தொடரும் மாணவர் தற்கொலைகள்! காரணம் என்ன? ஓர் அலசல்!

தொடரும் மாணவர் தற்கொலைகள்!
காரணம் என்ன? ஓர் அலசல்!

சமீப காலமாக நம்மை அச்சுறுத்திவரும் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதுதான்! ஏன் இந்த கொடுமை? அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது என்ன? அதற்கான காரணங்களை இப்போது அலசி ஆராய்வோம்
  தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரி மாணவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் மீடியத்தில் பயிலும் மாணவர்களாகவே இருக்கிறார்கள். கடைசியாக நேற்று தற்கொலை செய்து கொண்ட தைரிய லட்சுமியும் கூட பொறியியல் மாணவிதான்.
  பொறியியல் மாணவர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அதிலும் தமிழ்மீடிய மாணவர்கள் என்று அலசினோமானால் வரும் தகவல்கள் ஆச்சர்யமானவை அல்ல. பள்ளி படிப்பிலே கூட தமிழ் மீடிய மாணவர்கள் என்றால் ஆங்கில மீடிய மாணவர்களுக்கு ஒரு இளக்காரம் உண்டு. பொறியியல் கல்லூரியில் சொல்லவே வேண்டாம். எனக்கு தெரிந்த ஒரு தமிழ் மீடிய மாணவியிடம் பேசிக்கொண்டிருந்த போது தமிழ் மீடியம் என்றால் புழுவைப் போல பார்ப்பார்கள். ஒரு சந்தேகம் கூட கேட்க முடியாது. அனைவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்க நமக்கோ ஆங்கிலம் வராது. கடைசி பென்சில் தனிமையாக அமர்ந்திருக்க வேண்டியதுதான். என்றார். இத்தனைக்கும் அவர் எல்லாத் தேர்வுகளிலும் எண்பது சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்களை பெற்றவர்.
   மாணவர்கள் என்றில்லை! ஆசிரியர்களும் அப்படித்தானாம்! ஒரு மேடத்திடம் சந்தேகம் ஒன்றை கேட்டபோது அதுவரை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தவர் நீ தமிழ் மீடியமா என்று ஏளன பார்வை பார்த்தாராம். நன்கு படிக்கும் பெண்ணிற்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்!.
   எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்ட வேளையில் பணத்தை வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துவிடுகின்றனர். பெற்றோர்களும் தன் பிள்ளை இந்த படிப்புக்கு தகுதியானவனா என்று யோசித்து பார்ப்பதில்லை! மேலும் பிள்ளைகளின் விருப்பத்தை கேட்பதும் இல்லை! பக்கத்துவீட்டு பெண்ணோ பையனோ படிக்கிறதே நம் பிள்ளையும் படிக்கட்டும் என்று சேர்த்து விடுகிறார்கள் அங்கேதான் ஆரம்பிக்கிறது பிழை.
  கடனை உடனை வாங்கி சேர்த்திருக்கேண்டா! நல்லா படிச்சு மாணத்தை காப்பாத்துடா! என்று அறிவுரை வேறு. ஒரு பக்கம் பெற்றோர் நச்சரிப்பால் பிடிக்காத சப்ஜெக்டை படிக்க வேண்டிய நிலை! இன்னொரு புறம் சகமாணவர்கள் ஆசிரியர்களின் கேலி.புரியாதபாடங்கள். இளம் மனது தைரியம் இழக்கிறது இதுவே தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது.
  இன்றைய மாணவர்கள் கஷ்டத்தை உணராமல் வளர்க்கப்படுகிறார்கள்! இதுவே முதல் தவறு. நாம் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை! பையன் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று சொகுசாக பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இதனால் பிள்ளைகள் எந்த துன்பமும் இன்றி வளர்கையில் துன்பத்தை தாங்கும் சக்தியை இழக்கின்றனர். அப்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.
   அதைரியம் வாழ்க்கையை எதிர்கொள்ள பழகாமை! புதுமையான கல்விச் சூழல் ஒத்துவராத படிப்பு என்று பல்வேறு சூழல்கள் அவர்களின் பிடியை இறுக்க  மீண்டு வர முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.
  பொதுவாக கிராமப்புற பள்ளிகளில் தமிழ் மீடியம் தான் படிக்க முடியும். அங்கு படித்து பொறியியல் சேருபவர்கள் குறைவு. அதனால் வெளி மாநில மாணவர்கள் ஆங்கில வழி மாணவர்கள்தான் பொறியியல் கல்லூரிகளில் அதிகம் இருப்பார்கள் அவர்களுடன் பழகுவதில் மொழி பிரச்சனையால் இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. நாம் எதற்கும் லாயக்கில்லை என்று முடிவெடுத்து விடுகிறார்கள். அங்கு வகுப்பு எடுக்கும் போது அல்லது பேசும் போது தடுமாறினால் தட்டி கொடுத்து ஊக்கப் படுத்தாமல் ஏளனம் செய்வதால் அவர்களின் தைரியம் மேலும் குறைகிறது.
  நமது கல்வி அமைப்பே முதலில் தவறு. இங்கு படிக்கும் மேல்நிலைக் கல்விக்கும் பொறியியல் படிப்பிற்க்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் போகிறது. ஒரு புதிய கல்வியை கற்க வேண்டிய நிலை! இதில் எல்லோராலும் சமாளிக்க முடியாது. எங்கள் ஊரில் ஒரு பொறியியல் மாணவன் இதை எதிர்கொள்ள முடியாமல் ஊரை விட்டு ஓடிவிட்டான். பின்னர் பெற்றோர் கண்ணீர் வடித்து தேடினர். இறுதியாக தென் மாவட்டத்தில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தவனை பிடித்து வந்து மீண்டும் கல்லூரியில் சேர்த்தனர். என்ன லாபம்? அவன் இன்று இருபது அரியர் வைத்துள்ளதாக தகவல்!
   பொறியியல் படிப்பில் அரியர் இருந்தால் என்ன செய்யமுடியும்? நம் வாழ்க்கை வீணாகிறதே என்ற நினைப்பு தானாக வருமல்லவா? அந்த நிலைதான் இப்போது பல மாணவர்களுக்கு வந்து அரிய உயிரை போக்கிக் கொண்டுள்ளனர்.
    இப்படி தேர்வை எதிர்கொள்ள முடியாமை! தோல்விபயம்! வீட்டினர் என்ன சொல்வார்களோ! எதிர்காலம் எப்படியோ போன்றவை மாணவர்களை பீதியடைய வைத்து உயிரை மாய்த்துக் கொள்ள வைக்கிறது.
  இதை எப்படி தடுப்பது?
பெற்றோர்களால்தான் முடியும் இதை தடுக்க!
  பெற்றோர்கள் முதலில் தன் மகன் அல்லது மகளின் திறமையையும் அவர்களின் விருப்பத்தையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்களை மதிப்பெண் ஈட்டும் இயந்திரமாக கருதாமல் மனிதனாக பார்க்க வேண்டும். அடுத்தவனுடன் ஒப்பீடு செய்யாமல் இருக்க வேண்டும். கட்டாயக்கல்வி என்று பிடிக்காத சப்ஜெக்டை திணிக்கக் கூடாது.சதா படிப்பு என்று தொந்தரவு செய்யாமல் சற்று ரிலாக்ஸாக பொழுது போக்கவும் டிவி பார்க்கவும் புத்தகம் படிக்கவும் அனுமதிக்க வேண்டும். அத்துடன் பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்க வேண்டும் . அவர்களுக்கு கற்றலில் இருக்கும் சங்கடங்களை சொல்லும் போது அதை தீர்வு செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
   பள்ளி கல்லூரிகளும் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் மிசின்களாக எண்ணாமல் அவர்களை கசக்கி பிழியாமல் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.மதிப்பெண் எடுக்காவிடில் அசிங்கப் படுத்துவது. டிசி கொடுப்பது பெற்றோரை அழைத்து மிரட்டுவது என்ற கொள்கைகளை கைவிட்டால் நன்றாக இருக்கும்.
  பெற்றோர்களும் கொள்ளையடிக்கிறார்களே சொல்லிக் கொடுக்கவில்லையே என்று புலம்பாமல் தன் பிள்ளையின் தனித் திறமைக்கு மதிப்பு கொடுத்து செல்ல வேண்டும்.
பள்ளிகளும் கல்லூரிகளும் கற்று கொடுக்கத் தான் சம்பாதிக்க இல்லை என்று உணர வேண்டும் மாணவர்களிடம் வேறுபாடு காட்டாமல் நடந்திட வேண்டும். இப்படி எல்லாம் நடக்க அரசு முயற்சிக்க வேண்டும். கல்லூரிகளை கண்காணித்து வந்தாலே இந்த தற்கொலைகள் குறையும்.
  கல்லூரிகள் இப்படி திணறும் மாணவர்களுக்கு தனியாக மனவளர் பயிற்சிகளை அளித்து உதவி செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் தைரியத்தினை வளர்த்து கொள்ள வேண்டும்.தாழ்வு மனப்பான்மையை கைவிட வேண்டும். துணிந்து போராடினால் இந்த தற்கொலைகள் மறைந்து போகும்.

தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிரலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!