Wednesday, August 31, 2011

அன்பை அருளும் ஆனைமுகத்தோன்

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.

எளிமையின் நாயகன்

விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகரின் தோற்றம்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.

வடதிசையில் இருந்த இறைவன்

காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.

இருபத்தியோருபேறுகள்

விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோம்.

நன்றி தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி


கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி

சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 27வது கிலோ மீட்டரில் காரனோடை பாலத்தை அடுத்திருப்பது பஞ்சேஷ்டி. பஞ்சேஷ்டிக்கு மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகு தலமான நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலம் குஸஸ்தலை நதிக்கும் ஆரண்ய நதிக்கும் இடையில் அமைந்த புண்யாரண்ய க்ஷேத்திரமாகும். முற்காலத்தில் நெல்லி மரங்கள் அடர்ந்து நெல்லிவனமாக இருந்த தலம் வாலி பூஜித்தமையால் வாலி வனம் என வழங்கப் பட்டது
    இராஜராஜா சோழன் ஆட்சிக் காலத்தில் இது இகணைப்பாக்கம் என்று வழங்கப்பட்டது என்பது இவ்வூர் கிராம தேவதை கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிகிறோம். இகணன் என்றால் பிரம்மன்.இவ்வாலயத்தில் உள்ள விநாயகரை பிரம்மன் வழிபட்டகாரணமாக இகணைப் பாக்கம் என்று பெயர் பெற்றது ஒரு ஊர் வளர்ச்சி அடையும் போது கிராம நத்தமாக அழைக்கப் படும் இடத்தில் குடியிருப்புகள் தோன்றும் அது அவ்வூரின் நத்தம் என்று வழங்கப்படும் அது போல இகணைப்பாக்கத்து வளர்ச்சியில் நத்தம் பெரும் பங்காற்றி மூலப் பெயரான இகணைப்பாக்கம் மறைந்து போனது.
  தல வரலாறு| ஓம் எனும் பிரணவப்பொருள்  தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலசுப்ரமணியன். அவ்வாறு பிரம்மா சிறைபட்ட இடம் ஆண்டார் குப்பம்.பின்னர் பிரம்மனுக்கு பிரணவம் உபதேசமாகி சிருஷ்டித் தொழிலை துவக்கினார். ஆனால் மனம் லயிக்கவில்லை. சிருஷ்டிக்க முடியவில்லை. காரியம் தடைபட கலங்கினார் பிரம்மா. தந்தையின் கவலையறிந்து கை கொடுக்க முன் வந்தார் நாரதர். அங்கே தகப்பனுக்கு உபதேசித்து தகப்பன் சாமி ஆனார் ஷண்முகர். இங்கே பிரம்ம குமாரன் நாரதர், நான்முகனுக்கு ஆலோசனை வழங்கினார்.
           ஐயனே! முழு முதற்கடவுளான கணபதியை மறந்தீர்,காரியம் தடைபட்டது. அவரை வணங்கி படைப்புத் தொழிலை  தொடங்குவீர்! நீர் சிறைபட்ட இடத்திற்கு தென் மேற்கே நெல்லி வனத்தில் உள்ள சிவாலயத்தில் தங்கி கணபதியை குறித்து தவம் செய்வீராக! ஆனைமுகன் அருள் கிடைக்கும் என்று கூறியருளினார்.பிரம்மாவும் நெல்லி வனம் வந்து இங்கே கணபதியை குறித்து தவம் செய்தார். கணபதி காட்சி கொடுத்து பிரம்மனுக்கு காரியசித்தி அளித்தார். அதுமுதல் கணபதியின் நாமம் ஸ்ரீகாரியசித்தி கணபதி ஆகிற்று.பிரம்மனுக்கு சித்தி அளித்த இக்கணபதியை வழிபடுவோர் காரியங்களும் சித்தியாகும் என்ற வரமும் தந்தருளினார் காரியசித்தி கணபதி.
     ஸ்ரீ காரிய சித்தி உருவ அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது.அபூர்வமானது. பொதுவாக கணபதி பீடம் பெருத்து உடல் அகன்று பாசம் அங்குசத்துடன் காணப்படுவார். ஆனால் இங்குள்ள ஸ்ரீகாரிய சித்தி கணபதி அடிப்பீடம் குறுகி இடையில் சற்று அகன்று நுனியில் கூர்மையாகவும் தாமரை மொட்டைப் போல் அமைந்துள்ளது. மேல் வலக்கையில் மழுவையும் மேல் இடக்கையில் ருத்திராட்சமும் கீழ் வலக்கையில் தந்தமும் கீழ் இடக்கையில் மோதகமும் ஏந்தி முக்கண்ணுடன் தாமரை பீடத்தின் மீது அமர்ந்து தொந்தியின்றி காணப்படுகிறார். இத்தகைய தோற்றத்துடன் கணபதி வேறு எங்கும் இல்லை.

திருமணத் தடை பரிகார ஸ்தலம்| ஸ்ரீகாரிய சித்தி கணபதிக்கு ரோஜா மாலை சாற்றி பச்சரிசியும் வெல்லமும் தலா 1கிலோ படைத்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சணை வழிபாடு செய்து சூரை தேங்காய் செலுத்தி வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும்
   இவ்வாலயத்தில் மூலவரான வாலீஸ்வரரரை வழிபட ராகு கேது தோஷங்கள் நீங்கும். முருகரையும் அவர் எதிரே உள்ள மகாவிஷ்ணுவையும் சங்கு தீபம் ஏற்றி தயிர் சாதம் நிவேதனம் செய்து அர்ச்சனை வழிபாடு செய்ய மாமியார் மருமகள் பிரச்சனை நீங்கும்.
  அர்த்தநாரிஸ்வாரராக உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளி பள்ளிகொண்டீஸ்வரரை வழிபாடு செய்வதின் மும்மடங்கு பலன் ஏற்படும்.
   இன்னும் பலச் சிறப்புகள் கொண்ட இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்து சுமார் 70 வருடங்கள் ஆகிவிட்டதால் கிராம மக்களும் ஆலய அர்ச்சகரும் ஆன்மீக அன்பர்களும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பனிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஆலயத்தை நீங்களும் ஒருமுறை தரிசித்து இறைவன் திருப்பணிகளில் ஈடுபட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் பெறுவீராக!
ஆலயம் செல்லும் வழி  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கும்முடி பூண்டி பொன்னேரி வழியாக செல்லும் பேருந்துகளில் பஞ்சேஷ்டி எனும் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து 2கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. பஸ் ஆட்டோ வசதி இல்லை.
பஸ் ரூட் 132,133,131,90, 58சி,113, 112ஏ பி,
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் மாநகர பேருந்துகள் 557,558ஏ,பி,சி,533,536,547,
ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து ஆலயத்திற்கு ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100.

நத்தம் வாருங்கள்! நான்முகனுக்கு அருளிய கணபதியின் பாதம் பணியுங்கள்!வாழ்வில் எல்லா வளமும் பெருங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!


Tuesday, August 30, 2011

நோன்புத் திருநாளின் பெருமைகள்

ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

ஐவகை கடமைகள்

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(ரமலான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

இறைதூதர் அளித்த நாள்

முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும். பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவ்விரண்டு திருவிழாக்களுக்கும் பதிலாக சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளார். அவை குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!, மற்றொன்று ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்! என்று அறிவித்தார்கள்.

நோன்பின் மகிமை

ஒன்றும் இல்லாமல் பட்டினி கிடப்பது வேறு. பசியின் கொடுமையை உணரவேண்டும் என்பதற்காகவும், அகந்தை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயரவேண்டும் என்பதற்காகவுமே ஒருமாத காலம் பசியோடு நோன்பிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமை என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளே ஈகைத் திருநாள். ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை ரமலான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என இறைவனால் வழங்கபட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

தானத்தினால் ஏற்படும் இன்பம்

"ஈதல்' என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர்தாம், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர் என்பதையே வள்ளுவர்

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.” என்று கூறியுள்ளார். இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரும், வழங்குபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வழிகோலும்.

ஈகை கொடுத்தல்

பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

"மனித நேயம்" என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்கச் சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல் நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று! மனம் விரும்பிய உணவை ரசித்து சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஈகையின் கடமை

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் வேண்டிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் ஈதுல் ஃபித்ர் அல்லது ஈகைப்பெருநாள் என அழைக்கப்படுகிறது.
 நன்றி தட்ஸ் தமிழ்!
 டிஸ்கி|   ரமலான் பற்றி யான் யாதும் அறியேன்! எனவே தட்ஸ் தமிழில் படித்த கட்டுரையை இங்கு பதிவிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே! வாக்கிட்டு பிரபலப்படுத்தலாமே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் , கேஸ் ஒரு ஃபாலோஅப் ரிப்போர்ட்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
  

சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்த தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது- மத்திய அரசு

 

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய பேருக்கும் செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது. குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூற முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்.
   டிஸ்கி  எப்படியோ இந்த மூவருக்கும் ஒரு விடியல் தற்காலிகமாக கிடைத்துள்ளது. அது நிரந்தரமாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசை!
நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!


ஃபால்ஸ் வாக்குறுதி! ஜோக்ஸ்

“என் கணவருக்கு தொப்பை விழுந்துட்டுது..”

“பார்த்தா அப்படித் தெரியலையே!”

“ அதான் விழுந்துடுத்துன்னு சொல்றேனே எப்படித் தெரியும்?”
          வி பார்த்தசாரதி

நன்றி குமுதம் 3-12-98

“என்னங்க நம்ம பையன் வேலைக்காரியை இழுத்துகிட்டு ஓடிட்டான்”

“அவனுக்காவது வாய்க்கு ருசியா சாப்பிடற பாக்கியம் கிடைக்கட்டும்!”
               சந்தியூர் ஏ கோவிந்தன்
நன்றி குமுதம் 7-1-99

“குற்றால அருவிகிட்ட கூட்டம் போட்டு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது தப்பா போச்சு!”
  “ஏன்?”
“ஃபால்ஸ் வாக்குறுதின்னு சொல்றாங்க!
                   தஞ்சை தாமு
நன்றி குமுதம் 7-1-99

“உங்க எதிர் வீட்டு கதவு மூடியே கிடக்கே!”
“நான் தான் சொன்னேனே அந்த வீட்ல எல்லோரும் ‘மூடி டைப்’ னு!”
                           இரா. ஆதி
நன்றி குமுதம் 14-1-99

“நான் ‘எள்’ளுன்னா என் பையன் எண்ணையா நிப்பான்”
“ அப்ப உங்க பையன் சொன்னபேச்சை கேக்க மாட்டான்னு சொல்லுங்க!”

நன்றி குமுதம் 14-1-99

“லெட்டர் எழுதிட்டு பின்னால ஏன் கோடு போடுற?”

“பின்கோடு போட்டாத்தான் லெட்டர் ஒழுங்கா போய் சேருமின்னாங்க!”
                               பரத்

“தலைவர் முதுகுல எதோ படை மாதிரி இருக்குதுன்னு டாக்டர்கிட்ட வந்துருக்கார்”

“ ஓகோ இதைத்தான் நேத்து மீட்டிங்ல பேசும்போது எனக்கு பின்னால ஒரு படையே இருக்குன்னாரா?”


“கவலைப்படாதீங்க தலைவரே உங்க வயித்து வலியை உடனே ‘அரெஸ்ட்’ பண்ணிடறேன்”
“அரெஸ்ட்டா? ஏன் டாக்டர் அதுக்கு பதிலா நல்ல தமிழ் வார்த்தை உங்களுக்கு எதுவும் தெரியாதா?
                       வெ.சீதாராமன்.

“உயரம் தாண்டுதலிலே சாதனை பண்ணியிருக்கீங்க! எங்க பயிற்சி எடுத்தீங்க?”
“ஜெயிலில்தான்!!”
                     ஓளவை எஸ் யோகானந்தம்
நன்றி ஆனந்த விகடன்.


டிஸ்கி| சொந்தமா ஜோக் எழுத டைமும் இல்ல மூடும் இல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண பழைய குமுதம் இதழ்களை புரட்டியபோது கண்ணில் பட்டு கிச்சு கிச்சு மூட்டிய ஜோக்ஸ் இது! விநாயக சதுர்த்தி முடியும் வரை வேலைகள் இருப்பதால் சொந்த படைப்புக்களுக்கு விடுமுறை! ஆமாம் பெரிசா எழுதி கிழிச்சிட்ட என்று திட்டுவது காதில் விழுது! ஹிஹி ஒரு சமாளிப்புதான்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்கிட்டு பிரபலப்படுத்தலாமே!

Monday, August 29, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகன் மனுக்களை நாளையே விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்

சென்னை: தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தமூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தது.

இதையடுத்து வேலூர் சிறை மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9ம் தேதி நாள் குறித்துள்ளது. மூவரையும் காக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்ங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், மூன்று பேரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் மனுக்களை தாக்கல் செய்தார்.

அதில், எங்களது கருணை மனுக்களைப் பரிசீலித்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எங்களது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காக மூன்று பேரிடமும் தனித் தனியாக பிரமாணப் பத்திரத்தில் நேற்று சிறைக்குச் சென்று வக்கீல்கள் கையெழுத்து வாங்கினர்.

மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும், ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி இன்னொரு மனுவும் என இரண்டு மனுக்கள் மூன்று பேரின் சார்பிலும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருகிற புதன்கிழமை ரம்ஜான் வருகிறது, வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனவே அதற்குள் அதாவது நாளைக்குள் தடை உத்தரவைப் பெற வக்கீல்கள் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக வக்கீல் சந்திரசேகர் இன்று நீதிபதி பால் வசந்தகுமாரை சந்தித்து அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதாலும், வழக்கின் முக்கியத்துவம், அவசரம் கருதியும், நாளையே மனுக்களை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதை ஏற்ற நீதிபதி பால் வசந்தகுமார், நாளைய மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.

மூ்வர் சார்பிலும் பிரபல வக்கீல் ராம்ஜேத்மலானி ஆஜராவார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவருடன் கூடுதலாக ஹரீஷ் சால்வேயும் ஆஜராகவுள்ளார். இதனால் வழக்குக்குப் பலம் சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சில பிரபல வக்கீல்களும் ஆஜராகவுள்ளனர்

நன்றி தட்ஸ் தமிழ்

டிஸ்கி   ஏதோ நல்லது நடந்தா சரி! நல்லதையே நினைப்போம்!

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர்,

தேனி:மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி விட்ட சம்பவம், சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.பயணிகள் படிப்பதற்காக அரசு பஸ்களில், உலக பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அவற்றை கண்டக்டர், டிரைவர்களும், படித்து அதன்படி நடக்க வேண்டும். பல நேரங்களில் பயணிகளிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை மனதை காயப்படுத்துவதாக உள்ளது.

கன்னியாகுமரி- குமுளி அரசு பஸ், திருநெல்வேலியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணிக்கு,மதுரை மாவட்டம் டி.கள்ளிப்பட்டி வந்தடைந்தது. அங்கு ஏறிய பயணி ஒருவர், தேனிக்கு டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்த போது, அது தவறி வெளியே விழுந்துவிட்டது.

கண்டக்டர் பயணியிடம் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். வேறு பணம் இல்லாத அந்த பயணியோ, கொடுக்கும் போது தவறியதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்,என்றார். மனித நேயத்தை மறந்த அந்த கண்டக்டரோ, பயணியின் உடமைகளை எல்லாம் கீழே தூக்கி வீசிவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டார்.

டிஸ்கி   இப்படியும் சிலர் இருப்பதால் நல்ல ஊழியர்களும் கெட்டப் பெயர் வாங்க வேண்டி வருகிறது   இதை படித்ததும் எனக்கு ஏஜி கார்டினர் எழுதிய ஒரு சிறுகதை பழைய 11ம் வகுப்பு பாடநூலில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது அதிலும் இப்படித்தான் மனித நேயமில்லா நடத்துனர் ஒருவர் பயணிகளை இம்சிப்பார். விரைவில் அந்த கதையை எழுதுகிறேன்.

  நன்றி தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்கிட்டு பிரபலபடுத்தலாமே!

பன்னாட்டுப் பழமொழிகள்!


பன்னாட்டுப் பழமொழிகள்!

மனிதன் பதவியை அலங்கரிக்கிறான்.பதவி மனிதனை அலங்கரிப்பது இல்லை.
          -இத்தாலி

காரியங்கள் தாமாக நடப்பது இல்லை. நடக்கச் செய்ய வேண்டும்.
                              -இங்கிலாந்து.

தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் தேவையானதை நீ விற்பாய்.
                              -செக்கோஸ்லாவாகியா

வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சிலசமயம் இருட்டு சிலசமயம் முழுநிலவு.
                     -போலந்து

கடன் வாங்குவதின் அழகு அதை திருப்பிக் கொடுப்பதில் இருக்கிறது.
                       -ரஷ்யா


இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
                              -வேல்ஸ்

உன் கவுரவம் உன்னுடைய நாக்கின் நுனியில் இருக்கிறது
                                    ஹங்கேரி

சுத்தமான காற்று வைத்தியனை ஏழை ஆக்குகிறது.
                     -டென்மார்க்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களைபகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
 

Sunday, August 28, 2011

ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர்

ஈரோடு: நாடு முழுவதுமாக சில்லரை தட்டுப்பாட்டால், மக்கள் அவதியுறும் நிலையில், ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றித் தருவதன் மூலம், ஓரளவு சில்லரை தட்டுப்பாடு நீங்குகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் முதல், பஸ், ரயில்கள் வரை, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை, பெரிய தகராறாக மாறி விடுகிறது. ஈரோடு கடைகளில், ஒரு ரூபாய் நாணயம் மொய் கவரின் உட்பகுதியில் ஒட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. திருமணம், காது குத்து, சீர் உள்ளிட்ட விசேஷங்களில் மொய் வைக்க, பணத்தை கவரில் வைத்து கொடுப்பது வழக்கம். பலரும், 101 ரூபாய், 201 ரூபாய், 501 ரூபாய்... என, எவ்வளவு தொகை வைத்தாலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதுபோன்ற சமயங்களில், ஒரு ரூபாய் நாணயம் கிடைப்பது அரிதாகி விட்டதால், கவர் தயாரிப்பு நிறுவனங்களே, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, கவரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளன. ஸ்டேஷனரி,பேன்சி, கிப்ட் விற்பனை கடைகளில், இத்தகைய கவர் விற்கப்படுகிறது.

ஈரோடு கடைக்காரர் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காகவே, ஒரு ரூபாய் நாணயம் வைக்கப்பட்ட மொய் கவர், விற்பனைக்கு வந்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, இங்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய சாதாரண கவரை நான்கு ரூபாய்க்கும், பார்டர் வைத்து, குஞ்சம் வைத்த கவரை ஆறு ரூபாய்க்கும் விற்கிறோம். 100 கவர் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கவராக வாங்கினால் ஆறு ரூபாயாக விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

வைரத்தால் ஆன புதிய கிரகம்! விஞ்சானிகள் கண்டு பிடிப்பு

சிட்னி: வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது.

இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம் அல்லது கிரிஸ்டல் போன்ற நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த கிரகமே, இதுவரை நாம் கற்பனை செய்து பார்த்திராக வகையில் வைரம் அல்லது கிரிஸ்டல்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த கிரகம் அந்த பல்ஸாரை சுற்றி வருவதோடு, ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமான முறை தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் உள்ளது. இது 60,000 கி.மீ. விட்டம் (diameter) கொண்டுள்ளது.  
நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! நிரலிகளில் வாக்களித்து பிரபலப்படுத்தலாமே!


என் இனிய பொன் நிலாவே! பகுதி 1


என் இனிய பொன் நிலாவே!

“ப்ரியம்வதா”

பகுதி 1

அந்த அதிகாலை வேலையில் குளித்து விட்டு தலையில் துண்டோடு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்த மதுமிதா, அம்மா காபி! என்று குரல் கொடுத்தாள்.
    கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்மணி தலையை நிமிரவிம் கூடச் செய்யாமல் கோலத்தில் மும்முரமாக இருக்க அம்மா! காபி கேட்டேன் என்று இரண்டாவது முறையாக குரல் கொடுத்தாள் மதுமிதா.
    ஏண்டி மணி என்ன இப்ப அஞ்சறை தான் ஆகுது! பல் கூட தேய்க்காம தலைவிரி கோலமா வந்து நின்னு காபி கேக்கறியா?பால் இன்னும் வரலை. வந்தப்புறம் தான் காபி கீபியெல்லாம் முதல்ல போய் பல்லை தேய்! என்றாள் மதுமிதாவின் தாய் அன்ன பூரணி.
  “போம்மா காலம் கார்த்தால பல்ல தேச்சிகிட்டு! முதல்ல காபி அப்புறம் ஹாயா பேப்பர் படிச்சிட்டு நிதானமா குளிக்கிறப்ப பல்லு தேய்க்க கூடாதா?” சும்மா அதிகாரம் பண்ணாதம்மா! போ போய் காபி கலந்துவா இதோ பால் வந்துடுச்சு பார் என்றாள் வாசலில் வந்து நிற்கும் பால்காரணை காட்டிய மதுமிதா.
    “எத்தனை நாளைக்கு நீ இன்னும் இப்படி பல் தேய்க்காத காபி குடிக்க போறேன்னு நானும் தான் பாக்கறேன்” என்று முகத்தை நொடித்தபடி காபி தயாரிக்கச் சென்றாள் அன்ன பூரணி.
   “ என்ன காலம் கார்த்தாலயே தாயும் மகளும் அடிச்சிக்கிறீங்க?” என்ன விஷயம்? என்று பல் விளக்கி முகம் துடைத்தபடி வந்த வினாயகம் வினவினார்.
    ஒண்ணுமில்லேப்பா! வழக்கம்போல பல் விளக்கற பிரச்சணைதான் என்றபடி மதுமிதாவும் குளியலறைக்குள் நுழைந்தாள்.
   மதுமிதா இந்த கதையின் நாயகி, இக்கால இளைஞி, படிப்பு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்,பிடிப்பு என்றால் சங்கீதம் சதா செல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பாள். டிவி தொடர்களை அறவே வெறுப்பவள். அழகு சொல்லித் தெரியவேண்டியது இல்லை.அவள் தெருவில் நடக்கும் போது மொய்க்கும் கண்களை வைத்தே கணக்கிட்டுவிடலாம். மற்றபடி டிபிகலான தமிழ் பெண்.
   பல் தேய்த்து வந்த மதுமிதாவிடம் காபியை நீட்டிய தாய் என்னம்மா இன்னிக்கு ஏதோ இண்டர்வியுவிற்கு போகணும்னு சொன்னியே  என்று நினைவூட்டினாள்.
   “ஆமாம்மா! இன்னிக்கு ஒரு இண்டர்வியு இருக்கு அண்ணா நகர் வரைக்கும் போகனும். கம்பெனி ஒரு மல்டி நேஷனல் கம்பெனி. அங்க வேலை கிடைச்சா நல்லா இருக்கும். கை நிறைய சம்பளமும் கிடைக்கும்” என்றாள்.
   “என்னம்மா நீ வேலைக்கு போய்த்தான் ஆகணுமா?” நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். நீ வேற எதுக்கு வேலைக்கு போகனும் எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில உனக்கு கல்யாணம் பண்ணிடப் போறோம். எதுக்கு இந்த வேண்டாத வேலை?” விநாயகம் கேட்டார்.
   “அப்பா! என்னப்பா நீங்க உலகம் புரியாத ஆளா இருக்கீங்க! இப்ப எந்த மாப்பிள்ளையும் தனக்கு வர பொண்டாட்டியும் சம்பாதிக்கணும் வேலைக்கு போகனும்னு தான் நினைக்கிறான் இரட்டை சம்பாத்தியமே இன்னிக்கு பத்தலை! அதுவுமில்லாம நான் வீட்ல சும்மாதானே இருக்கேன். போரடிக்குது அதான் ஒரு ரெண்டு மூணு கம்பெனிக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுல ஒரு கம்பெனியில இண்டர்வியுவிற்கு கூப்பிட்டிருக்கான். போனா உடனேவா வேலை கிடைச்சிடப் போகுது?” என்றாள் மதுமிதா.
“சரிம்மா உன் இஷ்டம் போயிட்டு ஜாக்கிரதையா வந்திடு!”
 “அம்மா சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோ! இந்த வேலை உன் பொண்ணுக்கு கிடைக்கணும்னு” சாமி முன் கும்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள் மதுமிதா.
    காலை எட்டரை மணி பீக் அவரில் மாநகர பேருந்துகள் சென்னை நகர சாலைகளில் பயணிகளை அடைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்க அதில் ஒரு பேருந்தில் ஏறி அண்ணா நகருக்கு டிக்கெட் வாங்கினாள் மதுமிதா.
பஸ்ஸினுள் இடி மன்னர்களிடம் மாட்டாமல் அண்ணா நகர் வந்தபோது மணி 9.00ஆகிவிட்டது.
  அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அந்த இண்டர்வியு நடக்கும் ஆபிஸிர்குள் நுழையும் போது மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது.அந்த கட்டிடத்தின் 5வது மாடியில்தான் இண்டர்வியு. மாடிக்குச் செல்ல லிப்டுக்கு சென்றபோது லிப்ட் ரிப்பேர் என்ற போர்டு தொங்கியது.
   ச்சே! இன்னிக்கு 5 மாடி ஏறியே ஆகனும்னு கடவுள் நம்ம தலையில எழுதிட்டான் போல என்று முணுமுணுத்தபடி மாடிப் படிகளில் அவசரமாக ஏற ஆரம்பித்தாள்.
  இண்டர்வியுவிற்கு நேரத்திற்கு போகவேண்டுமென்ற பரபரப்பு அவளுக்கு! அப்பொழுது மாடிப்படிகளில் வேகமாக இறங்கி வந்த இளைஞன் ஒருவன் இவள் மீது மோத கையிலிருந்த ஃபைல் எகிற அதிலிருந்து அவளது பயோடேட்டா காகிதங்கள் காற்றில் பறந்தன.
   ஏய்! என்ன ..? என்று அவள் கேட்குமுன் சாரி சாரி! என்றவாறே அந்த காகிதங்களை பொறுக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவணை முறைத்தபடி நின்றாள் மதுமிதா.
                          நிலவு வளரும் (1)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே! வாக்களித்து இடுகையை பிரபலபடுத்தலாமே!

Saturday, August 27, 2011

சரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்!

ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன.

தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன.

ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன.

ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன.

இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது.

தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற்றி அனைவரையுமே கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.

இந்த 2011-ல் தயாராகும் பல படங்கள் சரித்திர அல்லது புராண காலகட்டத்தைச் சேரந்த படங்களாகவே உள்ளன.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ரூ 130 கோடியில் உருவாகும் ராணா படம் முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஏழாம் அறிவு கதையும் சித்தர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். போகர் என்ற சித்தர் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டம். படத்தின் ஸ்டில்களும் அதைத்தான் காட்டுகின்றன.

விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் முழுக்க முழுக்க சரித்திரப் பின்னணி கொண்டது. ஆங்கிலத்தில் வெளியான ட்ராய், கிளாடியேட்டர் மாதிரியான அதிரடி ஆக்ஷன் வரலாற்றுப் படம் இது.

சிம்புதேவன் - தனுஷ் இணையும் மாரீசன், கிமு 12-ம் நூற்றாண்டுக் கதை. கிட்டத்தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

சற்குணம் இயக்கும் வாகை சூடவா, சமகால வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு இந்தப் படம் தள்ளிப்போடப்பட்டாலும் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என அவர் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பாரதிராஜா இயக்கிவரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் கூட ஒரு சரித்திரக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் செல்வராகவன், மிஷ்கின், கமல்ஹாஸன் போன்றவர்களும் சரித்திரப் படம் எடுப்பதற்கான ஆயத்தங்களில் உள்ளனர். மதராஸப்பட்டணம் தந்த இயக்குநர் விஜய்யும் கூட விரைவில் அடுத்த சரித்திரப் பட ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

சரித்திரப் படம் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனாலும் இளம் இயக்குநர்கள் அதில் உள்ள சவாலை விரும்பி ஏற்று சரித்திரப் படம் பண்ணுவது, இந்த கலை மீது அவர்களுக்குள்ள பிடிப்பைக் காட்டுகிறது. இன்னொன்று, முன்பு பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் தங்கள் கிராமத்து அனுபவங்களை அப்படியே செல்லுலாய்டில் செதுக்கித் தந்தார்கள். இன்றைய படைப்பாளிகள் பலருக்கு அந்தப் பின்னணியோ, ஆழந்த அனுபவமோ இருப்பதில்லை.

எனவேதான் ஏற்கெனவே தயாராக உள்ள சரித்திரக் கதைகளை தொழில்நுட்ப பிரமாண்டம் சேர்த்துக் கொடுத்து மக்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சரித்திரப் படங்கள் வரவிருக்கின்றன. சரித்திரத்தின் மீது இந்த தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் சரித்திரம் இனிக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்!

நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்தினை பகிர்ந்து செல்லலாமே! வாக்களித்து பிரபலபடுத்தி உதவலாமே!

விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு!

டெல்லி: இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன.

இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.

முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்தகைய நோட்டுகளை பெருமளவில் அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! வாக்களித்து செல்லலாமே!

ஓகோ! ஓமம்!

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இது ரொட்டி மற்றும் கேக் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது. மதுபான வகைகளை மணமூட்டப் கையாளப்படுகிறது. இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

மருத்துவ குணம் கொண்ட ஒமம்

இலைகளின் சாறு பூச்சிகளுக்கு எதிரான சக்தி கொண்டது. வேர்கள் ஜீரணச் சக்தி மற்றும் சிறுநீர்க் கழிப்பினைத் தூண்டும் திறன்படைத்தது. கனிகளில் இருந்து கார்வீன் மற்றும் கார்வால் ஆகிய பொருட்கள் எடுக்கப்படுகிறது. கனிகளில் இருந்து வடிக்கப்படும் நீர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்துகிறது. ஜீரணத்தையும் வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்துகிறது. குழந்தைகளின் குடல்வலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு தக்க மருந்தாகும். சுவாசக் குழாய் தொடர்பான நோய்கள், குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தனம், மனநோய், போன்றவற்றுக்கு மருந்தாக உதவுகிறது.

வயிற்றுப் பொருமல் நீங்க

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

ஓமத்திரவகம்

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் பலம் பெற

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது..

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Related Posts Plugin for WordPress, Blogger...