Friday, November 18, 2011

கட்டண உயர்வுகள்! காலத்தின் கட்டாயம்!

கட்டண உயர்வுகள்! காலத்தின் கட்டாயம்!

தமிழகத்தில் பேருந்து கட்டணமும் பால்விலையும் அதிரடியாக நேற்று உயர்த்தப்பட்டன விரைவில் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. முதலில் இது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. நேற்றைய பதிவிலும் இதையே குறிப்பிட்டேன். ஆனால் சற்று யோசித்து பார்க்கும் போது இது காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது.
    இந்த உயர்வை வேண்டுமானால் சிறிது குறைத்துக் கொள்ளலாமே தவிர முழுவதுமாக திரும்பி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. கடைசியாக 2001ம் ஆண்டு பஸ் கட்டணங்களை ஏற்றியுள்ளார்கள் இப்போது 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்கும் நிலையில் கட்டண உயர்வு சரி என்றே படுகிறது. 2001ல் தங்கம் சவரன் 4000ரூபாய் விற்றது இன்று அது 22ஆயிரம் ரூபாய்க்கு வந்து விட்டது. ஆனால் தங்கத்தின் தேவை குறைந்தபாடில்லை!இன்று இவ்வளவு ரூபாய் விற்கிறதே என்று யாரும் போராட்டம் செய்யவில்லை! வாங்க மாட்டோம் என்று கூறவில்லை! அதே சமயம் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் விலையும் இந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் ரூபாயின் வீழ்ச்சி! தவறான பொருளாதாரக் கொள்கையில் பணத்தின் மதிப்பு வீழ்ந்து விட்டது.
   இன்று 1000 ரூபாய் என்பது சாதாரணத் தொகையாக மாறிவிட்டது. கூலி தொழிலாளர்கள் கூட ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்த வருமானங்களை வைத்து பார்க்கும் போது பஸ்கட்டண உயர்வு என்பது தாங்க முடியாதது இல்லை!.
  திராவிடமுன்னேற்றகழக அரசு மைனாரிட்டியாகவும் மக்கள் விரோதத்தை சம்பாதித்து கொள்வதை தவிர்த்ததாலும் கடந்த ஆட்சியில் இந்த கட்டணங்களில் கை வைக்கவில்லை! இலவசங்கள் பல கொடுத்து தமிழக பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிட்டது முந்தைய அரசு. இந்த அரசும் பல்வேறு இலவசங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது.
   இதற்கெல்லாம் வருமானம் எங்கிருந்து வரும் ஏற்கனவே கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழகம் மேலும் கடன்களை வாங்க முன் வந்தாலும் கொடுப்பது யார்? இதனால்தான் மக்கள் தலையில் கை வைத்துள்ளது அரசு இதர மாநிலங்களோடு ஒப்பிட்டுபார்க்கும் போதும் இந்த கட்டணம் நம் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. ஒப்பிட்டு பேசுதல் என்பது யார் உயர்த்தினாலும் பேசுவதுதான் அதையே இப்போதைய முதல்வரும் செய்துள்ளார். இருந்தாலும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதில் பேர் பெற்ற முதல்வர் துணிந்து இந்த முடிவை எடுத்துள்ளது மக்கள் மீது அவருக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்கள் முதலில் தூற்றினாலும் பின்னர் மறந்து விடுவார்கள்! அடுத்த தேர்தல் அருகில் இல்லை போதுமான மெஜாரிட்டி உள்ளது போன்றவையும் முதல்வர் இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்த காரணிகள்.
   பால் விலையும் கணிசமாக உயர்த்தியுள்ளார்! கொள்முதல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தியவர் விற்பனை விலையை 6.25 உயர்த்தியுள்ளார்.தனியார் பால்நிறுவனங்களின் விலையோடு ஒப்பிடும் போது இது குறைவுதான். ஆனாலும் ஏதோ பிரமாண்டவிலை உயர்வு போல தோன்றுகிறது.
    விலைவாசி கூடியுள்ள இந்த காலத்தில் அத்தியாவசிய பொருளான பால் விலை ஏற்றம் சற்று நடுத்தர மக்களை பாதிக்கும்தான்! ஆனாலும் இதை மக்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் ஓசியில் பல பொருள்களை அனுபவிக்க ஆசைப்பட்ட மக்கள் விலைவாசியையும் தாங்கித் தானே ஆக வேண்டும்!
 இன்னும் சொல்லப் போனால் சென்ற ஆட்சியிலேயே பஸ்கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுவிட்டது. டீலக்ஸ் சாய்தளப் பேருந்து என்று பல்வேறு வகையில் மாநகர பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து விட்டன. எனவே இந்த கட்டண உயர்வு மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது அரசையும் பாதிக்காது இது காலத்தின் கட்டாயம் எல்லா பொருட்களும் விலை ஏறுவது போலத்தான் இதுவும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
  எதிர் கட்சிகள் ஆர்பாட்டங்கள் செய்யலாம் குறைக்கவேண்டும் என்று கூவல் விடுக்கலாம்! ஆனாலும் இது தவிர்க்க முடியாதது என்று அவர்கள்மனசாட்சிக்கும் தெரியும் ஆனால் அரசியல் பிழைக்க போடும் நாடகம் அவர்கள் நடத்தும் போராட்டங்கள் என்று மக்கள் உணரவேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

2 comments:

  1. நீங்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete
  2. yes sir...but can any body bear such a hike in sudden?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...