Monday, December 31, 2012

தளிர் சென்ரியூ கவிதைகள்! 2


 நல்லது சொன்னதற்கா
நடுக்கடலில் தள்ளினார்கள்?
வள்ளுவர் சிலை!

பிடித்தவனை
பிடித்துக்கொண்டார்கள்
சிகரெட்!

உயிர்களை கொன்று
ஜடங்களை நட்டார்கள்
பாலம்

நாடோடிகளின்
நீண்ட படுக்கையானது
நடைபாதை!
 
தாய்ப்பால் விலை போக
தள்ளிக்கட்டப்படுகிறது
கன்று!

காசைக் கொடுத்து
சிறையில் அடைக்கப்படுகின்றன பிள்ளைகள்
நர்சரி பள்ளி

அஹிம்சாவாதியின்
கையில் தடி!
காந்தி!

அஹிம்சையை போதித்தவனுக்கு
இன்னுமா ஹிம்சை!
தபால் தலையில் காந்தி!

ஊற்றிக் கொடுத்து
பீற்றிக் கொள்கிறது அரசு
டாஸ்மாக்.

கான்க்ரிட் வயல்களில்
காணாமல் போனது
பசுமை!

வெட்ட வெட்ட
வளர்கிறது
மின்வெட்டு!

நகரில் புகுந்த
மிருகங்கள்!
நாசமானது மான்!

இரவிலும் ஒளிர்ந்தது
சூரியன்!
சோலார் விளக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

Sunday, December 30, 2012

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3


கடந்த இரண்டு பகுதிகளில் தமிழ் நூல்களை எழுதியவர்கள் நூல் விளக்கம், பகுதிகள் சிறப்பு பெயர்கள் போன்றவற்றினை பார்த்தோம். இன்று சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். உங்களோடு சேர்ந்து நானும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

நல்ல தமிழ் அறிவோம்!

உனக்கு பையனா பொண்ணா?  வயசு என்னா? என்று பொதுவாக கேட்பதுண்டு அந்த வயசு என்பதற்கு தூய தமிழ் சொல் என்ன தெரியுமா?  அகவை

பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று ஒரு பழமொழி உண்டு! அந்த பூமியை அகிலம் என்று நல்ல தமிழில் அழைக்கலாம்.

வாழை மரம் கட்டாமல் எந்த விசேஷமும் நடப்பது இல்லை! தன்னையே தரும் வாழைக்கு தமிழில் அசோகு என்றொரு பெயர் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குறளோவியம் படைத்தவர் கலைஞர் என்றும் அவரது தாயார் பெயர் அஞ்சுகம் என்பதும் தமிழர்கள் பலர் அறிந்திருப்பார்கள் அந்த அஞ்சுகம் என்பது என்ன தெரியுமா? கிளியைத்தான் நல்ல தமிழில் அஞ்சுகம் என்று  அழைக்கிறோம்.

சிலிண்டர் விற்கும் விலைக்கு விறகு அடுப்புக்கே போய்விடலாம் என்று நினைத்தாலும் விறகும் இன்று பொன் போல விலை பலமடங்கு ஏறிவிட்டது. விறகின் அழகிய தமிழ் பெயர் கறல்.

கலாப காதலா! என்று பாடல் வரிகள் கேட்டிருப்பீர்கள்! கலாபம் என்றால் என்ன தெரியுமா? தோகை என்பதன் நல்ல தமிழ் தான் கலாபம். மயிலுக்கும் இந்த பெயர் உண்டு!

பிள்ளையார் இல்லா ஊர் இருக்காது. அந்த விநாயகனை  தமிழ் கரிமுகன் என்று அழைக்கிறது. கரி என்றால் யானை! யானை முகத்தோனை கரிமுகன் என்று அழைப்பது நியாயம் தானே!


தினமும் ஓளிக்கடலை துலக்கு என்றால் நீங்கள் அது என்னப்பா ஓளிக்கடல் என்று கேட்பிற்கள்! ஓளிக்கடல்தான் ஒருவரின் முக அழகை சிறப்பிக்கும். சொல்லை தெளிவாக பேச வைக்கும் பல் போனால் சொல் போச்சு! என்று பழமொழி சிறப்பிக்கும் அழகு பற்களைத்தான் ஒளிக்கடல் என்கிறது தமிழ்.

அவ ரொம்ப அழகு!  இந்த பூ மிகவும் அழகு என்று அழகுக்கு அழகு சேர்க்கும் சொல்லாக  ஒயில் என்ற சொல் அமைந்து  சிறப்பிக்கிறது.

ஆதவனை கண்டால் மலரும் தாமரைக்கு  மற்றொரு தமிழ் சொல் மரை மலர்!

         பொங்கல் பண்டிகைக்கு மனைவி வாங்கி அடுக்கிய சேலைகளை பார்த்து மயங்கி விட்டீர்களா? மயக்கத்திற்கு நல்ல தமிழ் மருட்சி!
        நாட்டில் மலினங்கள் மலிந்து விட்டன என்றால் உங்களுக்கு புரியாது! குற்றங்கள் மலிந்து விட்டன என்றால் ஒத்துக் கொள்வீர்கள்தானே! குற்றங்களை மலினங்கள் என்கிறது தமிழ்.
     காற்றுக்கு மருத்து என்பது நல்ல தமிழ்
இவ்வளவும் படிக்கையிலே உங்களுக்கு ரொம்ப ஆயாசம் வந்திருக்கும்!  அதாங்க களைப்பு! களைப்பு போக்கிங்க! அடுத்தவாரம் இன்னும் சில சொற்களை பார்க்கலாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Saturday, December 29, 2012

நான் போக மாட்டேன்! பாப்பாமலர்!


நான் போக மாட்டேன்!  பாப்பாமலர்!

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து விட்டன. எல்லா மாணவர்களும் புதிய வகுப்புகளுக்கு சென்ற குஷியில் மகிழ்ச்சியாக பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் முகுந்தன் மட்டும் சோகமாக அமர்ந்திருந்தான். “பள்ளி” என்றாலே பாகற்காயாக கசந்தது அவனுக்கு. இனி நமக்கு விடுதலை! பள்ளிக்கூடம் போக வேண்டாம். அம்மா கூட வேலைக்கு போகலாம். ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
   ஆனால் அவன் நினைப்பை கெடுப்பது போல அவன் தாய் குரல் கொடுத்தாள். ஏண்டா முகுந்தா! பிள்ளைகளுங்கெல்லாம் ஸ்கூலுக்கு போவுதே நீ கிளம்பலை?
    நான் போக போறது இல்லை?
போவாமா? என்ன பண்ண போறே?
உன் கூட வேலைக்கு வரேன்!
  என்னாது? வேலைக்கு வர்றியா? நான் ஒருத்தி அங்க கிடந்து சீரழியறுது போதாதா? கஷ்டப்பட்டு உன்னை படிக்க சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பினா பெயில் ஆனதும் இல்லாம வேலைக்கு வரேன்னு சொல்றீயே?
  அதான் பெயில் ஆயிட்டேன் இல்லே! எனக்கு கஷ்டமா இருக்கு? பசங்க எல்லாம் கேலி பேசுவாங்க! என்னால ஸ்கூலுக்கு போக முடியாது!
  நீ ஒழுங்கா படிச்சிருக்கணும்! படிக்காட்டி பெயில் ஆகத்தான் வேணும் அதுக்காக ஸ்கூலுக்கு போவாம நின்னுடுவியா?
   என்னால முடியாதும்மா! நான் போகமாட்டேன்! என்று அடம் பிடித்தான் முகுந்தன்.
  சென்ற வருடம் வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தான். இந்த வருடம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை! சில பரிட்சைகளில் ஒழுங்காக மதிப்பெண் எடுக்க வில்லை! இறுதி தேர்வில் எப்படியும் பாஸாகிவிடுவான் என்று நினைத்தாள் முகுந்தனின் தாய் கமலா. ஆனால் அவள் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டு பெயிலாகி நின்றான் முகுந்தன். கமலா ஒரு கட்டிட தொழிலாளி. காலை வேலைக்கு போனால் மாலை ஆகிவிடும். தந்தை இல்லை முகுந்தனுக்கு. நாள் முழுதும் கல்லும் மண்ணும் சுமந்து படிக்க வைத்து கொண்டிருந்தாள் முகுந்தனை.
  அவனும் ஒழுங்காகத்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தான். இந்த ஒன்பதாம் வகுப்பு வருகையில் ஏதோ விளையாட்டு புத்தி. படிப்பில் கவனம் போய் மட்டையை தூக்கி கொண்டு விளையாட ஆரம்பித்து படிப்பை கோட்டை விட்டுவிட்டான். பெயில் ஆகவும் அது அவனுக்குள்  ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது. பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டான்.
  டேய் முகுந்தா! பெயில் ஆனா என்னடா? பள்ளிக்கூடத்துக்கு போடா! நாங்கள்ளாம் படிக்காம படற அவஸ்தையை பாத்துமா நீ திருந்தலை? என்று கெஞ்சி பார்த்தாள்.
 போம்மா! உனக்கு ஒண்ணும் தெரியாது! என்கூட படிச்சவங்க எல்லாரும் அடுத்த வகுப்புக்கு போயிட்டாங்க! என்னை விட சின்ன பசங்களோட நான் ஒண்ணா படிக்கணும் வெக்கமா இருக்கு! எல்லோரும் கேலி பண்ணுவாங்க! நான் ஒங்கூட வேலைக்கு வரேன்! என்று அடம்பிடித்தான் முகுந்தன்.
  தோளுக்கு மிஞ்சிவிட்ட பிள்ளையை என்ன செய்வது? சரி விதி வட்ட வழி என்று சரி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டாள் கமலா.
  மறுநாள் தான் வேலை செய்யும் கட்டிடத்திற்கு அழைத்து சென்று மேஸ்திரியிடம் அறிமுகப்படுத்தி வேலைக்கு சேர்த்து கொள்ள சொன்னாள்.
  ஏம்மா! என் வேலைக்கு உலை வைக்கற? சின்ன பையனை எல்லாம் வேலைக்கு சேர்த்துக்க கூடாதும்மா! யாராவது பாத்து கம்ப்ளைண்ட் பண்ணிட்டா என் பொழப்பு நாறிடும்! என்றார் அந்த மேஸ்திரி.
   இல்லையா! இவன இன்னிக்கு ஒருநாள் சேர்த்துக்குங்க! நாளைக்கு கூட்டிட்டு வரலை! அவனும் தொழில் கஷ்டத்தை புரிஞ்சிகிடட்டும்! நான் சொன்னா கேக்க மாட்டேங்கிறான் என்று கெஞ்சி வேலையில் சேர்த்து விட்டாள்.
  சுட்டெரிக்கும் வெயிலில் தனது அம்மா படும் கஷ்டத்தை பார்க்க முகுந்தனுக்கு சகிக்க வில்லை! ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாத வேலை! அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி. கற்களை கீழிருந்து மேலே எடுத்து சென்று வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிடும். சற்று கூட ஓய்வெடுக்க விடாது சளைக்காமல் மேஸ்திரி வேலை வாங்குவதை பார்த்து கண்ணீர் விட்டான் முகுந்தன்.
    இதில் மேஸ்திரியின் சுடு சொற்கள் வேறு! கண்கலங்கி நின்ற அவனை மேஸ்திரியின் குரல் தட்டி எழுப்பியது! டேய் தம்பி!  அங்க என்ன வேடிக்கை! இதுக்குத்தான் சின்ன பயலுவலை வேலைக்கு சேர்க்க மாட்டேன்! சாயங்காலம் நோட்டை எண்ணுவே இல்ல! இப்ப வேடிக்கை பார்த்தா எப்படி! ஆவட்டும் வேலை! என்று சத்தம் போட்டார்.
  அப்போதுதான் அவனுக்கு உரைத்தது! இவ்வளவு கஷ்டபட்டு வேலை செய்து நம்மை படிக்க வைக்கும் அம்மாவை ஏமாற்றலாமா? கூடாது. நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அம்மாவை கையில் வைத்து தாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பரபரவென வேலை செய்து முடித்தான்.
  பெயில் ஆகிவிட்டால் என்ன? மீண்டும் பாஸ் பண்ணி விட்டால் போகிறது. இன்று கிண்டல் பேசுகிறவர்கள் நாளையும் படிக்காதவன் என்று கேலி பேசத்தான் செய்வார்கள்! உலகமே இப்படித்தான்! நாம்தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நினைத்தவன். நாளைமுதல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான்.
   மறுநாள் காலை!
   அம்மா நான் ஸ்கூலுக்கு போறேன்! இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோம்மா! உன் கஷ்டம் எல்லாம் மாறிடும் என்று சொன்ன மகனை மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டாள் கமலா.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Friday, December 28, 2012

ஆருத்ரா தரிசன கதை!


சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடராஜருக்கு பஞ்சசபைகள் உள்ளன. திருவாலங்காட்டில் ரத்தினசபை, சிதம்பரத்தில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவற்றில் நடராஜர் திருநடனம் ஆடுகிறார். மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தின்று இவர் ஆருத்ரா தரிசன திருவிழா காண்கிறார். இந்த திருவிழாவை நடத்துவது, ஒரு பெண்மணியின் பதிபக்திக்காக என்பது உங்களுக்குத் தெரியுமா!
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் பெரிய பணக்காரன். அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றான். நாடகத்தில் நடித்த நடிகையுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து பொருளைக் கறந்த நடிகை ஓடிவிட்டாள். தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களிடம் வியாபார நுட்பங்கள் குறித்து பேசினான். அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் அவனை பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் புயலில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கி விட்டது. வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. சாதுவன் மட்டும் எப்படியோ தப்பித்து, பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டான். கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அதன் பலனாக, சாதுவன் கரை ஒதுங்கினான்சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவன் இறந்துவிட்டான் என முடிவு செய்த ஆதிரை அழுது புலம்பினாள். தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் நெருப்பைச் சுட்டது. தனக்கு ஏதும் நேராததால் ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது.
இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னார். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லைஅரசர் சாதுவனிடம்,நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார்.
 
சாதுவன் ஏற்கனவே மது, மாதுவிடம் சிக்கி வருந்தியவன் அல்லவாஅவன் அரசரிடம்,உயிர்களைக் கொல்லக்கூடாது. மாமிசம் உண்பது கூடாது. இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை நமக்காக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும், என்று எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார்சாதுவனை அவனது சொந்த ஊருக்கு ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய சாதுவன் மனைவியுடன் கூடி வாழ்ந்து மகிழ்ச்சி அடைந்தான்அவளது கற்புத்திறனை பாராட்டிய சிவன், அவளை வானமண்டலத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தார். அதை தனது நட்சத்திரமாகவும் ஏற்று, அந்த நாளில் ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு பரவசமூட்டுகிறார்.               நன்றி } தினமலர்பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22

உங்கள் ப்ரிய “பிசாசு”


முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்து செல்கின்றனர். அங்கு தங்கும் அவள் நள்ளிரவில் எழுந்து சென்று ஒரு விபத்தை ஏற்படுத்துகிறாள்

முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:


  
இனி:
    அந்த விடியற்காலை பொழுதில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது தலைவிரி கோலமாக காட்சியளித்த செல்வி ஒரு விகாரச் சிரிப்புடன் என் கணக்கு இன்னிக்குத்தான் துவங்கியிருக்கு! என்று வெறிபிடித்தவள் போல சிரிக்க ஆரம்பித்தாள்.
    பாய் தன் கழுத்தில் அணிந்திருந்த பவழ மணி மாலையை எடுத்து வாயில் ஏதோ முணுமுணுத்தபடி உருட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில்  தலையில் கை வைத்தபடி ஓ அல்லா! என்று அமர்ந்தார்.
   என்ன ஆச்சு பாய்!
  இப்ப ஆம்புலன்ஸ் ஓசை கேட்குதே அதுக்கு இவதான் காரணம்! இவதான் அந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கா!
   செல்வி விருட்டென்று திரும்பினாள். பாய்! நான் எதுவும் செய்யலை! எனக்கு ஒன்றும் தெரியாது என்றாள். அடுத்த நிமிடம் வெறி கொண்டவள் போல சிரித்தாள்.
   பாய்! எனக்கு ரொம்ப பயமா இருக்குது! இவளுக்கு ஹிஸ்டீரியாவோ  என்னவோ தெரியலை! இவங்க அப்பா அம்மாவை வரச்சொல்லியிருக்கேன் வந்ததும் இவளை அவங்க ஊருக்கு அனுப்பிச்சிட வேண்டியதுதான்.
   அப்ப இவ மேல இருக்கிற பேயை விரட்ட வேண்டாமா?
எங்க பாய்? உங்க கட்டுப்பாட்டில எதுவும் மீற முடியாதுன்னு சொன்னீங்க! ஆனா இவ அதையும் மீறி விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிரை கொன்னு போட்டிருக்காளே!
   பாயால் பதில் பேச முடியவில்லை!மவுனமானார்.
  என்ன பாய் மவுனமாயிட்டீங்க? பதில் சொல்லுங்க! உங்களை நம்பி வந்தா இப்படி ஆயிருச்சே!
   தம்பி கோபப்படாதீங்க! இது கொஞ்சம் வித்தியாசமான கேஸா இருக்கு! இதுவரைக்கும் இத மாதிரி என்னை மீறி இங்க நடந்துது இல்லை! இதுதான் முதல் தடவை கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். என்னோட பாதுகாப்பை பலப்படுத்தனும்னு தோணுது இது எனக்கு விடப்பட்ட சவாலா எடுத்துக்கிறேன். இவங்க அப்பா அம்மா வரட்டும். அவங்களும் இங்கேயே தங்கட்டும். ஆனா இவளை குணப்படுத்திதான் அனுப்புவேன் இதுக்கு நீங்க ஒத்துழைக்கணும் என்றார்.
    என்ன பாய்! என்னை குணப்படுத்த போறீங்களா? எனக்கு எந்த வியாதியும் இல்லையே! அப்புறம் என்ன மருந்து கொடுக்க போறீங்க? என்ற செல்வி! எனக்கு மருந்து இன்னும் ரெண்டு உயிர்கள் தான் அதை உங்களாளே தர முடியுமா? என்று கெக்களித்தாள்.
   பாய் அதுவரைசாந்தமாக இருந்தவர் இப்போது மிகவும் கோபமானார். கையில் சிறிது நீரை எடுத்து ஏதோ ஓதி அதை செல்வியின் மீது எறிந்தார். ஐயோ! எரியுதே! எரியுதே? என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க! என்று இங்கும் அங்கும் ஓடினாள் செல்வி.
  பாய்! என்ன செய்யறீங்க?
பாய் கை அமர்த்தினார்! நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! இது என்னோட ட்ரீட்மெண்ட்.
  ஆனா செல்விக்கு ஏதாவது ஆச்சுன்னா?
ஒண்ணும் ஆகாது! குணமடையனும்னா இப்படி சில வேதனைகளை பொறுத்துகிட்டுதான் ஆகும். டாக்டர் கொடுக்கிற கசப்பு மருந்தை சாப்பிட்டாதானே ஜுரம் குணமாகுது அது போலத்தான் இதுவும் என்றார்.
    செல்வி அப்படி அரற்றிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் கொஞ்சம் நீரை மந்திரித்து தெளித்தார். இன்னும் அதிகமாக செல்வி அலற தொடங்கினாள் வினோத்தால் அதை சகிக்க முடியவில்லை. போதும் பாய்! என்றான்.
  பாய் அவனை முறைத்தார்! நீங்க கொஞ்சம் வெளியே போங்க! என்றார். வினோத் அரைமனதுடன் அங்கிருந்து நகர பாய் மீண்டும் மந்திரிக்க ஆரம்பித்தார்.
    செல்வியின் அலறல் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது. இப்போது பாய் கையில் ஒரு தாயத்துடன் இருந்தார். அதை சாம்பிராணி தூபத்தில் காட்டி மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தவாறே செல்வியை நெருங்கி அவள் கையில் கட்ட முயன்றார்.
   அதுவரை அடங்கி இருந்த செல்வி வெறிகொண்டார் போல எழுந்தாள். கட்ட வந்த பாயை அப்படியே உதறி தள்ள தூரத்தில் போய் விழுந்தார் பாய்!
 ஓ! சைத்தான் கி பச்சா!  என்னையே நீ விரட்டறியா? உன்னை என்ன செய்யறேன்பார் என்று மீண்டும் மந்திரிக்க முயன்றார் பாய். ஆனால் அவரது வாய் கோணிக் கொண்டது. பேச முடியவில்லை! அவரை மீறிய ஒரு சக்தி அது!
   செல்வி அங்கிருந்து வேகமாக வெளியே வந்தாள். வினோத்தை கடந்து வேகமாக நடக்க தொடங்கினாள். வினோத் எதோ வித்தியாசமாக உணர்ந்தான். செல்வி செல்வி ! நில்லு! என்று குரல் கொடுத்துக் கொண்டே பின்னால் சென்றான். ஆனால் அவள் வேக நடை முன் இவனால் நடக்க முடியவில்லை! ஐந்தே நிமிடத்தில் முஸ்லீம் நகர் ஏரியாவை அவள் கடந்து சென்றாள். ஆண்டார்குப்பம் பிரதான சாலையில் வந்தவள் அவ்வழியே வந்த ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
   அவளை பின் தொடர்ந்து வந்த வினோத்தால் அவள் பேருந்தில் ஏறுவதைத்தான் பார்க்க முடிந்தது. அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  உன் நண்பன் ஏன் பேய் பிடிச்சிருக்கிறதா நடிக்க கூடாது? சித்தப்பா கேட்க முகேஷ் அதுக்கு அவசியம் என்ன சித்தப்பா? என்றான்.
    அவசியம் இல்லேதான் முகேஷ்! ஆனா எமனை பார்த்தவனை நம்ப மாட்டேன்னு சொல்ற நீ உன் ப்ரெண்டுக்கு ஒண்ணுன்னா மட்டும் நம்பறே இல்லையா? முகேஷ் எந்த விஷயத்திலும் ஒரு நம்பிக்கை வேணும். நம்மளோட வாழ்க்கைக்கே ஆதாரம் நம்பிக்கைதான். என்று தத்துவம் பேச ஆரம்பிக்க
  சரி சித்தப்பா நான் நம்பறேன்! என்றான். இப்படியா அறைகுறையா சொல்லாதே முகேஷ். எதையும் தீர விசாரிக்கனும்னு சொல்லுறது அறிவு. ஆனா நம்பிக்கை என்பது வேற! அது நாம் ஒருத்தர் கிட்ட செலுத்தற பக்தின்னு கூட சொல்லலாம் என்றார்.
  ஓக்கே சித்தப்பா! நான் நம்பறேன்! ஆனா ரவிக்கு பேய் பிடிக்கலைன்னு மட்டும் சொல்லிடாதீங்க! அவன் நடவடிக்கை எல்லாம் வித்தியாசமா இருக்குது.
   நீ அவனுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு நம்பறே இல்லையா?
  ஆமாம் நம்பறேன்!
பேயின்னு ஒண்ணு இல்லைன்னு சொல்றவன் உன் நண்பன் அவனை ஒரு பேய் பிடிச்சு ஆட்டுவிக்குது! என்ன் விசித்திரம் பார்!
  சித்தப்பா! நீங்க அவனோட முழு ஜாதகத்தையும் சொல்றீங்க!
ஆனா என்னை நம்ப மாட்டேங்கிறியே! அவனை நம்பற ஆனா நான் சொல்றதை நம்ப மாட்டேன்கிறியே!
   சித்தப்பா நீங்க என்னதான் சொல்றீங்க?
உன் ப்ரெண்டுக்கு  பேய் பிடிக்கலைன்னு சொல்றேன்!
  வியப்பாய் அவரையே பார்த்தான் முகேஷ்.
அப்ப அவன் இந்த மாதிரி நடந்துக்கணும்?
அவனையே கேப்போமா? இங்கதான் நம்ம பின்னாடி நின்னு முறைச்சிகிட்டு இருக்கான்! ஏம்பா ரவி! ஏன் ஒளிஞ்சிகிட்டு ஒட்டு கேக்கற? இப்படி முன்னாடி வா! சுவாமிஜி கூப்பிட  கண்களில் ஆக்ரோஷத்துடன் அடேய் பாவி! என் திட்டத்தையே கெடுத்திட்டியே? என்று முகேஷ் மீது பாய்ந்தான் ரவி!
                                             மிரட்டும்(22)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, December 27, 2012

ஆருத்ரா தரிசனம்!


மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள். அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள்! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள். காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால்-ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள்.

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து  வருகிறார்கள்பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
அஸ்வினி நட்சத்திரம் முதல் புனர்பூசம் வரையில் திருவாதிரை உற்சவ காலமாகும். அதிகாலையில் எழுந்து குளம், ஆறு போன்ற நீர்நிலையில் குளிப்பது திருவாதிரை விரதத்தின் முக்கிய அம்சம். அசுவினியன்று அருணன் உதிக்குமுன், பரணியன்று வெள்ளி தோன்றுமுன், கார்த்திகையன்று காகம் கரையும்முன், மிருக சீரிஷத்தன்று மக்கள் உணருமுன் குளிக்கவேண்டும் என்பது திருவாதிரை ஸ்நானத்தின் முறை. மிதமான குளிரும் இதமான காற்றும் வீசும் சுகமான விடியற்காலை பொழுதில் இளம் பெண்களின் பாடல் ஒலி அலை அலையென மிதந்து வரும் நீர் நிலையில் அவர்கள் குதித்து கும்மாளமிட்டுக் குளிக்கும் ஓசை, செப்புப் பானையின் வாயை மூடிவிட்டுத் தட்டுவது போல் அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் காதுகளில் எதிரொலிக்கும்.
வீட்டுப் பெண்களும் மருமகள்களும் நீரில் தயிர் கடைவது போன்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள். படிக்கட்டில் நெருப்பின் அருகே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கிழவிமார்கள், தாம் மூட்டியிருக்கும் தீயின் சிறிய ஒளியில் இதைக் கண்டு இன்புறுவார்கள். குளித்துக் கரையேறிய இளம்பெண்கள், நெருப்பின் அருகில் குளிர் காய வரும்போது கிழவிகள் கடுங்குளிர்! தாங்கமுடியவில்லை! எல்லாவற்றையும் தாங்கும் பூமி மாதா போல் பெண்களும் பொறுமை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பார்கள். குளித்து முடித்தாகிவிட்டதா? வெள்ளாவியில் இட்டு வெளுத்த ஆடையை அணிந்துகொண்டு சாந்து, சந்தனம், மஞ்சள் பொட்டு, மை இவற்றை அணிந்து தச புஷ்பம் (பத்துப் பூக்கள்) சூடிய பிறகு கூட்டம் கூட்டமாக அவர்கள் பாடிக்கொண்டு வீடு திரும்புவார்கள்.

சிறு குளத்தில் துடி பரவியது; சிறு குன்றில் வெயில் பரவியது; வயலில் பசு பரவியது-உணர் உணர் என் குட்டிமாயே என்ற பொருள் கொண்ட அவர்களது பாட்டு சோம்பலால் தூங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை எழுப்புவதற்காக இருக்கலாம். அல்லது மகா மாயை தேவியைப் பற்றி உணர்த்துவதாக இருக்கலாம். திருவாதிரை நோன்பன்று அரிசி சேர்க்காத எல்லா வகை தின்பண்டங்களும் தயாராகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமாகக் கிடைக்கும் கிழங்குகளைக் கொண்டு செய்யும் ஒருவித கூட்டு, கூவக்கிழங்கு மாவினால் செய்த களி, இளநீர் இலை முக்கிய இடம்பெறும்.
அக்காலத்திலும் திருவாதிரை நட்சித்திரம் அறுபது நாழிகைக்குள் நூற்றெட்டு வெற்றிலை சாப்பிட வேண்டும் என்பது சுமங்கலிகளுக்கு முக்கியமான ஒரு சடங்காக இருந்தது. விளக்கை சாட்சியாக வைத்துக்கொண்டு அதன் எதிரில் கையில் பிடித்துக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் சிவனை எண்ணிக்கொண்டு நூற்றெட்டு வெற்றிலை சாப்பிடத் தொடங்குவார்கள். திருவாதிரை நட்சத்திரம் போல் அமைப்பு உள்ள கொடுவேலிப் பூக்கள் மார்கழியில் எங்கும் பூத்திருப்பதை கேரளாவில் காணலாம். இதை பாதிராப் பூ(நடு இரவுப் பூ) என்பார்கள் திருவாதிரை நட்சத்திரம் உச்சியை அடைந்துவிட்டது என்று அறிந்தவுடன் பாதிராப் பூ சூடுவார்கள் ஆருத்ரா நட்சத்திரத்தை நோக்கிப் பூக்களை அர்ப்பணம் செய்து பின்னர் வட்டமாக அமர்ந்து கைதட்டி விளையாடுவார்கள். திருவாதிரையின் பெருமையைப் பறைசாற்றும் பக்திப்பாடல்களை பாடுவார்கள். நிலவும் நிழலும் இன்பமாக இணைந்த முற்றத்தில் பெண்கள் மட்டும் விழித்திருப்பார்கள்.


தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம். சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார். காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.
இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது நம்பிக்கை.
நன்றி தினமலர்                                                                 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...