Tuesday, October 18, 2011

உள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்!


உள்ளாட்சித் தேர்தலும்  தொடரும் வன்முறைகளும்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்த நிலையில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிகவும், திமுகவும் இன்னும் பிறகட்சிகளும் முறைகேடுகள் நடந்து விட்டதாக புலம்பி வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் பாமக ராமதாஸ் தமிழக தேர்தல் ஆணையம் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.
  இதில் திமுகவை நினைத்தால் தான் சிரிப்பாக வருகிறது. ஒரு முக்கிய எதிர்கட்சியாக இருந்தும் இந்த கட்சி சார்பாக போட்டியிட பலரும் முன்வரவில்லை! சீட் வாங்கிய சிலரோ மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களுக்குத்துணையாக பிரச்சாரம் செய்ய சென்ற 5 ஆண்டுகளில் பதவி வகித்தவர்கள் முன் வரவில்லை! ஏன்? மக்களிடம் பயம் தான் காரணம்! தன் நிலையை மட்டும் உயர்த்திக் கொண்ட இவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றித் தரவில்லை என்பதுதான் பிரச்சாரத்திற்கு வராததற்கு காரணம்.
   இன்னும் சிலர் கட்சிக்காக மாடாக உழைத்தவர்கள்! அவர்களை ஆட்சியில் இருந்த போது கண்டு கொள்ளாத திமுக இன்று போட்டியிட ஆளில்லாததால் அவர்களை கட்டாயப்படுத்தி சீட் கொடுத்து போட்டியிட வைத்துள்ளது. ஆனால் கட்சி சார்பாக செலவுகளுக்கு கணிசமாக வழங்கும் தொகையைத் தரவில்லை! இதனால் கைப்பணம் செலவழித்து தோற்க உடன்பிறப்புகளுக்கு மனமில்லை! அவர்கள் பிரச்சாரம் பலகிராமங்களுக்கு சென்றடையவே இல்லை!
  இப்படித்தான் கூட்டணியிலிருந்து திடீரென கழற்றிவிடப்பட்ட தேமுதிக வின் நிலையும் பல இடங்களில் போட்டியிட ஆளில்லாது ஒப்புக்கு சிலருக்கு சீட் தந்து போட்டியிட வைத்துள்ளது. மற்றகட்சிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை!.
 இப்படி பலமான ஆளுங்கட்சி! பலவீனமான எதிர்கட்சி வேட்பாளர்கள் அதுவும் பல முனைப் போட்டி எனில் அது ஆளுங்கட்சிக்கு சாதகமான விஷயம்! இப்படி சாதகமான சூழலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்யவேண்டிய அவசியம் என்ன? ஆனால் வாக்குச் சாவடிகளை கைப்ப்ற்றிக் கொண்டதாகவும் கள்ள ஓட்டு போட்டதாகவும் திமுகவும் பிறகட்சிகளும் புகார் தெரிவித்து உள்ளன.
   ஏதோ ஒன்றிரண்டு வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம்! அதைவைத்து இந்த தேர்தல் முறைகேடாக நடந்தது என்று சொல்வதற்கில்லை! திமுகதான் தேர்தல் முறைகேடுகளை முதலில் துவக்கிவைத்தது. சென்ற உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்று மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவ்வளவு அட்டூழியங்கள் அப்போது அரங்கேறின. அதோடு இன்றைய தேர்தலை ஒப்பிடும்போது குறைவான அளவிலேயே முறைகேடுகள் நடந்துள்ளன. அதற்காக அதிமுக ஒழுக்கமான கட்சி என்று சொல்லவில்லை!
   தமிழகத்தில் இன்று துட்டுக்கு ஓட்டு கலாச்சாரம் பரவிவிட்டது. இதனால்தான் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வீடுகளில் எழுதிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பினர் காலில் விழுந்து ஒட்டை விற்காதீர்கள் என்று கேட்குமளவிற்கு தமிழக மக்கள் தரம் தாழ்ந்து போயுள்ளனர். இதற்கும் அச்சாரம் வைத்தது திமுகவினர்தான். இப்படி பலவற்றிர்கு முன்னுதாரனமாக இருந்துவிட்டு இன்று அதிகாரம் போனதும் ஐயையோ! அராஜகம் நடக்கிறதே கேட்பாரில்லையா! என்று புலம்புவது கேலிக்கூத்தாக உள்ளது.
  வாக்களித்த திமுக தலைவர் எல்லோரும் எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று சொல்வார்கள்! அதையே நானும் சொல்கிறேன்! எங்கள் கட்சிக்கு வெற்றிவாய்ப்பிருக்கிறது என்று மழுப்பலாக பதில் சொல்லி இருப்பதிலேயே அவர்கள் அவநம்பிக்கை தெரிய வருகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூட திராணியில்லாது போயுள்ளது திமுக. குடும்ப அரசியல் செய்து உண்மையான தொண்டர்களை மதிக்காது போனமையே இதற்கு காரணம்.
    எப்பொழுதும் உள்ளாட்சி தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு சாதக நிலையே ஏற்படும்! ஆனால் இந்த தேர்தல் பலமுனைப் போட்டியால் எந்த அலைவீசுகிறது என்றே அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆளுங்கட்சியும் சற்றே சிந்தித்து தவறு செய்யும் தொண்டர்களை நல்வழிப் படுத்திட முனைய வேண்டும்! அராஜகத்தால் வரும் வெற்றி நிலையானதல்ல! என்று அவர்கள் உணரவேண்டும்.
    எதிர்கட்சிகளின் புகார்களை உதாசீனப்படுத்தாது தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் செயல்பட வேண்டும் அது ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடு நிலையுடன் செயல் பட வேண்டும். அப்போது தான் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
  அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து முதற்கட்ட வாக்குப் பதிவில் நடந்த சில முறைகேடுகளும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கவனக்குறைவான போக்குகளை அரசு கலையவேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேர்தல்களின் மீது நம்பிக்கை வரும் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கையும் சதவீதமும் கூடும்.
  மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசு அராஜகத்தை நாட வேண்டிய அவசியம் ஏன்? தலைவி இந்த் அராஜகம் நடப்பதை விரும்பவில்லை சில அமைச்சர்களும் தொண்டர்களும் தான் இப்படி நடந்து கொள்வதாகவும் ஒரு செய்தி படித்தேன். இது நிஜம் எனில் தலைவி அவர்களை கண்டிக்க வேண்டும். ஒருவன் தவறு செய்தால் அதே தவறை பின் வருபவனும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதை தற்போதைய அரசு உணரவேண்டும்.
  திமுகவும் புலம்புவதைவிட்டு அன்று நாம் செய்தது இன்று நமக்கே வந்தது என்று உணர்ந்து இனியாவது இந்த வன்முறை போக்கை கைவிட்டு துணிச்சலாக அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும்.
வாக்குச் சாவடிகள் வன்முறை நிலையங்களாக மாறாத வரை மக்களின் வாக்கு செல்வாக்கு நிறைந்ததாகவே இருக்கும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...