பசுமை நிறைந்த நினைவுகள்! 8

பசுமை நிறைந்த நினைவுகள்! 8


பப்பரமிண்டும் கடலை மிட்டாயும் பற்றி சொன்னேன் அல்லவா? அதுபோல ஐஸ்கிரிம் பற்றியும் சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் இன்று போல் குவாலிட்டிஐஸ்கிரிம் அருண் ஐஸ்கிரிம் எல்லாம் வரவில்லை! பெரிய நகரங்களில் வேண்டுமானால் இருந்திருக்கலாம். எங்கள் ஊருக்கெல்லாம் சைக்கிளில்தான் ஐஸ்கிரிம் பெட்டியை வைத்து கட்டிக் கொண்டு ஒரு ஹார்ன் ஊதிக்கொண்டு வருவான் ஐஸ்காரன்.
   ஐஸ்காரன் எல்லாநாளிலும் வரமாட்டான். சித்திரை வைகாசி மாதங்கள்தான் ஐஸ்கிரிம் சீசன். மற்ற மாதங்களில் காண்பது அரிதாக இருக்கும். பொன்னேரி செங்குன்றம் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் ஐஸ்கிரிம் கம்பெனிகள் இருக்கும். அங்கு சென்று பணம் செலுத்தி பெட்டிகளில் குச்சி ஐஸ்களை கொண்டு வந்து விற்பார்கள் விற்பனையாளர்கள். வேகாத வெயிலில் அந்த ஐஸ்கிரிம் பெட்டியை சுமந்து கொண்டு சைக்கிளில் வருவார்கள் அவர்கள்.
   சேமியாஐஸ், பால் ஐஸ், கிரேப் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்ச் ஐஸ், கப் ஐஸ், என கொண்டு வருவார்கள். சேமியா ஐஸ்தான் மிகவும் விலை குறைவு 15 பைசா இருந்தது. கப் ஐஸ் 1ரூபாய் விற்றது. வாடிக்கையாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என பிரிந்து விற்பார்கள். அதனால் வழக்கமாக வரும் ஐஸ்காரரை சினேகம் பிடித்துக் கொண்டு கடன் வைப்பதும் உண்டு ஊர்க்காரர்கள்.
  அவர்களும் வாடிக்கை போய்விடப்போகிறதே என்று கடன் தருவார்கள். நான் சித்திரை வைகாசி மாதங்களில் பெரும்பாலும் கோடை விடுமுறை ஆதலால் நத்தத்தில் வசிப்பேன். அங்கு வாடிக்கையாக கிஷ்டன் என்ற நபர் ஐஸ்கிரிம் கொண்டு வருவார். எங்கள் தந்தையும் அவரிடம் சில சமயம் கடன் சொல்வதுண்டு. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது அப்போது எங்கள் குடும்பம். என்னுடன் பிறந்த தங்கைகள் மூவர் நான் அப்பா அம்மா என ஆறு ஐஸ்கிரிம் விற்பதால் கிஷ்டன் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வருவார்.
  குச்சி ஐஸ் சாப்பிடுவதில் ஒரு லாவகம் வேண்டும் ஒரே பக்கமாக உறிஞ்சிக் கொண்டிருந்தால் கிரிம் குறைந்து சுவை போய்விடும் மாற்றி மாற்றி சுவைக்க வேண்டும்.ஐஸ்கிரிம் குறைந்து வரும்போது பிட்டுக் கொள்ளும் எனவே கீழே விழாதவாறு சாப்பிட வேண்டும் சில சமயம் உறிஞ்சும் போது பெரிய கட்டியாய் உடைத்துக் கொண்டு இம்சை பண்ணும் ஆனாலும் இந்த ஐஸ் கிரிம் உண்ணுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.
   பின்னர் குல்பி என்ற ஐஸ் மாலை நேரத்தில் விற்பனைக்கு வந்தது. என்னை பொறுத்தவரை இது சற்று சுவை குறைவுதான் ஆனால் அதை விற்பவன் கூடைக்குள் இருந்து ஒரு கப்பில் போட்டு குச்சி ஒட்டி உடனே தருவதில் ஒரு ஆச்சர்யம் எப்படி தயாரிக்கிறான் என்று ஓர் ஆர்வம் அதனால் இந்த ஐஸ்கிரீம் வாங்கி உண்ண ஆரம்பித்தோம்.
   இதுவும் போய் பெப்சி என்று பாலிதீன் கவரில் அடைத்து ஒரு ஐஸ்கிரிம் வந்தது. அதையும் சுவைத்தோம் பின்னர் கோன் ஐஸ்கிரீம் வந்தது. பிறகுதான் எங்கள் பக்கம் ஐஸ்கிரீம் பார்லர்கள் துவங்கின. இன்று பிஸ்தா, கஸாட்டா, வெண்ணிலா, சாக்லேட் என்று பல்வேறு சுவைகளில் தரமாக இவை கிடைத்தாலும் அந்த காலத்து குச்சி ஐஸிற்குத் தான் மனம் ஆசைப்படுகிறது.
  குச்சி ஐஸ் விற்பவருக்கு என்ன லாபம் கிடைத்திருக்கும் நாள் பூராவும் உழைத்து அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் அவருடைய குடும்பம் எப்படி பிழைத்திருக்கும் என்று எனக்குஇப்போது தோன்றுகிறது. இன்றுகூட தெருக்களில் சில குச்சி ஐஸ் வியாபாரிகள் தென்படுகிறார்கள் ஆனால் இன்று விலை 10ரூபாய் ஆனால் அன்று 10 பைசாவிற்கு கிடைத்தது.
  இந்த கட்டுரையில் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பெரும்பேடு பள்ளியில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? நான் ஆறாம் வகுப்பு படித்த போது 10ம் வகுப்பு படித்தனர் இருவர். ஒருவர் பெண் மற்றொருவர் ஆண்.
இந்த இருவருக்கும் படிப்பில் போட்டி.
  பெண் கால் ஊணமானவர். பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்தது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன. பெண்ணை முந்தி அந்த ஆண் பள்ளியில் முதலிடம் பிடித்தார். நானும் சில வருடங்களில் அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறி விட்டேன். சில பல வருடங்கள் கழித்து பெரும்பேடு முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை தரிசனம் முடித்து விட்டு சைக்கிளில் கிளம்பினேன். சிறிது தூரம் சென்றதும் என்னுடன் ஐஸ்காரர் ஒருவர் வந்தார்.
  பொழுது போக பேச்சுக் கொடுத்தேன். கிருத்திகை ஆயிற்றே நல்ல கூட்டம் வியாபாரம் எப்படி? என்றேன். வியாபாரம் நல்லா தான் போச்சு சார்! ஆனா இதுல என்னை வருமானம். கம்பெனிக்கு முன்பணம் கட்டி காலையிலேயே போய் கொண்டு வரணும் சில ஐஸ் உடைஞ்சி போகும் சிலது கரைஞ்சி போகும் ஏதோ என் தலையெழுத்து இந்த வியாபாரத்துக்கு கொண்டு வந்திடுச்சி என்றார்.
   உங்க ஊரு இதுதானா? என்றேன்! ஆமாம் சார் ! இதே ஊருதான்! இந்த பெரும்பேடு பள்ளிக் கூடத்துல தான் படிச்சேன். அப்படியா! நானும் இந்த ஸ்கூல்லதான் படிச்சேன் நீங்க எந்த பேட்ச்? 85ம் வருசம் என்றார்!
  அட நான் ஆறாவது படிக்கிறப்ப நீங்க டெண்த் எழுதி இருக்கீங்க ! ஆமா உங்களுக்கு பவானியை தெரியுமா? கால் ஊணமா இப்ப பஞ்செட்டி ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க  என்றேன்.
  அட போங்க சார் நான் தான் அவங்களை முந்தி ஸ்கூல் பஸ்ட் வந்த சாரங்கன்! என் தலைஎழுத்து ஐஸ் விக்கிறேன்! அவங்க டீச்சர் ஆயிட்டாங்க என்ற போது அவரிடம் ஆற்றாமையை காண முடிந்தது. பள்ளி முதல் மாணவனாக வந்த போதும் குடும்ப சூழலால் படிப்பை தொடர முடியாமல் போனது கேண்டினீல் வேலை செய்தது இப்போது ஐஸ் கிரிம் விற்பது என்று அவர் கதையை கூறி முடிக்கவும் பொன்னேரி வந்தது. விடை பெற்றேன்.
  அதன் பின் சில நாட்களுக்கு எந்த ஐஸ்கிரிம் விற்பவரை கண்டாலும் சாரங்கன் ஞாபகமே வந்தது. இவன் எந்த சூழ்நிலையில் ஐஸ்கிரிம் விற்க வந்தானோ என்று ஒருஅனுதாபம் பிறக்கும். ஓடிச் சென்று ஐஸ் வாங்குவேன். ஏதோ என்னால் முடிந்த உதவி!
 இப்போதும் வெயில் உரித்தெடுக்கிறது! சித்திரை பிறக்க போகிறது ! ஊரில் ஒரு ஐஸ்கிரிம் காரனையும் காணோம்  பொன்னேரியில் கூட ஐஸ்கிரிம் கம்பெனியை மூடி விட்டதாக கேள்வி! இருந்தாலும் ஐஸ்கிரிம் காரன் எழுப்பும் அந்த பீய்ங்க்! பீயிங்க் ஒலிக்கும் ஐஸின் சுவைக்கும் மனம் ஏங்குகிறது
  மீண்டும் அடுத்த பகுதியில்!

Comments

  1. வணக்கமுங்க...உங்க அனுபவம் நல்லா இருக்குங்க...அப்புறம்.ஒரு கேள்வி நீங்க போட்டிருக்கிற முதல் போட்டோ நம்ம தளத்துல சுட்டதுதானே...? ஹி..ஹி ஹி ..

    ReplyDelete
  2. Blogger கோவை நேரம் said...

    வணக்கமுங்க...உங்க அனுபவம் நல்லா இருக்குங்க...அப்புறம்.ஒரு கேள்வி நீங்க போட்டிருக்கிற முதல் போட்டோ நம்ம தளத்துல சுட்டதுதானே...? ஹி..ஹி ஹி ..

    போட்டோவை கூகுள் இமேஜஸிலிருந்து சுடறதுதான் நம்ம பழக்கம்! ஒருவேளை இமேஜஸ்ல உங்க தள போட்டோ இருந்து சுட்டிருக்கலாம்! என்ன செய்வது? ஐஸ்காரனை காணாதது போல படமும் கிடைக்க வில்லையே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2