ஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே போராட்டம்?


புதுடில்லி: ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே நடத்தவுள்ள போராட்டத்துக்கு, நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. வரும் 16ம் தேதி, ஹசாரே மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம், திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
"
ஊழலை ஒழிக்க வகை செய்யும், பலமான லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
எனினும், இது தொடர்பாக, ஹசாரே தலைமையிலான குழுவினர் தயார் செய்த வரைவு மசோதாவை, மத்திய அரசு புறக்கணித்து விட்டது. மத்திய அரசு சார்பில் தயார் செய்யப்பட்ட வரைவு மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் பல குறைகள் இருப்பதாக, ஹசாரே ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, இந்த மசோதா வரம்பிற்குள் வராத வகையில், பிரதமர் பதவி வகிப்போருக்கும், நீதித் துறையில் உயர் பதவி வகிப்போருக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், பார்லிமென்டுக்குள் எம்.பி.,க்களின் நடத்தையும், இந்த மசோதா வரம்பிற்குள் வராது என, மத்திய அரசு, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
மத்திய அரசின் இந்த பிடிவாதம் காரணமாக, வரும் 16ம் தேதி, டில்லியில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கப் போவதாக, ஹசாரே அறிவித்துள்ளார். "என் உயிரை விட, குறிக்கோள் தான் பெரிது. நாட்டிலிருந்து ஊழலை அடியோடு விரட்டியடிக்க, துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்' என, அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகள், ஊழலுக்கு எதிரான மனப்பான்மை உடையவர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.
மும்பையில், அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, மதிய உணவு டெலிவரி செய்யும் பணியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட "டப்பாவாலாக்கள்' ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளை, அலுவலகங்களில் வேலை பார்ப்போருக்கு, இவர்கள், சரியான நேரத்தில் டெலிவரி செய்வர். இவர்களால், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைகின்றனர். ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, மும்பை டப்பாவாலா சங்கம் தெரிவித்துள்ளது.
மும்பை ஜீவன் டப்பாவாலா சங்கத் தலைவர் ÷ஷாபன் கூறுகையில்,"கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக, ஹசாரே துவக்கப் போகும் போராட்டத்துக்கு, எங்கள் முழு ஆதரவையும் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி, வரும் 16ம் தேதி, யாருக்கும், நாங்கள் உணவு டெலிவரி செய்யப்போவது இல்லை. எங்கள் முடிவை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வர் என நம்புகிறோம்' என்றார்.
மும்பை மட்டுமல்லாது டில்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே, ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஊழலுக்கு எதிராக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த புது எழுச்சியால், ஹசாரேயின் போராட்டம், திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 நன்றி தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!