இயற்கையை நேசித்த ஆப்பிரிக்க பறவை

’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, சுத்தமான காற்று போன்றவை கிடைக்கின்றன. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’ இவை சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயின் சொற்கள். இயற்கையை நேசித்து மரங்களின் அன்னையாக வாழ்ந்த வங்காரி மாத்தாய் கடந்த ஞாயிறன்று மரணமடைந்து விட்டார் என்ற செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சிகரமானதுதான்.

மரங்களின் அன்னை

தான் வாய்ச் சொல் வீரர் அல்ல செயல் வீரர் என்பதை அநேக இடங்களில் நிரூபித்துக்காட்டியவர் வங்காரி. இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிக்கப்படுவதால் பூமியின் வெப்பம் உயர்ந்து, துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் எண்ணற்ற நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. இதனை தடுப்பது குறித்து உலக நாடுகள் இப்பொழுதுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த பசுமைப்பட்டை இயக்கம் 3 கோடி மரங்களை நட்டு வளர்த்துள்ளது.

இயற்கையின் பறவை

வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது. இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.

1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு

வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.

கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல் பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.

அரசுக்கு எதிரான போராட்டம்

அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள். 1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற வாங்கரிக்கு அந்த மாநாட்டில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதை வங்காரி புரிந்துகொண்டார்.

பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்து 1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார். 2002-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.

சுற்றுச்சூழலுக்கான நோபல்பரிசு

2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய். கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வங்காரி மாத்தாய், கடந்த ஞாயிறன்று செப்டம்பர் 25- ம் நாள் தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் மண்ணுலக வாழ்வை விட்டு பிரிந்தார். ஆப்பிரிக்காவில், மரங்களின் அன்னை என போற்றப்பட்டு வந்த வங்காரி மாத்தாயின் மரணம் உலகில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்காரியின் உடல் மரித்து மண்ணுக்குள் சென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் விதையாய் மாறி விருட்சமாய் வளர்ந்து நிற்கும் என்பது உண்மை.

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. இப்படியானவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!