Tuesday, May 31, 2011

மோசம் செய்வதேன்? கவிதை

மோசம் செய்வதேன்?
 
என்னவளே!
என்
சுவாசம்கூட
உன்
வாசத்தை
விரும்புகிறது.
ஆனால் நீயோ
உன் நேசத்தைக்
காட்டாமல்
மோசம் செய்கிறாயே?

நீ சொன்னாய் என்பதாலே!

நீசொன்னாய் என்பதாலே
மரங்களை நேசித்தேன்
மகிழ்ந்தாய்!
நீ சொன்னாய் என்பதாலே
புத்தகங்களை நேசித்தேன்
புன்னகைத்தாய்!
நீ சொன்னாய் என்பதாலே
விலங்குகளை நேசித்தேன்
வியந்தாய்!
நீ சொன்னாய் என்பதாலே
இசையை நேசித்தேன்
இனித்தாய்!
நீ சொல்லாமலேயே
உன்னை
நேசிக்க ஆரம்பித்தேன்
விலகிப்போனாய்!

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

களவாணிப் பயலுவ!களவாணிப் பயலுவ!

  இந்தியா ஒரு பழம்பெருமைநாடு!பல்வேறு இயற்கைச் செல்வங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நாடு.பல்வேறு இயற்கை வளங்கள் தன்னிச்சையாக பெருகிக் கிடந்த நாடு. நம் நாட்டு தாவரங்கள் பல மூலிகைகளாக பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்பட்டு வருகிறது.இதுதான் மேற்கத்திய நாடுகளின் கண்ணைக் குத்துகிறது போலும்.நமது இயற்கைச் செல்வங்கள் பலவற்றிற்கு காப்புரிமை என்ற பெயரில் உரிமை கொண்டாடி கொள்ளையடித்து வருகின்றன.
      மத்திய அரசோ கைகட்டி வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டுவருகிறது. ஆர்வலர்கள் பலர் ஒன்று கூடி அரசுக்கு விழிப்பு ஏற்படுத்திய பிறகுதான் அரசு முழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு சென்றது போல நமது,மஞ்சள்,வேம்பு, பாசுமதி அரிசி, போன்றவற்றிர்க்கு அமெரிக்கா சத்தமில்லாமல் காப்புரிமை வாங்கிவிட தாமதமாக விழித்துக் கொண்ட அரசுஅவர்களிடம் போராடி காப்புரிமையை திரும்ப பெற வேண்டியாதாகிவிட்டது.
      அடுத்தவன் பொருளை களவாடும் களவானிப் பயல்களிடம் நாம் உஷாராக இருக்க வேண்டும். நம்முடைய பொருள்களுக்கு காப்புரிமை நாம் பெற்றாக வேண்டும் இல்லையெனில் நம்சொந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கும் நிலை நமக்கு ஏற்பட்டுவிடும். லேட்டஸ்டாக, ஒங்கோல் காளைக்கும் வெளி நாட்டினர் காப்புரிமை கொண்டாடி வருவதாக விகடன் தலையங்கம் வெளியிட்டுள்ளது. நம்மில் பலருக்கு காப்புரிமை பற்றி விழிப்புணர்வு இல்லை.
     எனவே இந்த விஷயத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது பாரம்பரிய பொருட்களை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்தியாவிற்கே அன்னியர்கள் காப்புரிமை வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள்.
    விகடன் தலையங்கம்.


காளைக் களவானிகள்!


    இயற்கைச் செல்வங்களும் பாரம்பரியச் செழுமைகளும் குவிந்து கிடக்கும் இந்திய தேசத்தில் இருந்து, ‘கோஹினூர்’ வைரம் உட்பட அன்னியர் கொள்ளை கொண்ட பொக்கிஷங்கள் எத்தனையோ அந்த வரிசையில் சமீப காலமாக ‘காப்புரிமை’ என்ற பெயரில் தொடரும் கொள்ளை - கொடுமையிலும் கொடுமை!
     மேற்கத்திய கலாச்சார மயக்கத்தில் நம்மவர்கள் ஆழ்ந்துகிடக்க ... வெளிநாட்டுக்காரர்கள் விழிப்போடு வேலை பார்க்கிறார்கள். வேம்பு,மஞ்சள், பாசுமதிஅரிசி, போன்றவற்றிற்கு அமெரிக்கா சத்தமில்லாமல் ‘காப்புரிமை’ வாங்கிவிட தாமதமாக விழித்துக்கொண்டு அடித்து பிடித்து போராடி, அதை திரும்ப பெற்றொம் கீழாநெல்லி,நித்தியகல்யாணி போன்ற் மூலிகை உரிமைகளையும் அன்னிய சக்திகள் தங்கள் ஏக போக வியாபாரத்துக்கு உள்ளாக்கப் பார்த்தன. நல்ல வேளையாக முன்கூட்டியே மோப்பம் பிடித்து காப்புரிமையை காப்பாற்றிக் கொண்டோம். இப்போது வந்திருப்பது இன்னொரு இடி!
   ‘இந்தியா ஒரு விவசாய நாடு’ என்று பாட புத்தகங்களில் படித்துக் கொண்டு,மெள்ள விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கும் நாம் கம்பீரம் மிகுந்த ஓங்கோல் மாடுகளுக்கும் காப்புரிமையைக் கோட்டை விடும் நிலையில் இருக்கிறோம்!
     இந்த அரிய கால்நடைச் செல்வத்தின் உயிர் அணுக்களை கடத்திச் சென்று புதிய கலப்பின மாடுகளை உருவாக்கி, அந்த மாடுகளை கோடிக்கணக்கான டாலருக்கு வெளிநாடுகளில் விற்கிறார்கள் என்ற செய்தி அதிர வைக்கிறது!பலமான நோய் எதிர்ப்பு சக்தியும்,கடுமையான உடல் உழைப்பும் கொண்ட ஓங்கோல் இனம்தான் தென்னிந்திய கோயில்களில் திமில் நிமிர்த்திக் காட்சி தரும் ‘நந்தி’’யின் மூல வடிவங்கள்.இந்த கம்பீரக் காளை இனத்தின் மதிப்பு இதுவரை நம் அரசுக்கு புரியாமல் போனது ஏன்?
  இனியும் அன்னியர் உரிமை கொண்டாட முடியாதபடி சட்டப்பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷங்களை பற்றி முழுமையான தகவல் சேகரிப்பில் எப்போது நாம் இறங்க போகிறோம்? கடல் கடந்து போன கறுப்பு பணத்தை மீட்டு வரத்தான் துப்பு இல்லை. நம் பாரம்பரிய சொத்துக்களையும் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தால் மன்னிப்பே கிடையாது!

   அரசாங்கம் இனியாவது இவ்விஷயத்தில் தலையிட்டு நம் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று என் ஆசை ! ஆனால் சர்தார்ஜி தாத்தாவுக்குதான் வெளிநாட்டிற்கு செல்லவும் சோனியாவுக்கு தாளம் போடவுமே நேரம் சரியாக இருக்கிறதே!
இப்படியே போனால் நாடு விளங்கிடும்!

தங்கள் வருகைக்கு நன்றி! இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்திடலாமே! நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Monday, May 30, 2011

Educationalist welcomes TN govt for stop the Samacheer kalvi | சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்திவைப்பு சரியே: கல்வியாளர்கள் வரவேற்பு Dinamalar

Educationalist welcomes TN govt for stop the Samacheer kalvi | சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்திவைப்பு சரியே: கல்வியாளர்கள் வரவேற்பு Dinamalar

கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!

கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!
 எத்தனை நாளுக்குத்தான் கதை, கவிதை என்று எழுதிக்கொண்டிருப்பது இப்படியும் எழுதிப்பார்ப்போமெ என்று இந்த பதிவு.


இந்த பதிவை எழுதுவதாலேயே என்னை சிலர் தி..மு.க அனுதாபி என்று சிலர் முத்திரை குத்தக் கூடும் ஆனால் மனதில் பட்டதை அப்படியே சொல்லி பழக்கமாகி விட்டது. இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது ஆனந்த விகடன். வெள்ளியன்றே வரும் அவ்விதழை நேற்றுதான் படிக்க நேர்ந்த்து. நான் விகடனின் 25 வருட வாசகன் இடையில் சில பிரேக்- அப்கள். இருந்தாலும் விகடனின் இப்போதைய ட்ரண்ட் எனக்கு அவ்வளவாக பிடித்தமில்லை.
    கனிமொழி ஒரு எம்.பி. ஒரு ஊழல் குற்றவாளி, தமிழக முக்கிய கட்சியின் தலைவருடைய மகள்,முன்னாள் முதல்வரின் மகள் என்றெல்லாம் பாராமல் ஒரு பெண்ணாக மட்டும் பாருங்கள். இந்தியாவில் எல்லா அரசியல் வாதிகளும் செய்வதைப் போலத் தான் அவரும் ஊழல் செய்து மாட்டிக் கொண்டார். இதில் கண்டிப்பாக காங்கிரஸ் அரசுக்கும் பங்குண்டு,என்று இளிச்சவாய் தமிழனுக்குக் கூட தெரியும். மன்மோகன் ஐயயோ எனக்கு எதுவுமே தெரியாது எல்லாம் ராசாதான் என்று புலம்பினால் நம்பி விடுவோமா நாம்?
        சரி கனிமொழி விஷயத்திற்கு வருவோம். அவர் எப்போது கைதாவார் என்று மீடியாக்கள் காத்திருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்தன. கைதானதும் அவருக்கு ஒதுக்கப் பட்ட சிறை அதிலுள்ள வசதிகளை பற்றி எழுதித் தீர்த்தன.
    இப்பொழுது மீடியாக்களுக்கு கருணாநிதி- கனிமொழி சந்திப்புதான் பசி ஆற்றிக் கொண்டிருக்கின்றன.நேரில் சென்று பார்த்தது போல இந்த வார ஆ-வியில் வந்த தலைப்பு நான் இங்கேயே தங்கிடட்டுமாம்மா ! கருணாநிதி தழுதழுப்பு என்று போட்டு கலெக்சன் பார்த்துள்ளது.
     இதில் நான் வருத்தப்படுவது என்னவென்றால் ஒரு தகப்பனும் மகளும் சந்தித்துக் கொள்வதை அது சிறைச்சாலையே என்றாலும் இப்படி நியுஸ் போட்டுத் தான் ஆக வேண்டுமா? இது மாதிரி வரும் செய்திகள் பின்னாலில் கனிமொழியின் மகனை பாதிக்காதா? அவர் விரோதியாக இருந்தாலும் கூட இந்த மாதிரி நிலை வரக்கூடாது என்பது என் அபிப்பிராயம்.பிரபலமாக இருப்பதனாலேயே இந்த மாதிரி சங்கடங்களுக்கு ஆளாக வேண்டுமா?
    இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான மற்றவர்களைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டியதுதானே? பிரபலத்துக்கு மகளாக பிறந்தால் அவருக்கு உணர்ச்சியிருக்காதா? அவர்கள் கண்ணீர் சிந்தக் கூடாதா?
    இதையெல்லாம் எழுதி சம்பாதிக்கத்தான் வேண்டுமா? முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா கைதான போது கூட மீடியாக்கள் இதே தவறை செய்தன. இது கூட பரவாயில்லை. எஸ்.எம்.எஸ் ஸில் வரும் கனிமொழி பற்றிய தகவல்கள் படு கேவலமாக உள்ளன.
   ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசித்துஎழுத அவர் பிரபலமாயிருந்தால் போதும் என்பது போல இந்த இதழ்களின் கருத்தாய் உள்ளது. இந்த நிலையை ஏடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரும் ஒரு குற்றவாளி என்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
    கனிமொழி ஒரு நல்ல படைப்பாளி அவரது கவிதைகளை வாங்கி பிரசுரித்த இதழ்கள் இன்று அவருடைய முதுகில் குத்துவதை பார்க்க சகிக்கவில்லை. காங்கிரஸுக்கு முதுகில் குத்துவது கை வந்த கலை. இன்று அந்த குத்து கலைஞ்சருக்கும் கனிமொழிக்கும் கிடைத்துள்ளது.
   ஒரு படைப்பாளி என்பதைவிட ஒரு பெண்ணாகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் பார்த்து இனியாவது தமிழேடுகள் பரபரப்பான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தார் தன் குடும்பத்திலுள்ள சிறைபட்ட ஒருவரை சந்திப்பதை எல்லாம் செய்தியாக விடுவதை தவிர்க்கவேண்டும்.
 
இனி ஒரு அதிமுக செய்தி! ஜே. ஜெயிக்க வேண்டும் என்று ஒரு பெண் நாக்கை அறுத்துக்கொண்டு நேர்த்திக் கடன் செய்ய அடித்தது ஜாக்பாட். உயர்தர சிகிச்சை, வீடு, அரசு வேலை, லட்சரூபாய் நிதி உதவி என அம்மா அள்ளி வீச இப்போது இந்த டெக்னிக்கை எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலுள்ளது. சேலத்தில் நெசவுத்தொழிலாளியின் மனைவியான வாணி(45) தனது கட்டை விரலை வெட்டி தாதகாப் பட்டி காளியம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தியுள்ளார்.
    தீவிர அதிமுக விசுவாசிகளான வாணியும்.அவரது கணவர் பழனிச்சாமியும் ஜே முதல்வராக வேண்டும் என்று பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வந்தனர். தாதாகா பட்டி காளிக்கு வலதுகை கட்டைவிரலை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டனராம். அதன்படி இப்போது விரலை வெட்டி காணிக்கை செலுத்தி உள்ளார்.
    இம்மாதிரி முரட்டு தொண்டர்களை ஜே கண்டிக்க வேண்டும். வேலை பணமுடிப்பு என தந்துகொண்டிருந்தால் எதிர்காலத்தில் காதறுத்துக் கொண்ட அதிமுக தொண்டர். கண்ணை குத்திக் கொண்ட அதிமுக விசுவாசி,காலை வெட்டிக் கொண்ட அதிமுக அனுதாபி என்று பல்வேறு செய்திகள் வரக்கூடும். ஜே கவனிப்பாரா? 


தங்கள் வருகைக்கு நன்றி! பிடித்திருந்தால் கருத்திடலாமே! செய்தி பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில்வாக்களித்து செல்லலாமே!

Sunday, May 29, 2011

தடையல்ல!

தடையல்ல!

மலையைக் கடப்பவனுக்கு
மண்ணாங்கட்டி
தடையல்ல!
ஆற்றை கடக்க நினைப்பவனுக்கு
அதன் ஆழம் தடையல்ல
வானில் பறக்க துடிப்பவனுக்கு
மேகக் கூட்டங்கள்
தடையல்ல!
கடலை கடக்க துடிப்பவணுக்கு
கடலலைகள்
தடையல்ல!
நண்பா!
உன் லட்சியங்கள்
பெரிதாக இருப்பின்
தடைகளெல்லாம்
சிறிதாகிப் போகும்!


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


ஆவி அழைக்கிறது! 4

ஆவி அழைக்கிறது!
பகுதி 4
எழுதுபவர்  “பிசாசு”

மு.க.சு: ஆழ்வார் குறிச்சியிலுள்ள தனது பரம்பரை பங்களாவை சீர்படுத்த முயல்கிறார் தனவேல் முதலியார் ஆனால் அதிர்ச்சிமேல் அதிர்சியாக அங்கு வேலைக்கு வருபவர்கள் இறந்து போகின்றனர்.
இனி:
நிதிலாவை நோக்கி வேகமாக வந்த நாகம் அவளை கொத்தும் முன் நல்ல முத்து ஒரு பெரிய குச்சியால் தூக்கித் தள்ளினார். அத்துடன் சிறிது தண்ணிரை நிதிலா முகத்தில் தெளித்து எழுப்பினார். எழுந்த நிதிலாவுக்கு படபடப்பாக இருந்தது.அவள் இதயம் வழக்கத்தைவிட அதிகமாக துடித்துக் கொண்டிருந்தது.தனவேல் முகத்தில் ஈயாடவில்லை!. மூவரில் சற்று தைரியமாய் இருந்தவர் நல்ல முத்து ஒருவர்தான்.
  தங்கள் கண்முன்னாலேயெ இறந்து கிடக்கும் மணிமாறனின் சடலத்தை கண்டு மூவரும் திக் பிரமை பிடித்து நின்றனர். நிதிலா தான் முதலில் வாயைத் திறந்தாள். டாடி! டாடி! என்ன ஆச்சு உங்களுக்கு என்று தனவேலை பிடித்து உலுக்கினாள். இன்னும் என்னம்மா ஆகணும்?
இந்த பங்களா ரெண்டு உயிரை பலி வாங்கிடுச்சு அதுக்கு நான் காரணமா இருந்துட்டேன் இது போதாதா? இன்னுமென்ன நடக்கணும்? என்று புலம்பினார் தனவேல்.
    முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போய் பேசுவோம்.அந்த பாம்புதிரும்பவும் வந்தாலும் வரலாம் என்றார் நல்லமுத்து.மூவரும் வெளியேறினர். நல்ல முத்து முதல்ல போலிஸுக்குஇன்ஃபார்ம் பண்ணிடுப்பா! என்றார் தனவேல். அடுத்த அரை மணி நேரத்தில் போலிஸ் வந்து விசாரித்து மணிமாறனின் சடலத்தை எடுத்துச் சென்றது.
   அன்று மாலை தனவேல் முதலியார் நிதிலாவிடம் ஊரைவிட்டு கிளம்ப வேண்டும் என்று வாதாடிக் கொண்டிருந்தார். நிதிலா இனிமேலும் அந்த பங்களாவை சீர் பண்ணனுமா? அப்படி நினைச்சா அது சுத்த முட்டாள்தனம் ஊர்ஜனங்க ஆவி பேய்னு சொன்னப்ப நான் நம்பல ஆனா இப்ப நம்பறேன். அந்த ஆவி இரண்டு உயிரை அநியாயமாக பலி வாங்கிடுச்சு இனியும் பிடிவாதம் பிடிக்காம நான் சொல்லற பேச்ச கேளு! நாளைக்கே நாம ஊருக்கு கிளம்பறோம்.அடம்பிடிக்காம நல்லா யோசிச்சுப்பாரு என்றார்.
    அப்பா இந்த ஜனங்க தான் அறியாமையால ஆவி பிசாசுன்னு சொல்லிகிட்டுதிரியுதுங்க! அத நாமும் நம்பிடறதா? இங்க ரெண்டு பேர் இறந்தது தற்செயல். அதுக்கும் ஆவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்றாள் நிதிலா.
    பகுத்தறிவு,பழமைவாதம்னு சொல்லி பழைய நம்பிக்கைகளை முட்டாள்தனம்னு சொல்றது தப்பும்மா!முன்னோர்கள் சொன்ன சில விஷயங்கள் இப்பவும் நடக்குது. ஆவி இருக்குன்னு அமெரிக்காவில கூட நம்பறாங்க அதனால விதண்டாவாதம் பண்ணாம நான் சொல்ற பேச்ச கேளு!.
     சரிப்பா நான் உங்க வழிக்கே வரேன் அந்த பங்களாவில ஆவி இருக்குன்னே வச்சிக்கவும்.ஆனா அந்த ஆவிக்கு பயந்து நாம ஏன் ஓடணும்? அது நம்ம பங்களா ஆவியோடது இல்லையே அத விரட்டிட்டு நாம இருந்தா போச்சு!
     சரியா சொன்னேம்மா! என்று உள்ளே நுழைந்தார் நல்ல முத்து.
இவன் வேற அவளுக்கு ஒத்து பாடிக்கிட்டு! இப்ப அவ என்னத்த சரியா சொல்லிட்டா?
ஆவிய ஓட்டுவோமுன்னு பாப்பா சொல்லுச்சே என்றார் நல்லமுத்து.
எப்படிப்பா ஆவிய ஓட்டுவே?
    தனவேலு பக்கத்து டவுன்ல ஒரு பெரிய மந்திரவாதி இருக்கார். குழந்தைக்கு மந்திரிக்கிறது, காத்துக்கருப்பு விறட்டுறதுல அவர் ரொம்ப பிசி. அவரு ஆவி என்ன அதுக்கு தாத்தாவை கூட விரட்டிடுவாரு. நாளைக்கு அவர்கிட்ட போவோம் என்றார் நல்லமுத்து. இருவரும் தலையாட்டினர்.
    மறுநாள் அதிகாலைப் பொழுதில் டவுன் என்று சொல்லப்பட்ட அந்த பெரிய கிராமத்தில் மந்திரவாதியைக் காண மூவரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.சாக்கடை ஆறுகளுக்கு மத்தியில் ஒரு கீற்று கொட்டகை. அக்கொட்டகையின் முன்பு ஒரு போர்டு. மலையாள மாந்திரீக சித்தன் கேசவன் நம்பூதிரி. இவ்விடம் பில்லி,சூனியம், கழுப்பு எடுக்கப்படும் என்றுபறைசாற்றிக்கொண்டிருந்தது.
   அந்த கொட்ட்கையின் வாசலில் ஒரு நீண்ட க்யு காத்திருந்தது. காத்திருந்து மூவரும் உள்ளே சென்றார்கள். ஒட்டவெட்டப்பட்ட முடியுடன் சட்டியைக் கவிழ்த்தார் போல தலை முகத்தை மழித்து நெற்றியில் விபூதி தரித்து நடுவில் கருப்பு மை அதன் கீழ் எட்டணா சைசில் குங்குமப் பொட்டுடன் வறவேற்றார் கேசவன் நம்பூதிரி.
     அவர் வாய் பேசவில்லை! கண்கள் மூடி தியானித்தவர். தனவேலை கூர்ந்து நோக்கினார். பின் தனவேலிடம் உன் வீட்டில் வசிக்கும் ஆவி வலியது. ஆனாலும் அதை யான் விரட்டும் சம்கரிக்கும் என்றார் விளையப்போகும் விபரீதத்தை உணராமல்.
அழைக்கும்(4)

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Saturday, May 28, 2011

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்!

 கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்!

கடந்த வாரம் திருச்சிக்கு திடீர் பயணம் செல்ல நேரிட்டது. சின்ன வயதிலிருந்தே ரயில் பயணத்தில் எனக்கு அலர்ஜி! பஸ் பயணமும் தான் விதி யாரை விட்டது! எனக்கு வாய்த்தவள் வீடு கரூர் அருகில் ஒரு கிராமத்தில் அமைய இப்போது வருடத்தில் ஓரிரு முறை தொலை தூர பஸ் பயணங்கள் செல்லவேண்டியதாகி விட்டது. சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணாநகரில் இருந்தே பஸ் ஊர்ந்து பஸ் நிலையத்தை அடைய ஒரு மணி நேரமாகி விட்டது.
     மார்க்கெட் நிறுத்ததிலேயே பாதி பயணிகள் இறங்கிவிட மீதி பயணிகளோடு உள்ளே ஊர்ந்தது பேருந்து. விடுமுறை காலம் என்பதால் பேருந்து நிறுத்தம் நிரம்பி வழிந்தது.மெட்ரோ ரயில் திட்ட பணிகளால் போக்குவரத்து அங்கும் பாதித்தது. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் வழியிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிற்க எங்கள் பேருந்தும் அவற்றுள் ஒன்றாய் நின்றது.
      லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு, மனைவி குழந்தையோடு இறங்கி உள்ளே நுழைந்து பேரிரைச்சலில் கலந்தேன். கழிப்பிடங்களிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்ததால் ஏதாவது உணவு கிடைக்குமா என்று அங்குள்ள சிற்றுண்டி சாலையை நோக்கினேன். சைவம் அசைவம் இரண்டும் இரண்டறக் கலந்து என் உணவு ஆசையை போக்கடித்தன.
   சரி குழந்தைக்காவது பால் வாங்கலாம் என்று ஆவின் பாலகம் சென்று ஃப்ளாஸ்கை கொடுத்து மூன்று பால் கொடுங்க என்றால் முதல்ல காசை எடுங்க என்றார் கறாராக. 24 ரூபாய் கொடுத்து வாங்கிய பாலில் பாதி பாதி இரவில் கெட்டுப் போனது வேறு விஷயம். டிபன் தான் இல்லை எதாவது பிஸ்கெட் வாங்கலாம் என்று கடைப் பக்கம் சென்றபோது தான் தெரிந்தது அவர்கள் கொள்ளையடிப்பது.
    எந்தபொருளை வங்கினாலும் MRP ரேட்டை விட குறைந்தது 5ரூபாய் கூடுதலாக இருந்தது. என்னப்பா இவ்வளவு ரேட் விக்கிறியே? MRP என்ன போட்டுருக்கான் பாரு! என்றால் கடைக்காரன் நம்மை ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து ஐயே வாங்குற மூஞ்சியப்பாரு! யோவ் இங்க அப்படித்தான் இஷ்டமா இருந்தா வாங்கிக்கோ கஷ்டமா இருந்தா போய்க்கோ என்று விரட்டாத குறையாக விரட்டி அடித்தார்.
     அந்த சமயத்தில் என் குழந்தை ஒரு கார் பொம்மையை பார்த்து அடம்பிடிக்க இருபது ரூபாய் பெறாத அப்பொம்மைக்கு 50ரூபாய் தண்டம் அழ வேண்டியதாகிவிட்டது.என் கேள்வி எல்லாம் இதுதான் தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் புழங்கும் இந்த பேருந்து நிலையத்தில் இப்படி சில்லறையாய்  கொள்ளை போவதை கேட்பார் யாரும் இல்லையா என்பதுதான்.
   குடிக்கும் நீரிலிருந்து எல்லா பொருள்களுமே அதிக விலைதான்! ஆனால் எல்லா கடைகளிலுமே வியாபாரம் கனஜோர்தான் வேறு விதி! அங்குள்ள புத்தக கடைகளில் தான் ஓரளவுக்கு சரியான விலையில் புத்தகங்கள் விற்கப்படுகிறது. தின்பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் தான் தயாரிக்க படுகின்றன. இதை நாமே கண்கூடாக காணலாம்.

இந்த லட்சணத்தில் இந்த பேருந்து நிலையத்திற்கு iso9001 தரச்சான்றிதழ் வேறு.சரியான குடிநீர் வசதி இல்லை எந்தபஸ் எப்பொழுது கிளம்பும் என்று அறிவிப்பு இல்லை தொலைபேசி வசதியும் சரிவர இல்லை லக்கேஜ்களை எடுத்து செல்ல போதுமான வசதிகள் இல்லை. கழிப்பிடங்கள் சரியான பராமரிப்பு இல்லை. இப்படி பல இல்லைகள்.
    ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது போல இந்த பேருந்து நிலையம் ஆரம்பித்தது முதல் இந்த வியாபாரிகளின் கூட்டு கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு லோக்கல் அரசியல் வாதிகளின் ஆசிர் வாதம் கண்டிப்பாய் இருக்குமென்றே தோண்றுகிறது. மக்கள் இப்படியெல்லாம் படும் அவதிதான் வாக்குக்களாக மாறுகிறது என்று அரசியல் வாதிகள் உணர்வார்களா?

இதே போல்தான் விக்கிரவாண்டியிலும் கொள்ளை அடிக்கின்றனர். வேறு வழியே இல்லாததால் மக்கள் விழி பிதுங்கி சாகின்றனர். அங்கு காபி என்ற பெயரில் வழங்கும் சுடு தண்ணியின் விலை 10 ரூபாய். என்னோடு வந்த ஒரு கிராமத்து பெண்மணி ஐயோ இதுக்கா 10 ரூபா என்று கேட்டே விட அந்த கடைக்காரன் முறைத்தான் பாருங்கள்.

  வந்திருக்கும் புதிய அரசாவது இதில் விழிப்பாயிருந்து கொள்ளைக்கூட்டத்திடமிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமே!
நன்றி!

Friday, May 27, 2011

பாப்பா மலர்

குரங்கின் சின்ன புத்தி!

ராமசந்திரா புரம் என்ற சிற்றூரில் முத்து என்ற கழைக்கூத்தாடி ஒருவன் வசித்துவந்தான். அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது. முத்து அந்த குரங்கை வைத்து வித்தைகள் செய்துகாட்டி தன் வயிற்றைக் கழுவிக்கொள்வான்.
   முத்து குரங்கை தெரு மையத்தில் அழைத்துச் சென்று கொம்பைத் தாண்ட சொல்வான்.தீவளையத்தில் புகச்செய்வான். குட்டிகரணம் போடச்சொல்வான். இவ்வாறு பல வித்தைகள் செய்துகாட்டி மக்கள் தரும் பிச்சைகளைப் பெற்று சீவனம் நடத்திவந்தான்.குரங்கும் அவன் சொல்படி நடந்து மக்களின் கை தட்டல்களுடன் நிறைய பணத்தையும் பெற்றுத் தந்தது.
    இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க குரங்கு தனக்கு கிடைத்த் கைதட்டல்களால் கர்வம் கொண்டு தான் இல்லையேல் முத்து இல்லை என்று எண்ண ஆரம்பித்தது. தன் திறமையால் தான் முத்து பிழைக்கிறான் என்று நினைத்து நம் உழைப்பில் சாப்பிடும் இவனுக்கு நாளைமுதல் ஒத்துழைப்பு தருவது இல்லை என முடிவெடுத்தது.
      அன்று முதல் அக்குரங்கு முத்து சொல்லும் வித்தைகளை சரிவர செய்வது இல்லை விருப்பமிருந்தால் ஒன்றிரண்டு வித்தைகளை செய்யும். இல்லையேல் முரண்டுபிடிக்கும். குரங்கின் பிடிவாதமான இச்செயல் முத்துவுக்கு விளங்க வில்லை. குரங்கை அடித்து துன்புறுத்தவும் அவனுக்கு மனதில்லை. இதனால் முத்துவின் தொழில் பாதித்து வருமானம் குறைய ஆரம்பித்து விட்டது.
  நாட்கள் செல்ல செல்ல ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் போகவே குரங்கை அவிழ்த்து விட்டுவிட்டான் முத்து. குரங்கு அங்கிருந்து கிளம்பியது. இவன் இல்லா விட்டால் என்ன என் வித்தையை காட்டி நான் பிழைத்துக் கொள்வேன் என்றுகுரங்கு நினைத்துக் கொண்டது.
     அருகில் உள்ள் ஒரு கோயிலின் அருகில் வந்த குரங்கு வித்தை செய்வதாக நினைத்து ஒரு சிறுமியின் மேல் தாவியது அச்சிறுமி பயந்து அலற கூட்டம் விரட்டி அடித்தது. ஒடிக் களைத்த குரங்கு ஒரு பெட்டிக் கடையில் தொங்கி கொண்டிருந்த வாழைத் தாரில் கையை வைக்கப் போனது. கடைக்காரன் சுதாரித்து குச்சியை எடுத்து துரத்த திரும்பவும் ஓடியது.
   கூத்தாடி சொல்லி ஆடினால் மகிழும் மக்கள் இப்போது விரட்டி விரட்டி அடிக்கிறார்களே என்று நொந்து கொண்ட குரங்கு மீண்டும் முத்துவிடம் வந்து சேர்ந்தது. கூத்தாடியால் தான் தனக்கு மதிப்பு என்பதை உணர்ந்த அக்குரங்கு மறுநாள் முதல் ஒழுங்காக வித்தைகள் செய்ய ஆரம்பித்தது. இப்பொழுது முத்துவும் குரங்கும் பசியின்றி வாழ்கின்றனர்.
  நீதி : தற்புகழ்ச்சி கூடாது!

‘வெண்ணிலா’

வட்டவட்ட வெண்ணிலா
வானில் தவழும் வெண்ணிலா!

குலுமையான ஒளியினை தந்திடும்!
குழந்தைகள் கண்டு மகிழ்ந்திடும்!

குட்டி தட்டுப் போன்ற வெண்ணிலா
பட்டி தொட்டிஎங்குமே பளீச்சென்று ஒளிருமே!

பூமியைச் சுற்றும் வெண்ணிலா !
புலவர்கள் பாடும் வெண்ணிலா!

மலையின்  உயரத்தில் தோன்றியே
                        மனதை மயக்கும் வெண்ணிலா!

உங்களுக்குத் தெரியுமா?

உலகின் பதினேழு பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் தமிழ்நாட்டின் தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்.

டங்க்ஸ்டன் உலோகம் பாஸ்டோ –ஜீவான் ஜோஸ் ஆகியோரால் 1783ல் கண்டுபிடிக்க பட்டது.


மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு தென் ஆப்பிரிக்கா. நிர்வாக தலைநகராக பிரிடோரியா, நீதிசம்பந்தமான தலைநகராக ஃபுலோயம்ஃபோண்டேன்,சட்டசபைசம்பந்தமான தலைநகராக கேப்டவுன் ஆகியன.

தக்காளியின் ஆரம்பகால பெயர் காதல் ஆப்பிள்.

Thursday, May 26, 2011

samacheer kalvi need or not | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன? Dinamalar

samacheer kalvi need or not | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன? Dinamalar

மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்

மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்
 நியூயார்க் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்காக, சர்வதேச அளவில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. கூகுள் நிறுவனம், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் உடன் இணைந்து மொபைல் பேமெண்‌ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்ட் ஸ்டீரிட் பத்திரி‌கை, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. ஆனால், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அப்போது தெரிவித்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பலசரக்கு பொருட்களிலிருந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது வரையிலான அனைத்து விசயங்களையும் மொபைல்போன் உதவி கொண்டே பெருமளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக, கூகுள் நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமாக, இந்த மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய உள்‌ளோம். முதற்கட்டமாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த சேவை துவக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       நன்றி தினமலர்.

ப்ளிஸ் சிரிச்சுடுங்க!

ப்ளிஸ் சிரிச்சுடுங்க!

முதலாளி: தோட்டத்து செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டியா?
வேலையாள்: ஐயா நல்லா மழை பெய்யுது!
முதலாளி: அதனாலென்ன குடை பிடிச்சிகிட்டு தண்ணி ஊத்துடா மடையா!

டிரைவர் இவ்வளவு வேகமா காரை ஓட்டாதே பயமாயிருக்கு!

பயப்படாதீங்க ஐயா, என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்!

ஒரு கடிதத்தின் கடைசி வரி: இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் எனக்கு மடல் எழுது.

அதோ அவர் சாப்பிடறாரே மைசூர்பாகு அதைக் கொண்டா!
 
அவர் பாதி சாப்பிட்டுட்டாரே சார்!

என்னைத் தவிர எந்த கழுதையாவது உன்னை பெண் பார்க்க வந்ததுண்டா?

உங்களோட உங்கப்பா வந்தாரே மறந்துபோச்சா!

நம்ம கார் டிரைவரை உடனே வேலைய விட்டு நீக்குங்க!

ஏன் என்னாச்சு?

இதுவரைக்கும் ஒரு நாலுதடவையாவது எது மேலயாவது மோதி என்னைக் கொல்ல பார்த்தான்.
 
அவனுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தந்து பார்ப்போமே!

நான் அவமானப் படறதுக்காக இங்க வரலை!

வழக்கமா அதுக்கு எங்க போவிங்க?

இருட்டுல பல்பை போட்டா என்ன ஆகும்?

வெளிச்சம் வரும்.

இல்ல உடைஞ்சு கால்ல குத்திக்கும்

பல் வலிக்கிறது இது என்ன பெயரெச்சம்?
தெரியலையே
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்!

நம்ம தலைவர் விவரம் புரியாத அப்பாவியா இருக்காரே!
எப்படி?
செண்ட்ரல் கைவிட்டு போயிடுச்சுங்க சொன்னா போகட்டும் எக்மோரையாவது பத்திரமா பார்த்துக்குங்கனு சொல்றாரே!

ஸ்கூல் நடத்துறீங்கலாமே எப்படி நடக்குது!
ஃபீஸ்ஃபுல்லா இருக்கு!
  
பல்வேறு இதழ்களிலிருந்து தொகுப்பு
தங்கள் வருகைக்கு நன்றி!. பிடித்திருந்தால் கமெண்டலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே !

Tuesday, May 24, 2011

நான் ரசித்தப் பூக்கள்

 சமீபத்தில் படித்து ரசித்த குட்டிக் கதைகள்!

மரியாதை!


பெல்ஜியம் நாட்டு ஆசிரியர் மேட்டர்லிக் என்பவருக்கு தான் எழுதிக்கொண்டிருக்கும் போது யாராவது குறுக்கே பேசினால் பொல்லாத கோபம் வரும்.
   ஒருமுறை அவர் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டிற்கு திரும்பிய அவர் மனைவி சந்தடி செய்யாமல் தன் அறைக்குச் சென்றாள். அங்கே அதிர்ச்சி அடைந்த அவள் ஓடி வந்து கணவரிடம் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது யாரோ ஓசைப்போடாமல் என் நகைகளை திருடிக்கொண்டு போய் விட்டார்களே! என்று அலறினாள்.
    ஒரு திருடன் என் வேலைக்கு காட்டும் மரியாதையைக்கூட உனக்கு காட்டத்தெரியவில்லையே என்று பதிலுக்கு கத்தினார் மேட்டர்லிக்

    பறக்கும் குதிரை!


மரண தண்டணை விதிக்க பட்ட கைதி ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான் அரசே நான் உங்கள் குதிரைக்கு பறக்கும் வித்தையை கற்றுக்கொடுத்தால் என்னை விடுவிப்பீர்களா?.
ஆகா! சரி என்று அரசன் தலையாட்டினான்.
அதற்கு ஒரு வருசம் அவகாசம் தேவைப்படும் என்றான் கைதி
அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
பின்னர் கைதியிடம் யாரோ கேட்டார்கள் இது சாத்தியமா?
கைதி சொன்னான் ஒரு வருசம் உள்ளது அதற்குள் அரசன் சாகலாம், நான் சாகலாம், இல்லை இந்த குதிரை சாகலாம்,ஏன் ஒரு வருசத்தில் அந்த குதிரை பறந்தாலும் பறக்கலாம் யார் கண்டது?.

Monday, May 23, 2011

அவள் சொன்னாள் என்பதற்காக !

அவள் சொன்னாள் என்பதற்காக !

அவள் சொன்னாள்என்பதற்காக
படிப்பில் கவனமாகி
‘பட்டம்’ வாங்கினேன்.
அவள் சொன்னாள் என்பதற்காக
பிடிக்காத வேலையையும்
முகம் கடுக்காமல் ஏற்றேன்
அவள் சொன்னாள் என்பதற்காக

கல்லூரியில் பழகிய
‘சிகரெட்டை’ சீந்தாமல் விட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அம்மாவுக்கு ரேஷனில் ‘க்யு’வில்
நின்று அரிசி வாங்கி வந்தேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
காலைக் குளிரில்
கால் கடுக்க ஒடி
பயிற்சி எடுதேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
பாரதியாரின் கவிதைகளை
பக்கம் விடாமல் படித்தேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
கர்னாடக இசையை காது
குளிர கேட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அடியோடு பிடிக்காத
‘அவரைக்காயை’
ஆசையாய் சாப்பிட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அவளை மறக்க
முயற்சிக்கிறேன்
ஆனால் ஏனோ முடியவில்லை!தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே? கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
தளிர் அண்ணா பொன் மொழிகள்!

தளிர் அண்ணா பொன் மொழிகள்!

  1. பற்றுக்கொம்பில்லாத கொடி படர்ந்து வளர்வது கடினம் அதுபோல பற்று இல்லா வாழ்க்கை வெற்றி பெறுவது கடினம்.
  2. நீரில்லாமல் பயிர்கள் பசுமை இழக்கும் உற்சாகமில்லா மனிதனின் முகமும் பொலிவை இழக்கும்.
  3. இழந்துவிட்ட ஒன்றைப் பற்றி பேசிப்பேசி இருக்கும் நேரத்தைவீணடிப்பதை விட்டு இனியும் இழக்காமலிருக்க இன்றெ செயல் படு.
  4. உதிர்ந்த ரோஜா இதழ்களை மீண்டும் ஒட்டவைக்கமுடியாது.அதுபோல உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை மீண்டும் திரும்பப் பெறமுடியாது.
  5. சிற்பியின் கலை நயத்தாலே பாறை சிற்பமாகிறது. ஆசிரியணின் சொல் நயத்தாலெ மாணவன் மிகச் சிறந்தவனாகிறான்.
  6. மண்ணிலே தோண்டுவது எளிது. பாறையிலே தோண்டுவது கடினம். மக்களில் சிலர் மண்ணாகவும் சிலர் பாறைகளாவும் உள்ளனர். எனவே தகுதியறிந்து உபதேசித்தல் வேண்டும்.
  7. தேனிக்கள் சிரமப்பட்டு சேர்க்கும் தேன் பெரும்பாலும் அதற்கு பயனளிப்பதில்லை.கருமிகளிடம் சேரும் செல்வமும் அவர்களுக்கு பயனளிக்காது வீணாகும்
  8. யாரும் புழங்காத வீட்டில் தூசு ஒட்டடை படிவதுபோல உலகத்தாரோடு பழகாதவன் மனதில் மாசு உண்டாகும்.
  9. உன் சொல் கேட்டு நடக்க இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்க மற்றவனைஎதற்கெடுத்தாலும் நாடுவது ஏன்? உன்னை நம்பு உறுதியாக செயல்படு.
  10. உலர்ந்த பஞ்சிலே நெருப்பு எளிதாக பற்றும் ஈரமான பஞ்சிலே நெருப்பு பற்றாது. சோம்பலாகத் திரிபவன் உலர்ந்த பஞ்சைப் போன்றவன். அவனை தீயவை எளிதில் பற்றிக்கொள்ளும்.

நான் எனது டியுசன் மாணவர்களுக்கு உபதேசித்த அறி(ரி)வுரைகள் தான் மேலே நீங்கள் படித்தது. பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும் நிரலிகளில் வாக்கிடவும் உங்கள் வருகைக்கு நன்றி!

Sunday, May 22, 2011

ஆவி அழைக்கிறது ! 3

ஆவி அழைக்கிறது!


தொடர்கதை. எழுதுபவர் “பிசாசு”
பகுதி 3

மு.க.சு ஆழ்வார் குறிச்சியில் உள்ள பங்களாவை புதுப்பிக்க நினைக்கும் தனவேல் முதலியாருக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வேலையாள் முனியன் இறந்து போகவே திட்டத்தை கைவிட நினைக்கிறார். ஆனால் மகள் நிதிலா பங்களாவை புதுப்பித்தே ஆகவேண்டும் என்று கூறுகிறாள்.
இனி!
    தனவேல் முதலியாருக்கு ஆத்திரமாய் வந்தது. ஏன் தான் இவ்விஷயத்தில் ஈடுபட்டோமோ? வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறதே.மகள் நிதிலாவுக்கு என்ன ஆயிற்று? முதலில் பங்களாவைக் கண்டு முகம் சுளித்தவள் இப்போது புதுப்பிக்கவேண்டும் என்று எனக்கே புத்தி சொல்கிறாளே! என்று கோபமாக அறைக்குள் உலாவிக்கொண்டிருந்தார்.
   அப்போது அங்கு நல்லமுத்து வந்து சேர்ந்தார். என்ன தனவேலு குட்டிபோட்ட பூனையாட்டம் இங்கேயும் அங்கேயும் சுத்திசுத்தி வரே என்னாச்சு உனக்கு? என்றார். ‘என்நிலமை அந்தமாதிரி ஆகிப்போச்சு முத்து.’என் போறாத காலம் இந்த பங்களாவை புதுப்பிக்கணுமுன்னு வந்து நிப்பனா? இப்ப வேண்டாமுன்னாலும் உடும்புப் பிடியா பிடிச்சுகிட்டு விடுவேனான்னு என்ன வம்புக்கு வலிக்குது என்றார் தனவேல்.
      விடமாட்டேங்குதா! ஏன்?
நிதிலா இந்த பங்களாவை புதுப்பிச்சே ஆகணுமுன்னு ஒத்தகால்ல நிக்கறா! பேயாவது பூதமாவது நீங்க வேணா விலகிக்கோங்க நான் இருந்து இந்த பங்களாவை கட்டி முடிச்சிட்டு வரேன்னு ஒரே அடம் பிடிக்குறா! நான் என்னத்த செய்வேன் நீரே சொல்லும்?
    மகளைவிட்டு பிரிய மனமில்லையாக்கும்!சரி அப்படி ஏன் பயந்து சாகிற? அந்த பங்களாவில அப்படி என்னதான் இருக்கு? முனியன் செத்ததுக்கு காரணம் ஹார்ட் அட்டாக்னு தெளிவா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்தான் சொல்லுதே! அப்புறமென்ன? ஆரம்பிச்ச வேலையை ஆரப்போடலாமா? என்றார் நல்லமுத்து.
‘யோவ் நீயும் என் பொண்ணு பக்கம்தானா?எவன்யா இந்த பங்களா வேலைக்கு வரேன்னு காத்துட்டு கிடக்கான்! துண்டக்கானோம் துணிய காணோமுன்னு அன்னிக்கு ஒடினவனுங்கதான் எல்லோரும் நீ வேனா ஆளுங்கள ஏற்பாடு பண்ணீத்தறயா?
    பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போச்சு நாளைக்கே நாலைந்து ஆட்களோடு வரேன்.
ஆனால் ஆள் கிடைப்பது அவ்வளவு சுலபமாகிவிடவில்லை நல்லமுத்து முதலிக்கு. அது ஆவி பங்களா அங்க வெலை செஞ்சு பொணமாவறதுக்கு நாங்க என்ன முனியன் போல முட்டாளா என்ன? என்று வேலைக்கு வர மறுத்தனர் ஆட்கள். நல்லமுத்து எவ்வளவோ கெஞ்சியும் ஒருவர் கூட வேலைக்கு வர முன் வர வில்லை.அவர் மிகவும் சோர்வுடன் களைத்துப்போய் தன் வீட்டு வாசலில் அமர்ந்தபோது ஐயா ஏதாவது வேலை கிடைக்குமா? என்று குரல் ஒன்று கேட்டது.
     ‘யாருப்பா நீ என்றார் தனவேல்.
ஐயா என்பேரு மணிமாறங்க நம்முளுது வெளியூருங்க பொழப்பு தேடி வந்தேணுங்க என்று தலயை சொறிந்தான் அவன்.
முதலியார் அவனை ஏற இறங்க பார்த்தார். கருமை நிறம் கொண்ட கட்டுமஸ்தான உடல் உழைத்து உரமேறிய கைகள் தலையில் தலைபாகைக் கட்டியிருந்தான் அவன் கண்கள் அங்உமிங்உம் அலைபாய்ந்தது.சரி என் கூடவா என்று அவனைஅழைத்துக்கொண்டு தனவேல் இல்லம் நோக்கி நடந்தார் நல்லமுத்து.
  தனவேலு தனவேலு வேளைக்கு ஆள் கிடைச்சாச்சு வா பங்களாவுக்குப் போவோம் வேலைக்கு ஆள் கிடைச்சிருச்சு என்று வாசலில் நின்று அழைத்தார் நல்லமுத்து.வெளியே வந்த தனவேல் மணிமாறனை பார்த்து பிரமித்து நின்றார். ஆஜானுபாகுவான மணிமாறணின் தோற்றம் அவருக்கு சற்று நிம்மதி அளித்தது.
   நிதிலா பங்களா வேலைக்கு ஆள் வந்தாச்சு வாம்மா
நால்வரும் அந்த பாழடைந்த பங்களாவுக்குள் அடியெடுத்து வைத்தனர். கரு நாகம் ஒன்று நிதிலாவின் அருகே விழுந்து ஓட ‘ஆ’ வென அலறினாள் நிதிலா, என்னம்மா என்னாச்சு என்று ஓடிவந்த தனவேலைப் பார்த்து சீறி நின்றது அந்நாகம். ‘ஐயோ’ என்று அலறியபடியே பின் வாங்கினார் தனவேல்.
அட என்னய்யா இது இந்த குட்டிபாம்புக்கா இப்படி பயப்படறீங்க இப்பபாருங்க வேடிக்கைய என்று மணிமாறன் அந்தபாம்பை அடிக்க குச்சி ஒன்றை ஒடித்தபடி வந்தான்.
  வேண்டாம்பா இது நல்ல பாம்பு!
ஆனா அதுக்கு இப்ப கெட்ட நேரம் வந்தாச்சு என்றபடியே குச்சியை ஒங்கினான் மணிமாறன். அதற்குள் அப்பாம்பு கொபமெடுத்து சீறி அவன் மேல் பாய்ந்து கொத்தியது.
அவன் ஐய்யோ என்று சுருண்டுவிழ வாயில் நுரைத் தள்ளியது.
    நிதிலா அங்கேயே மயங்கி சாய்ந்தாள் கருநாகம் அவளை நோக்கி நகர்ந்தது.
                            அழைக்கும்(3) 

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Related Posts Plugin for WordPress, Blogger...