கிரிக்கெட் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் அல்லவா? ஒரே நாளில் சில கேட்ச்களை பிடித்து ஹீரோவாகிய என்னை அவர்களுடைய அணியில் சேர்த்துக்கொள்ள போட்டியே நடக்கும். இத்தனைக்கும் எனக்கு ஒழுங்காக பேட் செய்யவோ பந்துவீசவோ த்ரோ பண்ணவோ தெரியாது ஏதோ ஓரளவுக்கு சுமாராக ஆடுவேன் அவ்வளவுதான்! இப்படி தொடங்கிய எனது கிரிக்கெட் பயணம் 2005 வரை தொடர்ந்தது. 1996ல் இந்தியாவில் மீண்டும் உலக கோப்பை நடந்த சமயம் எங்கள் ஊறிலும் கிரிக்கெட் ஜுரம் பிடித்துக் கொண்டது. எங்களின் சீனியர்களும் எங்களுடன் கலந்து விளையாட இந்த கிரிக்கெட் மோகத்தினால் பி.காம் இறுதியாண்டில் மூன்று சப்ஜெக்டில் கோட்டைவிட நேர்ந்தது. இருப்பினும் கிரிக்கெட் என்னை ஈர்த்தது.
     கழனிகள்தான் எங்கள் கிரிக்கெட் மைதானங்கள்! ஊரில் ஒரு கழனி சும்மா இருந்தாலும் பிட்ச் செதுக்கி விளையாட ஆரம்பித்துவிடுவோம்! வெயில் மழை எதையும் சட்டை செய்ய மாட்டோம் திடீரென மழைபிடித்தால் தடைபடும் ஆட்டம் மழை விட்டதும் தொடர்ந்து விடும். வயல்களில் பயிர்கள் நட்டுவிட்டால் இருக்கவே இருக்கிறது வாலீஸ்வரர் கோயில்! கோயிலின் உள்ளே நாங்கள் விளையாடும் சமயம் அங்குள்ள சிலைகளின் மீது பந்துகள் பட்டு வலியால் துடித்திருக்குமோ என்னமோ? அதிகமாக அடிவாங்கியவர் நந்தியாகத் தான் இருக்கும்.
    இப்படி மற்ற அணிகளில் ஆடிக் கொண்டே எங்கள் அணியையும் வலுப்படுத்தி வந்தேன் நான். ஒரு காலத்தில் எங்கள் அணி வெல்ல முடியாத அணியாக உருவெடுத்தது. எங்கள் அணியின் இரண்டு ஆல்ரவுண்டர்கள் பாலாஜி மற்றும் மகேஷ் இவர்கள் பந்து வீசுவதோடு ஓப்பனிங்க் ஆடி நல்ல ஸ்கோர் எடுப்பார்கள். பந்து வீச்சில் சுதாகர், அன்பரசன் என்ற இருவர்கள் வேகப்பந்தை சிறப்பாக கையாண்டார்கள்! இதனால் பக்கத்து ஊர்களிலும் சென்று வென்று வந்தோம்! இறுதியில் நண்பன் பாலாஜி மூளையில் கட்டி வந்து எதிர்பாரா விதமாக இறந்து விட எங்கள் இதயம் கனத்தது! அவன் நினைவாக ஒரு டொர்ணமெண்ட் வைத்தோம்! அதன் இறுதிப் போட்டியில் சொதப்பி தோல்வி அடைந்தோம்! அதன் பின் அணியில் ஒற்றுமை குறைந்து போனது. நானும் எனது பொறுப்புக்களை விட்டு விலகினேன்! இவ்வாறு இனிமையான கிரிக்கெட் நினைவுகள் முற்று பெற்றன.
     அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்! அருகில் உள்ள நகரத்திற்கு சென்று வந்த அம்மாவும் அப்பாவும் வரும் போது எனக்கென ஒரு புத்தகம் வாங்கி வந்தார்கள்! அது கோகுலம் சிறுவர் மாத இதழ்! உன்னை மாதிரி பசங்க படிக்கிற புக்! பாட புஸ்தகத்தோட இதையும் படி! அறிவை வளர்த்துக்க என்று சொல்லி என்கையில் தந்தனர்! அந்த புத்தகத்தில் வந்த கதைகள் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! அதன் ஆசிரியர் அழ.வள்ளியப்பா அதில் ஒரு சங்கத்தை துவக்கி இருந்தார் அது கோகுலம் சிறுவர் சங்கம்! அதற்கான விண்ணப்ப படிவம் அந்த புத்தகத்தில் வந்திருந்தது. அந்த சங்கத்தில் இணைந்தால் அந்த புத்தகத்தில் வரும் பிருந்தாவன கதையரங்கம் மற்றும் கவியரங்கத்தில் நமது படைப்புகள் பிரசுரமாகும். உறுப்பினர் அல்லாதோர் கதை கவிதை பிரசுரிக்க மாட்டார்கள்! கதைகளை படித்த எனக்கு கதைகள் எழுத தோன்றியது. எனவே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆனேன். ஆனால் அந்த சமயத்தில் என்னால் சிறப்பாக எழுத முடியவில்லை!
    ஏழாம் வகுப்பு முடியும் தருவாயில் நோட்டு புத்தகம் பழைய டைரிகளில் நேருமாமா சிறுவர் வார இதழ் என்று தலைப்பிட்டு வாரப்பத்திரிக்கை போல எனக்குத் தோன்றியதை எழுதி வந்தேன். இப்போது அதைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது! ஆனால் அன்று எனக்கு அது பொழுது போக்காக இருந்தது. இதற்கிடையில் ராணிக்காமிக்ஸ் எனக்கு அறிமுகமாகி இருந்தது. அதில் வந்த ஹீரோக்கள் எனது ஆதர்ச ஹீரோக்கள் ஆனார்கள். அந்த தலைப்புக்களை வைத்து நானே சொந்தமாக கதை சொல்ல ஆரம்பித்தேன். பள்ளியில் வகுப்பிற்கு ஆசிரியர்கள் வராத சமயம் நானும் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தில் சில படங்களை கிறுக்கி கதை சொல்வோம்! இதற்கு என் சக மாணவர்களிடம் அமோக வறவேற்பு இருந்தது.
   இந்த சமயத்தில் ஆசான பூதூரில் நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு நேரு சிறுவர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். அதில் எதையும்பெரிதாக சாதிக்கவில்லை! விளையாட்டாய் ஒரு கோவில் கட்டி அதற்கு ஒரு சிறிய தேர் செய்து தேரில் முருகரை வைத்து வலம் வந்ததோடு சரி! அப்படி இப்படி என்று நாட்கள் கழிய ஒரு பழைய கதையை உல்டா அடித்து அன்புவின் அரிய செயல் என்ற என் முதல் சிறுகதை உருவானது. இதற்குள் நான் எட்டாம் வகுப்பிற்கு மாற்றலாகி ஆறுமாதங்கள் ஓடிவிட்டன.
    ஆசான பூதூரில் என் மாமா குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் என்னை பாதிக்க பள்ளிக்கு ஒழுங்காக செல்வது இல்லை! இந்த விசயம் என் தந்தைக்கு தெரியவரஒருநாள் பள்ளியிலிருந்து டிசி வாங்கி வந்து பஞ்செட்டியில் சேர்த்து விட்டார். இங்கு வந்த பின்னும் என் எழுத்தார்வம் தொடர்ந்தது. இங்கு என் தந்தையின் நண்பர் திரு கண்ணன் சென்னையில் இருந்து அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவரும் என்னை ஊக்குவிக்க என் கனவுகள் விரிந்தது.
    நோட்டு புத்தகங்களில் இருந்து ஒரு இருபது முப்பது தாள்களை கிழித்து அதை தைத்து நேருமாமா  என்ற பெயரில் கையெழுத்து பிரதி மாதம் தோறும் வெளியிட ஆரம்பித்தேன். இதை என் தந்தையின் நண்பரிடம் காண்பித்தேன். அவர் படித்து பார்த்து நேருமாமா என்ற பெயர் வேண்டாம் புதியதாக வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் அவரையே பெயர் கூறுமாறு கேட்டேன். சின்னபூக்கள் என்று சொன்னார். பெயர் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லைதான்!இருந்தாலும் மறுக்காமல் அந்த பெயரையே வைத்து அவரை ஆசிரியராக இருக்குமாறு சொன்னேன். நான் இணை ஆசிரியர் என்று பதவியேற்றுக் கொண்டேன். எனது தந்தையை கௌரவ ஆசிரியராக நியமித்தோம். எனது தங்கைகள் தான் உதவி ஆசிரியர்கள். எனது குடும்பம் தான் வாசகர்கள் என்று ஒரு குடும்ப பத்திரிக்கையாக சின்னபூக்கள் சிறப்பாக வெளிவந்தது.
     அதில் நான் எழுதிய கதைகளை இப்போது படித்தால் சிரிப்பு வரும் அவை கதைகளே கிடையாது! வெறும் வெத்து வேட்டுக்கள் தான்! ஆனால் திரு கண்ணனும் என் குடும்பத்தாரும் ஊக்குவிக்க நான் பத்தாம் வகுப்பு படிக்கும் சமயம் ஓரளவுக்கு சிறப்பாக எழுத ஆரம்பித்தேன். என் கையெழுத்து பத்திரிக்கையும் வளர்ந்திருந்தது. அதன் வாசகர்கள் கூடியிருந்தார்கள் எனது நண்பர்களும் கூட! பத்திரிக்கையின் பெயரையும் இளந்தளிர் என்று மாற்றியிருந்தேன்! எனது கல்லூரி காலத்தின் ஆரம்பத்தில் தேன்சிட்டு என்ற இளைஞர் பத்திரிக்கையை கையெழுத்து பத்திரிக்கையாக வெளியிட ஆரம்பித்தேன். 16 பக்கங்கள் கொண்ட மாதமிறுமுறை இதழான அது பின்னர் 100 பக்கங்களுக்கு மேல் கூடிய மாத இதழானது. இதற்கிடையில் எனது கதையும் கோகுலம் இதழில் பிரசுரமானது கூடி வாழ கத்துக்கணும் என்ற தலைப்பில் நான் அனுப்பிய கதை மரியாதையா கொடுத்திடு என்ற தலைப்பில் கோகுலம் ஆகஸ்ட் 93 இதழில் வெளிவந்த போது எனக்கு வந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது! கனவுலகில் மிதந்தேன்!

மீண்டும் அடுத்த பதிவில்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

  1. ///அது பின்னர் 100 பக்கங்களுக்கு மேல் கூடிய மாத இதழானது. ///

    வியக்க வைக்கிறது... பசுமையான நினைவுகள் தொடர்ந்து எழுதுங்கள்...

    உங்கள் பிளாக் இணையதளத்தின் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை எளிதில் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் செய்திகளின் லிங்கை உடனுக்குடன் இணைத்திடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!