சென்னை வெயிலை சமாளித்த ரகசியம்! சச்சின் பேட்டி!

சென்னை வெயிலை சமாளித்த ரகசியம்! சச்சின் பேட்டி!

கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக உருவெடுக்க, சிறுவயதில் இருந்தே பல்வேறு தியாகங்களை செய்துள்ளார் சச்சின். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப, தனது உணவு பழக்கத்தை மாற்றியுள்ளார். சென்னையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க, நள்ளிரவில் தண்ணீர் குடித்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இளம் பருவத்தில் இவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருந்துள்ளன. இவற்றை அடக்கிய இவர், கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தியதால் தான், தொடர்ந்து ரன் மழை பொழிய முடிகிறது. இது குறித்து மராத்தி "டிவி' சேனல் ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டி:s
பள்ளிப் பருவத்தில் மற்ற மாணவர்களை போல, கிரிக்கெட் பயிற்சிக்கு "கட்' அடித்து விட்டு, "வடாபாவ்'(நம்மூர் போண்டா மாதிரி) சாப்பிட எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், எனது தந்தை கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. எனது ஆர்வத்துக்கு முக்கியத்துவம் அளித்து கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார். நான் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்க வேண்டுமென அவர் நெருக்கடி கொடுக்கவில்லை. மாணவப் பருவத்தில் என்னை பற்றிய செய்திகள் மற்றும் படங்கள் பத்திரிகையில் வெளியான போது, அது குடும்பத்தினருக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முக்கிய தொடர்களில் நான் சிறப்பாக விளையாடினால், பூஜை அறையில் கடவுளுக்கு இனிப்பு படைத்து வீட்டில் உள்ளவர்கள் கொண்டாடினர். அடுத்த போட்டியில் சதம் அடிப்பது பற்றி சிந்திக்கும்படி கேட்டுக் கொள்வர்.
ஒழுக்கம் முக்கியம்:
தொழில்ரீதியான விளையாட்டு வீரராகி விட்டால், மிகுந்த ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். இஷ்டத்துக்கு சாப்பிடுவதோ அல்லது விரும்பியதை குடிப்பதோ கூடாது. அதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எதற்கும் ஒரு எல்லை வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை, உங்களது விளையாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை காலிறுதி போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. இங்கு வெப்பமான சூழல் காணப்படும். வெப்பமான களத்தில் உடலும் சூடாக இருந்தால், அது ஆட்டத்தை நிச்சயமாக பாதிக்கும். இதனை உணர்ந்து, போட்டி துவங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டேன். காரமான மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்தேன். இதன் மூலம் எனது உடலின் சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
நள்ளிரவில் "அலாரம்':
இதே போல சென்னையில் விளையாடும் போது, அங்கு கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப என்னை தயார்படுத்திக் கொள்வேன். வெப்பம் அதிகமாக இருக்கும் போது, உடலில் நீர்ச் சத்து குறைந்து விடும். இதனை சரி செய்ய, கடிகாரத்தில் "அலாரம்' வைத்து நள்ளிரவில் எழுந்திருப்பேன். பின் நிறைய தண்ணீர் குடிப்பேன். இதன் மூலம் போட்டி துவங்கும் முன், எனது உடலில் போதுமான நீர் இருப்பதை உறுதி செய்வேன்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
 "மார்க்' எடுப்பது கடினம்
 கிரிக்கெட்டில் கெட்டி, என்றாலும் படிப்பில் சச்சின் சுமார் தான். 16 வயதில் சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைத்ததால் பள்ளிப் படிப்பை தாண்ட முடியவில்லை. இது குறித்து இவர் கூறுகையில்,""பள்ளியில் படிக்கும் போது பரீட்சையில் "மார்க்' எடுப்பதைவிட, போட்டிகளில் ரன் எடுப்பது தான் எளிதாக இருந்தது,''என நகைச்சுவையாக கூறினார்.
நீச்சல் "அலர்ஜி'
கிரிக்கெட் ஆர்வம் காரணமாக, நீச்சலில் குதிக்க முடியவில்லை என சச்சின் கூறினார். இவர் கூறுகையில்,""பயிற்சியாளர்கள் எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்க முயன்றனர். ஆனால், தண்ணீர் எனது தலைக்கு அருகே வரும் போது பயம் வந்து விடும். சுருக்கமாக சொன்னால், எனக்கு நீச்சல் தெரியாது. என்னால் தண்ணீரில் மிதக்கவும், சில நீச்சல் பயிற்சிகளை செய்யவும் முடியும்,''என்றார்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2