ஆவி அழைக்கிறது! பகுதி 14

ஆவி அழைக்கிறது!
                      பகுதி 14
                                எழுதுபவர் “பிசாசு”

முன்கதை சுருக்கம்| ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனது பழமையான பங்களாவை புதுப்பிக்க முயல்கிறார் தனவேல்முதலியார். ஆனால் அதற்குத் தடையாக உள்ளது அதில் வாழும் ‘பொன்னம்மா’ எனும் ஆவி. ஒரு நாளிரவில் தனவேலின் மகள் நிதிலாவை அந்த ஆவி அழைக்கிறது | இனி |
      மகளே வா! மகளே! உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன் வா மகளே என்று அந்த உருவம் அழைக்க நிதிலா அறையிலிருந்து கிளம்பி அதன் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்று நேரம் பிரம்மித்து நின்ற தனவேல், நிதிலா நில்லு போகாதே! என்று குரல் கொடுத்தார். ஆனால் அது சற்றும் அவர் மகளின் காதில் விழுந்ததாய் தெரியவில்லை.அவள் பாட்டுக்கு அந்த உருவத்தின் பின்னால் நடந்து சென்றுகொண்டிருந்தாள் ஏதோ வசியத்திற்கு கட்டுப்பட்ட மாதிரி.
   தனவேல் பின்னாடியே நில்லு நிதிலா நில்லு போகாதே! என்று குரல் கொடுத்தபடி வர அந்த உருவம் சட்டென நின்று அவரை நோக்கி முறைத்தது. தனவேல் விதிர்விதிர்த்துப்போனார். அவர் நா குழறியது பொ.. பொன்ன.. பொன்னம்மா! அவ அவளை ஒன்னும் பண்ணிடாதே! என்னை என்ன வேணுமின்னாலும் பண்ணு! அவளை விட்டுடு! என்று புலம்பியபடி அவர்களை தொடர்ந்தார்.
   அந்த உருவம் அவருக்கு மனம் இறங்குவதாய் இல்லை. அது பாட்டுக்கு செல்ல செல்ல நிதிலா அதை தொடர்ந்தாள். தனவேல் அவர்களை தொடர்ந்தார்.அந்த உருவம் தனவேலின் பங்களா முன் வந்து நின்று திரும்பிப் பார்த்தது.
   அந்த உருவத்தின் நெற்றியில் எட்டணா சைசுக்கு குங்குமபொட்டு,மஞ்சள் பூசிய மங்கல கரமான முகம்சுங்குடிச்சேலை அணிந்திருந்த அந்த உருவம் இப்பொழுது மிகவும் சாந்தமாக இருந்தது. மகளே நிதிலா இப்படி வாம்மா! என்று அது அழைக்க நிதிலா அப்படியே நின்றாள்.
   “ஏன் மகளே அப்படியே நின்னுட்டே? கிட்ட வா மகளே என்று அந்த உருவம் மீண்டும் அழைக்க, “நீ யார் என்னை மகளேன்னு கூப்பிடறதுக்கு? நிதிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.
   தாயைத்தவிர வேற யாரு அப்படி கூப்பிட முடியும் மகளே? அந்த உருவம் திருப்பி கேட்க நிதிலா அதிர்ந்துதான் போனாள்.
  என்னது தாயா?
  ஆம் மகளே என்னை நல்லா பாரு உன்னை மாதிரியே இல்லை?
 நிதிலா அந்த உருவத்திற்கு தன்னை பொருத்திப்பார்த்தாள். அப்படியே பொருந்தி வருவதை உணர்ந்து நீ.. நீங்க என்னோட அம்மாவா? எப்படி? என்னால நம்ப முடியலையே? ஆனா...

   நான் சொல்லறேன் மகளே ! என்கதையை! அப்புறம் உன் அப்பனுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமுன்னு நீயே முடிவு செய். என்ற அந்த உருவம் கதை சொல்ல ஆரம்பித்தது.
   இந்த நேரத்தில் வாசகர்களுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறோம். தனவேல் ஏற்கனவே வேலைக்காரி பொன்னம்மாவை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்டார் என்பதை சில அத்தியாயங்கள் முன் சொல்லியிருந்தோம் அதன் பின் நடந்ததை இப்போது பார்ப்போம்.
 தனவேல் பொன்னம்மாளை கர்ப்பமாக்கி விட்டு சொந்த ஊருக்குச் சென்று பெற்றோர் சொல்லை மீற முடியாமல் அவர்கள் பார்த்து வைத்திருந்த பணக்கார பெண்ணை மணந்துகொண்டார்.
   அந்த பெண் ஒரு காச நோயாளி! அவளைக் கட்ட யாரும் முன் வராத நிலையில் தனவேலின் தந்தை அந்த பெண்ணுக்கிருந்த சொத்தை மனதில் கொண்டு தன் மகனுக்கு அவளை திருமணம் செய்து வைத்தார். சதா சர்வ காலமும் இருமிக்கிடந்த அவளை தனவேலுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கிட்ட நெருங்காமலே இருந்தார். வீட்டு வேலைகள் எதுவும் செய்ய முடியாமல் கிடந்த அவளை அவளது மாமியாருக்கும் பிடிக்கவில்லை.மாமியாரும் பழித்துக் கொட்ட புருசனின் ஆதரவும் இல்லாது போகவே நோய் முற்றியது.
  முடிவில் அந்த மருமகள் யாருக்கும் தொல்லைதராது ஒரே வருடத்தில் இறந்து போனாள்.தனவேலின் பெற்றோர் தனவேலுக்கு மீண்டும் பெண் தேடத் தொடங்கினர். அப்போது தனவேலு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன்னுடைய காதல் லீலையை சொல்ல அவர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
“எங்களுக்கு மகனாக எப்படியடா நீ பிறந்தாய்? பெண்பாவம் சும்மா விடுமா? ஒருவளை கர்ப்பமாக்கி அடுத்தவளை மணந்தாயே? உன்னை பெற நாங்கள் என்ன பாவம் செய்து தொலைத்தோமோ?போனது போகட்டும் நீ போய் அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்து என்று சொன்னார்கள்.
   ஆழ்வார் குறிச்சிக்கு வந்த தனவேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.குழந்தையை பெற்றெடுத்த பொன்னம்மா ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவமானம் தாங்காமல் விஷம் குடித்து இறந்து போயிருந்தாள். அவள் பெற்றெடுத்த ஒரே குழந்தை அவள் தம்பி கந்தனிடம் வளர்ந்து கொண்டிருந்தது.
   ஒரே வயது நிறைந்த அந்த பெண்குழந்தையை அவன் அன்போடு வளர்த்து வந்தான். தனவேல் தான் ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமாகி விட்டோம் என்ற உறுத்தலுடன் தன்னுடைய வாரிசையாவாது தானே வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
   குழந்தையை வளர்த்து வந்த பொன்னம்மாளின் தம்பி கந்தனிடம் சென்று ரகசியமாக மன்னிப்பு கேட்டு குழந்தையை தறுமாறு கேட்டார். கந்தன் பிடிவாதமாய் மறுத்தான் தன் அக்காவை சீரழித்த உனக்கு மன்னிப்பே இல்லை! இது அப்பனில்லா குழந்தையாக வளருமே தவிர உன் குழந்தையாக வளராது என்று சவால் விடுத்தான்.
  தனவேலுக்கு ஆத்திரம் அளவுக்கு அதிகமாக வந்தது. தன் குழந்தையை தர மறுக்க நீ யார்? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சூளுரைத்து விட்டு கிளம்பினார்.
  அடுத்த வாரத்தில் ஒருநாள் கந்தன் மர்மமாக பாம்பு கடித்து இறந்து போனதாக தகவல் வர ஊரார் அந்த குழந்தையை என்ன செய்வது என்று தவிக்க தனவேல் அது சமயம் ஒன்றும் அறியாதவர் போல வந்து தானே குழந்தையை எடுத்துச் சென்று வளர்ப்பதாக கூறினார்.
  ஊர் மக்கள் அவரை புகழ்ந்து குழந்தையை கொடுத்து அனுப்பினர். அந்த குழந்தைதான் நிதிலா. அவர் குழந்தையை வளர்ப்பதற்காக மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன்னால் இரண்டு பெண்கள் கெட்டது போது இன்னும் ஒரு பெண் அவதிப் பட வேண்டாம் என்றிருந்துவிட்டார்.
  அவரால்தான் கந்தன் இறந்தான். பொன்னம்மா இறந்தாள். ஆனால் அதற்கு பிராயச்சித்தமாக தன் மகளை நல்ல முறையில் வளர்த்து விட்டார்.
  அந்த பெண்ணுருவம் கண்களில் கண்ணீரோடு கதை சொல்லி முடிக்க நிதிலாவுக்குள் சொல்ல முடியாத அளவுக்கு ஏதேதோ உணர்வுகள் தன் தந்தை இப்படி கொலைக்காரராக இருப்பார் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. முதல் முதலாய் தந்தை மீது அவளுக்கு வெறுப்பு வந்தது.
  அருகில் நின்று கொண்டிருந்த தந்தையை கோபத்தோடு நோக்கினாள் அப்போது அங்கே பயங்கர சிரிப்பொலி கேட்டது. காற்று பலமாக வீசியது ஜன்னல்கள் அடித்து கொள்ள ஒருவித நறுமணம் அறைக்குள் வீசியது.
  தனவேலு வாடா தனவேலு உனக்காக எத்தனை நாளா காத்திட்டு கிடக்கிறது?என்று ஆன் உருவம் ஒன்று ஆக்ரோஷத்துடன் அழைக்க முகம் வெளிற வாய் குழற இ.. இல்ல என்ன ஒண்ணும் செஞ்சிடாதே என்று தனவேல் ஓடத் துவங்கினார் அந்த உருவம் விடுவதாய் தெரியவில்லை.
                          அழைக்கும் (14)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!
கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!