கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்!

 கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்!

கடந்த வாரம் திருச்சிக்கு திடீர் பயணம் செல்ல நேரிட்டது. சின்ன வயதிலிருந்தே ரயில் பயணத்தில் எனக்கு அலர்ஜி! பஸ் பயணமும் தான் விதி யாரை விட்டது! எனக்கு வாய்த்தவள் வீடு கரூர் அருகில் ஒரு கிராமத்தில் அமைய இப்போது வருடத்தில் ஓரிரு முறை தொலை தூர பஸ் பயணங்கள் செல்லவேண்டியதாகி விட்டது. சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணாநகரில் இருந்தே பஸ் ஊர்ந்து பஸ் நிலையத்தை அடைய ஒரு மணி நேரமாகி விட்டது.
     மார்க்கெட் நிறுத்ததிலேயே பாதி பயணிகள் இறங்கிவிட மீதி பயணிகளோடு உள்ளே ஊர்ந்தது பேருந்து. விடுமுறை காலம் என்பதால் பேருந்து நிறுத்தம் நிரம்பி வழிந்தது.மெட்ரோ ரயில் திட்ட பணிகளால் போக்குவரத்து அங்கும் பாதித்தது. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் வழியிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிற்க எங்கள் பேருந்தும் அவற்றுள் ஒன்றாய் நின்றது.
      லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு, மனைவி குழந்தையோடு இறங்கி உள்ளே நுழைந்து பேரிரைச்சலில் கலந்தேன். கழிப்பிடங்களிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் ஏதாவது உணவு கிடைக்குமா என்று அங்குள்ள சிற்றுண்டி சாலையை நோக்கினேன். சைவம் அசைவம் இரண்டும் இரண்டறக் கலந்து என் உணவு ஆசையை போக்கடித்தன.
   சரி குழந்தைக்காவது பால் வாங்கலாம் என்று ஆவின் பாலகம் சென்று ஃப்ளாஸ்கை கொடுத்து மூன்று பால் கொடுங்க என்றால் முதல்ல காசை எடுங்க என்றார் கறாராக. 24 ரூபாய் கொடுத்து வாங்கிய பாலில் பாதி பாதி இரவில் கெட்டுப் போனது வேறு விஷயம். டிபன் தான் இல்லை எதாவது பிஸ்கெட் வாங்கலாம் என்று கடைப் பக்கம் சென்றபோது தான் தெரிந்தது அவர்கள் கொள்ளையடிப்பது.
    எந்தபொருளை வங்கினாலும் MRP ரேட்டை விட குறைந்தது 5ரூபாய் கூடுதலாக இருந்தது. என்னப்பா இவ்வளவு ரேட் விக்கிறியே? MRP என்ன போட்டுருக்கான் பாரு! என்றால் கடைக்காரன் நம்மை ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து ஐயே வாங்குற மூஞ்சியப்பாரு! யோவ் இங்க அப்படித்தான் இஷ்டமா இருந்தா வாங்கிக்கோ கஷ்டமா இருந்தா போய்க்கோ என்று விரட்டாத குறையாக விரட்டி அடித்தார்.
     அந்த சமயத்தில் என் குழந்தை ஒரு கார் பொம்மையை பார்த்து அடம்பிடிக்க இருபது ரூபாய் பெறாத அப்பொம்மைக்கு 50ரூபாய் தண்டம் அழ வேண்டியதாகிவிட்டது.என் கேள்வி எல்லாம் இதுதான் தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் புழங்கும் இந்த பேருந்து நிலையத்தில் இப்படி சில்லறையாய்  கொள்ளை போவதை கேட்பார் யாரும் இல்லையா என்பதுதான்.
   குடிக்கும் நீரிலிருந்து எல்லா பொருள்களுமே அதிக விலைதான்! ஆனால் எல்லா கடைகளிலுமே வியாபாரம் கனஜோர்தான் வேறு விதி! அங்குள்ள புத்தக கடைகளில் தான் ஓரளவுக்கு சரியான விலையில் புத்தகங்கள் விற்கப்படுகிறது. தின்பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் தான் தயாரிக்க படுகின்றன. இதை நாமே கண்கூடாக காணலாம்.

இந்த லட்சணத்தில் இந்த பேருந்து நிலையத்திற்கு iso9001 தரச்சான்றிதழ் வேறு.சரியான குடிநீர் வசதி இல்லை எந்தபஸ் எப்பொழுது கிளம்பும் என்று அறிவிப்பு இல்லை தொலைபேசி வசதியும் சரிவர இல்லை லக்கேஜ்களை எடுத்து செல்ல போதுமான வசதிகள் இல்லை. கழிப்பிடங்கள் சரியான பராமரிப்பு இல்லை. இப்படி பல இல்லைகள்.
    ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது போல இந்த பேருந்து நிலையம் ஆரம்பித்தது முதல் இந்த வியாபாரிகளின் கூட்டு கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு லோக்கல் அரசியல் வாதிகளின் ஆசிர் வாதம் கண்டிப்பாய் இருக்குமென்றே தோண்றுகிறது. மக்கள் இப்படியெல்லாம் படும் அவதிதான் வாக்குக்களாக மாறுகிறது என்று அரசியல் வாதிகள் உணர்வார்களா?

இதே போல்தான் விக்கிரவாண்டியிலும் கொள்ளை அடிக்கின்றனர். வேறு வழியே இல்லாததால் மக்கள் விழி பிதுங்கி சாகின்றனர். அங்கு காபி என்ற பெயரில் வழங்கும் சுடு தண்ணியின் விலை 10 ரூபாய். என்னோடு வந்த ஒரு கிராமத்து பெண்மணி ஐயோ இதுக்கா 10 ரூபா என்று கேட்டே விட அந்த கடைக்காரன் முறைத்தான் பாருங்கள்.

  வந்திருக்கும் புதிய அரசாவது இதில் விழிப்பாயிருந்து கொள்ளைக்கூட்டத்திடமிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமே!
நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!