Tuesday, November 29, 2011

தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம்

சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள்.

கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான கனவு- நம்பும்படியாக இல்லை" என்று விமர்சிக்கிறார்கள். ஒரு சிலர் "ஒரு மாற்று அரசியலுக்கான தாகம் இளைஞர்கள் மத்தியில இருக்கு. அந்த தாகமும் விரக்தியும் ஒட்டுமொத்தமா வெளிப்படும்போது இந்த கற்பன ஒன்னும் அதீதமா தெரியில" என்று வாதாடுகிறார்கள்.

இந்த இயக்கத்திற்கு வேண்டா வெறுப்பாக விளம்பர சேவை செய்யும் அமலன்- அவர் மனைவி தருணா - இவர்களைச் சுற்றித்தான் நகர்கிறது கதை. நீண்ட நாட்களாக குழந்தைக்கு ஏங்கி பின் குழந்தை பிறந்ததும் தருணா சந்திக்கும் மனப்போராட்டம் - பின்னணியில் தனி இயக்கத்தின் களப்போராட்டம் - இதுதான் இந்த நாவலின் இரண்டு முகங்கள். இதில் தருணா அமலன் கதை உண்மைச்சம்பவம். தனி இயக்கம் கற்பனை.

நாவல் பற்றி துளிச் செய்திகள்:

1. முதல் முறையாக ஒரு நாவலுக்கு முன்னோட்டப் பாடல் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தோடு சி.டி. இணைக்கப்பட்டிருக்கிறது.

2. இந்த முன்னோட்டப் பாடலுக்கு வந்த முதல் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வாழ்த்து. கபிலனை தொலைபேசியில் அழைத்து "ரொம்ப நல்லா இருந்துச்சு கண்ணா" என்று மனமார வாழ்த்தியிருக்கிறார்

3. தருணாவும் அமலனும் தங்கள் அனுபவங்களை எழுதிக்கொள்ளும் slambook-ஆக முழு நாவலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

4. கதையில் வரும் தருணா ஓவியத்தில் நாட்டமுடையவள். அவள் வரைவதுபோல கதையோடு இழைந்த அவள் ஓவியங்களைப் புத்தகமெங்கும் காண முடிகிறது.

யாரும் அதிகம் பகிர்ந்துகொள்ளாத ஒருவிதமன அழுத்தத்திற்கான விழிப்புணர்ச்சியாக இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்பது கபிலனின் எண்ணம். அந்த எண்ணத்தைத் தாண்டி இதில் வரும் அரசியல் பரிசோதனைகளும் சில ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டுமெனத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

www.uyirsol.com என்ற தளத்தில் புத்தக விற்பனை தொடர்பான தகவல்களை பெறலாம்.
நன்றி தட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...